Wednesday, April 24, 2024

இசைக்காக ஆன்மாவை விற்றவன் - ராபர்ட் ஜான்சன் - Man who sold his soul for music


முன்குறிப்பு: புதிய தலைமுறையில் டெபுடி எடிட்டராக பணியாற்றத் தொடங்கியதில் இருந்து காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சிக்காக ஒப்பீனியன் கட்டுரையை தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட அனைத்து ஒப்பீனியன் கட்டுரைகளையும் வாசிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அப்படியாக இன்று (25.04.2024)  PM Modi And 'Mangalsutra' Row: A Faustian Bargain For BJP?  என்கிற கட்டுரையை நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுந்தரபாரதி அனுப்ப வாசிக்க நேர்ந்தது. இதில் வரும் ஃபாசியன் பார்கெய்ன் என்கிற வார்த்தையை தமிழில் மொழி பெயர்ப்பது தொடர்பாக ஆன்மாவை பேரம்பேசுவது என்று வரலாமா அல்லது மனசாட்சியை பேரம்பேசுவது என்று வரலாமா என்கிற கலந்துரையாடல் பிரபல கவிஞரும், அவர் கவிஞர் என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு நிகழ்ச்சி உள்ளடக்க பொருப்பாளர் என்று மட்டுமே தன்னை வார்த்துக் கொண்டு பணியாற்றுபவருமான அன்பர் ஷங்கர்ராம சுப்ரமணியனுடன் நடைபெற்றது.


 மேற்கத்திய உலகின் ஆன்மா வேறு நமது நிலத்தில் ஆன்மா வேறு என்கிற புள்ளியில் இந்தக் கட்டுரைக்கு மனசாட்சி என்பதே பொருத்தம் என்கிற முடிவுக்கு மொழியியல் ரீதியாக வந்தோம். நிகழ்ச்சி முடிந்த பின்பு அலுவலக க்ரூப்பில் அனுப்பிய மெசேஜை இங்கே பதிவு செய்கிறேன்.

முக்கியக் குறிப்பு: ராபர்ட் ஜான்ஸன் பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களும், ராபர்ட் ஜான்சன் குறித்த சரியான தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களும் இப்பதிவை கடந்து போய்விடுவது  நன்மை பயக்கும்.




இன்றைக்கு NDTV கட்டுரையில் கண்ட faustian bargain என்கிற பதம் ஒரு நல் இசை தொடர்பான  நினைவைக் கொண்டுவந்தது. காலையில் இருந்து அதைக் கேட்டு உய்வதால் உங்களிடமும் அதுபற்றி  பகிர்கிறேன்.(உங்களில் சிலருக்கு இதுகுறித்து ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். )


வாய்ப்பிருந்தால் The man who sold his soul to play guitar என்று தேடிப்பாருங்கள்.. 1930களில் வாழ்ந்த ராபர்ட் ஜான்சன் என்கிற ப்ளூஸ் இசைக்கலைஞனைப் பற்றி வரும்.. வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆக்டிவாக இசையமைத்த ராபர்ட் ஜான்சன்தான்.. ராக் அண்ட் ரோலுக்கான விதை... (அவர் 7 மாத காலத்திற்குள் இசையமைத்தவை மட்டும்தான் நமக்கு ஒழுங்காகக் கிடைத்திருக்கிறது).

1900களின் தொடக்கத்தில் கருப்பினத்தவருக்கு இருந்த துயரமிகு வாழ்வு ராபர்ட் ஜான்சனையும் குதறி இருக்கிறது. 27 வயதிற்குள் மரணித்த ஜான்சன் பற்றி பின்னாளில் பல டாக்குமெண்ட்ரிகள் வந்திருக்கின்றன. ஆனால் என்னைப் போல பலருக்கும் ஜான்சனின் கதை   faustian bargain என்கிற சொல்லுக்கு தொடர்புடைய ஒரு நாட்டுப்புறக் கதை வழியாகவே முதலில் தெரியவரும்..  இதுவரை உங்களுக்கு அவரைத் தெரியாது என்றால் அக்கதை வழியாக அவரை அறிமுகப்படுத்துவதே அவருக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்..  அவருடைய பாடலின் வரிகளிலும் அந்தக் கதையின் சாயல் இருந்ததால் ... பலரும் அதை உண்மை என்றே நம்புகிறார்கள்.. அந்தக் கதையின் சாரம் இதுதான்..


”மிக மோசமான கிட்டார் ப்ளேயரான ராபர்ட் ஜான்சன் தனது திறமையின்மையை நினைத்து நொந்து போகிறான்.. எல்லோராலும் பரிகசிக்கப்பட்டவன் கிட்டாரைத் தூக்கிக் கொண்டு ஊரைவிட்டே கிளம்புகிறான். அவனை ஊர் மறந்து போகிறது. திடீரென ஒருநாள் மீண்டும் ஊருக்கு வருகிறான். க்ளப்பில் கிட்டார் வாசிக்கிறான்.

அவன் அன்று வாசித்த ஒலியை அதுவரை யாரும் கேட்டதில்லை. ராக் இசை உருவாகாத காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தற்குறியாக இருந்தவன் எப்படி இதுவரை யாரும் கேட்டிராத ஒலியை சாதாரண கிட்டாரில் கொண்டு வரமுடிந்தது  ஆச்சரியப்படுகிறார்கள். அவனிடமே கேட்கிறார்கள். 

அவன் ஒரு நாற்சந்திப்பு சாலைக்கு சென்றதாகவும் அங்கே சாத்தானைப் பார்த்ததாகவும் சொல்கிறான். தனது துயரத்தை சாத்தானிடம் பகிர்ந்துகொள்ள, சாத்தான் அவனுக்கு கிட்டார் இசைக்கும் திறனைத் தர சம்மதிக்கிறது. பதிலுக்கு அவனுடைய ஆன்மாவைக் கேட்கிறது. அவன் தனது ஆன்மாவை  சாத்தானிடம் இசைக்காக விற்றுவிடுகிறான். சாத்தான் ராபர்ட் கையில் இருந்த கிட்டாரை வாங்கி அற்புதமான இசையை இசைத்துவிட்டு மீண்டும் அவனிடமே கொடுக்கிறது. அப்போது சாத்தானின் விரலும் ராபர்டின் விரலும் உரசுகின்றன.அன்றில் இருந்து கிட்டாரை அதுவரை யாரும் கேட்டிராத வண்ணம் இசைக்கும் வல்லமையை ராபர்ட் பெறுகிறான்”.

திடீரென இசைஞானம் பெற்ற ராபர்ட் சில மாதங்களிலேயே  காணாமல் போகிறான்.  ராக் இசை என்று ஒன்று உருவாவதற்கு முன்பாகவே அதை வாசித்த ராபர்ட் ஜான்சனை பெரிய இசை கோர்ப்பு நிறுவனங்கள் தேடியபோது தனது 27வது வயதில் அவன் இறந்துவிட்டான் என்கிற தகவல் மட்டுமே கிடைக்கிறது. அவன் உடல் கூட கிடைக்கவில்லை. இறப்புச் சான்றிதழ் மட்டுமே கிடைக்கிறது. அவன் உடல் புதைக்கப்பட்ட இடம் என்று மூன்று இடங்கள் நம்பப்படுகின்றன. 

