அந்த மதிய வேளை பேட்டிக்காக எஸ்.வி.சேகர் வீட்டுக்குள் நுழைந்தோம். தன் செல்ல நாய்களின் புடை சூழ அமர்ந்திருந்தார். நம்மை வரவேற்று அவர் கையாலேயே ஜில்லென ரசகுல்லா கொடுத்தவர் நமது கேள்விகளுக்கு சுடச்சுட பதில் அளித்தார்.
எப்பவும் ஆக்டிவ் மோடில் இருப்பீங்க கொஞ்ச நாளா சைலண்ட் மோடுக்கு
போய்டிங்களே?
கட்சி பாலிடிக்ஸ் ஒத்துவரலைன்னா
ஏதாவது பரபரப்பா சொல்றது இல்லைன்னா அமைதியா இருக்கிறதுன்னு ரெண்டு விஷயம் இருக்கு.
. கட்சி கருத்து சில சமயம் நம்மோட கருத்துக்கு எதிரா இருக்கும். அப்போ எல்லாம் நம்ம கருத்தைச்
சொல்லிட்டு இது என் சொந்த கருத்து .. சொந்தகருத்துன்னு சொல்றதுக்கு பதிலா நாம
சைலண்டு மோடுக்கு போயிடுறது நல்லது. அப்படி இல்லைன்னா யாராவது நம்மள கண்டிப்பா ’சைலண்ட்
மோடுக்குப் போயா’ன்னு சொல்வாங்க.. அதுக்கு முன்ன நாமளே போயிடுறது பெட்டர்.
நீங்கள் அடிக்கடி கட்சி மாறுறீங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே?
. எல்லாக் கட்சியிலும்
நான் தலைவர் வழியாத்தான் சேர்ந்திருக்கேன். 1991 முதல் 2004 வரையிலும் நான் பிஜேபி
அனுதாபியாத்தான் இருந்தேன். பிஜேபிக்காக திமுக அதிமுக கட்சிகளோட கூட்டணி பேசியிருக்கேன். கட்சி பாலிடிக்ஸ்க்குள்ள
வரும்போது நான் ஜெயலலிதாவை சந்திச்சு அதிமுகவுல சேர்ந்தேன். அதுக்கடுத்து ராகுல்
காந்தி கூப்பிட்டார். காங்கிரஸ்ல சேர்ந்தேன். ஏன்? அதிமுகவில இருந்து ஐ வாஸ்
டிஸ்மிஸ்ட்.(டேபிளைத் தட்டுகிறார்)... நீக்கப்பட்டேன்... என்ன காரணம்? நான் திமுகவுல சேர்ந்திடுவேன்ங்கிற தவறான தகவலின் அடிப்படையில்
நீக்கப்பட்டேன். இன்னைக்கு வரைக்கும் நான் திமுகவுல சேரலையே.
ராகுல் காந்தி என்னை
கட்சியில சேர சொன்ன போது கூட கோஷ்டிகலை மனசுல வச்சு நீங்களும் சோனியாவும்
மட்டும்தான் எனக்கு லீடர்ன்னா நான் இருக்கேன்னு சொன்னேன். அவரும்
சரின்னார்.அப்புறம் யார் மேலயோ இருந்த கோபத்துல தங்கபாலு என் பேரை எடுத்துட்டார்.
2010ல என்னோட ஆசான் ,
வழிகாட்டி சோ நரேந்திர மோடிக்கிட்ட
அறிமுகப்படுத்தி வச்சார். 2013 ல மோடிகிட்ட
அவருக்காக நான் பிரச்சாரம் பண்ணத் தயார்னு சொன்னேன். என்னை கட்சியில சேர சொன்னார். கட்சி பாலிடிக்ஸ் எனக்கு ஒத்துவராதுன்னு சொன்னேன். வற்புறுத்தினார்.
