நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள் உங்கள் குழந்தையைக் கொல்லத் தயாரா? என்பதே
கேள்வி. இல்லை என்றால் தயாராகுங்கள். அது ஒன்றும் அவ்வளவு கடினமான பணியல்ல. அதற்கு
அரசு வழிகாட்டும். கட்டுரை சுவாரஸ்யத்திற்காகவோ சாதாரண விசயத்தை ஊதிப் பெரிதாக்கி
பயமுறுத்தும் நோக்குடனோ இந்த வார்த்தைகள்
பயன்படுத்தப்படவில்லை. நீங்கள் கொலை செய்யவில்லை என்றால் எப்படியும் இந்திய
அரசாங்கம் டிசம்பர் 15ல் செய்யப்போகிறது என்கிற நிதர்சனமான உண்மையின் மேல்
இந்த வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன.
என்னாகப் போகிறது நான்கு மாதங்களில்?
நான்கு மாதங்களில் (டிசம்பர்
மாதம் 15 ஆம் தேதி) கென்யாவின் நைரோபியில் 160 நாடுகள் கலந்து கொள்ளும் WTOவின்
பத்தாவது வட்ட அமைச்சக மாநாடு கூட இருக்கிறது. அதில் இந்தியா கல்வியை வெளிநாட்டு
நிறுவனங்களுக்கு திறந்து விட சம்மதம் தெரிவிக்க இருக்கிறது. இவ்வளவுதானா? இதற்கா
இப்படி பீடிகை போட்டாய் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. ஆனால் இது அவ்வளவு
சுலபமானது அல்ல. அதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்.
உலக வர்த்தக மையம்(WTO)
பற்றி கேள்வி பட்டிருப்போம். உலகின் பணக்கார நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்தவற்றை
வளரும் மற்றும் வளரா நாடுகளுக்குள், தடை
இல்லாமல் சுமூகமாக விற்க உதவக் கூடிய ஒரு அமைப்பு. இதில் உறுப்பினராக இருந்தால்
மற்ற உறுப்பினர் நாடுகளின் சம்மதத்தோடு அந்த நாட்டை சந்தையாக பயன்படுத்திக்
கொள்ளலாம். 1980களில் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் உலக வங்கியிடமும் சர்வதேச
நாணய நிதியத்திடமும் கடன் வாங்கியதால் 1990களில் சேரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
கார், பைக் என்று
வெறும் பொருட்களை மட்டும் மற்ற
நாடுகளுக்கு விற்றுக் கொண்டிருந்த வளர்ந்த நாடுகள். மருத்துவம் , காப்பீடு, கல்வி
போன்ற சேவையையும் விற்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறது. சேவையில்
வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தம் (GATS) உருவாகிறது. நரசிம்ம ராவ் தலைமையிலான
அரசும் 1995 ஆம் ஆண்டு அதில் உறுப்பு நாடாக சம்மதிக்கிறது. இந்த சேவையை விற்கும்
ஒப்பந்தப்படி எந்த நாடும் ’இன்னொரு நாட்டிடம் போய் நான் எனது கல்வியை உனது
நாட்டிற்குள் விற்றுக் கொள்கிறேன்’ என்று கேட்காது. அதற்கு பதில் உறுப்பு நாடுகள்
‘எங்கள் நாட்டிற்குள் கல்வியை விற்றுக்கொள்ளுங்கள்’ என்று தானாக முன்வந்து சொல்லவேண்டும்.
நாங்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை என்று வளரும் நாடுகள் நல்ல பிள்ளையாக வலம்
வரும் ஏற்பாடு. உண்மையில் கடனில் மூழ்கித் தத்தளிக்கும் இந்தியா போன்ற வளரும்
நாடுகள் இது போல் தாமாக முன்வந்து கொடுக்கின்றன. நமக்கு கடன் கொடுத்த நபருக்கு நம்
வீட்டு மாம்பழத்தை அவர் கேட்காமலேயே கொடுப்போம் இல்லையா அது மாதிரி. ஆனால் அந்தக்
கடன்காரர் ஒட்டு மொத்த மாமரத்தை தனதாக்கிக் கொள்வதுடன் உங்கள் வீட்டுப்
படுக்கையறையில் வந்து படுத்துக் கொண்டால்?
