Wednesday, July 28, 2010

மௌனத்திற்கு அர்த்தம்


என்
அம்மாவுக்கு பிடித்தது
மௌனம்

மௌனத்திற்கு
பிடித்தது
என் அம்மா

அப்பா
எது சொன்னாலும்
மௌனமே அம்மாவின்
பதில்

அந்த
மௌனத்திற்கு அர்த்தம்
'சரி' என்பதே

அப்பா
வசவுகளை எய்தாலும்
அம்மா மௌனத்தையே
ஏவுவாள்

அப்பாவின்
கத்தல்கள் ஓய்ந்ததும்
மௌனம் அவளுடன் சேர்த்து
வீட்டையும் சுழ்ந்துகொள்ளும்

இந்த
மௌனம் என் பாட்டியிடம்
இருந்து வந்ததாக அறிகிறேன்

இந்த மௌனத்தை
தன் மகளான
எனக்கும் பரிசளிக்க
நினைத்திருக்கிறாள்

நானும்
மௌனத்தை
ஏற்றுக் கொள்வேன்

மௌனத்திற்கு அர்த்தம்
"நீ சொல்வது எதுவும் கேட்கவில்லை"
என்பதாகவும் இருக்கலாம்.

Wednesday, July 21, 2010

மழை...


இரவெல்லாம்
பெய்த மழையை
நான் இரசிக்காமல்
தூங்கியதை
காலையில்
கண்ணீருடன் உரைத்தன
என் ஜன்னல் கம்பிகள்.....

Saturday, July 17, 2010

அன்றில் பறவைகள்


அன்றில் பறவைகளில்
ஆண் இறந்தால்
பெண்ணும் இறந்து விடுமாம்
காற்று இல்லையெனில்
இரண்டும் இறந்துவிடும்
ஆண் பறவை நான்
பெண் பறவை நீ
காற்று நம் காதல் ..

Monday, July 12, 2010

பேசும் பெண்கள்


“பெண்களை
ஆண்கள் பேசவிடுவதில்லை“
என்ற மனைவியை
புறநகர் பேருந்து நிலையத்திற்கு
அழைத்துச் சென்றேன்
“உங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்“
ஒரு பெண்ணின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.
இரயில் நிலையம் சென்றோம்
“பொதிகை எக்ஸ்பிரஸ் முதல்நடைமேடையை வந்தடையும்“
பெண்குரல் சொன்னது.
விமான நிலையம் சென்றோம்
“ப்ளைட் டு பாம்பே இஸ் ரெடி டு டேக் ஆஃப்“
இங்கேயும் பெண்குரல் தான்.
மனைவியை பார்த்தேன்
சலனமற்று சொன்னால்
“பெண்களை பேசவிடுகிறீர்கள்
ஆனால் பதிவு செய்யப்பட்டதை மட்டும்“