Tuesday, September 27, 2011
மச்சான் கிரிக்கெட்டு டா
எனது வேர் கிராமத்தில் இருந்து வந்தது. இன்னும் அங்கே தான் ஊன்றி இருக்கிறது.ஆனால் நான் வளர்ந்தது எல்லாமே 30 கி.மீ தள்ளி உள்ள ஒரு குறு நகரத்தில் அல்லது பெரும் கிராமத்தில் என வைத்துக் கொள்ளலாம்.அது கிராமத்துக்கும் நகரத்துக்குமான எல்லைக் கோடாய் இருந்தது.அங்கே கிராமத்து விளையாட்டான பம்பரம்,குண்டு,கிட்டி பிள்ளை (இப்ப எல்லாரும் அதை கில்லினு சொல்றாங்க),காக்கா குஞ்சு, கம்பு தூக்கி,கல்லா மண்ணா,திருடன் போலிஸ், டிக் டிக் யாரது?,சிலை மனிதன்(அதை லாக் அண்ட் கீ என்கிற பெயரில் பின்னாளில் நான் படித்த மெட்ரிகுலேசன் பள்ளியில் விளையாடினார்கள்),ஐஸ் பாய்,எறி பந்து,செவன் ஸ்டெப், மற்றும் சில பெயர் மறந்து போன விளையாட்டுக்கள் தான் பெரும் இடத்தைப் பிடித்திருக்கும். கிரிக்கெட் என்பதற்கு கடைசி இடமே.காரணம் மற்ற விளையாட்டுகளில் எல்லாம் அனைவருமே எப்போதும் ஓடிக்கொண்டு கவனத்துடன் இருக்க வேண்டும் கிரிக்கெட் அப்படி இல்லை.பீல்டிங்க் பண்ணும் போது பந்து வந்தால் மட்டுமே வேலை. பேட்டிங்க் பண்ணும்போது அடுத்தவன் அவுட் ஆகும்வரை வெட்டியாய் உட்கார்ந்து கொண்டிருக்கவேண்டும். மேலும் மற்ற விளையாட்டுக்களில் பிடிக்காதவனை பட்டுவரச் செய்து நண்பர்களுடன் சேர்ந்து அழுகவிடலாம்.கிரிக்கெட்டில் அது சாத்தியம் இல்லை. ஆனால் காலப் போக்கில் கிரிக்கெட் மற்ற விளையாட்டுக்களை எல்லாம் பின் தள்ளி விட்டிருந்தது. அதற்கு முக்கிய காரணம் அதைத் தான் டி.வி.காரன் காட்டுகிறான்.எங்கள் விளையாட்டை எவனும் காட்டுவது இல்லை. எங்களுக்குத் தெரிந்து பெரிய ஆட்கள் விளையாடும் விளையாட்டு அது தான்.நாங்களும் பெரிய ஆளாக ஆகும் பொருட்டு கிரிக்கெட்டை கையில் எடுத்தோம். தீவிரமாக விளையாட் ஆரம்பித்தோம். எனக்கு பெரிதாய் விளையாடத் தெரியாத போதும். அதன் ஸ்டைல் லுக்குகாக கிரிக்கெட் மிகவும் பிடித்தமானதாய் இருந்தது.பார்க்க பல்க்காக இருந்தாலும் நான் ஒரு நோஞ்சான்.என்னால் ரொம்ப தூரத்தில் இருந்து பந்து எறிய முடியாது என்பதால் எப்போதுமே ஸ்லிப்பில் தான் நிற்பேன். நான் போடும் பந்து மிகவும் மெதுவாக வருவதால் அவசரப்பட்டு பேட்டை எதிராளி சுழட்டிய பின் தரையில் குத்தி போல்டாக்கிவிடும்.இல்லையென்றால் அல்வா வாக வரும் அந்த பந்தை சிக்ஸ் அடிக்க விரும்பி தூக்கும்போது யாரிடமாவது பிடிபட்டுவிடும்.இப்படியாக நான் ஒரு பவுலராக ஃபார்ம் ஆகியிருந்தேன். பேட்டிங்கில் பெரிதாய் அடிக்கவில்லை என்றாலும் அவுட் மட்டும் ஆகவே மாட்டேன்.எதாவது பண்ணி களத்தில் இருந்து கொண்டே இருப்பேன். எப்பவாவது சிங்கில் தட்டுவேன். அப்போது நான் ட்ராவிட்டின் தீவிர ரசிகன்.டெஸ்ட் மேட்சில் ட்ராவிட் விளையாடுவதை லீவ் போட்டு பார்ப்பேன்.