நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என்று....
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நாம் தனியாக இருக்கிறோம் என்று....
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நமது அந்தரங்கள் யாருக்கும் தெரியாது என்று...
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நமது செய்கைகள் கண்காணிக்கப்படவில்லை என்று...
ஆனால் இவை எதுவும் உண்மையில்லை....
நமது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது.. நம்மை எந்நேரமும் ஏதேனும் இரு கண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன.. நமக்கு என்ன பிடிக்கும்.... என்ன பிடிக்காது என்பது எல்லாம் நமக்கு தெரியாத யாரோ ஒருவருக்கு தெரிந்திருக்கிறது.... நாம் எங்கு செல்கிறோம்... எதற்கு செல்கிறோம் என்பது வரை சிலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... இவ்வளவு ஏன் நாம் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமல்லாமல் என்ன சிந்திக்கப் போகிறோம் என்பது கூட சிலருக்கு தெரிந்திருக்கிறது....
யார் அந்த சிலர்?
தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. பதினைந்து பிரபலங்கள் நூறு நாட்களுக்கு ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களது ஒவ்வொரு அசைவையும் முப்பது கேமராக்கள் கண்காணிக்கும் என்று கூறுகிறார்கள். அந்த முப்பது கேமராக்கள் வழியே பிக் பாஸ் என்கிற ஒரு பெருந்தலைவன் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவர் கண்டதில் சுவாரஸ்யமானவற்றை மட்டும் நமக்கு அவர் காட்டுகிறார். அதை நாம் விரும்பிக்காண்கிறோம்...
இது வெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடப்பது மட்டுமல்ல நமது நிஜவாழ்விலும் அதுதான் நடக்கிறது... நாம் மூச்சு விடுவது உட்பட நமது அன்றாட அசைவுகளை யாரோ ஒரு பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்... அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு பிக் பாஸ் தங்களை பார்ப்பது தெரியும் ஆனால் நமக்கு அது தெரியாது. யார் அந்த பிக் பாஸ்..? நம்மை வேடிக்கை பார்ப்பதால் அவருக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? இந்த கேள்விகளுக்கான விடை இன்னொரு கேள்வியில் இருந்து தொடங்குகிறது.
இனி வரும் காலங்களில் அதிக விலைமதிப்புள்ள சொத்து எதுவாக இருக்க முடியும்? என்கிற அந்த கேள்விக்கு நமது பதில் என்னவாக இருக்கும்? பணம்? தங்கம்? நிலம்? கார் , பங்களா போன்ற சொகுசு பொருட்கள்?.. இவை எதுவும் இல்லை... தகவல்கள்....
ஆம்... உலகம் பல்லுயிர்களுக்கான வசிப்பிடம் என்கிற நிலையில் இருந்து ஒரு சந்தை என்கிற நிலைக்கு மாறிவிட்ட போது தகவல்களைப் போல பெரிய சொத்து எதுவும் இல்லை..,,நொடி ஒன்றுக்கு பல லட்சம் தகவல்கள் கணினி வழியாகவும், செல் போன் வழியாகவும், செயற்கை கோள் வழியாகவும் நம்மை விட்டு சென்று கொண்டும் நம்மை வந்து அடைந்து கொண்டும் இருக்கின்றன., இந்த தகவல்களைப் பெற பல நிறுவனங்கள் லட்சம் லட்சமாக செலவு செய்து கொண்டிருக்கின்றன.
ஏன்?
உங்களது உடல் எடை அதிகம் என்கிற ஒற்றை தகவல் போதும் உங்களை , ஜாக்கிங் டீ சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூவில் தொடங்கி ... உடற்பயிற்சி கருவிகள்... உடல் எடையை குறைக்கும் உள்ளூர் மருந்துகள்.. உடலை இறுகச் செய்யும் வெளிநாட்டு பானங்கள் வரை வாங்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக உங்களது வருவாயின் பெரும் பகுதியை கார்ப்ரேட் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ள முடியும்..
