என் பெயர் பாண்டி. நான் இந்த வீணாப்போனவனின் கதை மாந்தன்.இவனுடை ய கதையில் மட்டும் அல்ல எல்லாருடைய கதையின் முக்கிய மாந்தன் நான். இவனுக்கு வேலை இல்லை என்றாலோ இல்லை திடீரென்று கிறுக்கு பிடித்துவிட்டாலோ சிறுகதை எழுதிகிறேன் என்ற பெயரில் எதையாவது எழுதிவிடுவான். அதில் தேவை இல்லாமல் என்னை உருவாக்கி அலையவிடுவான்.சிறுகதைக்கான கூறு, அழகியல் எதுவுமே இல்லாமல் கதை எழுதும் இவனுக்கு அவை எல்லாவறையும் இழுத்து வருவோம். ஒரு கதை எழுத ஆரம்பித்து விட்டு பின் பாதியிலேயே போட்டுவிட்டு வேற கதை எழுத ஆரம்பிக்கும் இவனைப் போன்ற பொறம்போக்குகளிடம் என்னாலும் என் சகாக்கலாலும் படமுடியவில்லை. இவனுங்கள் பேர் வாங்க வேண்டும் என்று எதையாவது எழுதிவிடுவார்கள். மாபெரும் கஷ்டங்களை எல்லாம் எங்கள் மேல் சுமத்திவிடுவார்கள். நாங்கள் கஷ்டப்படுவதைப் படித்துவிட்டு நீங்களும் அவர்களை பாராட்டிவிட்டால் அவ்வளவுதான். அது போல்வே இன்னும் இரண்டு எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.அதைக்கூட தாங்கி கொள்ளலாம் கதையைப் படித்துவிட்டு அதே மாதிரி ஒரு கதை எழுதி இந்த கதையில் இருந்து அந்த கதையில் எங்களை இழுத்துப் போடுவார்கள். சில கதையில் என்னை ஆணாக வைத்திருப்பார்கள் சில கதையில் பெண்ணாக. எப்போதாவது காதல் கதை எழுதும் இவர்களுக்கு தொரியாது அந்த கதையில் மட்டும் தான் நாங்கள் சந்தோஷமாக இருப்போம் என்று.
பெரியவங்களுக்கான கதையைவிட குழந்தைகளுக்கான கதையே எங்கள் விருப்பம்.அதில் தான் எந்த பிரச்சனையும் வராது அது மட்டுமல்லாமல் அங்கே தான் மானாகவும் முயலாகவும் மாறமுடியும்.பெரும்பாலும் குழந்தைகளுக்கான கதைகளில் குழந்தைகளும் வந்துவிடுவார்கள்.தேவதைக் கதைகளில் பெரும்பாலும் தேவதையாக குழந்தைகளே இருந்து விடுவதால் நாங்கள் பேசும் மரமாகவும் பறக்கும் பாயாகவும் இருந்துவிடுவோம் குழந்தைகள் கதையில் அரக்கனாய் வந்து சாவதில் கூட சுகம் உண்டு.
சில க்ரைம் கதை ஆசிரியர்கள்.மிகவும் கொடுரமாக யோசிப்பார்கள்.க்ரைம் கதை ஆசிரியனின் கதையில் இருந்தால் சாணித்தாளில் தான் அச்சாக வேண்டும். அதனாலேயே எனக்கு க்ரைம் கதைகளில் இருப்பது பிடிக்காது க்ரைம் கதையில் இருந்தால் அதிகபட்சம் இரண்டு வேலைதான் இருக்கும் ஒன்று கொலை செய்வது இன்னொன்று கொலை செய்யப்படுவது. ஒரு க்ரைம் ஆசிரியர் என்னை மிகவும் கொடூரமான முறையில் கொண்டிருந்தார். அவரது எழுத்துத்திறமையைக் காட்டுவதற்கு வருபவர்களிடம் எல்லாம் அதை வாசித்துக்காட்டி என்னை மீண்டும் மீண்டும் கொடூரமாக கொன்றார்.ஏன்டா அவரது கதைக்கு போனோம் என்றாகிவிட்டது.
சில மொழிமாற்ற வல்லுனர்கள் ஒரு மொழியில் பேசிக்கொண்டிருக்கும் எங்களை இன்னொரு மொழியில் பேசவிடுவார்கள்.அப்போது எல்லாம் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். சிலர் மொழிமாற்றத்தில் கதை மாற்றம் செய்து விடுவார்கள் மூலக்கதை மூழ்கிச்செத்துவிடுவதைப் பற்றி எல்லாம் கவலை படமாட்டார்கள்.அவர்கள் கணக்கில் ஒரு கதை வேண்டும் அவ்வள
சில பெரிய ஆட்களின் கதையைப் போட்டால் வியாபாரம் ஆகும் என்று நம்பி சில வார இதழில் கேட்டு வாங்கி தொடராய் போடுவார்கள்.பலசமயம் அந்த பெரிய எழுத்தாளருக்கு வேலை இருக்கிறது என்று அவரது உதவியாளர் எழுதி அனுப்புவார்.ஆனால் அது அந்த பெரிய எழுத்தாளரின் பெயரிலேயே வெளியாகும்.
இப்படி பட்ட ஒரு தொடர்கதையில் நான் பாத்திரமாக சுத்திக் கொண்டிருந்த போது இதழ் ஆசிரியர் தொலைப் பேசி செய்து கதையில் சுவாரஸ்யம் கூட்டுங்கள் என்று சொல்ல அந்த வாரம்"பாண்டி ஏழாவது மாடியில் இருந்து தலை கீழாய் தரை நோக்கி போனான். ஒரு பெறும் கல் அவன் தலையை பதம் பார்க்க காத்துக் கொண்டிருந்தது" என்று முடித்தார்.ஒரு வாரம் தலைகீழாக கல்லை நோக்கியே போய்கொண்டிருந்தேன்.ஒருவாரம் கழித்துத்தான் கீழே விழுந்து பைத்தியமானேன்.கீழே விழுந்த வலியை விட ஒரு வார்ம் தலைகீழாக தொங்கியது தான் வலியை தந்தது.
சில பேர் கதை என்று எதையாவது எழுதிவிட்டு புத்தகம் வெளியிடுவார்கள். அந்த மட்டமான கதையில் மட்டமாக சித்தரிக்கப் பட்டிருக்கும் எங்களை புகழ்ந்து அணிந்துரையும், வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை பேச வந்திருப்பவரின் கற்பனைப் புகழ்ச்சியும் நினைத்தால் தற்கொலை செய்துகொள்ளலாம் எனத் தோன்றும். அதை விட கொடுமையானது நல்ல ஒரு கதையில் பிறந்து யார் கவனிப்பிலும் படாமல் கரையான் அரித்து சாவது.
கொஞ்சம் பொறுங்கள்.அவன் வருவது போல் சத்தம் கேட்கிறது.யாரா?. அந்த வீணாப்போனவன்.ஏதும் கதை கிதை எழுதப்போகிறான் போல.நான் அப்புறம் பேசுகிறேன்.முக்கியமான விசயம் நான் இப்படி உங்களிடம் பேசியதை அவனிடம் சொல்லிவிடாதீர்கள் சொன்னால் அந்த பிலக்கா பையன் கதை மாந்தன் பேசுகிறான் என்ற தலைப்பில் இதை எழுதிவிட்டு கதை என்று சொன்னாலும் சொல்லுவான்.
1 comment:
நல்லாயிருக்கு பரிதி!
Post a Comment