நன்றாக விளையாடும் நண்பர்களுக்கு(ஒருவன் மட்டுமே எனது வயதுக்காரன்.மற்ற அனைவருமே மூன்று நான்கு வயது மூத்தவர்கள்) அப்படிப் பட்டவனே தேவை படுவான்.அதனால் என்னை டீமில் சேர்த்துக் கொள்ள பலரும் விரும்புவார்கள். கொஞ்சம் பெரியவனாய் வளர்ந்த பிறகு.எங்கள் ஏரியாவில் நிரைய புது வீடுகள் வர ஆரம்பித்தன.புது வீடுகளில் அதிகமாக அழகனான பெண்கள்(சிறுமிகள், அப்போது அவங்க தான பாஸ் நமக்கு பெண்கள்) நிரைய பேர் குடிவந்திருந்தனர்.எல்லோரும் நகரத்தில் வாடகை வீட்டில் இருந்தவர்கள் இங்கே சொந்த வீடு கட்டி வந்திருந்தார்கள்.அதிக பட்சம் மொட்டை மாடிகளில் வீடியோ கேம்மை கையில் வைத்துக் கொண்டு டொய்ங்க் டொய்ங்க் என சத்தம் வர பட்டனை அழுத்திக் கொண்டிருப்பார்கள், அந்த பெண்களாய் தெரிந்த சிறுமிகள் .அவர்கள் முன்பு கம்புதூக்கி, காக்கா குஞ்சு ,விளையாட எங்களுக்கு நாகரிகக் குறைவாய் இருந்ததால் நாங்கள் கிரிக்கெட்டே கதி என்று ஆகிவிட்டோம்.சிறிது நாட்களில் நான் எல்லா பெண்கள் என்கிற சிறுமிகளுடன் சிநேகம் பிடித்து. ஆம்பளப் பசங்களுடன் விளையாடுவதையே விட்டு விட்டு கேரம், செஸ் ,கலி மண் எடுத்து சிலை செய்வது என்று விளையாட ஆரம்பித்துவிட்டேன் எங்கள் பள்ளியில் பெண்களுடன் பேசக்கூடாது என்பதால் பள்ளியில் பேசவே மாட்டேன்.எங்க ஊர் பிள்ளைகள் வந்து பேசினாலும் பேசமாட்டேன். இது என்னை ஒரு கெத்துக்காரனாக பெண்களின் நட்புக்கு அலையாதவனாக அதே சமயம் பெண்களை மதிப்பவனாக காண்பித்தது(மற்றவர்கள் பள்ளியிலும் பேசமாட்டார்கள் ஊரிலும் பேசமாட்டார்கள்.அவர்களை கடந்து போனால் கிண்டல் அடிப்பார்கள்).இது எல்லாம் ஐந்தாவது படிக்கையில்.என்ன காரணம் என்று தெரியவில்லை மறுபடியும் எனது ஆர்வம் கிரிக்கெட்டில் தொத்தியது. பெண்களுடனும் இன்னும் நாலைந்து சின்ன பசங்களுடனும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். நான் தான் அங்கே சச்சின் டெண்டுல்கர் என்றாலும் அது ரொம்ப உப்பு சப்பு இல்லாமல் இருக்கவே நான் பழைய கேங்குடனே சேர்ந்து விட்டேன். இடைவெளி விட்டு வந்ததாலோ என்னவோ.திரும்பி நான் கிரிக்கெட் விளையாடும் போது நேர்த்தியான விளையாட்டுகாரன் ஆகிவிட்டேன். பிரெட்லீ வந்த புதுசில் பந்து போட்டு எல்லோர் மண்டையையும் உடைப்பாரே .அது போலவே நான் போடுவேன்.எல்லோரும் எனது பந்தை சந்திக்க பயப்படுவார்கள். பேட்டிங்கிலும் கொஞ்சம் தேர்ந்து இருந்தேன். சிக்ஸ்கள் அடிக்காவிட்டாலும் . நேக்காக பந்தை பவுண்டரிக்கு அடிக்க கற்றுக்கொண்டேன். ஏழாவது படிக்கையில் ஹாஃப் ட்ரைவ் ,லெக் ட்ரைவ் எல்லாம் அடித்துவிட்டு பந்து பவுண்டரி போகும் வரை அந்த போசிலேயே இருப்பேன்.முறையே என்னுடன் செஸ், கேரம் விளையாடிய பெண்கள் எல்லாம் மாடியில் இருந்து என்னையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.