இப்போது உங்களது அலைபேசியை எடுத்து வாட்ஸப்பில் உங்களுடைய நண்பரிடம் ஒரு புதிய ஷூ வாங்குவது குறித்த உரையாடலை நிகழ்த்துங்கள் ... இரண்டு நாட்களுக்குள் உங்களது ஃபேஸ்புக்கில் பல்வேறு ஷூ விளம்பரங்கள் வந்து கொட்டும்... அது ஒன்றும் தற்செயலானது அல்ல.. அப்படி தற்செயல் என்று நீங்கள் கருதினால் ஃபேஸ்புக் நிறுவனத்தை உருவாக்கிய மார்க் ஜக்கர்பெர்க்தான் வாட்ஸப் நிறுவனத்தின் உரிமையாளர் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்...
இப்படி நண்பரோடு தனிப்பட்டு நடத்தும் உரையாடல்களில் இருந்து தகவல் எடுக்கப்படுவது ஒருபுறம் என்றால் மறுபுறம்
நம்மை பற்றிய தகவல்களின் மதிப்பறியாமல் நாமே அதை இலவசமாக கொடுத்துவருகிறோம்..
எந்தெந்த இடத்தில் எல்லாம் நமது இ-மெயில் ஐடி, போன் நம்பர் போன்றவற்றை கொடுக்கிறோமோ அங்கெல்லாம் நம்மை கண்காணிப்பதற்கான வசதியை நம்மை அறியாமல் நாமே ஏற்படுத்தித் தருகிறோம்... நாம் நமது கார்டை ஸ்வைப் செய்யும் போதெல்லாம் எந்த பொருள் நமக்கு பிடிக்கும் எந்த பொருளை நாம் அதிகம் வாங்குகிறோம் என்கிற தகவலை கொடுக்கிறோம்...
நாம் ஏதேனும் ஒரு தகவல் குறித்து தேடுவதற்காக கூகுளில் முதல் எழுத்து டைப் பண்ணும் போது நமக்கு தேவையான வார்த்தையை கூகுள் சரியாக தேடி வந்து வைத்ததற்கு ஆசுவாசமடைந்திருப்போம்? டைப் செய்யும் வேலை மிச்சம் என்று மகிழ்ச்சியடைந்திருப்போம்? நாம் இதைத்தான் டைப் பண்ணப் போகிறோம் என்பது கூகுளுக்கு எப்படித்தெரியும்? என்று ஒரு கணமேனும் யோசித்திருந்தால் நமக்கு ஆசுவாசமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்காது..
எப்போதும் நம் கையில் வைத்திருக்கும் செல்போன் போல நம்மை வேவு பார்க்கும் ஒரு சிறந்த கருவி வேறு எதுவுமில்லை...
நமது செல்போனைக் கொண்டு நாம் எங்கே இருக்கிறோம்? எவ்வளவு நேரம் இருக்கிறோம் போன்ற தகவலை மிக எளிதாக அறிந்து கொள்ளமுடியும் என்பதை தமிழ் திரைப்படங்கள் பார்த்து ஏற்கனவே நாம் தெரிந்து கொண்டிருப்போம்..
அதில் பயன்படுத்தும் APPS நம்மை பற்றி எத்தனை தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது தெரியுமா? நாம் படித்துப் பார்க்காமல் ஐ அக்ரி என டிக் செய்து இன்ஸ்டால் செய்த ஆப்களுக்கு எந்தளவுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம் என்று தெரியுமா?
உதாரணத்திற்கு ஒன்று...நாம் தினமும் வாடகைக்கு கார் அமர்த்த பயன்படுத்தும் APPக்கு நாம் தினமும் எந்த நேரத்திற்கு எங்கே செல்வோம் எவ்வளவு நேரம் அங்கு செலவிடுவோம் போன்ற தகவல்கள் தெரியும் .. அதைக் கொண்டு அந்த வாடகைக் கார் நிறுவனம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் மட்டும் வாடகைக் காருக்கான கட்டணத்தை உயர்த்த முடியும்... நாம் போக்குவரத்துக்கு காரை அதிகம் சார்ந்திருக்கும் தகவல் அந்த APP மூலம் ஒரு கார் நிறுவன விற்பனை ஊழியருக்கு தெரிந்தால் அவரால் நம்மை எளிதில் அனுகி காரை விற்றுவிட முடியும்.
