நேற்றிரவு ஒரு கவிதை எழுதினேன்..
எனக்காகவே எழுதிய கவிதை அது.
நான் வாழ
நான் சிரிக்க
நான் அழ
நான் இசைக்க
நான் காரி உமிழ
நான் கடவுளாக
என்னைச் சாத்தானாக்க
எழுதிய அதிசுவை
அற்புதக் கவிதை அது..
புகழ்ந்தோ இகழ்ந்தோ
கெடுத்துவிடுவீர்கள் என்பதால்-அதை
வெளியிட உத்தேசம் இல்லை.
என் அந்தரக்கத்தைச் சொல்வது அது..
பாலியல் தவிர்த்து
அந்தரங்கம் இல்லாத உங்களுக்கு
அது ஒருபோதும் புரியப்போவதில்லை.
இதுவரை யாரும்
பேசாத மொழியில்
எழுதப்பட்ட அதைப்
படிக்கவேண்டுமானால்
நீங்கள் பார்த்திரா நிறம் ஒன்றை
கற்பனை செய்யவேண்டும்.
அந்த நிறத்திற்கு பெயர் இடவேண்டும்.
நீங்கள் வரைந்து வைத்த
மழைக்கு அந்நிறத்தை அடிக்கவேண்டும்.
வான்காவின் வெட்டப்பட்ட
காதின் ஒரு பகுதியோ
சேவின் கைவிரல்
நகமோ உங்களிடம்
இருக்கவேண்டும்.
இத்தனையும் உங்களிடம் இருந்தால்
என்னிடம் வரவேண்டியது இல்லை
அந்தக் கவிதை எழுதியது நீங்கள் தான்..