மூன்று முறை ராபர்ட் இறந்ததாகவும் அந்த மூன்று இடங்களிலும் ராபர்ட்டே புதைக்கப்பட்டிருக்கிறார் என்கிற கதையை நானே உருவாக்கி நண்பர்களிடம் பரப்பிவிட்டிருக்கிறேன்... 

சாத்தானிடம் இருந்து தோன்றிய இசை, ராக் இசை என்பதால் ராக் இசையை வெறுத்தவர்களும் உண்டு.. ராக் இசையை வழங்கியதால் சாத்தான் மேல் சாஃப்ட் கார்னரை வளர்த்துக் கொண்ட என்போன்றோரும் உண்டு..

படைப்பூக்க பித்து கொண்ட இளம்பருவக் கோளாறு கொண்டவர்களுக்கு இன்றும் ராபர்ட்டே ஆதர்சம். எனக்கும் 20 வயதில் ராபர்ட் போல் சாத்தானுக்கு ஆன்மாவை விற்றுவிட்டு படைப்பாளியாகிவிட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இளம்பருவக் கோளாறு இளம்பருவத்திலேயே தெளிந்துவிட்டது. 

ராபர்ட் இறந்து கிட்டத்தட்ட நூறு வருடங்கள் கடக்கப்போகின்றன. நான் அவர் இசையைக் கேட்டு குறைந்தது 5 முதல் 8 வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். ஆனாலும் இன்றைக்கு கேட்டபோது நமது ஆன்மாவை சாத்தானுக்கு விற்கத் தூண்டுவதை மட்டும் ராபர்ட் ஜான்சனின் இசை நிறுத்தவேயில்லை.


பி.கு:கொழந்த என்கிற பெயரில் ப்ளாக் எழுதிக் கொண்டிருந்த சரவண கணேஷோ அல்லது கருந்தேள் என்கிற பெயரில் ப்ளாக் எழுதிக் கொண்டிருந்த ராஜேஷோ ராபர்ட் ஜான்சன் பற்றி பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக எழுதிய நினைவு. விரும்புவோர் அவர்களைத் தேடிப் படிக்கலாம்.

Sunday, December 31, 2023

பெரியார் எனும் மதவாதி!

 பெரியார்  எனும் மதவாதி! :

 மனித AI உடன் ஒரு உரையாடல்


’இஸ்லாம் பற்றி பெரியார்’ நூலை முன்வைத்து





”நான் ஒரு மதவாதி” என்று பெரியார் தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் ஒரு வரியை நீங்கள் எங்கேனும் கேட்டோ, கடந்தோ வந்திருக்கிறீர்களா? . இல்லை என்றால்  சீர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  ’இஸ்லாம் பற்றி பெரியார்’ என்கிற நூலை வாசிக்கும் போது நீங்கள் அறிந்து துணுக்குறலாம், அதிர்ச்சி கூட அடையலாம்.


ஆனால் அது நிலைக்காது.


ஏன் எனில், பல கோடி வார்த்தைகளைப் பேச்சாகவும் எழுத்தாகவும் தமிழ் சமூகத்திற்கு பெரியார் விட்டுச் சென்றிருக்கும் போது; அதில் இருந்து ஏதேனும் ஒற்றை வரியை உருவி அதற்கு பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதி; அதன் மூலம் பெரியார் யார் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கும் வேலையை “இஸ்லாம் பற்றி பெரியார்” என்கிற இந்நூல் செய்யவில்லை.  பதிப்புரை, அறிமுகவுரை நூல் இறுதியில் வரும் ஒரு கட்டுரையைத் தவிர அனைத்துமே பெரியார் பேசிய , எழுதிய சொற்களே. எந்தத் திரிபுக்கும் இடமின்றி உருவாக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.


இஸ்லாமியர்கள் குறித்து பெரியார் பேசியவற்றை இஸ்லாமியர்களின் அரசியல், இஸ்லாமியர்களின் மதம் என்று இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் மதத்தை விட அரசியலைப் பற்றியே பெரியார் அதிகம் பேசியிருக்கிறார் என்றாலும் “இஸ்லாம் பற்றி பெரியார்” என்கிற இந்நூல் முழுக்க முழுக்க மதம் பற்றிய அவரின் கருத்துகளின் தொகுப்பாக இருக்கிறது. இத்தகவல் முன்னுரையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது.


 நிற்க,   உங்களுக்கு இருக்கும் நேர நெருக்கடி, கவனச் சிதறல் ஏற்படுவதற்கென்றே உருவாக்கப்பட்ட புறச்சூழல் இவற்றுக்கு மத்தியில்  ’இஸ்லாம் பற்றி பெரியார்’ என்கிற நூலின் அருமை குறித்து இன்னும் இரண்டாயிரம் வார்த்தைகள் எழுதி உங்களை சிரமத்திற்கு உள்ளாக்கவிரும்பவில்லை.  முப்பது பக்க Document இருந்தாலே அதை Ai யிடம் கொடுத்து குறுக்கு விசாரணை செய்து அதில் இருந்து ஒரு ஐடியா கிடைத்த பின் அதைப் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் வழக்கமுடைய நான் 2000 வார்த்தைகள் எழுதுவது நேர்மையாக இருக்காது.  ஆகையால் இந்நூல் முழுவதையும் வாசித்து, அனுபவித்து , இன்புற்ற என்னையே ஒரு AI யாகக் கருதி இந்நூல் குறித்த தெளிவுகளைத் தரவிரும்புகிறேன்.



1) பெரியார் இஸ்லாம் மதத்தை ஆதரித்தாரா?


ஆம்


2) நாத்திகவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் ஏன் மதத்தை ஆதரிக்கவேண்டும்?


சமதர்மத்துடன் சுய மரியாதையுடன் மக்கள் வாழவேண்டும் என்பதே தனது கொள்கை என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர் பெரியார். இக்கொள்கைகளை எல்லாம் இந்து மதம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துமாயின் இந்துமதத்தை ஆதரிப்பதில் கூட தனக்கு தயக்கமில்லை என்று கூறுகிறார். 


3) பெரியார் ஏன் இஸ்லாம் மதத்தை ஆதரித்தார்? மூன்று Pointersகளாக பதில் தரவும்


இஸ்லாம் மதத்தை பெரியார் ஆதரிப்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்றாலும் பிரதானமாக மூன்று காரணங்களைச் சொல்லலாம்.


  1. இஸ்லாம் மதம் அனைவரையும் சமமாக பார்க்கும் அன்பு மார்க்கமாக இருப்பது. ஒடுக்குவதற்கு மட்டுமே பயன்படுகிற சாதி என்கிற அடையாளத்தில் இருந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடுதலை கொடுப்பது.