இப்படி தன்னளவில் ஒவ்வொரு நிறுவனமும் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கின்றன... இப்படி ஒவ்வொரு நிறுவனமும் திரட்டும் தகவல்கள் வேறொரு நிறுவனத்திற்கு ஏதேனும் ஒரு வழி மூலம் பரிமாற்றமும் செய்யப்படுகின்றன..
இந்த கூற்றை உறுதி செய்கிறது கடந்த 2011 ஆம் ஆண்டு பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை .. உலகின் அனைத்து தொழில்களையும் 147 நிறுவனங்கள் மறைமுகமாக கட்டுப்படுத்துவதையும் அந்த 147 நிறுவனங்களையும் வெறும் நான்கு நிறுவனத்தின் உரிமையாளர்களே வைத்திருப்பது பற்றியும் பேசுகிறது அக் கட்டுரை...
இப்படி கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்து கொண்டுதான் தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அதன் பங்கேற்பாளர்கள் குறித்தும் மாய்ந்து மாய்ந்து ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரில் கருத்து கூறிக் கொண்டிருக்கிறோம்..
இந்த நிறுவனங்கள் நமக்குத் தெரியாமல் நமது தகவல்களை திருடுவது போல் அந்த நிறுவனங்களுக்கு தெரியாமல் ஹேக்கர்கள் திருடும் போது அது பேராபத்தில் போய் முடிகிறது. கடந்த டிசம்பர் மாதம் கூட யாகூ நிறுவனம் தனது 1 கோடி பயனாளர்களின் கணக்குகள் பற்றிய விபரம் திருடப்பட்டுள்ளதாக கூறி அறிக்கை வெளியிட்டது, இணைய உலகை உலுக்கியது. அந்த தகவல்களைக் கொண்டு பலரது வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் களவாடப்பட்டதும் நடந்தேறியது. சமீபத்தில் ரான்சம்வேர் என்கிற வைரஸ் மூலம் பல முன்னணி நிறுவனங்கள் முடக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
கார்ப்பரேட் கம்பெனிகள் இவ்வாறு நமது தகவல்களை திருடும் போது உலக நாடுகளின் அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?(( என கேள்வி எழலாம்.)) அரசாங்கங்கள் மக்களின் தகவல்கலை திருடும் கார்ப்பரேட்களிடம் தகவல்களை கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்கின்றன. தத்தம் பங்குக்கு தன் மக்களின் தகவல்களைத் திருடிக் கொண்டிருக்கின்றன. இப்படி அமெரிக்க அரசு திருடிய தகவல்களை அம்பலப்படுத்தியதற்காகத்தான் எட்வர்டு ஸ்னோடன் என்கிற இளைஞர் அமெரிக்க அரசால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்...
எட்வர்ட் ஸ்னோடன்
அமெரிக்கா நாட்டில் வட கேரலினாவின் எலிசபத் நகரத்தில், 1983-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி பிறந்த எட்வர்ட் ஸ்னோடன் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்ற போதும் கணினி துறையில் ஆர்வமுள்ளவராய் இருந்தார். 2003-ம் ஆண்டு அமெரிக்க அரசு ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு கட்டம் கட்டியிருந்த நேரத்தில் தேச பணி ஆற்றும் கனவுகளுடன் அமெரிக்க சிறப்பு ராணுவப் படைகளுக்கான பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார், ஸ்னோடன் . ஆனால் அங்கே அமெரிக்க ராணுவம் ஜனநாயகத்தை நிலைநாட்டச் செல்லவில்லை என்பதை விரைவிலேயே தெரிந்து கொண்டார். அவரது உயரதிகாரிகள் அப்பாவி மக்களைக் காப்பதை விட அவர்களை கொல்வதிலும் துன்புறுத்துவதிலுமே அதிக இன்பம் கண்டனர் என பின்னாளில் அவர் அளித்த பேட்டிகளில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது உயரதிகாரிகளின் செய்கைகளைக் கண்டு ஸ்னோடன் மனம் வருந்திக்கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு ஒரு விபத்தில் இருகால்களும் முறிந்தன. ராணுவத்தில் இருந்து விலகிய அவருக்கு மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய பிரிவு ஒன்றில் பாதுகாவலராக வேலை கிடைத்தது. அங்கிருந்து சிஐஏவின் தகவல் தொடர்பு பாதுகாப்புத் துறையில் வேலை செய்ய ஜெனிவா அனுப்பப்பட்டார்.
