ஆட்டோவை நெறிப்படுத்த
அரசு தொடர்ந்து சட்டங்களை இயற்றி வருகிறது. ஆனால் அந்தச் சட்டங்கள் கடைபிடிக்கப் படுவதில்லை.
அதற்கான காரணங்கள் என்ன?
கடந்த பத்தாண்டுகளில் தனிநபர்
வாகனங்களான கார்களும் இரு சக்கரவாகனங்களும் மும்மடங்காக அதிகரித்து இருக்கின்றன. ஆனாலும்
ஆட்டோவிற்கான மவுசு குறையாமலேயே இருக்கிறது. மற்ற எந்தப் பொதுவாகனத்திற்கும் இல்லாத
வரலாறு ஆட்டோவிற்கு உண்டு ஆரம்பத்தில் ரிக்சாகாரர்களும் குதிரை வண்டிக்காரர்களும்தான்
ஆட்டோக்காரர்களாக பரிணமித்தார்கள். ஆட்டோமேட்டிக் ரிக்சா என்பதே சுருக்கி ஆட்டோ ரிக்சா
என்றாகி இப்போது ஆட்டோவாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் இரண்டு லட்சத்து
நாற்பத்தி ஐந்தாயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன என்கிறது அரசு. சென்னையில் மட்டும் சுமார்
எழுபத்தி நான்காயிரம் ஆட்டோக்கள். ஆட்டோவின் இந்த மவுசுக்குக் காரணம் அதன் ’கடைசிவரை
சேவை’ என்கிற தன்மைதான். குறுகலான தெருக்களிலும் ஆட்டோ நுழைந்து வீட்டுவாசல் வரை வந்து
விட்டுச்செல்லும். மேலும் இரண்டுக்கும் மேற்பட்டோர் சென்றுவர ஆட்டோவே வசதியானதும் விலைமலிவானதாகவும்
இருக்கிறது.
இப்படி அனைத்து மக்களும் பயன்படுத்தும்
ஆட்டோவை நெறிப்படுத்த அரசு தொடர்ந்து சட்டங்களை இயற்றி வருகிறது. ஆனால் அந்தச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆட்டோக்காரகளின் மேல் வைக்கப்படும்
பெரிய புகார் மீட்டரைக் கடைபிடிப்பதில்லை. .ஆட்டோவிற்கு
மீட்டர் கட்டணம் வாங்கும் ஆட்டோக்கள் முப்பது சதவிதம் கூட இருக்காது.
அப்படியே
மீட்டர் போடுபவர்கள் மீட்டருக்கு மேல் பணம் கேட்பார்கள். காலை அல்லது மாலை நேரமாக இருந்தால்
”சார் பீக் அவர் சார்.. செம ட்ராபிக்கா இருக்கும் சார்” என்று மீட்டர் போடாமல் ஓட்டுபவர்கள்.
”பகலில் மொட்ட வெயில் சார்... கண்ணெல்லாம் எரியும் சார்” என்றும் இரவில் “என்னா
பாஸ் லேட் நைட் ஆயிடுச்சு..
புள்ளக்குட்டிங்கள விட்டுவந்து வேலை பாக்குறோம்” என்று சொல்லி மீட்டர் போடாமல்
டபாய்த்துவிடுவார்கள்.
பயணி மிகவும் அவசரமாகப் போகவேண்டும் என்று தெரிந்தாலோ.. அல்லது வெளியூர் என்று
தெரிந்தாலோ அவ்வளவுதான்.. இருமடங்கு சமயத்தில் மும்மடங்கு கட்டணம்
வசூலிக்கிறார்கள்..