  1. இந்தியாவில் நிலைப்பெற்று இருக்கும் மதங்களில் மிக இளமையான மதம் என்பதால் இயல்பாகவே மற்ற மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள், தவறான கொள்கைகளை விட இஸ்லாத்தில் மிகக் குறைவாக இருப்பது


  1. பெண்களுக்கு மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை,ஈகை பண்பு, மது தவிர்த்தல் போன்ற நல்ல கருத்துகள் வெறும் நூல் அளவில் இல்லாமல் நடைமுறையிலும் சாத்தியப்படுவது. பெரியார் முன்வைத்த சுயமரியாதைக் கொள்கையோடு இஸ்லாமியக் கொள்கைகள் ஒத்துப்போவது


4) இஸ்லாமியர்கள் தங்களது விழாக்களுக்கு பெரியாரை அழைத்திருப்பார்கள். அதனால் அவர்களது மார்க்கத்தை புகழ்ந்து பெரியார் பேசியிருக்கக் கூடும். இதை வைத்து அவர் இஸ்லாமை ஆதரித்தார் என்று சொல்வது சரியா? 


பெரியார் இஸ்லாமியர்கள் மாநாடுகளில் பேசினார் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் இஸ்லாமியர்களுக்கு தொடர்பே இல்லாத தொழிலாளர் கூட்டம், ஆதிதிராவிடர் மாநாடு போன்ற இடங்களிலும் சென்று, ‘இஸ்லாம் மதத்திற்கு ஒடுக்கப்பட்டவர்கள் ஏன் மாறவேண்டும்’ என்று பேசியிருக்கிறார்.  அதுபோக யாரும் அழைத்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு உகந்ததைப் பேசுவது பெரியாரின் வாடிக்கை அல்ல. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமியர்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் அவர்கள் மீதான விமர்சனத்தை பெரியார் எந்த தயக்கமும் இன்றி வைத்திருக்கிறார்.


5)அன்பு மார்க்கம் என்பதால் இஸ்லாமை பெரியார் பரிந்துரைத்தார் என்றால் அவர் கிறிஸ்துவத்தை ஏன் பரிந்துரைக்கவில்லை?


பெரியாரின் வார்த்தைகள்

”இஸ்லாம் மார்க்கத்திலே பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா என்று கேட்கிறேன். இங்குள்ள கிறிஸ்துவ சகோதரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்”

பெரியார் ஒரு மதத்தைப் பற்றி பேசும் போது அது வேதநூலில் என்ன குறிப்பிட்டிருக்கிறது என்பதை விட நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார்.(( வேத நூல்களில் இருப்பதை ஆராய்ந்து அதன் படி அம்மதத்தின் யோக்கியதையை நிர்ணயிப்பது பயனளிக்காது என்பதே அவர் கருத்தாக இருக்கிறது)). இதுதவிர தனது பல்வேறு உரைகளில் கிறிஸ்தவர்கள் ஜாதியை ஏற்றுக் கொண்டதையும் சுட்டிக்காட்டி கண்டிக்கிறார். ஆனால் வேத நூலிலேயே இழிவு படுத்துவதை ஏற்றுக் கொண்டிருப்பது இந்து மதம்தான் என்று குறிப்பிட அவர் தவறவில்லை


6)இஸ்லாமில் பெரியாருக்கு முரணான விசயங்கள் எதுவுமில்லையா?


பெரியாருக்கு முரணான பல விசயங்கள் இஸ்லாத்தில் இருக்கின்றன. 


  1. பாவத்தைப் போக்கவும் மறு உலகில் இன்பத்தை அடையவும் ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் ஒரு பயனும் இல்லை என்கிறார் பெரியார். பாவம், மறு உலகம் போன்றவற்றை பெரியார் ஏற்கவில்லை. ஏழைகளுக்கு கொடுக்காமல் பணத்தை சேமித்து வைத்து புனித யாத்திரைக்கு செல்வதை விமர்சிக்கிறார்.  சமாதி வழிபாடு போன்ற சடங்குகளையும்  பெரியார் எதிர்க்கிறார்.


  1. இஸ்லாம் போதிக்கும் அன்பு நெறியில் இருந்து பிறழ்ந்துவிட்டு வெறும் 5 வேளை தொழுகை செய்வது, தாடி வளர்த்துக் கொள்வது, குல்லா போட்டுக் கொள்வது போன்றவற்றை மட்டும் செய்து கொண்டு தன்னை இஸ்லாமியர் என்று சொல்லிக் கொள்பவர்களை கடுமையாக எதிர்க்கிறார்.

  2. ஒருகட்டத்தில் பெரியார் பின்வருமாறு கூறுகிறார். “இஸ்லாம் சமூகக் கொள்கையை முழுவதும் (நான்) ஒப்புக் கொண்டதாகவோ அவை எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்துவிடாதீர்கள்”


  1. புதிய மதம் ஒன்றை தோற்றுவித்து அதை மக்களுக்கு எல்லாம் கொண்டு சேர்ப்பதற்கு பதில் இருப்பதிலேயே ஓரளவு நல்ல மதம் என்று தான் இஸ்லாம் மதத்தை பரிந்துரைப்பதாகப் பெரியார் விளக்குகிறார். அதே சமயம் இஸ்லாமில் இருக்கும் பழமைவாத முல்லாக்கள் இஸ்லாமை மேலும் காலத்திற்கு ஏற்ப விரிவடையவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்.




7)பெண் உரிமை பேசும் பெரியார், பெண் அடிமைத்தனம் இருக்கும் இஸ்லாம் மதத்தை ஏன் ஆதரிக்கிறார்?



கோஷா(புர்கா) முறையை கடுமையாக எதிர்ப்பவராக பெரியார் இருக்கிறார். அதுகுறித்து இஸ்லாமிய மாநாடுகளில் வெளிப்படையாகப் பேசுகிறார்.  கோஷா முறையை எதிர்த்து குடியரசில் தனித் தலையங்கமே எழுதுகிறார்.   மேலும் ஓர் உரையில் கீழ்கண்ட கருத்தை தெரிவிக்கிறார்.


“ மலையாளத்தில் 100க்கு 75 மகம்மதிய பெண்களுக்கு கோஷா இல்லை. தஞ்சை, திருச்சி , திருநெல்வேலி, ராமநாதபுரம் இந்த பக்கங்களில் காடுகளில் (கோஷா இல்லாமல் ) வேலை செய்வதைப் பார்க்கிறேன். தனக்குத் தெரிந்தவரை கோஷா ஒரு அந்தஸ்தாக கருதப்படுகின்றதே தவிர முழுதும் மதக் கட்டளையாகக் கருதுவதாக சொல்ல முடியாது. இப்பொழுது அந்த மதத்தில்( இஸ்லாமில்) சேர்ந்த பெண்கள் கோஷாவாயில்லாவிட்டால் தள்ளிவிட மாட்டார்கள். 