அங்கே சுவிஸ் வங்கிகளை வேவு பார்த்த அவர் கணினி உதவியுடன் பல்வேறு ஆவணங்கள், உரையாடல்களை சேகரித்து அமெரிக்க அரசுக்கு கொடுக்கும் வேலை செய்து வந்தார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் முதல் பல்வேறு சமூக விரோதிகளை கண்காணித்து தான் தேச சேவை செய்வதாக எண்ணி பெருமிதம் கொண்டார். ஆனால் மெல்ல அவர் சேகரிக்கும் தகவல்களும் ஆவணங்களும் சாதாரண அமெரிக்க குடிமக்களின் உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்கள் என தெரிய வந்தபோது அதிர்ச்சியடைந்தார். அமெரிக்கர்களுடைய தகவல் மட்டுமல்ல லண்டன், சீனா, ரஷ்யா, இந்தியா என பல்வேறு நாடுகள் பற்றி அமெரிக்கா தகவல்கள் சேகரித்து வருவதையும் தெரிந்து கொண்டார். அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ் மீது கோபம் கொண்ட ஸ்னோடன் அதிபர் மாறினால் நிலைமை மாறிவிடும் என எண்ணினார்.
2008-ம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஓரளவு நம்பிக்கையூட்டியது. ஒபாமா நிர்வாகத்தில் சாதாரண மக்களை வேவு பார்க்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு நிலைமை சீர்திருத்தப்படும் என்று நினைத்தார், ஸ்னோடன். மேலும் கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவை விட்டு விலகி ஜப்பானில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் ஒரு ஒப்பந்த ஊழியராக சேர்ந்தார். ஆனால் ஒபாமா பதவி காலத்தில் ஒட்டுக் கேட்பதும் தகவல்களை சேகரிப்பதும் மேலும் அதிகரித்தன. இதற்கான தீர்வை தானே கொண்டுவருவது என முடிவு செய்த ஸ்னோடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் வேவு பார்க்கும் நடவடிக்கைகள் எவ்வளவு விரிவானவை, என்பதை புரிந்து கொண்டார். இதற்கிடையில் ஹவாயில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பூஸ் அலன் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியராக பணிக்கு சேர்ந்தார். தான் சேர்த்த தகவல்களை எல்லாம் வெளிக்கொண்டுவர முடிவு செய்தார் ஸ்னோடன். அவருக்கு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் செய்யும் அட்டூழியங்களை விக்கிலீக்ஸ் உதவியுடன் வெளிகொண்டு வந்த ப்ராட்லி மேனிங் ஆதர்சமாக இருந்தார். ப்ராட்லி மேனிங் போல் தானும் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் தன்னிடம் இருக்கும் தகவல்களை வெளியிட முடிவு செய்தார். “எனது குடும்பத்திற்கும் எனக்கும் நேரப்போகும் இன்னல்களை அறிந்திருந்தேன். இனிமேல் என்வாழ்நாளில் அவர்களை பார்க்கவே முடியாது என்பதையும் உணர்ந்திருந்தேன். ஆனாலும் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டிய கடமை எனக்கிருக்கிறது என்பதால் துணிந்து செயல்பட்டேன்" என்று தான் முடிவு எடுத்த தருணத்தை குறித்து தெரிவித்துள்ளார் ஸ்னோடன்.
தனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி இரண்டு வாரம் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்ட ஸ்னோடன் தகவல்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஹாங்காங் சென்று அங்கிருந்தபடி தான் சேகரித்த தகவல்களை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தினார். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவர் வெளியிட்ட ஆவணங்களால் அமெரிக்காவே அதிர்ந்தது. அமெரிக்காவின் உளவுத்துறையும் உள்துறையும் பத்திரிகைகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறின. அமெரிக்க அதிபர் ஒபாமா, இப்படி வேவு பார்ப்பது தேசிய பாதுகாப்பிற்கு தேவையானது என்று அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் பரபரப்பு அடங்கவில்லை ஒரு வாரத்திற்கு பிறகு இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்த போது தகவல்களை வெளியிட்டது தான்தான் எனக் கூறி வெளிச்சத்திற்கு வந்தார் ஸ்னோடன்.
இதனையடுத்து எல்லா அரசாங்கங்களும் செய்வது போல ஸ்னோடனை ஆண்ட்டி நேஷனல் என்றும் தீவிரவாதி என்றும் சித்தரித்தது அமெரிக்கா. அரசு சொத்துக்களைத் திருடியது, தேசியப் பாதுகாப்புத் தகவல்களையும் இரகசிய உளவுத் தகவல்களையும் வெளியிட்டது, முதலான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஸ்னோடன் அடுத்தடுத்து வெளியிட்ட ஆவணங்கள் மூலம் அமெரிக்க அரசு தனது மக்களை மட்டுமல்லாமல் அண்டை நாட்டு மக்களையும் கண்காணித்து வந்தது தெரியவந்தது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியமான இணைய இணைப்புத் தடங்களை நிர்வகித்து வரும் ஹாங்காங்கிலுள்ள பேக்நெட் நிறுவனத்தின் இணைய வலைப்பின்னலை அமெரிக்க அரசு சட்டவிரோதமாக ஊடுருவிப் பார்த்ததற்கான ஆதாரங்களை வெளியிட்ட ஸ்னோடன், சீனாவின் பிரபல சிங்ஹூவா பல்கலைக்கழகத்தின் முக்கியமான கணினிகளை நோட்டமிட்டதையும் கைபேசிகள் வழியாக சீன மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகளைக் கூட அமெரிக்க உளவுத்துறை திரட்டியதையும் உலகுக்கு உரைத்தார். ஏற்கெனவே தனது நாட்டின் இணையங்களில் அமெரிக்கா ஊடுருவதாகப் குற்றம் சாட்டி கூகுள், யாகூ போன்ற நிறுவனங்களுக்கு தடை விதித்திருக்கும் சீனாவுக்கே இந்நிலை என்றால் மற்ற நாடுகளின் நிலை என்ன என்கிற கேள்வி உலகநாடுகளின் மனதில் தோன்றியது. இங்கே அமெரிக்காவின் கண்காணிப்பு வலையில் இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது என்கிற கார்டியன் பத்திரிகை தகவல் குறிப்பிடத்தக்கது. அதன் படி 2013 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் மட்டும் இந்திய மக்களுடைய 600 கோடி இணைய தகவல்கள் அமெரிக்க அரசால் சேகரிக்கப்பட்டுள்ளன எனவும் அப்பத்திரிகை தெரிவித்தது. ஆனால் அமெரிக்காவின் இந்த உளவு வேலைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், விரிவான தகவல்கள் வந்ததும் விசாரிக்கிறோம் எனவும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை அளித்ததோடு நிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து ஹாங்காங்கில் இருந்த ஸ்னோடனை அமெரிக்க அரசு நெருங்கியதை தொடர்ந்து அவர் அங்கிருந்து ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றார். பின்பு அங்கிருந்து கியூபாவிற்கும் பிறகு கியூபாவில் இருந்து ஈகுவடாருக்கும் சென்றதாக தகவல்கள் தெரிவித்தன. தற்போது ஸ்னோடன் ரஷ்யாவில் இருப்பதாக கூறப்பட்டாலும் அவர் எங்கு இருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் தற்போதும் அமெரிக்க அரசின் உளவு ஆவணங்களை அவர் அம்பலப்படுத்தி வருகிறார். அவரை பிடித்து சிறையில் அடைக்க அமெரிக்கா துடித்துக் கொண்டிருக்கிறது.