அப்பன்னா எனக்கு சீட்டு வேணாம் பிரச்சார அணித் தலைவர் பதவி கொடுக்கனும்னு
சொன்னேன். சரின்னு சொன்னார்.
பாஜகவுல சேர்ந்தேன்.
பாஜகவில் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்?
நான் மோடிக்கிட்ட பிரச்சார அணித்தலைவர் பதவி கேட்டிருந்தேன்
இல்லையா? ஆனா எனக்கு அந்த பதவி கொடுக்கப்படல. எந்தப் பேச்சும் இல்லை. தேர்தல்
நேரம் இல.கணேசன் அவருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணக் கூப்பிட்டார். எந்த அடிப்படையில
கூப்பிடுறீங்க? நடிகரான்னா அதுக்குறிய காசு கொடுங்க.. தொண்டரான்னா நான் பாஜகவுக்கு
ஓட்டு மட்டும் போட்டுகிறேன்.. பிரச்சார அணித் தலைவர்னா பிரச்சாரத்துக்கு வரேன்னு
சொன்னேன். உடனே கொள்கைப் பரப்புச்
செயலாளர் பதவி கொடுக்கிறேன்னு சொன்னார். அந்த மாதிரி ஒரு பதவி பாஜகவுல இருந்ததா தெரியல.. ஆனாலும் இல.கணேசன்
பிரஸ் மீட் வச்சு லெட்டர் கொடுத்தார். இன்னைக்கு வரைக்கும் அந்த பதவி இல்ல. ஏன்னா பாஜகவுக்காக டிவில பேசுறவங்க லிஸ்ட்ல கூட என்
பேர் கிடையாது. அப்ப டிவிக்குன்னு தனி பிரச்சார அணி இருக்கா? தெரியல.. இப்படி இருக்கா இல்லையானு தெரியாத
ஒரு பொறுப்பில் இருக்கேன்.
பாஜகவில் உங்களை திட்டுமிட்டு ஓரம்கட்டுகிறார்களா?
ஆமாம் என்னை
திட்டமிட்டு மறைக்கறாங்க. நான் முந்திடுவேனோன்னு ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்
மற்றவர்கள் கிட்ட இருக்கு. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னாடி செப்டம்பர் 8 ஆம்தேதி
நான் நரேந்திர மோடிய நேர்ல சந்திச்சு
கட்சியில சேர்ந்தேன். செப்டம்பர் 17 ஆம் தேதி மோடி சென்னை வந்தப்போ எனக்கு தமிழக
பாஜக அழைப்பு கொடுக்கல. பிரதமர் அலுவலகத்தில் இருந்து என்னை மத்திய தனிக்கைக் குழு
உறுப்பினராக அப்பாயிண்ட் பண்ணும்போது என்னோட போன் நம்பர இங்கே இருக்கிற முக்கியத்
தலைவர்கள் கிட்ட கேட்டிருக்காங்க. ஆனா எல்லாருமே சேகர் நம்பர் இல்லையேன்னு பதில்
சொல்லிருக்காங்க.
தமிழிசை தலைவர் ஆனபோது அவங்களுக்கு ஒரு மெசேஜ்
அனுப்பினேன். கட்சியில என்னோட நிலை பத்தி உங்ககிட்ட ஒரு பத்து நிமிசம் தனியா
பேசனும்னு இதுவரைக்கும் ரிப்ளை இல்ல. அதுக்கப்புறம் நேர்ல சந்திச்சப்போ கூட அதைப்
பத்தி அவங்க பேசல. கட்சிதான் நம்மை பயன்படுத்திக்கனும். நாம கட்சி பின்னாடி ஓட
முடியாது.
பொன்னார் மோடியை ரஜினியின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது நீங்க
ஃபேஸ்புக்ல ”குரங்காட்டி கையில சிங்கத்தை கொடுத்தாலும் அதை குட்டிக்கரணம்
அடிக்கவச்சு வித்தைதான் காட்டுவான்”னு எழுதியிருந்திங்க?
நான் சும்மா
போட்டேங்க.. அன்னைக்குன்னு பாத்து மோடிக்கு வேட்டி கட்டி ரஜினி வீட்டுக்கு கூட்டிட்டுப்
போனாங்க.. அவ்வளவுதான். எனக்கு பெர்சனலா மோடி ரஜினி வீட்டுக்குப் போனதில் உடன்பாடு
இல்லை.
மோடி இந்தியளவில் பாஜகவின் முகமாக இருக்கிறார். தமிழ்நாட்டிற்கென்று
ஒரு உறுதியான தலைவர் பாஜகவில் இல்லையே?
மோடிதான்
தமிழ்நாட்டுக்கும் முகம். அவரைத்தான் சொல்ல வேண்டும்.. சொல்ல முடியும்.
தமிழ்நாட்டிற்கு உறுதியான பாஜக தலைவர் இல்லை என்று
ஒத்துக்கொள்கிறீர்களா?
எந்தக் கட்சிக்குமே
உறுதியான தலைவர் இல்லை என்பதே உண்மை.
பாஜக ஆட்சி அமைக்கும்னு யாருமே சொல்லல. சொன்னாத்தான் முதல்வர் வேட்பாளர் உறுதியான
தலைவர் பத்தி எல்லாம் யோசிக்கனும். ஆட்சியில் பங்குதான் பாஜகவோட இப்போதைய நோக்கு.
பாஜகவின் கூட்டணி மூவ்களை எப்படி பார்க்கிறீர்கள்?
எப்படியும் பார்க்கலை.
சும்மா பேப்பர்ல நியூஸ் பாக்குற மாதிரி பாக்குறேன். எண்ணூத்தி சொச்சம் ஓட்டு
வாங்கின சரத்கிட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிரகாஷ் ஜவடேக்கர அழைச்சுட்டுப்
போறாங்க.. அப்படிப் பாத்தா நானே மயிலாப்பூர்ல தனியா நின்னு 1500 ஓட்டுக்கு மேல
வாங்குனேனே.. நான் தனிக்கட்சி ஆரம்பிச்சா கூட கூட்டணி பேச வருவாங்களா?
உங்களுக்கு முக்கியத்துவம் தராததால் பாஜகவை விமர்சிக்கிறீங்களா?
எனக்கு முக்கியத்துவம்
எதிர்பார்க்கலைங்க. நான் பயங்கர பிசி.. அடுத்த வாரம் மணல் கயிறு -2 சம்மந்தமா
மலேசியா போறேன். 2 கோடி ரூபாய் பிராஜக்ட்.. அதை முடிச்சதும் 3 கோடி ரூபாய்
பிராஜக்ட் வரும். 12, 13 தேதியில டிராமா இருக்கு.. இப்பக்கூட ஒரு ஒரு காலேஜ்ஜுக்குப் போய் பேசுனா ஒரு மணி
நேரத்துக்கு ஒரு லட்ச ரூபா கொடுக்கிறாங்க. மயிலாப்பூர்ல மக்கள் தங்களுக்கு ஒரு
பிரச்சனைன்னா என்கிட்டதான் சொல்றாங்க.. நான் அதை தீர்த்து வைக்கிறேன்.. மக்கள்
எனக்கு முக்கியத்துவம் கொடுத்துகிட்டு இருக்கும் போது நான் ஏன் கவலைப்படனும்?.
பாஜக யாரோடு கூட்டணி அமைக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
அதை நான் சொல்ல
முடியாது. அமித்ஷா மோடிதான் சொல்லனும்.
ஒரு பாஜக தொண்டனாக உங்கள் விருப்பம் என்ன?