விதவாவிவாகம், கல்யாணரத்து, பெண்கள் படிப்பு, சொத்துரிமை ஆகியவைகள் பெண்களுக்கு அந்த மதத்தில் இருப்பதால் கோஷா ஒரு சமயம் இருந்தாலும் அந்த கஷ்டத்தை விட பலமடங்கு மேல்பட்ட அதிக லாபம் இருக்கிறது. அன்றியும், துருக்கியை போலும் அப்கானிஸ்தானத்தைப் போலும் இங்கும் சமீபத்தில் சீர்திருத்தம் ஏற்படலாம் என்கிற நம்பிக்கை இருக்கின்றது”



அதாவது புர்கா முறையை எதிர்க்கும் பெரியார் பெண்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகளுக்காக தற்சமயம் சகித்துக் கொள்ளலாம் என்றும் விரைவில் அந்த நிலை மாறும் என்று கூறுகிறார். துருக்கி புரட்சி வீரரான கமால்பாட்சா, ஆப்கானிஸ்தான் புரட்சி வீரரான அமானுல்லா போல இஸ்லாமிய இளைஞர்கள் முன்வந்து பெண் விடுதலையை முன்னெடுக்கவேண்டும் என்று தொடர்ந்து அழைக்கிறார். 


அப்படி கோஷா அவசியம் என்று நினைக்கும் ஆண்கள் “ ஓராண்டுக்காவது முகமூடி போட்ட வீட்டிற்குள் இருந்து பாருங்கள்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறார்.


இந்த கோஷா விவகாரம் பெண் அடிமைத்தனம் சம்மந்தப்பட்டதே அன்றி மத சம்மந்தப்பட்டதல்ல என்று நம்பும் பெரியார் ஈரான், துருக்கி, அப்கானிஸ்தான் மாதிரியான நாடுகளில் பெண்கள் கோஷா இல்லாமலேயே இஸ்லாமியராக வாழமுடிவதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்.

 


8)இஸ்லாமியர்கள் பெரியாரின் விமர்சனத்தை, அறிவுரையை ஏற்றுக் கொண்டார்களா?.


முழுவதும் ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறமுடியாது என்றாலும் சில இடங்களில் இஸ்லாமியர்கள் தங்களை மாற்றிக் கொண்டனர். மதம் மாறிய பின்னும் நைவேத்தியம் செய்வது, இந்து திருவிழா போல அல்லாசாமி திருவிழா கொண்டாடுவது போன்றவற்றை சில இஸ்லாமியர்கள் செய்து வந்திருக்கின்றனர். இது தவறு என்று பெரியார் கூறியதையடுத்து அவர்கள் கைவிட்டிருக்கின்றனர். இதை தனது உரையில் சுட்டிக்காட்டி பெரியார் மகிழ்கிறார். 


ஆனால் இது குரானும் ஏற்காத விஷயம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


அதே சமயம், சேலம் நகர சபையின் சார்பாக முஸ்லீம் பெண்களுக்கு, ஆசிரியைகளுக்கு என்று பிரத்யேகமாக விடப்பட்டிருந்த கோஷா வண்டிகளை (திரை மூடப்பட்ட வண்டிகள்) நிறுத்திவிட்டார்கள் என்று சுட்டிக்காட்டி பாராட்டுகிறார்.


9)இந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொன்னாரா பெரியார்?

இஸ்லாம் மதம் யாருக்கெல்லாம் தேவை யாருக்கெல்லாம் தேவையற்றது என்று ஒரு பட்டியல் இடுகிறார் பெரியார். 


இனி அவர் வார்த்தைகளில்


“ சுயமரியாதைக்காரருக்கு (இஸ்லாம் மதம்) கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மூடநம்பிக்கையை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமத்திய மதம் வேண்டாததாய் இருக்கலாம், மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவர்களுக்கு முகமத்திய மதம் வேண்டாததாய் இருக்கலாம், நாஸ்திகருக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமத்திய மதம் வேண்டாததாய் இருக்கலாம். சமதர்மவாதிகளுக்கும், பொது உடமைக்காரர்களுக்கும் மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.


ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற - ஒதுக்கப்படுகின்ற - தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும் , மலத்திலும் புழுத்த விஷக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் - தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக் கொண்டு இருக்கும் மக்களிடம் நமக்கு வேலை* உண்டா? இல்லையா என்று கேட்கிறோம்”

இங்கே வேலை என்பது இஸ்லாமிற்கு மாறுங்கள் என்று எடுத்துரைப்பது.




10)பெரியார் என்றாலே Thug life தானே? இந்நூலில் ஏதேனும் Thug life Content இருக்கிறதா?


நிறைய இருக்கிறது. இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.

இஸ்லாமிய மன்னர்கள் இந்து கோயில்களை இடித்து, இங்கிருக்கும் அப்பாவி மக்களை இஸ்லாமியர்களாக மாற்றிவிட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு பெரியார் முன் வைக்கப்படுகிறது. இதற்கு பெரியார் அளித்த பதிலின் சாரம் இதுதான்.

“இது உண்மையா பொய்யா தெரியல. ஆனா உண்மையா இருந்து அந்த இஸ்லாமிய ஆட்சி இப்பவரைக்கும் நடந்திருந்தா  தீண்டத்தகாதவங்க, ஒடுக்கப்பட்டவங்கனு யாரும் இருந்திருக்க மாட்டாங்கங்கிறது மட்டும் உறுதி”


11)பெரியார் ஏன் அம்பேத்கர் வழியில் புத்த மதத்தை தழுவவேண்டும் என்று சொல்லவில்லை?


இதற்கான விடை நேரடியாக புத்தகத்தில் இல்லை என்றாலும் முன்னுரையில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. 


பெரியார் இஸ்லாம் மதத்தை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தினார். ஆளும் இந்து வர்க்கத்தை மிரட்ட உலகம் முழுக்க பரவியுள்ள அதே சமயம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதமாக இருக்கும் இஸ்லாம் மட்டுமே சரியானதாக இருக்கும் என்று கருதினார். ஆகையால்தான் இஸ்லாம் மதத்தைவிட பவுத்த மதமே தனது கொள்கைக்கு நெருக்கமாகவும் முன்னோடியாகவும் அவர் கருதிய போதும் இஸ்லாம் மதத்தை தேர்தெடுத்தார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பவுத்தத்திற்குள் சாதி புகுந்து பற பவுத்தன், சக்கிலிய பவுத்தன் என்று பிரிவு ஏற்பட்டு விட்டதும் ஒரு காரணம்.


12)இஸ்லாம் பற்றிய தன் உரைகளில் அம்பேத்கர் குறித்து எங்கேனும் பெரியார் பேசியிருக்கிறாரா ?


பேசியிருக்கிறார்


13)அம்பேத்கரைத் தாக்கியா?


அம்பேத்கரை வழிமொழிந்துதான் சில இடங்களில் பேசியிருக்கிறார். 1925 லேயே மதம் மாறச் சொன்னேன் ஆனால் தாமதமாக மதம் மாறிய அவர் வென்றுவிட்டார் என்று சும்மா வருத்தப்படுவது போல் சொல்லிவிட்டு இந்து மதத்தில் இருக்கும் இழிவுகளைத்தான் தாக்கியிருக்கிறார்.


14)காந்தி, காங்கிரஸுக்கு எங்கேனும் அடி விழுந்திருக்கிறதா?