தன் மக்களை அரசே உளவு பார்க்கும் வேலையை அமெரிக்க அரசு மட்டும் செய்யவில்லை. அனைத்து நாட்டு அரசாங்கங்களும் செய்கின்றன. “கார்டியன்” நாளேட்டின் செய்தியின்படி, அமெரிக்க என்.எஸ்.ஏ.வுக்குப் போட்டியாக பிரிட்டிஷ் உளவுத்துறை, உலக மக்களையும் சொந்த நாட்டு மக்களையும் உளவு பார்த்துள்ளது.
இணையவழியாக மக்களை உளவு பார்க்க உதவுவது பெரும்பாலும் சமூக வலைதளங்களும், தேடுதல் இயந்திரங்களும்தான். அமெரிக்கா தனது பிரஜைகள் பற்றிய பெரும்பாலான தகவல்களை ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்,யாகூ போன்ற நிறுவனங்களிடம் இருந்தே பெறுகின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு கூட நமது மத்திய அரசு தனது குடிமக்களை உளவு பார்க்க வசதியாக கூகுள், ஃபேஸ்புக், யாகூ, ஸ்கைப் போன்ற நிறுவனங்கள் தங்களது சர்வர்களை இந்தியாவில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
தனிமனிதர்களின் தகவல்களை நிறுவனத்திடம் கேட்டுப் பெறுவதில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். 2016 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் 8,290 கணக்குகள் பற்றிய தனிமனித தகவல்களை கேட்டு கோரிக்கை அனுப்பியுள்ளது. முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா 38,951 கணக்குகள் பற்றிய தகவல்களை கோரியுள்ளது. மேலும் 2015 ஆம் ஆண்டை விட 27% சதவீதம் அதிக தகவலை உலகநாடுகள் கோரியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உங்கள் மனதில் என்ன இருக்கிறது என ஃபேஸ்புக் அன்பாக எழுப்பும் கேள்விக்கு காதல் கவிதைகள், சினிமா விமர்சனங்கள் எழுதும்வரை நமக்கு எந்த பிரச்னையும் இருக்காது. அரசுக்கு எதிராக ஏதாவது எழுதினால் நாம் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவோம். இதற்காகவே N TRIPLE C (National Cyber Coordination Centre ) என்கிற தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை நமது மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இணையத்தில் தகவல் பரிமாற்றங்களை கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உடனுக்குடன் மதிப்பீடு செய்து, முன் முனைப்புடன் நடவடிக்கை எடுக்க உதவியாக அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் தயாரித்து காவல்துறையினருக்கும், மற்ற பாதுகாப்புப் படையினருக்கு வழங்குவது இந்த மையத்தின் முக்கிய வேலை.
இப்படி இணைய கண்காணிப்பு மட்டுமல்லாமல் பொது இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை கொண்டும் நம்மை நேரடியாக கண்காணிகின்றன அரசாங்கங்கள். முதல்தர நாடுகள் என அறியப்படும் நாடுகளில் 1950களில் உருவான இந்த சிசிடிவி கேமரா கலாச்சாரம் 1970 களில் வளர்ச்சியை எட்டி 1990களில் உச்சகட்டத்தை அடைந்தன.
உலகின் 1% மட்டுமே மக்கள் தொகை கொண்ட பிரிட்டனில் உலகின் 20% சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தனது நாட்டில் உள்ள பதினான்கு பேருக்கு ஒரு கேமரா என்பது வீதம் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளது பிரிட்டன் அரசு. உலகிலேயே அதிக கண்காணிப்பு கேமரா உள்ள நகரமாக இருக்கிறது லண்டன். மொத்தம் 51,000 கேமராக்கள் உள்ள அந்த நகரத்தில் ஒரு லண்டன்வாசி குறைந்தது 300 முறை கேமராவில் பதிவாகிறார் என்கிறது ஒரு புள்ளி விபரம். அதிகம் கண்காணிக்கப்படும் நகரங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனாவின் பீய்ஜிங்கும், மூன்று மற்றும் நான்காவது இடத்தில் அமெரிக்காவின் சிகாக்கோ மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களும் இருக்கின்றன. இந்தியாவில் அதிக கண்காணிப்பு கேமரா உள்ள நகரமாக சூரத் கருதப்படுகிறது. பல முக்கிய குற்றவழக்குகளை தீர்க்க பெரும் உதவியாக இருக்கும் இந்த சிசிடிவி காட்சிகளின் மீது வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்கு உரிய பதிலை எந்த நாட்டு அரசும் இதுவரை அளிக்கவில்லை.