2004 ஆம் ஆண்டு
வாஜ்பாய் அரசாங்கம் தனது கடைசி காலகட்டத்தில் அவசர அவசரமாக சில சேவைகளின் சந்தையாக
’இந்தியாவை பயன்படுத்திக் கொள்ளுங்களேன்’ என்று ஒப்புதல் அளித்துவிட்டு சென்றது.
அதற்கு பின் வந்த மன்மோகனின் காங்கிரஸ் அரசு 2005ல் ”அவற்றோடு சேர்த்து எங்கள்
ஊரில் வந்து கல்வியை விற்றுக்கொள்ளுங்களேன்” என்று சொல்லிவிட்டது.
அட இதில் என்னப்பா
இருக்கிறது?. ஏற்கனவே நம்மூரில் பலர் கல்வியை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டுக்காரனும் ஓரமா வச்சு வித்துட்டுப்
போகட்டுமே என்று நினைக்கிறீர்களா?. வெளிநாட்டுக்காரன் கல்வி சும்மா கிடைக்குமா
அதற்கு நிறைய கண்டிசன்கள் இருக்கின்றன.
GATSல் மொத்தம் 160
நாடுகள் இருக்கின்றன. இதில் ஒரு நாட்டை நாம் அனுமதித்தாலும் 160 நாடுகளையும் அனுமதித்தது போலத்தான். 160 நாடுகளில் இருக்கும்
நிறுவனங்களும் நம் நாட்டில் வதவதவென்று கடையைத் திறந்து கல்வியை விற்க ஆரம்பித்துவிடும். அப்போது
உள்ளூரில் கல்விக் கடை போட்டிருக்கும் ஆட்கள் மட்டுமல்ல அரசு பள்ளிகளும்
காலியாகும். (இங்கே கடை என்கிற
வார்த்தை என்னுடையது அல்ல. WTO-வே மாணவரை வாங்குபவர் என்றும் ஆசிரியரை விற்பவர்
என்றும் பல்கலைக்கழகங்களை கடைகள் என்றும் சொல்கிறது. அதன் அறிக்கையில் ஒப்புக்கு
கூட மாணவார்கள், ஆசிரியர்கள் போன்ற வார்த்தைகள் இல்லை).
கடை திறப்பதற்கான கண்டிசன்கள்
” திறக்கப்படும் கல்விக் கடைகள் தரமானதாகத்தான் இருக்கும் என்று யாராலும்
உத்திரவாதம் வழங்கமுடியாது”
என்கிறது. இதுவரை வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளில் திறந்த பல்கலைக்கழகங்கள் எல்லாமே
மிகவும் சராசரிக்கும் கீழே மோசமான பல்கலைக்கழகங்கள்தான் என்று உலக வங்கியே
குறிப்பிட்டிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.
”நாங்கள் கடை திறந்தால் எங்களுக்கு மற்ற கடைக்காரர்களோடு சமமான
போட்டி இருக்க வேண்டும். அதாவது அரசு பல்கலைக்கழகங்களுக்கு சில சலுகைகள் மானியங்கள் அளிக்குமில்லையா அதை எல்லாம்
எங்களுக்கும் தரவேண்டும்”என்கிறது.
ஒரு வெளிநாட்டின் கடை என்றால் பரவாயில்லை. 160 நாடுகளில் இருந்து பல பல கடைகள்
வரும் என்பதால் அரசால் அதை செய்ய முடியாது. ஆகவே அரசு தற்போது வழங்கிவரும்
சலுகைகள் மானியங்கள் அனைத்தையும் நிறுத்தி சமமான போட்டியை வழங்கும்.