விழுந்திருக்கிறது


 15)Social mediaவில் Share செய்வதற்கு  நூலில் இருந்து ஏதாவது ஐந்து  Punch Dialogues கொடுக்கவும்?


  1. மதத்துக்கும், நடத்தைக்கும் சம்பந்தம் இல்லை என்று கருதப்படுமானால் திராவிடர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களே ஆவார்கள். இஸ்லாமியர்கள் எல்லோரும் திராவிடர்களே ஆவார்கள்.



  1. நாம் இந்த நாட்டை இந்து நாடாக- இந்துஸ்தானமாக ஆக்குவதை விடத் திராவிடஸ்தானாக அதாவது இந்தப் பெயரைப் பார்ப்பனர் சகிக்கவில்லையானால் திராவிட நாடு கொள்கையையே கொண்ட பாக்கிஸ்தான் என்று வேறு பெயராக மாற்றிக் கொள்வதில் தப்பு என்ன?


  1. திராவிட நாட்டில் நாம் (எல்லாம்) இஸ்லாம் ஆனால் நம் இஷ்டப்படிதான் இஸ்லாம் இருக்குமே தவிர யாரோ சாயபோ முல்லாவோ சொல்லுகிறபடி இஸ்லாம் இருக்காது. எனக்கு 10 நாட்டு முஸ்லீம்கள் அனுசரிக்கும் இஸ்லாம் தெரியும்.


  1. சிலர் மகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதியிருக்கிறார்கள். அது வாஸ்தவமானால் தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய மகமதிய மதத்தை சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்று கருதுகிறேன்.


  1. எந்த மதக் கொள்கைகளையும் ஒரு கடவுள் உண்டாக்கினார் என்றோ, அது எப்போதைக்கும் பொருத்தமானதென்றோ, அவற்றில் ஒரு சிறிது கூட கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து மாற்றக்கூடாதது என்றோ நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளுவதுமில்லை



17)கொசுறாக ஏதேனும் ஒரு Trivia சொல்லலாமே?


ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கையை திராவிடத்திற்குள் அண்ணாவே முன்மொழிந்ததாக இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால் ”ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படை திராவிடனுடையது” என ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரியார் கூறியிருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் புதிய தகவல்.

18)இந்தக் கேள்வி பதிலே போதாதா? இத்தனைக்கும் மேல் நான் ஏன் நூலை வாசிக்கவேண்டும்?


ஒரு AI -ஆல் எப்போதும் முழுமையான அர்த்தத்தைக் கடத்திவிட முடியாது என்பது உண்மை என்று உங்களுக்கே தெரியும். இது மனிதனுக்கும் பொருந்தும். 


மேலே சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்துமே எனது வாசிப்பனுபவத்திற்கும் எனது புரிதலுக்கும் உட்பட்டே சொல்லப்பட்டிருக்கிறது.  வேண்டுமென்றே சில சர்ச்சையான விசயங்களையும், சில காத்திரமான விசயங்களையும் குறிப்பிடாமல் கடந்து போயிருக்கிறேன். அதை நீங்கள் வாசிக்கும் போது உணரமுடியும்.


 பெரியாரை அன்றைய இஸ்லாமியத் தலைவர்கள் எப்படி அணுகினார்கள்? தீவிர நாத்திகராக அறியப்படும் பெரியாரை ஏன் இஸ்லாமியர்கள் ரம்ஜான் விழாவிற்கு அழைத்து பேசவைத்தனர்? பெரியாரின் இந்த பேச்சுகளை ஆதிக்க இந்துகள் எப்படி எடுத்துக் கொண்டனர்?   நாத்திகத்தை விட்டுவிட்டு இஸ்லாமை முன்னிறுத்திப் பேசியதற்காக திராவிடர் கழகத்தில் இருந்தே எதிர்ப்புகள் எழுந்தனவா? இதுபோன்ற கேள்விகளுக்கு பெரியாரின் உரைகளில் இருந்தே பதில் அறிந்துகொள்ள இப்புத்தகத்தை வாசிப்பதே ஒரே வழி. 


எல்லாவற்றுக்கும் மேலாக, பெரியாரே சொல்வது போல் யாரும் சொல்கிறார்கள் என்று நம்பாமல் நீங்களே வாசித்து உணர்ந்து பாருங்கள். 


Tuesday, September 4, 2018

செப்டம்பர் எனும் திராவிட மாதம்



 ஒழுங்கற்றவையில் ஒரு ஒழுங்கைத் தேடுவதும், தொடர்பில்லாத சம்பவங்களில் இருக்கும் பொதுத்தன்மையை  கண்டடைவதும் மனித மனதிற்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செயல். இந்தக் கட்டுரையும் அதைத்தான் செய்ய முயல்கிறது.


"Remember Remember the fifth of November" என்கிற வாசகத்தை நாம் பலமுறை கேட்டிருப்போம். கத்தோலிக்க அடிப்படைவாத்திற்கு ஆதரவாக மன்னரையும் நாடாளுமன்றத்தையும் எதிர்த்து சதி செய்த guy fawkeys தூக்கிலிடப்பட்ட தினம் என்றாலும் இந்த வாசகம், மக்கள் குறித்து கவலைப்படாமல் வல்லாதிக்கம் செலுத்தும் அரசருக்கும் நாடாளுமன்றத்துக்கும் எதிராக இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல... திராவிடர்கள் அனைவருக்கும் ஒரு  வாசகம் உண்டு... Remember Remember the Month of September...

ஏனென்றால் செப்டம்பர் மாதம் என்பது திராவிடர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு தந்தவை ஒன்றல்ல ரெண்டல்ல..  இந்த உலகத்தில் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி அதனை களத்துக்கும் எடுத்துச் சென்று அதை மக்களிடம் பொருத்தி அதனை மேலும் மேலும் செம்மைப்படுத்திய ஒரு தத்துவவாதி இருந்தார் என்றால் அது அனேகமாக பெரியாராகத்தான் இருக்கமுடியும். அதே போல் ஒரு சித்தாந்தத்தை தோற்றுவித்தவரிடம் முரண்பட்டு அவருடைய சித்தாந்தத்தையே ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்தவர் ஒருவர் இருந்தார் என்றால் அது அண்ணா மட்டுமாகத்தான் இருக்கமுடியும். இவர்கள் இருவரும் பிறந்த மாதம் என்பதற்காகவே செப்டம்பரை திராவிடர்கள் கொண்டாடலாம்... ஆனால் இவர்கள் இருவரை மட்டும் திராவிடர்களுக்கு செப்டம்பர் வழங்கவில்லை.. இன்னும் சில ஆயுதங்களையும் படிப்பினைகளையும் அம்மாதம் திராவிடர்களுக்கு வழங்கியுள்ளது.