கண்காணிப்பு கேமரா அமைப்பதில் பின் தங்கியிருக்கும் இந்தியா போன்ற நாட்டுக்கு ஆதார் அடையாள எண் சிறந்த கண்காணிப்பு கருவியாக செயல்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் வளர்ச்சிக்காகவும் மானியங்கள் சரியான நபருக்கு சென்று சேர்வதை உறுதி செய்வதற்காகவும் கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் ஆதார் அடையாள அட்டையை நமது சமையல் எரிவாயு சிலிண்டர், ரேசன் அட்டை, பான் கார்டு, செல்போன் சிம் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்துடனும் இணைக்கச் சொல்கிறது அரசு. உத்திரபிரதேசம் போன்ற சில மாநிலங்கள் இதற்காக ஆதார் அட்டை இருந்தால்தான் பள்ளிகளில் சத்துணவு, உயிர் காக்க ஆம்புலன்ஸ் ஆகியவை கிடைக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கின்றன.
இந்த ஆதார் அட்டை நாம் நினைப்பது போல் கடந்த காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது அல்ல. கடந்த 2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு பல்நோக்கு தேசிய அடையாள அட்டை என்கிற பெயரில் ஆதார் அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் 1999 கார்கில் போருக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் இதனால் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புக்கான கருவிகளை செலுமைபடுத்தவும் இத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாகக் கூறப்பட்டது. பின்பு காங்கிரஸ் அரசால் பெயர் மாற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட இந்த ஆதார் அட்டை திட்டத்தைப் பற்றி இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குநரான ஏ.கே.டோவல் பேசிய கருத்து 2010 ஆம் ஆண்டு சர்ச்சையை எழுப்பியது. நாட்டின் சட்ட விரோத சக்திகளையும் அந்நியர் ஊடுருவலையும் அடையாளம் காணவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் ஆனால் நலத் திட்டங்களை செயல்படுத்தவே இத்திட்டம் எனக் கூறினால்தான் மக்கள் ஒத்துழைப்பார்கள் என்பதால் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பேட்டியளித்தார்.
ஆதார் கட்டாயம் அல்ல என நீதிமன்றங்கள் பல முறை கூறினாலும் அரசு செவி சாய்ப்பதாய் இல்லை. மெல்ல மெல்ல ஆதார் அட்டையின் கீழ் அனைத்து மக்களையும் கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறது. மேலும் ஆதார் அட்டையினால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என பல்வேறு வழக்குகள் தொடர்ப்பட்ட போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதங்கள் சற்று அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவே இருந்தது. மக்களின் தனிப்பட்ட விபரங்களை சேகரிப்பது உரிமை மீறல் இல்லை என்று தெரிவித்த மத்திய அரசு கூடவே தனிமனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியது. இதனைத் தொடர்ந்து மக்களின் டி.என்.ஏ.வை சேகரிக்கும் திட்டமும் மத்திய அரசிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
ஒருவேளை நமது அரசு கூறுவது போல் ஆதார் எண் நாட்டின் வளர்ச்சிக்கு என்று கூறுவதே உண்மையாக இருந்தாலும் நமது கைரேகை, கருவிழி ரேகை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வருமான வரி எண், வங்கி எண், வாக்காளர் அட்டை, மருத்துவ சேவைக்கான அட்டைகள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய ஆதார் அட்டை தவறான கைகளில் கிடைத்தால் என்னவாகும்?. அது நடக்காது என்று அரசு உறுதி அளித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் அட்டை இணையத்தில் வெளியானது. ரிலையன்ஸின் ஜியோ சிம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் ஆதார் அட்டை வைத்திருந்தவர்கள் தங்களது கைரேகையை கொடுத்ததும் ஜியோ சிம் டீலரின் கம்பியூட்டரில் அவர்களது ஆதார் அட்டை வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். உள்ளூர் நிறுவனமான ரிலையன்ஸ் மட்டுமல்ல வெளிநாட்டு நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தாலும் நமது ஆதார் அட்டைகளின் தகவலை கையாளமுடியும் என்பது பேரதிர்ச்சி. சமீபத்தில் அந்த நிறுவனம் நடத்திய ஸ்கைப்நெட் APP வெளியீட்டு விழாவில் ஒருவரின் கைரேகையைக் கொண்டு அவரது ஆதார் அட்டையை தனியாக எடுத்து அவரது மொத்த ஜாதகத்தையும் ஒப்பித்தது மைக்ரோசாஃப்ட். இப்படி தனிமனிதர்களின் தகவல்களை தனியாரிடம் ஒப்படைப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என ஏற்கனவே வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
1933 ஆம் ஆண்டு ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் பல யூதர்களை கொன்றொழித்தது நம் எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.