“அரசு தனியாக கடை போட்டுக்கொள்ளத் தடையில்லை. ஆனால் ஒரு நையா பைசா
வாங்கினால் கூட அதை மற்ற சாதாரண கடைகள்
போல் அர்த்தம் கொள்ளப்படும். அதற்கு வழங்கும் வாய்ப்பு எங்களுக்கும்
கொடுக்கவேண்டும்” என்கிறது. இதுவரை இந்தியா முற்றிலும் இலவசமாக உயர்கல்வி எல்லாம்
வழங்கியதில்லை. குறைந்தபட்சம் தேர்வுக்கட்டணமாவது வசூலிக்கும். அது கண்டிசனுக்கு
எதிரானது என்பதால் அரசின் மானியமோ சலுகைகளோ இல்லாமல் அரசு பல்கலைக்கழகங்கள்
படிப்படியாக மூடப்படும்.
“பாடத்திட்டம், கற்றுக் கொடுக்கும் முறை. எல்லாம் நாங்கள்தான்
முடிவு செய்வோம்” என்கிறது. ஏற்கனவே
நம்நாட்டில் சில புதிய படிப்புகளைப் படித்துவிட்டு என்ன செய்வது என்றே தெரியாமல்
பலர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இந்த வெளிநாட்டு கடைகள் வந்து ’பனானா
அவுடர் லேயர் பீலிங் கோர்ஸ்’ என்று ஒரு கோர்ஸை நடத்தும் படித்தால் பல நாடுகளில்
வேலை கிடைக்கும் என்று விளம்பரம் செய்யும். அது வாழைப்பழத் தோல் உரிப்பதற்கான
படிப்பு என்று கூட தெரியாமல் நம்மவர்கள் போய் விழுவார்கள். அதே போல்
பாடத்திட்டத்தில் இந்தியர்கள் முட்டாள்களாக இருந்தார்கள் வெள்ளையர்கள் வந்து
அவர்களுக்கு அறிவூட்டினார்கள் என்று சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதினாலும் ஒரு
கேள்வி கேட்கமுடியாது.
”எங்களுடைய கட்டணத்தை நாங்கள்தான் முடிவு செய்வோம்” என்கிறது. ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில்
வருடக் கட்டணம் 13,800 ரூபாய் இருக்கும் போது தனியார் கட்டணங்கள் மூன்று லட்சம்(
இது அரசு அனுமதிக்கப்பட்டது. உண்மையில் ஆறு லட்சம் வரை தனியார் கல்லூரிகள்
வாங்குகின்றன). தனியார்களை கட்டுப்படுத்த சக்தி இருந்தே இந்த கொள்ளையை அரசால்
தடுக்க முடியவில்லை. வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகள் வந்து பதினைந்து லட்சம்
என்று சொன்னால்? வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டி போடாமல் உள்நாட்டு கல்வி
நிறுவனங்கள் அழிந்திருக்கும் போது நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான் என்பதை
நினைவில்கொள்ளுங்கள்.
”நாங்கள் வியாபாரம் செய்ய உங்கள் நாட்டு சட்டம் ஏதாவது தடையாக
இருந்தால் அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்கிறது. அதாவது பல ஆண்டுகள் நாம் போராடி பெற்ற
இடஒதுகீடு போன்றவை தடையென நினைத்தால் அவற்றை நீக்கிவிடவேண்டும். இதனை கண்காணிக்க ‘வணிக கொள்கை மேற்பார்வை பொறியமைவு’ (Trade
Policy Review Mechanism) நிறுவப்படும் . இதன் பிரதிதிகள், ஆண்டுக்கொரு முறை மனித வள
மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி தொடர்பான சட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள் ஏதேனும் புதிதாக சட்டம் இயற்றுவது என்றாலும்
இந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஊறுவிளைவிக்காமல் இயற்ற வேண்டும். நாம் பாடுபட்டு
உருவாக்கிய சட்டங்கள் காற்றில் பறக்கவிடப்படும்.
“உங்கள் அரசு, நீதிமன்றம் எதற்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள்
இல்லை” என்கிறது. அதாவது
யாராலும் அந்த நிறுவனங்களை ஒன்றும் செய்யமுடியாது. ஏதாவது நிர்வாகம் தவறு செய்தால்
அதை உலக சர்ச்சை மையத்தில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் அந்த மையம்
இந்தியாவில் அமைக்கப்படாது.