தொண்டன்னு நான் தான்
சொல்றேன். நான் எப்படி கூட்டணி பத்தி எல்லாம் சொல்லமுடியும்? அதை எல்லாம்
சொல்றதுக்குத்தான் பெரியவர்கள் இருக்காங்களே. இல.கணேசன் இருக்காரு, எச்.ராஜா
இருக்காரு, வானதி இருக்காங்க..
நடிகரா பிரச்சாரத்திற்கு
வர தனியா காசு கேட்டதா சொல்றீங்க? பிரச்சாரங்கள் கொள்கை அளவில் இல்லாமல் ஆக்ஷன்
கட் சொல்கிற நடிப்பளவில் இருக்கிறதா?
பிசியா நடிக்கிறவங்க
அதை விட்டுட்டு பிரச்சாரத்திற்கு வந்தா அந்தக் காசை ஈடுகட்டனும்ல. பலர் ஆக்ஷன்
கட் சொல்ற மாதிரிதான் பிரச்சாரம் பண்றாங்க. ஒருவேளை அவங்க அப்படி பண்ணலைன்னாலும் கட்சிகள் நடிகர்களை அப்படிப்
பாக்குதுங்கிறதுதான் நிதர்சனம். அதுல வடிவேல் முக்கியமான ஒருத்தர். அவருகிட்ட
அன்னைக்கே சொன்னேன் ’உனக்கு இன்னும் பத்து வருஷம் மார்க்கெட் இருக்கு நான்
வேணும்னா விஜயகாந்த் கிட்ட பேசுறேன். உன்னை பலிகடா ஆக்குறாங்க’னு. அவர் கேட்கல...
நடிகர்களுக்காக ஓட்டுப் போடும் நிலை இன்னும் இருக்கிறதா?
கொஞ்சம்தான்
இருக்குன்னு சொல்வேன். நானும் நெப்போலியனும் மயிலாப்பூர் தொகுதியில நின்னோம்.
கலைஞர் நெப்போலியன் கிட்ட சேகர் நிக்கிறாரே வேற எங்கயாவது நிக்கலாமேனு சொன்னாராம்.
அதுக்கு நெப்போலியன் “அவரு காமடி.. நான் ஹீரோ..” எனக்குத்தான் ஓட்டுப் போடுவாங்கனு
சொல்லியிருக்கார். ஆனா
நான் தான் ஜெயிச்சேன். ஏன்னா? நான் மயிலாப்பூர் மண்ணின் மைந்தன். என் ட்ரஸ்ட்
மூலமா எத்தனையோ நலத்திட்டங்கள் செய்திருக்கேன். அதனால் மக்கள் என்னை
தேர்ந்தெடுத்தாங்க.. சினிமாக்காரங்கிறதுனால இல்ல..
இம்முறை மயிலாப்பூரில் பாஜக வேட்பாளராக நிற்பதற்கு விருப்ப மனு
கொடுப்பீங்களா?
கட்சி என்னைக் கேட்டால்
அதற்கு பிறகு நான் முடிவெடுப்பேன். நானா விருப்பமனு கொடுக்க மாட்டேன்.
ஜெயலலிதாகிட்ட கூட நான் விருப்பமனு கொடுக்கல சார்.. அவங்களாதான் சீட்
கொடுத்தாங்க.. கட்சிதான் சார் நல்ல ஆளாப் பாத்து நிக்க வைக்கனும்.. மயிலாப்பூர்ல
நான் நிக்கனும்னு இதுவரை 400 பேர் என்கிட்ட வந்து சொல்லிருக்காங்க.. கட்சிகிட்ட
சொல்லுங்கன்னு சொல்லிட்டேன்.. Federation of Brahmins Assosiation of South
indiaனு ஒரு அமைப்பு
வச்சிருக்கேன். ஒரு லட்சம் பேர் உறுப்பினரா இருக்காங்க. எல்லா பிராமண அமைப்புகளும்
என்னை தலைமை தாங்கச் சொல்லிக் கேட்கிறார்கள். அதை எல்லாம் நான் தலையில் ஏற்றிக்
கொள்வதில்லை “கடவுள் நம்மோடு இருந்தால் யார் நமக்கு எதிராக இருக்க முடியும்”
இதுதான் நான் நம்புவது.
