நிலம் கையக்கப்படுத்தும்
சட்டத்தில் அவசர அவசரமாக சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. அதன்
அவசியம் என்ன?
1894 ஆம் ஆண்டு
வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது நிலம் கையகப்படுத்தும் சட்டம். ஒரு நாட்டில் இருக்கும்
அனைத்து வளங்களும் அந்த நாட்டின் அரசுக்கே சொந்தமானது. ஒரு தனி நபருக்கு சொந்தமானதாக இருந்தாலும்
அரசுக்கு அதில் உரிமை உண்டு. அந்த வளத்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் நலம் தரும்
என்றால் அந்நபருக்கு உரிய நிவாரணம் அழித்து அதை அரசு எடுத்துக் கொள்வதும் முறையே.
இந்த அடிப்படையில் உருவானதுதான் நிலம் கையகப்படுத்தும் சட்டம்.
இந்த
சட்டம் 2013 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு காங்கிரஸ்
அரசால் திருத்தம் செய்யப்பட்டு ’நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு
மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. அதன்படி அரசு-தனியார் கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களை
கையகப்படுத்தும் போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 சதவிதத்தினரின்
ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று மாற்றப்பட்டது.
மேலும் நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது அந்த நிலத்தின் உரிமையாளர்
மட்டுமே அரசின் நிவாரணத் தொகையைப் பெற்றுவந்தனர். அந்த நிலத்தைச் சார்ந்து வாழும்
கூலித் தொழிலாளிகளும் ,மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுபவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதைக் களைய, நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் சமூகத் தாக்கத்தை ஆராய்ந்து அறிக்கை
தயாரித்து அதற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள்
விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது போன்றவையும் சேர்க்கப்பட்டன. அப்போதைய
எதிர்கட்சியான பா.ஜ.க.வும் இதை ஆதரித்தது. ஆட்சிக்கு வந்ததும் அதே பா.ஜ.க.
மேற்சொன்ன அனைத்து நிபந்தனைகளையும் அவசரச் சட்டத்தின் கீழ் நீக்கியுள்ளது.
இந்தத்
திருத்தங்கள் அனைத்தும் மாநில முதல்வர்களோடு கலந்தாலோசித்து
நடைமுறைப்படுத்தப்பட்டது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த
சட்டத்தை அசாமில் அமுல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் தருண் கோகாய்.
இந்த அவசர சட்டத்திருத்ததால் என்ன நன்மைகள்?
இந்த சட்டத்தால் இரண்டு நன்மைகள் இருப்பதாக அரசு கூறுகிறது.
முதலாவது நிலம் கையகப்படுத்துவது என்பது மிகப் பெரிய நடைமுறை
உடையதாகவும் நீண்ட நாட்கள் எடுப்பதாகவும் இருந்தது. அதனால் கையகப்படுத்தப்படும் நிலம்
நீண்ட நாட்களாக விவசாயிக்கும் அரசுக்கும் பயனில்லாமல் இருந்தது. இப்போது அது குறைந்திருக்கிறது.
அதனால் விரைவாக நிலத்தைக் கையகப்படுத்தி விரைவாக
தொழிற்ச்சாலைகள் போன்ற வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்த முடியும். இதனால் வேலைவாய்ப்பு
பெருகுவதுடன் இந்தியாவின் உள்கட்டமைப்பும் வளர்ச்சி அடையும்
இரண்டாவது தேசிய நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில் , அணு சக்தி திட்டங்கள்,
மின்சாரம் போன்றவற்றுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நிவாரணம் தருவதற்கு முந்தைய
சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. புதிய திருத்தத்தில் அவற்றுக்கும் உரிய நிவாரணம்
அளிக்கப்படும். இதனால் புதிய சட்டத் திருத்தத்தில் அரசு விவசாயிகள் இருவருமே பயனடைவார்கள்’
என்கிறது. ஆனால் விவசாயிகளின் கருத்தோ அரசில் இருந்து மாறுபடுகிறது.
இது குறித்து அனைத்திந்திய விவசாய சங்கத்தின் மாநிலப் பொதுச்
செயலாளர் சண்முகம் பேசிய போது ”விவசாயிகளின்
மேல் எந்த அக்கரையும் இல்லாத ஒரு அரசால்தான் இது போன்ற ஒரு முடிவை எடுக்கமுடியும்.
1894 ல் வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்ட நிலம்
கையகப்படுத்தும் சட்டத்தில் கூட விவசாய நிலங்களை அணை கட்டுவது , ரயில்வே தண்டவாளங்கள்
அமைப்பது போன்ற பொதுத்துறைக்காகத்தான் கையகப்படுத்த வேண்டும் என்று இருந்தது. ஆனால்
இந்திய அரசோ பப்ளிக் பிரைவேட் பார்டன்ர்ஷிப்
இருந்தாலே கையகப் படுத்தலாம் என்றது. தனியார்களுக்கு வேண்டிய நிலங்களை அரசாங்கம் தனது
விவசாயியிடம் இருந்து பறித்துக் கொடுக்கிறது. இப்படி அரசாங்கமே பெருமுதலாளிகளுக்கு
ஒரு நில புரோக்கர் போல செயல்படுவது இந்தியாவில் மட்டும்தான். தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும்
சட்டம் முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டது”. என்றார்.
தேசப்
பாதுகாப்பு, ராணுவம், ஊரக கட்டமைப்பு வசதிகள், சமூகக் கட்டமைப்புகள், தொழில்துறை
தாழ்வாரங்கள் ஆகிய 5 தேவைகளுக்காக மட்டும் தான் விதிகள்
தளர்த்தப்பட்டிருப்பதாகவும், மற்ற தேவைகளுக்கு நிலம் எடுப்பதற்கான விதிகள்
மாற்றப்படவில்லை என அமைச்சர் கூறியிருக்க இது பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக
கொண்டுவரப்பட்டது என்று எவ்வாறு கூறமுடியும்? என்று கேட்ட பொழுது
“எந்த திட்டத்தையும் இந்த ஐந்து காரணங்களுக்குள் அடக்கிவிட
முடியும் என்பதே மோடி அரசின் சாமர்த்தியம். மேற்கண்ட
5 தேவைகளுக்காக மட்டும் தான் 99 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்பது
தான் உண்மை. இவற்றில் ராணுவத்திடம் மற்ற துறைகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு
கொடுக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமாக நிலம் இருப்பதால் முதல் இரு அம்சங்களுக்கும்
நிலம் தேவைப்படாது.
பாரதிய ஜனதா தனக்கு ராஜ்ய சபாவில் மெஜாரிட்டி இல்லை என்பதாலேயே
இந்தத் திருத்தத்தை அவசர சட்டம் மூலமாக அரசு நிறைவேற்றியுள்ளது. அவசர சட்டம் கொண்டு
வருமளவுக்கு இந்தச் சட்டத்திற்கு உடனடித் தேவை என்ன இருக்கிறது?. இன்ஸ்சூரன்ஸில்
49 சதவீதம் அந்நிய முதலீடை அனுமதிப்பது போன்ற
சட்டத்தை அவசரச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் கூட புதிய சட்டம் என்பதால்
அவசரமாக கொண்டு வருகிறார்கள் என்று ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. நடைமுறையில்
இருக்கும் ஒரு சட்டத்தை இரண்டு மாதங்கள் பொருத்து இருந்து பாராளுமன்றத்தில் விவாதித்து
திருத்தம் கொண்டு வர முடியாததற்கு பன்னாட்டு தனியார் நிறுவனங்களைத் திருப்தி படுத்தும்
நோக்கத்தைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும். ஒரு சட்டத் திருத்தத்தை அவசர சட்டத்தின்
கீழ் கொண்டு வருவது இதுவே முதல்முறை. பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் சின்னமாக விளங்கும்
அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமா வரும் போது ‘உலகப் பன்னாட்டுக் கம்பெனிகள் இங்கே
கால் ஊன்ற எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லை. அவர்கள் வேண்டிய நிலத்தை எடுத்துக் கொள்ளலாம்‘
என்று அறிவித்து முதலாளிகளின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவே இந்திய அரசு இதை அவசர அவசரமாக
செய்துள்ளது” என்றார்.
உண்மையில் விவசாயிகளுக்கு இதில் எந்த நன்மையும் இல்லையா? என்று
நாம் கேட்டதற்கு ”தொழிற்துறைகள் வளர்ந்துவிட்ட போதிலும் இந்தியா இன்னும் விவசாய
நாடுதான். இந்தியாவில் அதிகப்படியானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். கடந்த பத்து
ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமே ஏறத்தாழ பத்து லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு
வேறு தொழிலுக்குச் சென்று விட்டார்கள். 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் விவசாயம் அல்லாத வேறு பயன்பாட்டுக்கு மாறியுள்ளன.
இதைத் தடுப்பதற்கு எதாவது அவசரச் சட்டம் இயற்றியிருந்தால் அது விவசாயிகளுக்கு நன்மை
தந்திருக்கும். இதைத் தடுப்பதற்கு எல்லாம்
எந்த அவசரச் சட்டத்தையும் இயற்றாத மத்திய அரசு பன்னாட்டு கம்பெனிகளை குளிர்விக்க மட்டும்
அவசரகதியில் சட்டங்களையும் சட்டத்திருத்தங்களையும் கொண்டுவந்திருக்கிறது.
நிலங்களைப் பறிப்பது மட்டுமல்லாமல் அதைப் பாதுகாத்துக் கொள்வதற்கு
இருக்கும் வழிகளையும் இந்த அரசு மூடிவைக்கிறது. தற்போது கொண்டு வந்திருக்கும் சட்டத்
திருத்தத்தின்படி நிலம் பறிக்கப்பட்டு அதை எதிர்த்து வழக்குத் தொடுக்க வேண்டுமானால்
உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்க முடியும். கீழ் கோர்டுகளிலோ உயர் நீதி மன்றத்திலோ
தொடுக்கமுடியாது. வெறும் அரை ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி எப்படி உச்சநீதிமன்றத்தை
நாடமுடியும். விவசாயி பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் திருத்தம் கொண்டுவந்துவிட்டு
அதை விவசாயிகளின் நன்மைக்கு என்று சொல்வது நகைப்புக்குரியது” என்றார் சண்முகம்.
நன்றி:புதிய தலைமுறை