உங்கள் குழந்தையின்
கழுத்தை நெறிப்பதுதான் கொலையா?
தரமற்ற வெறும் பண்டமாக
ஆக்கப்பட்ட கல்வி, கட்டுப்படுத்தப்படாத கட்டணம், போராடிப் பெற்ற மானியங்கள்
சலுகைகள் ரத்து, நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரசை செயலிழக்கச் செய்தல், நீதிமன்றம்
மட்டுமில்லாமல் நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாகுதல் போன்றவைகளின் மூலம் உங்கள் குழந்தைகளின்
மூளையையும் எதிர்காலத்தையும் நெறிப்பது கொலையாகாதா?
பேட்டி
இது குறித்து
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம்
பேசினோம்.
”கல்வியில் WTO-GATSக்கு இந்தியா அனுமதியளிக்க எடுத்திருக்கும் முடிவை
எப்படி பார்க்கிறீர்கள்?”
”இது ஒன்றும் இன்று நேற்று எடுத்த முடிவல்ல.
கடந்த பத்தாண்டுகளாக பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி எடுத்த முடிவு. வாஜ்பாய்
அரசு விதை போட, மன்மோகன் சிங் அரசு தண்ணீர் ஊற்ற, அருவாளோடு அறுவடைக்குத் தயாராக
இருக்கிறது மோடி அரசு. கல்வி பிறப்புரிமை
என்கிறது அரசியலமைப்புச் சட்டம். கல்வி விற்பனை சரக்கு அல்ல என்று உன்னிகிருஷ்ணன்
வழக்கில் தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதை எல்லாம் குப்பையில்
எறிந்துவிட்டு, அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரின் உழைப்பை குழி தோண்டி
புதைக்கும் முயற்சிதான் இது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8.15
சதவிதத்தினர் மட்டுமே பட்டதாரிகள். சமூக ஒடுக்குமுறைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரில்
90 சதவிதம் பேருக்கு உயர்கல்வி சென்றடையவில்லை. இதுதவிர்த்து கடைநிலையில்
இருக்கும் மாற்றுதிறனாளிகள் திருநங்கைகள் நிலை என்னவாகும். இதைப் பற்றி எல்லாம்
அரசு யோசிக்கவில்லை. இது அமுலானால் நமது மொழி அழிந்து போகும். நம் மக்களின்
அறிவுசார் வளர்ச்சி அனைத்தும் முடங்கிப் போகும். மத்திய மாநில அரசுகளின் உரிமைகள்
பறிக்கப்படும்”
பத்தாண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறுகிறீர்கள் ஏன் இது பரவலாக
வெளியே தெரியவில்லை?
இது மக்களுக்கு தெரியக்
கூடாது என்று திட்டமிட்டு அரசு தடுத்திருக்கிறது. எந்த ஒரு முன்னணி கல்வியாளரையும்
அழைத்து அரசு கருத்து கேட்கவில்லை. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வலைதளத்திலோ, யூஜிசியின்
வலைதளத்திலோ இது பற்றி தகவல் இல்லை. இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் வலைதளத்தில்
அதுவும் ஆங்கிலத்தில் மட்டும்தான் இருக்கிறது. வழக்கம்போல் இந்திய மொழிகளை அரசு மதிக்காது ஆனால் இம்முறை அது
உயர்த்திப் பிடிக்கும் இந்தியில் கூட இல்லை.இவ்விவகாரத்தில் மக்களை இருட்டறையில்
வைக்க அரசு விரும்புகிறது என்றுதானே அர்த்தம். ஆனால் இடதுசாரிகளும் மாணவர்
அமைப்புகளும் இதற்காக தொடர்ந்து போராடி வந்துள்ளனர். அவர்களும் மத்திய அரசின்
கவனத்தைப் பெற தலைநகர் டெல்லியில் அதிக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதால் மற்ற
மாநிலங்களின் கவனத்தைப் பெறமுடியவில்லை.
நம் நாட்டு குழந்தைகளுக்கு வெளிநாட்டுக் கல்வி கிடைக்க இது வாய்ப்பாக
அமையும் என்று அரசு கூறுகிறதே?