அதிக ரேட் சொல்வதால் ஆட்டோ ஸ்டாண்டில்
வண்டி ஏறாமல் அந்த வழியில் வரும் வேறொரு ஆட்டோவில் மீட்டர் கட்டணத்திற்குப்
பயணிக்க நினைத்தால் ஆட்டோ ஸ்டாண்டில் இருப்பவர்கள் அந்த ஆட்டோக்காரரை மிரட்டி
அனுப்பிவிடுவார்கள் வேறு வழியில்லாமல் அதிக விலை கொடுத்து அந்த ஆட்டோக்களிலேயே
மக்கள் செல்லவேண்டிய சூழல் ஏற்படுத்துகிறது. புகார் எண்களுக்குப் தகவல்
தெரிவித்துக் கொண்டிருந்தால் நமது வேலை கெட்டுவிடும் என்கிற நினைப்பாலும், எதாவது எதிர்த்துக் கேட்டால்
அவர்களிடம் தகாத வார்த்தைகளில் பேச்சு வாங்க நேரிடலாம் என்கிற பயத்தாலும் யாரும்
எந்த முயற்சியும் செய்வதில்லை
மீட்டர் கட்டணம் மட்டுமல்ல, ஜிபிஎஸ், எல்.பி.ஜி போன்ற மற்ற
அரசு ஆணைகளையும் ஆட்டோ ஓட்டுனர்களால் கடைபிடிக்க முடிவதில்லை. என்ன காரணம்? வாருங்கள்
ஆராய்வோம்…
மீட்டர் கட்டணம்.
முதன்முதலில் மீட்டர் கட்டணங்கள்
1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கிலோ மீட்டருக்கு 2.20 ரூபாய் கட்டணமாக
வகுக்கப்பட்டது. பதினொரு ஆண்டுகள் இதில் எந்த மாற்றமும் செய்யாததால் இந்தகட்டணங்கள்
நடைமுறையில் இருந்து விலகின. அடுத்து 2007 ஆம் ஆண்டும் புதிய மீட்டர் கட்டணத்தை அரசு
நிர்ணயித்தது அதன்படி இரண்டு கிலோ மீட்டருக்கு இருபது ரூபாய் அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும்
பத்து ரூபாய் என்று நிர்ணயித்தது. இந்தக் கட்டணம் மிகுந்த நஷ்டத்தைத்தரும் என்று ஆட்டோ
ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினர். மெல்ல இந்த கட்டணமும் நடைமுறைப்படுத்தப்படாமலேயே
போயிற்று. 2013 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் சென்னைக்கான மீட்டர் கட்டணத்தை அரசு அறிவித்தது. மற்ற மாவட்டங்களில் அந்ததந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களும் ஆட்டோ ஓட்டுனர்கள்
சங்கமும் இணைந்து பேசி அந்த மாவட்டத்திற்கான மீட்டர்கட்டணம் நிர்ணயிக்கப்படவேண்டும்
என்றும் அறிவித்தது. ஆனால் இதுவரை சென்னையைத் தவிர வேறெந்த மாவட்டங்களிலும் மீட்டர்
கட்டணம் நிர்ணயிக்கப்படவே இல்லை.
இந்த மீட்டர் கட்டணத்தை ஏன் நடைமுறைப்படுத்த
முடியவில்லை. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரனிடம்
பேசியபோது “ நாங்கள் மீட்டர் கட்டணத்தை வரவேற்கிறோம் ஆனால் அது நியாயமான கட்டணமாக இருக்கவேண்டும்
என்பதே எங்களது கோரிக்கை. கட்டிட வேலை, எலக்ட்ரீசியன் , துணி அயர்ன் செய்பவர்கள், ஹோட்டல்கள்
என்று எந்த முறைசாராத் தொழிலாளர்களுக்கும் அரசு கட்டணம் நிர்ணயிப்பதில்லை. ஆனால் ஆட்டோவிற்கு
மட்டும் கட்டணம் நிர்ணயிக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் மூலம் வருமானத்தை ஈட்டும்
ஆட்டோத் தொழிலாளி தனது அன்றாடத் தேவைகளுக்காக கட்டணம் நிர்ணயிக்கப்படாத மற்ற சேவைத்
தொழில்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்பதை அரசோ பொதுமக்களோ மீடியாவோ யாரும் கவனத்தில்
கொள்வதில்லை. நாளுக்கு நாள் பெட்ரோல் விலையைக் காரணம் காட்டி காய்கறி விலை கூட ஏறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இருக்க மீட்டர் கட்டணம் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. மீட்டர்
கட்டணம் அறிவித்த பின்பு கேஸ் விலை இருபத்தி மூன்று ரூபாய் ஏறியிருக்கிறது. இந்த விலை
உயர்வை எப்படி சமாளிக்கமுடியும்?. ஆட்டோக்களுக்கு மட்டும் மானியவிலையிலா பெட்ரோல் வழங்குகிறார்கள்?