என்னுடைய மூத்தவர்கள் எல்லாம் பத்தாவது ,பனிரெண்டாவது படித்துக் கொண்டிருந்ததால் ஞாயிறு மட்டுமே வருவார்கள்.மற்றைய நாட்களில் நான் தான் ஒரு டீமின் கேப்டன்.அப்போது கங்குலியின் இரசிகன்.இப்படியாக நான் வளர்ந்து வரும் வேலையிலே நாங்கள் தேனி நகருக்கு குடி பெயர்ந்தோம். அங்கே பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. எனது பள்ளி நண்பன் ஒருவன் அவன் வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து இரண்டு கி.மீ என்னை பின்னே உட்காரவைத்துக் கொண்டு நகரின் மைய்யப் பகுதிக்கு கூட்டிப் போவான் கம்பியூட்டர் கேம் விளையாட. அவன் தான் எப்போதும் ஜெயிப்பான். தினமும் நாங்கள் அப்படி போக ஆரம்பித்தோம். கிராமத்து விளையாட்டு போல் கிரிக்கெட்டின் வரலாறும் அவ்வளவு தான் என நினைத்தேன். கொஞ்ச நாட்களில் வீடியோ கேம்மில் தேர்ச்சி பெற்றவனாய் ஆகிவிட்டதால் அந்த நண்பன் என்னை விட்டுவிட்டு விளையாடத் தெரியாத இன்னொரு நண்பனை கூட்டிச் செல்ல ஆரம்பித்தான். மறுபடியும் வீடு மாறி நகரின் வேறொரு பகுதிக்குச் சென்றோம்.அது எனது பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் இருக்கும் ஏரியா. மீண்டும் கிரிக்கெட் தலை தூக்கியது. ஒரு பவுலரான நான் இங்கே சிறந்த பேட்ஸ்மேன் ஆகிவிட்டேன்.இரண்டு ஓவர்கள் தான் நான் களத்தில் இருப்பேன் என்றாலும் எப்படியும் ஆறேழு சிக்ஸ்கள் பறந்து இருக்கும்.முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்துத்தான் ரன் கணக்கை தொடங்குவேன்.மற்ற ஊர்காரர்க்ளுடன் மற்ற ஸ்கூல் காரர்களுடன் என விளையாடி ஜெயித்தும் தோற்றும் கொண்டிருப்போம்.அப்போது எல்லாம் சேவாக் வழி என் வழி.பிறகு பத்தாவது வந்த பிறகு.கிரிக்கெட் விளையாடுவது அரிதாகிப் போனது. கிரிக்கெட் விளையாட்டு சகஜமாகிப் போனதால் பெண்கள் யாரும் அதனால் ஈர்க்கப்படுவதில்லை.கிரிக்கெட் விளையாட காரணமே இல்லாமல் போனது. மூன்று வருடங்கள் கிரிக்கெட் விளையாடாமலே இருந்தேன். கல்லூரி வந்த பிறகு ஒரு நாள் விளையாடினேன்.எனக்கு எதுவுமே வரவில்லை. ட்ராவிட் ,சச்சின்.கங்குலி ,சேவாக் என இருந்த நான் ரமேஷ் பொவார் ரேஞ்சுக்கு ட்ரீட் செய்யப்பட்டதால் அதன் பிறகு நான் விளையாடவே இல்லை.பின்பு எழுத்து ,படிப்பு, இலக்கியக் கூட்டங்கள், புதிய தலைமுறை பயிற்சி பத்திரிக்கையாளர், குறும்படம் எடுப்பது, சிற்றிதழ் ஆரம்பிப்பது என ஓட ஆரம்பித்ததில் கிரிக்கெட்டை மறந்தேவிட்டேன்.போன வாரம் பள்ளி நண்பன் வீட்டுக்கு போகும் போது ஐ.பி.எல் பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் என்னைவிட ட்ராவிட்டின் வெறித் தனமான ரசிகன்." டெஸ்ட் மேட்ச் எல்லாம் பாத்துட்டு எப்படிடா இத எல்லாம் பாக்குறிங்க" என்றேன். "மச்சான் கிரிக்கெட்டு டா.." என்றான்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment