இருபதாயிரம் கோடி தணிக்கைத் தடை ஊழலைத் தூக்கிச் சாப்பிடுகிறது போலி ரசீது
ஊழல்.
25 டிசம்பர்
2014 தேதியிட்ட புதிய தலைமுறையில் உள்ளாட்சியில்
நடக்கும் இருபதாயிரம் கோடி ஊழல் பற்றி எழுதியிருந்தோம். பல தரப்பில் இருந்தும் அழைப்புகள்
வந்தன.இந்த ஊழல் அதிர்ச்சியளிப்பதாகவும் புதிதாக தாங்களும் வழக்குத் தொடுக்கப் போவதாகவும்
வாசகர் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனால் திருவண்ணாமலையைச் சேர்ந்த வேட்டவலம் ஒன்றாவது
வார்டு கவுன்சிலர் திருமூர்த்தியிடம் இருந்து வந்த அழைப்பு நம்மை அதிர்ச்சி அடையச்
செய்தது. “சார் நீங்க நீக்கப்படாத தணிக்கைத் தடைகள் பற்றித்தான் சொல்லிருக்கிங்க..
நீக்கப்பட்ட தணிக்கைத் தடைகளிலேயே பல முறைகேடுகள் நடந்திருக்கு. அதுக்கு முன்னாடி இருபதாயிரம்
கோடி எல்லாம் ஒன்னுமே இல்ல சார்” என்றார். உடனே திருவண்ணாமலைக்கு அறிவலம் கிளம்பினோம்.
”மூடி மறைக்கப்படும்
இருபதாயிரம் கோடி ஊழல்” கட்டுரையைத் தவரவிட்டவர்களுக்கு
வருடத்திற்கு ஒரு
முறை தணிக்கைத் துறை உள்ளாட்சியில் செய்யப்பட்ட செலவுகள் உண்மையா என்று ஆராய்ந்து தணிக்கை
அறிக்கை தாக்கல் செய்வார்கள். உள்ளாட்சியில் செலவழித்த பணத்திற்கு உரிய ரசீதும் கணக்கும்
காட்டப்படவில்லை என்றால் அது தணிக்கைத் தடையாகப் பதியப்படும். அதனால் ஏற்பட்ட நட்டம்
அதற்குரிய அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்கப்படும். (இப்படி வசூலிக்கப்படாமல் இருபதாயிரம்
கோடிக்கு மேல் தமிழகம் முழுக்க இருக்கிறது). அந்தத் தொகை வசூலிக்கப் பட்டாலோ அல்லது
அந்த தணிக்கைத்தடைக்கான உரிய ரசீதைக் கொடுத்தாலோ அந்தத் தணிக்கைத்தடை நீக்கப்படும்.
இப்படி நீக்கப்பட்டதிலும் ஊழல் நடந்திருக்கிறது என்று திருமூர்த்தி கூறுகிறார்.
இந்த ஊழலை வெளிக்கொண்டு
வர அயராது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றார் சி.பி.எம் சேர்ந்த
கோ. திருமூர்த்தி. அவரது நல்லெண்ணத்தைப் புரிந்து கொண்ட அதிமுக வைச் சேர்ந்த குப்பம்மாள்
பழனிவேல், வசந்தா வெங்கடேசன், காந்தி ரமேஷ், ஆகியோரும் திமுக வைச் சேர்ந்த திரேஸ்மரி
அமலநாதன், சிவசங்கரி மாணிக்கம், சித்ரா முருகன்
மு.பாலமுருகன், சி. பாலாஜி ஆகியோரும் கட்சி பேதம் பார்க்காமல் மக்களுக்காக இணைந்திருக்கிறார்கள்.
”இந்த ஊழலுக்குத்
துணையாக தணிக்கைத் துறை, அரசு வங்கி, வணிக வரித் துறை என அரசுத் துறைகள் அனைத்துமே
இருக்கின்றன” என்றனர் ஆரம்பத்திலேயே அதிரடியாக.. அதற்குப் பின் அவர்கள் சொல்லிய தகவல்கள்
கதைகளிலும் கேட்டிராதவை. செய்யாத செலவை செய்ததாக போலி ரசீதுகள் சமர்பித்து ஊழல் செய்துள்ளார்கள்.
கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் அதை எப்படிச் செய்தார்கள் என்று கேட்டால் கண்ணைக்
கட்டிக் கொண்டு வரும்..
தணிக்கைத் துறை
ஆண்டுக்கு ஒருமுறை நிதி முறையாக செலவு செய்யப்பட்டுள்ளனவா என்று ஆராயாமல் மூன்று ஆண்டுகளுக்கு
ஒரு முறை ஆராய்கிறது. அதுவும் கவுன்சிலர்கள் அறிக்கை கேட்டு வலியுறுத்திய பிறகே ஆராய்கிறது.
அதாவது 2011 ஆம் ஆண்டு போடப்பட்ட தெருவிளக்கு சரியாகப் போடப்பட்டிருக்கிறதா என்று
2014 ஆம் ஆண்டு சரி பார்க்கிறது. அந்த முறையே 2012 , 2013 ,2014 ஆகிய ஆண்டுகளிலும்
அந்த விளக்கு சரியாகப் போடப்பட்டிருக்கிறதா என்றும் ஆராய்கிறது. என்னடா இது வேடிக்கை
என்று நினைக்காதீர்கள். இன்னும் காத்திருக்கிறது. எல்லாவற்றையும் ஆராய்ந்து எல்லாம்
சரியாகப் போடப்பட்டிருக்கிறது என்று முடிவெடுக்கிறது. அதற்கு சமர்பிக்கப்படும் போலி
பில்களை சரி பார்க்காமல் அனுமதியளிக்கிறது நிதித் தணிக்கைத் துறை.
இது தவிர்த்து
ஒருவருட வாரண்டி உள்ள 8500 ரூபாய் மதிப்புள்ள மோட்டாரை 9900 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 9900 ரூபாய்க்கு அதே மோட்டரை பழுது பார்த்துள்ளார்கள்.
இதற்கு எந்த ஆட்சேபணையும் இன்றி கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஒன்பது கவுன்சிலர்களும்
இதைப் போல் நூற்றுக்கணக்கான போலி ரசீதுகளை ஆதாரமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
கீழ் பெற்றுள்ளார்கள். இது மட்டுமல்லாமல் ஒரு
திட்டத்திற்கு குறிப்பிட்ட தொகைதான் செலவழிக்க
வேண்டும் என்றுள்ளது அதுவும் கடைபிடிக்கப்படவில்லை. ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவழிக்கலாம்
என்று அனுமதிக்கப்பட்ட திட்டத்திற்கு ஒரு லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. முப்பது
தெருவிளக்குகள் உள்ள இடத்திற்கு நூறு தெருவிளக்குகள் போட்டதாக பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு இலவசமாகத் தரும் கொசு மருந்து காசு கொடுத்து வாங்கியதாகவும் பில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
(அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளன)
இப்படி
போலி பில்கள் மூலம் ஏமாற்றுவதைக் குறித்து கவுன்சிலர்கள் நிதித் தணிக்கை அதிகாரிகளிடம்
கேட்ட போது “பில் இருக்கிறதா என்பது மட்டுமே எங்களால் சரிபார்க்க முடியும். அது எந்தக்
கடையில் வாங்கியது என்று பார்க்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை” என்று கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் கூறியிருப்பது உண்மையே. ஆனால் வேட்டவலத்தில் இருக்கும் தள்ளுவண்டியை பழுது
பார்த்ததாகச் சொல்லி மதுரை மாவட்ட கூட்டுறவு விவசாய சங்கத்தின் மூன்று ரசீதை அடுத்தடுத்த
நாள் தேதியிட்டு ஒவ்வொரு ரசீதிலும் 9900 ரூபாய் செலவானதாக சமர்பித்திருக்கிறார்கள்
அதிகாரிகள். தள்ளுவண்டியை விவசாய கூட்டுறவு சங்கத்தில் பழுது பார்க்க முடியுமா? அதுவும்
திருவண்ணாமலையில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு கொண்டு செல்ல முடியுமா? போன்ற எளிய
கேள்விகள் கூட எழாத அளவுக்கு அப்பாவிகளாக இருந்திருக்கின்றனர்
நிதித் தணிக்கைத்துறையினர். இனிமேல்தான் தலைசுற்ற வைக்கும் பகுதி வருகிறது. தயாராக
இருங்கள்.
அரசு என்பவர் வேட்டவலத்தில்
ஒரு எலக்ட்ரிகல்ஸ் வைத்திருக்கிறார். அரசு வங்கியான இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்கச்
செல்கிறார். அங்கே அவரது கடை பில் இருப்பதைப் பார்க்கிறார். காசோலை அவர் பெயரில் இருக்கிறது.
விசாரித்தால் அவர் பெயரில் ஏற்கனவே கணக்குத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
கணக்குத் தொடங்கச் சென்ற அரசுக்கு அதிர்ச்சி.
திருமூர்த்தி உதவியுடன்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அந்தக் கணக்குக்கு செலுத்தப்பட்ட காசோலைகளின்
நகலை வாங்கியிருக்கிறார். அப்போதுதான் அரசு அதிகாரிகளால் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதுவரை சுமார் பன்னிரெண்டு லட்சம் வரை அந்த கணக்கில் செலுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரிகள்
பம்புகளுக்கும் மோட்டார்களுக்கும் பழுது பார்த்ததாக சொல்லி ரசீதுகள் சமர்ப்பித்திருக்கிறார்கள்
என்றால் எந்தக் கடையின் பெயரில் ரசீது கொடுத்திருக்கிறார்களோ அந்தக் கடையின் பெயரிலேயே
காசோலை வழங்கப்படும். அதை எடுப்பதற்கு போலியாக கணக்கை அதிகாரிகளே ஆரம்பித்துள்ளார்கள்.
ஒரு கடையில் அதன் உரிமையாளருக்கே தெரியாமல் பன்னிரெண்டு லட்சம் வரை கையாடப்பட்டிருக்கிறது
என்றால் எத்தனை கடைகளில் எவ்வளவு பணம் கையாடப்பட்டிருக்கும் அந்த அதிகாரிக்கே வெளிச்சம்.
வங்கியில் கணக்குத் தொடங்க அடையாள அட்டை,
முகவரி சான்று போன்ற சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும்.அரசுக்கே தெரியாமல் அவர் பெயரில்
கணக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது எனும் போது கணக்குத் தொடங்க சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள்
என்ன? என்றும் அரசு பேரில் இருக்கும் கணக்குக்கு யார் வேண்டுமானாலும் பணம் போடலாம்
ஆனால் அவர் இல்லாமல் பணம் எப்படி வழங்கப்பட்டது? என்றும் கேள்விகள் எழுகின்றன. இதே
கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியிடம் கேட்கப்பட்டது. பதலளிக்க கடைசி நாளான கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வங்கியிடம்
இருந்து யாருமே எதிர்பார்க்காத ஒரு பதில் வந்தது. ‘நீங்கள் பத்து ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி தகவல்களைக் கேட்டுள்ளதால்
பதில் அளிக்க முடியாது. வங்கித் தகவல்களைத் தர பத்து ரூபாய்க்கு டி.டி எடுத்து அனுப்பவேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின் படி கோர்ட் ஸ்டாம்போ அல்லது டி டி யோ எதேனும் ஒன்றை இணைத்தால் போதும்
வங்கிக்கும் இதே நடைமுறைதான். எதோ ஒரு பதிலைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி
ஒரு பதிலை அளித்துள்ளது இந்திய அரசின் இந்தியன் வங்கி.
நிதித் தணிக்கைத் துறை , வங்கி, போலவே வணிக வரித்துறையும்
ஊழல் அதிகாரிகளுக்கு உதவி செய்கிறது. அரசு போல் கடை உரிமையாளர்களுக்குத் தெரியாமல்
ரசீது சமர்பிக்கப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும் கடை உரிமையாளர்களோடு இணைந்து போலி
ரசீதுகள் சமர்பிப்பதையும் அதிகாரிகள் செய்கிறார்கள். உதாரணத்திற்கு பாலமுருகன் எலக்ட்ரிகல்ஸ்
என்கிற கடையுடன் இணைந்து அந்தக் கடையின் ரசீதை கலர் ஜெராக்ஸ் எடுத்து சமர்பித்திருக்கிறார்கள்.
ஒரே ரசீது எண்ணில் (Bill number) நாலைந்து ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
அதே போல் ஒரு கடைக்கு ஒரே ஒரு வரி அடையாள எண் (TIN Number) மட்டுமே வழங்கப்படும். ஆனால்
பாலமுருகன் எலக்ட்ரிகல்ஸ் வேறு வேறு வரி அடையாள எண்களில் ரசீது கொடுத்துள்ளார்கள்.
மேலும் பாலமுருகன் எலக்ட்ரிகல்ஸ் கொள்முதல் செய்துள்ள மொத்த சரக்கின் மதிப்பை விடவும்
அதிகமாக விற்பனை செய்துள்ளதாக ரசீது தாக்கல் செய்துள்ளது. இந்தக் கடையின் மூலம் மட்டும்
சுமார் 38 லட்சம் வரை மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதை வணிக வரிக்கு
புகார் செய்த போது அவர்கள் போலி ரசீதுகளுக்கு உரிய வரியை அபராதமாக வசூலித்து அதோடு
இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள். கொள்முதல் மதிப்பை விட பல மடங்கு அதிகமாக
விற்றது எப்படி என்று பாமரனுக்கு எழும் கேள்வி கூட அவர்களுக்கு எழவில்லை. அதே போல்
சக்திவேல் எலக்ட்ரிகல்ஸ் என்கிற கடையின் ரசீதும் அதிகாரிகளால் சமர்பிக்கப்பட்டிருக்கிறது.