மோசமான ஒடுக்குமுறைதான் புரட்சிக்கு தோற்றுவாய் என்பதைப் போல பிராமண அல்லாதோரின் எழுச்சிக்கு பாடுபட்ட திராவிட இயக்கத்தின்  தோற்றத்திற்கு வித்திட்டது, பிராமணர்கள் நிரம்பிய ஒரு இயக்கம். அதன் பெயர் ஹோம் ரூல் இயக்கம். அன்னிபெசண்ட் தலைமையில் இயங்கி வந்தது. இந்திய சுயாட்சிதான் அதன் நோக்கம் என்ற போதும் காங்கிரஸின் ஆதரவுடன் தொடங்கப்பட்டிருந்ததால் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் அதில் இணைந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பான்மையினர் பிராமணர்களாக இருந்த காரணத்தினால் ஹோம் ரூல் இயக்கம் பிராமணர்களின் கூடாரமாக மாறியது. மயிலாப்பூர் வழக்கறிஞர்கள் ஹோம் ரூல் இயக்கத்தை ஆக்கிரமித்தனர். ஏற்கனவே பிராமணர்களின் வல்லாதிக்கத்திற்கு எதிராக திராவிடர் சங்கத்தை நடத்தி வந்த டாக்டர் சி. நடேச முதலியாருக்கு இந்த அணிவகுப்பு ஆபத்தானதாகப் பட்டது. அவர் பிராமணரல்லாத முக்கியப் பிரமுகர்களை கொண்டு தனி இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நினைத்தார். விளைவு சர் பிடி தியாகராயர், டி.எம்.நாயர், திவான் பகதூர் பி.ராஜரத்தின முதலியார் ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்கிற பத்திரிகையை நடத்தி வந்ததால் நீதிக்கட்சி என்று நாளடைவில் மாறியது. இந்த நீதிக் கட்சியின் தொடக்கத்திற்கு வித்திட்டது ஹோம் ரூல் இயக்கம். ஹோம் ரூல் இயக்கம்  தொடங்கப்பட்டது , 1916 ஆம் ஆண்டு 12 ஆம் தேதி. மாதம்? செப்டம்பர்!


அதுமட்டுமல்ல 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் திராவிட இயக்கங்களின் மூலமாகக் கருதப்படும் நீதிக்கட்சி வெற்றிகரமாக ஆட்சி செய்து முடித்திருந்தது. காங்கிரஸில் இருந்த பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் பிராமண அல்லோதோர் அதிகம்பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மாண்டேகு-செம்ஸ்போர்டு பரிந்துரையின் பேரில் இரட்டை ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தேர்தல் என்பதால் காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்திருந்தது. தனது முதல் ஆட்சி காலத்தில் நீதிக்கட்சி எதற்காகத் தொடங்கப்பட்டதோ அந்தப் பணிகளை நிறைவேற்றுவதில் துரிதமாக இயங்கியது. அரசு வேலைவாய்ப்பில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 1921 ஆம் ஆண்டு . தணிகாசலம் செட்டியார் மசோதா ஒன்றை கொண்டுவந்தார். அனைத்து சமூகத்தினருக்கும் அரசுப்பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றது அந்த மசோதா. அதை பிராமணர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் நிறைவேற்றியது நீதிக்கட்சி. அதே போல் 1920 ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் திவான் பகதூர் கிருஷ்ண நாயர் கொண்டு வந்த மசோதா மூலம் ஆண்களைப் போல பெண்களும் வாக்களிக்கலாம் என்கிற நிலையை உருவாக்கியது. இதில் பயனடைந்தது பிராமணப் பெண்களும்தான் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. அத்துடன் பஞ்சமர் என்கிற சொல்லுக்குப் பதிலாக ஆதி திராவிடர் என்கிற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது , தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனி அலுவலர்கள் நியமனம் செய்தது, அறநிலையத்துறை அமைத்து பிராமணர்களின் கோட்டையான கோயில்களை பிராமணரல்லாதார் கைகளுக்கு கொண்டு வந்தது என பலவற்றை செய்த நீதிக் கட்சி அரசு செப்டம்பரில் முடிவுற்றது. ஆனால் அதுதான் திராவிட பேரியக்கத்தின் தொடக்கம்.

நீதிக்கட்சியின் சமூக செயல்பாடுகள் அடுத்த தேர்தலிலும் அவர்களுக்கு வெற்றியை வழங்கியது. இருப்பினும் நீதிக்கட்சியில் ஏற்பட்ட பிளவின் காராணமாக 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியது. பிறகு பல்வேறு அரசியல் அந்தர் பல்டிகளுக்குப் பிறகு நீதிக்கட்சியின் ஆதரவு மூலம் சுப்புராயன் ஆட்சி நடத்தத் தொடங்கினார். இந்தக் காலகட்டங்களில் பெரியாரும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் படி அவரது நீண்டகால கோரிக்கையான கம்யூனல் ஜி..வை சுப்புராயன் அரசு கொண்டு வந்தது. இந்த சாதனையை செய்த சுப்புராயனின் ஆட்சிக்காலமும் 1930 செப்டம்பரில்தான் நிறைவுற்றது. இம்முறை அதே செப்டம்பர் மாதத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது நீதிக்கட்சி. இந்தநிலையில்தான் 1934 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப் பெற காங்கிரஸ் நேரடியாக தேர்தல் களத்தில் குதித்தது.

பலம் வாய்ந்த காங்கிரஸை எதிர்கொள்ள பெரியாரிடம் தஞ்சம் அடையும் முடிவுக்கு வந்திருந்தது நீதிக்கட்சி. ஆனால் பெரியார் காங்கிரஸின் எதிரி என்பதற்காக மட்டும் நீதிக்கட்சியை வழிநடத்த ஒப்புக்கொள்ளவில்லை. அவர் ஒரு வேலைத்திட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கும் நீதிக்கட்சிக்கும் அனுப்பி வைத்தார். விவசாய நலன், தொழிலாளர் நலன் என சோசலிசப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த அந்த வேலைத்திட்டத்தில்  ”மதங்கள் அரசியலில், நிர்வாகத்தில் எவ்வித சம்மந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்கவேண்டும்” போன்ற திராவிடக்கருத்துகளும் இருந்தன என்பதை சொல்லத் தேவையில்லை. பிராமணர்களின் கையில் இருந்த காங்கிரஸ் அதை நிராகரிக்க பிராமணரல்லாதோர் வசம் இருந்த நீதிக்கட்சி அதனை ஏற்றுக் கொண்டது. ஏற்றுக்கொண்ட தினம் 1934 ஆம் ஆண்டு 29 ஆம் தேதி செப்டம்பர் மாதம். அதுதான் பெரியார் கட்டமைத்த திராவிட தத்துவத்திற்குள் நீதிக்கட்சி நுழைந்ததற்கான முதல் படி.