அதற்காகத்தான் அரசிடம் அரசு அதிகாரிகள், ஆட்டோ
ஓட்டுனர்கள், நுகர்வோர் அடங்கிய முத்தரப்பு கமிட்டியை அமைத்து அவர்கள் மூலம் கட்டணத்தை
நிர்ணயிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் ஆனால் அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.”
அரசு மீட்டர் கட்டணத்தை கட்டாயப்படுத்துவதற்கு
முன்பே நம்ம ஆட்டோ என்கிற நிறுவனம் மீட்டர் கட்டணத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்
நிறுவனர் அப்துல்லாவிடம் பேசிய போது “ இது சேவைத்தொழில் அதனால் நாங்கள் சேவையையும்
மக்கள் நம்பிக்கையையும் கருத்தில் கொண்டு மீட்டர் கட்டணத்தை செயல்படுத்திவருகிறோம்.
ஆனால் உண்மையில் இது எங்களுக்கு இப்போது லாபத்தைத் தரவில்லை. தற்போது சுமார் 100 நம்ம
ஆட்டோக்கள் இருக்கின்றன இதுவே 350 என்று உயரும் போது நல்ல லாபத்தைத்தரும். அதுவரை கடினம்தான்”
மீட்டர் கட்டணத்தை நடைமுறைப்படுத்த
முடியாததற்கு இரண்டு காரணங்கள் ஓட்டுனர்களால் சொல்லப்படுகின்றன. உழைத்த பணம் தினம்
இலஞ்சத்திற்குப் போகிறது. முதல்வரோ பிரதமரோ ஆவதற்கு கல்வித்தகுதி தேவைப்படாத நாட்டில்
ஓட்டுனர்கள் பேட்ச் பெற குறைந்தபட்சம் எட்டாவது வரை படித்திருக்கவேண்டும் என்கிறது
அரசு. இதனால் நன்றாக ஓட்டத்தெரிந்த லைசன்ஸ் உடைய ஓட்டுனர்களும் பேட்ச் பெறுவதில் சிக்கல்
உள்ளது. பேட்ச் இல்லாத காரணத்தால் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஆட்டோவில்
சீட் பெல்ட் போடவில்லை போன்ற பொய்க்காரணங்கள் கூறி லஞ்சம் கேட்கின்றனர். மேலும்
ஆர்.டி.ஓ ஆபிசில் ஏஜண்ட் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது என்கிற நிலை இருக்கிறது.
இதற்கெல்லாம் ஆகும் பணத்தை மீட்டர் கட்டணத்தில் சம்பாரித்துக் கொடுக்க முடியாது.
இன்னொரு காரணம் ஷேர் ஆட்டோக்களும்
, மேக்சி கேப்களும் . நகரத்திற்குள் பேருந்துகளைத் தவிர வேறெந்த வாகனத்திற்கும் ரூட்
போர்டு போட்டு ஓட்ட அனுமதி இல்லை. ஆனால் பெரும்பாலான மேக்சி கேப்கள் சுற்றுலா பயணிகளுக்கான
பெர்மிட் பெற்று ரூட் போர்டு போட்டு வண்டி ஓட்டுகின்றன. ஷேர் ஆட்டோக்கள் புறநகரில்
இயங்குவதற்கான பெர்மிட் பெற்று நகரத்திற்குள் இயங்குகின்றன. அதனால் பயணிகள் கிடைப்பதில்லை
என்கின்றனர். அதே சமயம் ஷேர் ஆட்டோக்களுக்கான தேவை இருக்கிறது என்பதால் நகரத்திற்குள்
ஷேர் ஆட்டோக்களுக்கு பர்மீட் வழங்க வேண்டும் என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
ஜி பி எஸ்
அனைத்து ஆட்டோக்களையும் கண்காணிக்கும்
வகையில் ஜிபிஎஸ் பொருத்தவேண்டும் என்று ஒரு ஆணையும் அரசால் பிறப்பிக்கப்பட்டது. முதலில்
ஆட்டோ உரிமையாளரே பொருத்தவேண்டும் என்று கூறிய அரசு. பிறகு 2013 பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள்
இலவசமாக அனைத்து ஆட்டோக்களுக்கும் ஜிபிஎஸ் பொருத்திய மீட்டர் வழங்கப்படும் என்ற அறிவித்தது.
இதற்காக எண்பது கோடியே எண்பத்தி ஆறு லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியது. ஆனால் அத்தொகை
என்ன ஆனது என்று தெரியவில்லை.
எல்.பி.ஜி எரிவாயு
பெட்ரோல் டீசல் சுற்றுச்சூழலை
மாசுபடுத்துவதால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் எல்.பி.ஜிக்கும் சி.என்.ஜிக்கும்
மாறவேண்டும் என்று முடிவெடுத்தன. அதை ஒட்டி முதற்கட்டமாக இந்தியாவில் டில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய நான்கு நகரங்களில்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. 2008 ஆம் ஆண்டில் இருந்து
அனைத்து ஆட்டோக்களும் எல்.பி.ஜி ஆட்டோக்களாக
மாற்றவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ஒவ்வொரு ஆட்டோக்களுக்கும் இரண்டாயிரம்
ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றது. அதன் பிறகு இது மூவாயிரமாக உயர்த்தப்பட்டது.
ஒரு ஆட்டோவை எல்.பி.ஜி ஆட்டோவாக மாற்ற ஒன்பதாயிரம் முதல் பதினான்காயிரம் வரை செலவு
ஆகும். பெட்ரோல் டிசலை விட எல்.பி.ஜியின் விலை குறைவு என்பதால் பல ஆட்டோக்கள் எல்.பி.ஜிக்கு
மாறின. இரண்டாண்டுக்கு முன்பு ஐம்பத்தி நான்காயிரம் ஆட்டோக்கள் கேஸ் மூலம் இயக்கப்பட்டன.
தற்போது அவை இருபதாயிரம் ஆட்டோக்களாக குறைந்துள்ளன. இதற்கு மிக முக்கிய காரணம் போதுமான
கேஸ் பங்குகள் இல்லாததே. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும்
சேர்த்தே இருபத்தி மூன்று கேஸ் பங்குகள்தான் இருக்கின்றன. அவற்றில் கேஸுக்காக நீண்ட
கியூக்களில் நிற்கவேண்டியுள்ளதால் கேஸ் ஆட்டோவிலும் பெட்ரோல் டீசல் நிரப்பி ஓட்டுகின்றனர்.
எல்லா பங்குகளிலும் கேஸ் வழங்கமுடியாது.
பெட்ரோல் டேங்கிற்கும் கேஸ் டேங்கிற்கும் குறைந்தது நூறு மீட்டர் இடைவெளியாவது இருக்கவேண்டும்.
நகரத்திற்குள் எந்த பங்குகளிலும் அவ்வளவு இடம் இல்லை. கேஸ் பற்றாக்குறையைத் தவிர்க்க
மொபைல் பங்குகளை அறிமுகப்படுத்தப் போவதாக அரசு அறிவித்தது. இதுவரை வெறும் அறிவிப்பாக
மட்டுமே இருக்கிறது. ’நகரத்தில் இருக்கும் பெரிய
பஸ் டிப்போக்களின் ஒரு ஓரத்தில் கேஸ் பங்குகள் அமைக்கலாம். ஆட்டோவில் மட்டுமின்றி
பேருந்துகளிலும் எல்.பி.ஜியை உபயோகித்தால் சுற்றுச்சூழல் மேலும் காக்கப்படும்’ என்று
தொழிற்சங்கங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன. அதற்கு அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
கேஸைப் பயன்படுத்துவதற்கு அதன்
குறைந்த விலை ஒரு காரணமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பெட்ரோலுக்கு கேஸுக்கும் வேறுபாடு
கடந்த ஜனவரி மாதம் வெறும் பத்து ரூபாயாக இருந்தது. தற்போது கேஸ் விலை குறைந்தாலும்
மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் தனியார் கேஸ் நிறுவனங்களுக்கு
மானியம் அளிக்கும் அரசு சாதாரண ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் அளித்தால் ஆட்டோ ஓட்டுனர்களின்
நலமும் காக்கப்படும் மக்களின் பணமும் காக்கப்படும்.
(இதன் சுருக்கப்பட்ட வடிவம் புதிய தலைமுறை இதழில் வெளியானது)



No comments:
Post a Comment