அப்போது ஜெர்மனியில் இருந்த ஆதார் திட்டம் போன்ற ஒரு திட்டத்தைக் கொண்டே யூதர்களை மட்டும் சரியாக கண்டறிந்து கொலைகளன்களுக்கு ஹிட்லர் அனுப்பினார் என்பது நமக்கு தெரியாத விசயம். ஹிட்லருக்கு அந்த தகவல்கள் எப்படி கிடைத்தன என ஆராய்ந்த போது அந்நாட்டில் அப்போது தனிமனிதர்களின் தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட ஐ.பி.எம். என்கிற தனியார் நிறுவனம் அதை ஹிட்லருக்கு வழங்கியுள்ளது தெரியவந்தது.
.
அமெரிக்காவிற்கு இணையாக உளவு பார்க்கும் பிரட்டன் அரசே 2006 ஆம் ஆண்டு தான் கொண்டுவந்த ஆதார் திட்டம் போன்ற ஒரு அடையாள அட்டை திட்டத்தை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என கூறி ரத்து செய்தது. இந்த நிலையில்தான் ஆதார் அட்டையை கொண்டு வருவதில் நமது இந்திய அரசு முழு முனைப்புடன் இருக்கிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் ஸ்டெட்ட் பேங்க் ஆஃப் இண்டியா, எச்.டி.எஃப்.சி. போன்ற வங்கிகளின் சுமார் முப்பது லட்சம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டது பெரும் சர்ச்சையானது நினைவிருக்கலாம். இது போன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்களில் இருக்கும் நமது குறிப்பிட்ட தகவல்கள் திருடப்படும் போது பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் நமது கைரேகை ஒட்டு மொத்த தகவல்களும் அடங்கிய இணைய பெட்டகம் திருடப்பட்டால் என்னவாகும் என்கிற கேள்வி எழுகிறது
ஆதார் அடையாள அட்டை விவகாரத்தில் நிகழ்கால பிரட்டனிடம் இருந்தும் கடந்த கால ஜெர்மனியிடம் இருந்தும் பாடம் கற்க மறுக்கும் மத்திய அரசு, தனிமனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை இல்லை எனக்கூறும் மத்திய அரசு நம்மை கண்காணிக்க ஆதார் அடையாள அட்டையை கொண்டு வரவில்லை என்று நம்புவோம். மக்களை கண்காணிப்பது தேசத்தின் பாதுகாப்பிற்காகத்தான் என அரசு சொல்வதை முழுமையாக ஏற்போம்..
இந்தியா உட்பட அனைத்து அரசாங்கங்களுக்கும் நமக்கு சொல்ல ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. தேசத்தின் பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பு தான்… மக்களின் சுதந்திரத்தை கொன்றுவிட்டு தேசத்தை காப்பாற்ற முடியாது..
((நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ஒரிஜினல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எழுத்து வடிவம்))
((நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ஒரிஜினல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எழுத்து வடிவம்))