தமிழர்கள் என்றாலே இன்றும் கூட வடக்கத்தியர்களுக்கு இந்தி எதிர்ப்புக்காரர்கள்தான். தமிழர்கள் அதனை இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு என்று திருத்திச் சொன்னாலும் அவர்களுக்கு அது மூளையில் ஏறுவதில்லை. காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்கள் காட்டிய வேகம் அவ்வளவு வீரியமிக்கது. 1938 ஆம் ஆண்டு தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து இந்தி திணிப்பு எதிர்ப்பு படை ஒன்று உருவானது. பாவேந்தர் பாரதிதாசனின் பாடலைப் பாடியபடியே ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டது அப்படை. திருச்சி உறையூரில் தொடங்கி 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி, 42 நாட்களாக நடந்த நெடும்பயணம் நிறைவுற்ற தினம் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி. அதே தினத்தில் சென்னை கடற்கரையில் கூடிய 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பேசிய பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார். ஏற்கனவே சிலர் இந்த கோஷத்தை முன்வைத்திருந்த போதும் பெரியார் முன்மொழிந்த பின் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்த முழக்கம் இன்றளவும் தமிழகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

என்னதான் நீதிக்கட்சி பெரியாரின் தலைமையின் கீழ் வந்திருந்தாலும், அதன் முக்கியஸ்தர்கள் பிராமணரல்லாதோராக இருந்தாலும் சாதி ஒழிப்பில் ஆர்வம் காட்டதவர்களாகவும், அரசு பதவி பட்டத்தின் மேல் அதிகம் நாட்டமுடையவர்களாகவும் இருந்தனர். இவர்களை எல்லாம் களையெடுக்க நினைத்த பெரியார் அண்ணாவைக் கொண்டு சில முற்போக்கு தீர்மானங்களை நிறைவேற்றினார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் 1944 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரை சந்திக்க விரும்பினர். இந்தியா முழுவதும் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் அம்பேத்கர் தங்களுக்கு ஆதரவு அளித்தால் பெரியாரை வென்றுவிடலாம் என்பது அவர்களது கணிப்பு. சென்னை கன்னிமாரா ஹோட்டலில் சண்டே அப்சர்வர் பி.பால சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க பெரியார் போல ஒரு தலைவரும், பெரியார் முன்மொழிந்தது போன்ற தெளிவான திட்டங்களும் தேவை என்று உரையாற்றினார். இந்த நிகழ்வை “சோறு போட்டு உதை வாங்கிய கதை” என்று குடியரசு பத்திரிகையில் கிண்டலடித்தார் பெரியார். பெரியாரும் அவரது திராவிட கொள்கையுமே சீர்திருத்ததிற்கான வழி என அம்பேத்கர் உறுதி செய்த தினம் 24 செப்டம்பர். பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை கட்டமைக்க தற்போது சிலர் முயல்வதைப் போல இருவரும் உயிருடன் இருக்கும் போதே முயற்சி எடுக்கப்பட்டது. ஒரு செப்டம்பர் நன்னாளில் அது தோல்வியைச் சந்தித்தது.

அதுமட்டுமல்ல திராவிடர் கழகத்திற்கான லட்சியங்கள் வரையறுக்கப்பட்ட மாதமும் செப்டம்பர்தான். 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் கூடிய மாநாட்டில்தான் திராவிட நாடு என்கிற கருத்தியல் முழுமை பெற்றது. சாதி,மத, பேதங்கள் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவது அனைத்துவிதமான சுரண்டல்களில் இருந்தும் மக்களைக் காப்பாற்றுவது போன்றவை லட்சியங்கள் பட்டியலில் இருந்தன என்பதைக் கூற வேண்டியதில்லை. அதே போல் அந்த மாநாட்டில்தான் திராவிட இயக்கத்தின் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக எவ்வாறு இருக்கவேண்டும் என்பதும் இறுதி செய்யப்பட்டது.தமிழக கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருப்புச் சட்டை படையின் துவக்கமும் அத்தினமே. இன்றளவும் தமிழகத்தில் கருப்புச் சட்டைக்காரர் என்றால் அது பெரியார் கொள்கைகளைப் பின்பற்றக் கூடியவர் என்றே அர்த்தம். கறுப்பு சட்டை அணிந்து ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் சாதி, மதக் கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் இளைஞர்கள் தட்டிக் கேட்கத் தொடங்கினர். அதற்கான வித்து போடப்பட்டது செப்டம்பரில். அண்ணாவுக்கு கருப்புச் சட்டை அணிவதில் உடன்பாடு இல்லாத நிலையில் இந்தக் கருப்புச் சட்டை விவகாரமே இருவருக்கும் இடையில் மனக்கசப்பை ஏற்படுத்தியது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

1945 செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய விரிசல் விதை 1947 செப்டம்பர் மாதத்தில் முளைவிடத் தொடங்கியது. ஏற்கனவே சுதந்திர தினம் குறித்த விவகாரத்தில் பெரியதாக வளர்ந்திருந்த விரிசல் இப்போது உடைப்புக்கான தொடக்கமாக மாறியது. சுதந்திர தினம் என்பது பிரிட்டிஷ்காரர்களை மாற்றிவிட்டு பிராமணர்களை அமரவைப்பது என்று கூறி பெரியார் எதிர்த்திருந்தார். இரண்டு சுரண்டல்காரர்களில் ஒரு சுரண்டல்காரனிடம் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது என்று அண்ணா சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருந்தார். இந்த நிலையில்தான் 1947 செப்டம்பர் 14 ஆம் தேதி திராவிட பிரிவினை மாநாடு ஒன்று பெரியார் தலைமையில் கூடியது. மாநாட்டில் அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கொந்தளித்த பெரியார் ஆதரவாளர்கள் சிலர் அண்ணாவின் படங்களை கொளுத்தும் சம்பவம் கூட நடைபெற்றது. ஆனால் கறுப்புச் சட்டை படைக்கு அப்போதைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி தடைவிதித்ததும் மீண்டும் பெரியாரும் அண்ணாவும் இணைந்தனர்.

தனக்குப் பின் அண்ணாதான் தலைவர் என்று பெரியார் ஈரோடு மாநாட்டில் தெரிவித்தார். ஆனால் அண்ணா தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்ததால் வேறொரு நபருக்கு தலைமையையும் திராவிடர் கழகத்தின் சொத்துக்களையும் மாற்ற நினைத்தார் பெரியார். அதற்கு அவர் .வி.கே.சம்பத்தை தேர்ந்தெடுத்த நிலையில் அவரும் அண்ணாவின் தீவிர விசுவாசியாக இருக்க தனக்கு பணிவிடை செய்து வந்த மணியம்மையிடம் சொத்துக்களையும் கட்சியையும் ஒப்படைப்பது என்று முடிவெடுத்தார். அப்போது இந்து மதச் சட்டப்படி ஒரு பெண்ணுக்கு தத்து எடுக்கும் உரிமையும் இல்லை.. தத்துப்போகும் உரிமையும் இல்லை. ஆகையால் பெரியார் மணியம்மையை திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. 70 வயது பெரியார் 32 வயது மணியம்மையை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அதனை தீவிரமாக எதிர்த்தனர் அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும்.. இந்த நிலையில் திருமணம் முடிந்தது. அத்தோடு செப்டம்பர் 10 , 1949 ஆம் ஆண்டு கே.. மணியம்மையின் பெயர் .வெ.ரா. மணியம்மை என்று மாற்றப்பட்டதாக குடியரசில் செய்திகள் வந்தன. ஏற்கனவே கொந்தளித்திருந்த அண்ணா அணியினர் 17 செப்டம்பர் 1949 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு இல்லத்தில் கூடினர். முக்கிய நிர்வாகிகள் இணைந்து பெரியார் தலைமையில் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டு வந்தனர். திமுக உருவானது. அன்று பெரியாரின் பிறந்த தினம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

திமுகவின் உருவாக்கம் தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலேயே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. தேசியக்கட்சி அல்லாமல் ஆட்சியைப் பிடித்த முதல் மாநிலக் கட்சி என்பதில் தொடங்கி சுயமரியாதை திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை, கைரிக்‌ஷா ஒழிப்பு போன்றவற்றோடு எண்ணற்ற சமூகநீதி திட்டங்களை இந்தியாவில் முதன்முதலாக செயல்படுத்தியது திமுகதான் என்பது கருணாநிதியின் மறைவுக்குப் பின்னான செய்தித்தாள்களை வாசித்திருந்தாலே புரிந்திருக்கும்..

மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசுகள் மெல்ல மெல்ல பறித்துக் கொண்டிருக்கையில் இன்று கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழு முக்கியத்துவம் பெற்று வருகிறது. எப்போதும் மத்திய அரசே மாநில அரசுகளுடனான உறவு குறித்து முடிவு செய்யும் நிலையில் கருணாநிதி,  மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக ராஜமன்னார் குழுவை நியமித்தார். 383 பக்க அறிக்கையை அந்தக் குழு சமர்பித்தது. இந்த அறிக்கை தமிழகத்திற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் மிக முக்கிய ஆவணமாக இருந்தது. ஈழத் தமிழர் பிரச்சனை சமயத்தில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையின் போதும் நார்வே பேச்சிவார்த்தையின் போதும் இதன் பரிந்துரைகளை முன்வைத்து விவாதங்கள் நடந்தன. மேலும் ஜோதிபாசு மேற்கு வங்க முதல்வராக இருந்த போது ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்ம் என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கை அனுப்பியதும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இந்தக்குழு அமைக்கப்பட்டது செப்டம்பர் 22 1969.

செப்டம்பர் மாதத்தில் நிகழ்ந்த அல்லது நிகழத் தவறிய நன்மை ஒன்று உண்டு. திமுகவின் தலைமைக்கு கருணாநிதி வந்த பிறகு திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். அதிமுக என்கிற பெயரில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியையும் பிடித்தார். இருவரின் கொள்கைகளும் திராவிடம்தான் என்ற போதும் திமுகவும் அதிமுகவும் பரம எதிரிகள் போல மோதிக் கொண்டன. (இங்கே அதிமுகவை ஒரு முழுமையான திராவிடக்கட்சி என்று கூறமுடியுமா என்கிற கேள்விகள் எழலாம் ஆனால் அது தனி விவாதம். நடைமுறையில் திமுக போல் இல்லையென்றாலும் அதன் பெயரில் இருந்த திராவிடம் என்கிற வார்த்தைக்காகவும் திமுகவை விட அண்ணாவின் மேல் பற்றுக் கொண்டவர்கள் எனபதைக் காட்டிக் கொள்வதற்காகவும் அதிமுக திராவிட திட்டங்களை முன்வைக்க நேர்ந்தது என்பதை மறுக்கமுடியாது.)

இந்த சமயத்தில்தான் அதிமுகவும் திமுகவையும் இணைக்கும் முயற்சி ஒன்று நடைபெற்றது. ஜனதா தளக் கட்சியை சேர்ந்த பிஜு பட்நாயக் அந்த முயற்சியை மேற்கொண்டார். மேடைகளிலும் ஏடுகளிலும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த எம்ஜிஆரையும், கருணாநிதியையும்1979 ஆம் ஆண்டு தனிமையில் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர் தேர்வு செய்த நாள் செப்டம்பர் 12 . சந்திப்பில் இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. எம்ஜிஆர் முதல்வராகவும் கருணாநிதி கட்சியின் தலைவராகவும் இருக்கமுடிவு செய்யப்பட்டது. கட்சியின் பெயர் திமுகவென்றும் கட்சியின் கொடி அதிமுகவின் கொடி என்பதும் கூட இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.. ஆனால் அடுத்த நாளே அதிமுக மேடையில் எம்ஜிஆர் இருக்கும் போதே கருணாநிதியையும் திமுகவையும் அதிமுக பேச்சாளர்கள் விமர்சிக்க அந்த இணைப்பு நிகழவில்லை. ஒரு வேளை அந்த இணைப்பு இணைந்திருந்தால் இத்தனை ஆண்டு காலமாக நடந்து வந்த திராவிடம் vs திராவிடம்  அரசியல் தமிழகத்தில் நடந்திருக்காது.

கருணாநிதி , எம்ஜிஆர் ஆகியோரின் வழி மட்டுமல்ல ஜெயலலிதாவின் வழியிலும் செப்டம்பர் மிகவும் முக்கிய மாதமாகப் பார்க்கப்படுகிறது. எம்ஜிஆருடன் திரைப்படங்களில் நடித்து பின்பு அவரது கட்சியிலும் இணைந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கிய ஜெயலலிதா விரைவிலேயே அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பொறுப்பைப் பெற்றார். கட்சியில் இருந்து வளர்ந்து வந்த ஜெயலலிதா எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் போதே திடீரென கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். அவரது கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது எனப் பலரும் கணித்த நிலையில் அவர் 1986 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் இந்த அரசியல் மறுபிரவேசம் நடந்தது ஓரு செப்டம்பர் மாதத்தில்... அன்று அவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை எனில் எம்ஜிஆர் இருக்கும் போதே அவரால் கட்சியில் இருந்து விலக்கிவைக்கப்பட்டவர் என்கிற முத்திரையோடு ஜெயலலிதா இருந்திருப்பார்.இதனால் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தலைமைப் பொறுப்பை அவரால் ஏற்றிருக்க முடியுமா என்பதும் கேள்விக் குறியே. இதில் வருந்தத்தக்க சுவாரஸ்யம் என்னவெனில் எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த ஜெயலலிதா கடைசியாக செப்டம்பர் மாதத்தில்தான் மருத்துவமனையில் உடல்குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவர் நலம்பெற்று திரும்பவேயில்லை.

இதுதவிர, அண்ணாயிசம் என்கிற 29 பக்க அதிமுகவின் கொள்கை அறிக்கையை எம்ஜிஆர் வெளியிட்டது, தற்போது தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் .பன்னீர் செல்வம் முதன்முறையாக முதல்வராக அறிவிக்கப்பட்டு அதிகார வட்டத்திற்குள் வந்தது என குறிப்பிடும்படியான நிறைய நிகழ்வுகள் இந்த செப்டம்பர் மாதத்தில் நடந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மு..ஸ்டாலின். அவர் தலைவராக எதிர்கொள்ளவிருக்கிற முதல் மாதமாக காத்துக் கொண்டிருக்கிறது செப்டம்பர்..