“அவை அளிக்கும் கல்வி
தரமானதாக இருக்கும் என்று உறுதியளிக்க
முடியாது என்று உலகவங்கியே கூறியுள்ளதே. ஒருவேளை தரமானதாக இருந்தாலும்
இதுவரை அமெரிக்கா ஐரோப்பா சென்று படித்தவர்களில் பெரும்பான்மையானோர் அங்கேயே தங்கி
அந்த நாட்டுக்கு உழைக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு உள்நாட்டிலேயே வெளிநாட்டுக் கல்வியைக் கொடுத்து நாம்
துரத்திவிடப் போகிறோம். அவ்வளவுதான். இது Brain gain க்கு பதிலாக Brain Drainக்கு
வழிவகுக்கும்”.
வெளிநாடுகளுக்கு நாம் கல்வி சந்தையை திறந்துவிடுவது போல் மற்ற
நாடுகளும் நமக்கு திறந்துவிடுவார்களே? அதன் மூலம் நமக்கு வருவாய் கிடைக்குமே?
இந்தியா போன்ற வளரும் நாடுகளால்
வளர்ந்த நாடுகளுக்குள் கால் ஊன்ற முடியாது என்பதே உண்மை. ஒரு சிறிய மீனும் பெரிய
மீனும் ஒரு பந்தயம் வைத்துத் தோற்கும் மீனை வெல்லும் மீன் விழுங்கிவிட வேண்டும்
என்று பேசிக்கொண்டால் அது எவ்வளவு பெரிய அபத்தம். பார்ப்பதற்கு சமவாய்ப்பு போல்
இருந்தாலும் சிறிய மீனால் பெரிய மீனை விழுங்கவே முடியாது என்பதுதானே உண்மை.
இந்தியா சிறிய மீன்.
இப்போது என்ன செய்யவேண்டும்?
இதுவரை இது ஒப்பந்தமாகவில்லை. வெறும்
இந்திய அரசின் விருப்பமாகத்தான் இருக்கிறது. டிசம்பர் 15 ஆம் தேதியில் நடக்கும்
கூட்டத்தில்தான் இதை உறுதி செய்யப் போகிறார்கள். இதை உறுதி செய்துவிட்டால் பிறகு
நாம் காலம் முழுக்க அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அதற்கு முன்பாக மத்திய அரசை
நிர்பந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தடுக்க வேண்டும். அதற்கு பெற்றோர்,
ஆசிரியர்கள், பொது மக்கள், பல்கலைகழகங்கள் என அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்த
போராட்டத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து இந்திய அரசாங்கத்தை முதலில் GATSல் இருந்து
விலகவும் பிறகு WTO அமைப்பில் இருந்து வெளியேறவும் வலியுறுத்த வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
உபரித் தகவல்
இந்தியாவிற்கு மட்டுமல்ல ஆபத்து
இந்த ஆபத்து
இந்தியாவிற்கு மட்டுமல்ல பல வளரும் வளரா நாடுகளுக்கும் சேர்த்தேதான் இந்த வலை
விரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம்மை விட பின் தங்கிய நாடுகள் என்று நாம்
நினைக்கும் ஆப்பிரிக்க நாடுகள் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆம் ஆண்டே
கானாவில் கூடி WTO-GATS ன் அதன் சரத்துகள் தெளிவாக இல்லை,
குழப்பமான வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கின்றன. இதை
நடைமுறைப்படுத்தினால் வரும் விளைவுகள் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளும்வரை நாம்
இதற்கு சம்மதிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளன. நாம் தாமதமாக விழித்துள்ளோம்.
ஆனால் இன்னும் நமக்கு செயல்பட நேரம் இருக்கிறது. செயல்படுவோமா?
(இதன் திருத்தப்பட்ட பதிப்பு டிசம்பர் 15 தப்பிப்பார்களா உங்கள் குழந்தைகள் ? என்கிற தலைப்பில் புதிய தலைமுறையில் வெளியாகியுள்ளது)
