Tuesday, April 19, 2011

இரவுக் கவிதைகள்


1.

பகல் முழுக்க

தூங்கியதால் - நான்

இரவு விழித்திருக்கிறேன்

இரவு ஏன் விழித்திருக்கிறது?.





2.

விளக்குகள்

எரியும் இடத்தில்

உறங்கிக்கொண்டிருக்கிறது

இரவு.



3.

ஒவ்வொரு தனிமையையும்

சூழ்ந்துகொள்கிறது

இரவு.



4.

இரவு வரும் கனவில் மட்டும்

இரவு வருகிறது

கூடவே கனவும்.



5.

நிலவுக்கு

அழகு தரும் இரவு

அழகில்லாமல் கிடக்கிறது

நிலவில்லையெனில்.



6.

மனிதர்களை தூங்கவைத்துவிட்டு

மலர்களை எழுப்பி விடுகிறது

இரவு.



7.

ஒரு காதலியைப் போல்

என் படுக்கையறையின்

விளக்கணைப்புக்காக

காத்திருக்கிறது

இரவு.



8.

இரவுக்கு மட்டும்

எல்லா ஊர்களிலும்

நைட்டூட்டி.



9.

இரவும் நானும்

போட்டி போட்டு

ஒருவரையொருவர்

குடித்துக்கொள்கிறோம்

இரவு ஜெயித்தால்

நான் தூங்கிவிடுகிறேன்.

நான் ஜெயித்தால்

விடிந்துவிடுகிறது.



10.

இரவு எழுதிய கவிதை

காலையில் படித்தேன்

புரியவில்லை.



11.



என் பேனாவுக்கு

மையாகியே தீர்ந்துபோனது

நேற்றைய இரவு.