ஜெயலலிதா கருணாநிதி இருவருடனும் நேரடித் தொடர்புடையவர் நீங்கள் அது
குறித்து சொல்லுங்கள்?
ஜெயலலிதாவ 35 தடவ சந்திச்சிருக்கேன்
அவங்க கால்ல விழுந்தது கிடையாது. என்னை உட்காரவச்சு மிஸ்டர் சேகர்னு மரியாதையாதான்
அவங்க கூப்பிட்டிருக்காங்க.அவங்கள எடுத்து சொல்றவங்கதான் சரி கிடையாது.
கருணாநிதியைப்
பொறுத்தவரை என் மனைவி திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவேன்னு சொல்லுவாங்க. என்ன செஞ்சது
திமுகன்னு கேட்டா ’நீங்க இருக்கிற கட்சியோட தலைவி ஜெயலலிதா ஆனா நம்ம வீட்டு
விசேஷத்திற்கு ஒருதடவ கூட வந்தது இல்லை. ஆனா எதிரிக்கட்சியான கருணாநிதி மூனு
விசேஷத்துக்கும் நேர்ல வந்தாரே.. என் ஓட்டு தாத்தாவுக்குத்தான்’ங்கிறாங்க,, நான்
என்ன பண்ண முடியும்?.
தற்போதைய அரசியல் விளம்பரங்கள் தரம் தாழ்ந்து போகிறது என்று
நினைக்கிறீர்களா?
என்னம்மா இப்படி
பண்றீங்களேம்மா ஒன்று தரம் தாழ்ந்த விளம்பரம் கிடையாது. அதற்கு எதிர்வினையாக
சோஷியல் மீடியாவில் உலவுவதுதான் தரம் தாழ்ந்த விமர்சனம்.
அதிமுகவின் ஆட்சி?
முதல் ஆண்டே
நூறாண்டு சாதனை செஞ்சுட்டத சொன்னாங்க.. அப்படிப் பாத்தா இது நானூறாண்டு சாதனை..
கட் அவுட் கலாச்சாரத்தையே நிறுத்த முடியல.. பேனர் அகற்றினதற்கு இன்ஸ்பெக்டர் மேல
நடவடிக்கை எடுக்கிறாங்க.. தன் கட்சியில் பொறுக்கி இருக்கான்...அவனுக்கு கொடுக்கிற
மரியாதைய இன்ஸ்பெக்டருக்கு கொடுக்கலைன்னா சமுதாயம்தான் சீர்கெட்டுப் போகும்... இது
ஒரு உதாரணம்தான்..
திமுக சார்பாக இருப்பது போல் தெரிகிறதே?
அழகிரி ஸ்டாலினுக்கு
இடையே பிரச்சனை வந்த போது அழகிரியிடம் சமாதானம் பேசியவன் நான். அவர்களோடு
கொள்கையில் முரண்பட்டாலும் நட்போடு இருக்கிறேன். என் வீட்டில் மோடி, ஜெயலலிதா,
மூப்பனார் என அனைவருடன் இருக்கும் படமும் மாட்டியிருக்கிறேன்.
ஸ்டாலின் தற்போது கோயில்களுக்கு வருகிறார்.
கருணாநிதி ராமானுஜம் சீரியல் எடுக்கிறார். திராவிடர் கழகம் ஒரு வியாபாரக் கட்சி.
திமுக அதில் இருந்து மாறிவிட்டது. இன்னும் சின்ன வயசுப் பழக்கங்களை விடமுடியாமல்
இருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் அதில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள்.
திமுகவில் 90 சதம் இந்துக்கள்னு ஸ்டாலினே சொல்லியிருக்காரே.
(நன்றி: புதிய தலைமுறை)
