Sunday, November 11, 2012

எனது அறையில் அம்மா


சென்னையில் இருக்கும்
எனது அறைக்கு
ஊரிலிருந்து அம்மா
நேற்றிரவு வந்தாள்.

அதி காலையிலேயே
அலங்கோலமாய் இருக்கும்
அறையை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள்


"எடுத்த இடத்தில்
பொருளை வை"
என்கிற அம்மாவுக்கு
ஹிராக்ளிடஸ் தத்துவம்
தெரியாது....

நானும் போதித்ததில்லை ....


நேற்று உடுத்தியவை
அழுக்குப் பெட்டிக்கு.

சமையலைறையில் மட்டுமே
சர்க்கரை டப்பா.

பிதுக்கிய பின்
பேஸ்ட் பரணில்.

சாவிக்கேன்று தனியிடம்.
கழட்டி வைக்கும்
கண்ணாடி , கடிகாரத்துக்கும்
ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் எடுத்து வைத்தபின்
"இனிமே நீ
எதுவும் தேடவேண்டாம்"
என்கிறாள்.


நான் தேடிக் கொண்டிருக்கிறேன்,
நேற்று தரையெல்லாம்
ஊறிக்கொண்டிருந்த எறும்பையும்
அதை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்த
என்னையும் .