அதுகுறித்து கேள்வி எழுப்பிய போது அது சிறிய
அளவில் கிரில் ஒர்க்ஸ் செய்யும் பட்டறை. அதற்கு வரி அடையாள எண் இல்லை. அதனால் அதன்
ரசீது செல்லாது. அதை விசாரிக்க முடியாது என்று பதில் அனுப்பியுள்ளது. வரி அடையாள எண்
வாங்காத கடை எப்படி ரசீதை அதுவும் எலக்ட்ரிகல்ஸ் என்கிற பெயரில் கொடுக்கலாம் என்றெல்லாம்
கேள்வி எழுப்பாமல் இருக்கிறது.
பிரம்மாண்ட ஊழல்
இவ்வனைத்தும் சிறிய
உதாரணங்களே. மூன்று வருடங்களுக்கு சுமார் மூன்றரைக் கோடி ஊழல் நடந்ததாக ஆதாரத்துடன்
புகார் தெரிவிக்கின்றனர் வேட்டவலம் கவுன்சிலர்கள்.
இது வேட்டவலம் என்கிற ஒரு பேரூராட்சியில் ச.கணேசன்
என்கிற ஒரு செயல் அலுவலர் மேல் எழுந்த ஊழல் புகார். 1947 ல் இருந்து எத்தனை அதிகாரிகள்
எவ்வளவு ஊழல் செய்திருப்பார்கள். இது போல் பேரூராட்சிகள் மட்டும் 561 உள்ளன. இது தவிர்த்து
நகராட்சிகளும் மாநகராட்சிகளும் உள்ளன என்று யோசித்தால் இந்த ஊழல் இருபதாயிரம் கோடியையும் தாண்டி ஒரு பூதத்தைப்
போல் பெரிதாய் விஸ்வரூபம் எடுப்பதை உணர முடியும்.
“மன்றக் கூட்டங்களில்
அறிக்கைகள் சமர்ப்பிக்கவே மாட்டார்கள். அப்படியே சமர்பித்தாலும் அதில் தகவல்கள் முழுமையாக
இருக்காது. பொத்தாம் பொதுவாக தணிக்கைத் தடை எண்கள் 1 முதல் 567 க்கான தடை நீக்கப்படுகிறது
என்று இருக்கும். அது என்ன தடை என்று கவுன்சிலர்கள் கேட்டாலும் கிடைக்காது. அதை எல்லாம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற வேண்டியிருந்தது. இந்தப் பிரச்சனை வெளிக்
கிளம்ப ஆரம்பித்ததும் தமிழகத்தில் இருக்கும் சில செயல் அலுவலர்கள் ரகசிய கூட்டம் போட்டு
ஆலோசித்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் நடந்துள்ள ஊழல் குறித்து சரியான தொகையைக் கணிக்க
இந்த பேரூராட்சிகளிலும் , நகராட்சிகளிலும்
வாழும் மக்களும் முக்கியமாக வார்டு கவுன்சிலர்களும் ஒன்றிணைய வேண்டும்.” என்றார் திருமூர்த்தி
புலியைத் தேடப்
போய் பூதம் வந்த கதையாக இருபதாயிரம் கோடி ஊழலைப் பற்றித் தேடப் போய் அதைவிட பெரிய ஊழல்
கண்ணுக்குப் புலப்பட்டிருக்கிறது. மக்கள் நாம் என்ன செய்யப் போகிறோம்.?
---------------------------------------------------------------------------------------------------------------------------
பின் இணைப்பு
கவுன்சிலர்களால்
ஊழல் குற்றம் சாட்டப்பட்ட செயல் அலுவலர் கணேசனிடம் பேசினோம்.
”கவுன்சிலர்கள் சொல்லும் அனைத்துப் புகார்களுமே ஆதாரமற்றவை பொய்யானவை. அவர்கள் என்னிடம் பணம் கேட்டார்கள் நான் மறுத்ததற்காக என் மேல் அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களது பிரச்சனை தாங்காமல்தான் வேட்டவலத்தில் இருந்து மாற்றல் வாங்கி கண்ணமங்கலம் வந்துள்ளேன். ஆனாலும் இவர்கள் என்னை விட்டபாடில்லை” என்றார்
”கவுன்சிலர்கள் சொல்லும் அனைத்துப் புகார்களுமே ஆதாரமற்றவை பொய்யானவை. அவர்கள் என்னிடம் பணம் கேட்டார்கள் நான் மறுத்ததற்காக என் மேல் அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களது பிரச்சனை தாங்காமல்தான் வேட்டவலத்தில் இருந்து மாற்றல் வாங்கி கண்ணமங்கலம் வந்துள்ளேன். ஆனாலும் இவர்கள் என்னை விட்டபாடில்லை” என்றார்

