Thursday, September 10, 2015

விவசாயிகள் தற்கொலை போலி கணக்கு காட்டும் அரசாங்கம்




 2014  ஆம்  ஆண்டு  நடந்த  விவசாயிகள்  தற்கொலை  எண்ணிக்கை  ஐந்தாயிரத்து அறநூற்று ஐம்பது என்று   தேசிய  குற்ற  ஆவண  காப்பகம் அறிவித்திருக்கிறது.  2013  ஆம்  ஆண்டில்  நடந்த  தற்கொலைகளின்  எண்ணிக்கை பதினொன்றாயிரத்து எழுநூற்று எழுபத்து ரெண்டு. கிட்டதட்ட பாதிக்கும் மேல் குறைந்திருக்கிறது. இதை இந்திய அரசாங்கம் தனது சாதனைகளில் ஒன்றாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதனால் மகிழ்வதற்கோ கொண்டாடுவதற்கோ ஏதும் இல்லை.

ஏனென்றால் இது உண்மையில் நிகழ்ந்த மாற்றமல்ல. சில எண்களை மாற்றிப் போட்டு புதிய பிரிவுகளை உருவாக்கி குறைத்துக் காட்டப்பட்ட எண்ணிக்கை. உண்மையில் 2013 தற்கொலைகளைவிட 2014 ஆம் ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை அதிகம் (இது அரசாங்கத்தின் அறிக்கையிலேயே வெளிப்படுகிறது). அதை குறைத்துக் காட்டி மக்களிடம் நற்பெயர் வாங்கவும் எதிர்கட்சிகளின் வாயை அடைக்கவும்  சில புதிய யுக்திகளைக் கையாண்டிருக்கின்றன, அரசும் தேசிய குற்ற ஆவண காப்பகமும்.

புதிய பிரிவுகள்

விவசாயிகளை வகை பிரித்து கணக்கை குறைக்கிறது. ’விவசாய நிலத்தில் வேலை செய்து தற்கொலை செய்பவர்கள் விவசாயிகள் அல்ல. அவர்கள் விவசாய கூலிகள் தனிப் பிரிவு. அவர்களுக்கும் விவசாயத்திற்கும் சம்மந்தம் கிடையாது’ என்கிறது என்.சி.ஆர்.பி. பிறகு விவசாயத்தில் சுயதொழில் முனைவோர் என்று ஒரு பிரிவைக் கூறுகிறது. விவசாயத்தில் ‘சுயதொழில் முனைவோர்’ என்கிற பதம் இதுவரை எங்குமே பயன்படுத்தப்பட்டதில்லை. அதற்கான அர்த்தமும் விளக்கப்படவில்லை.

  “சரி புதிய பிரிவுகளின் மூலம் வகைப் படுத்தினால் இன்னும் தெளிவான எண்ணிக்கை தெரியும்தானே அதை ஏன் குறை கூறவேண்டும்”?

ஏனென்றால் அறிக்கையின் இரண்டாவது பத்தியிலேயே விவசாயிகள் என்றால் நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் நிலத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று கூறிவிட்டு பிறகு தனியாக விவசாயக் கூலிகள் என்று பிரித்திருக்கிறது. நிலத்தில் வேலை பார்க்காத விவசாயக் கூலிகள் இருக்கின்றனரா என்கிற கேள்வி எழுகிறது.

 இந்த விவசாய கூலிகளின் எண்ணிக்கை விவசாயிகளின் எண்ணிக்கையை விட பல மாநிலங்களில் அதிகம். 2014 ஆம் ஆண்டில் ஆந்திராவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 160 அதை விட மூன்று மடங்கு அதிகமாக அங்கே விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று என்.சி.ஆர்.பி. தெரிவிக்கிறது.

2013ல் இந்த பாகுபாடு இல்லை. விவசாயத்தை சார்ந்து இருக்கும் அனைவருமே விவசாயிகள் என்றே கொள்ளப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட விவசாய கூலிகள் மற்றும் விவசாயத்தில் சுயதொழில் முனைவோரின் எண்ணிக்கை ஆறாயிரத்து அறநூற்று எண்பத்து ஆறு.  இதோடு 2014ஆம் ஆண்டின் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையான ஐந்தாயிரத்து அறநூற்று ஐம்பது சேர்த்தால் வரும் எண்ணிக்கை 12,336. 2013 ஆம் ஆண்டில் தற்கொலை எண்ணிக்கை 11,772. இந்த எண்ணிக்கை அதிகரிப்பை மிக லாவகமாக மாற்றிக் கண்கட்டி வித்தை காட்டியிருக்கிறது அரசு.



”புதிய கணக்கெடுப்பு முறை பற்றி மாநில குற்ற ஆவண காப்பக அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு ஒருமாதம் பயிற்சியளித்தோம். அவர்களை காவல் நிலையங்களுக்கு சென்று பயிற்சி கொடுக்கவும் கூறினோம்” என்று கூறுகிறது என்.சி.ஆர்.பி. ஆனால் ”அது போன்ற எந்த பயிற்சியும் வழங்கப்படவில்லை. வழக்கம் போல்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தோம்” என்கிறார் ஒரு காவல்துறை அதிகாரி.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.ஆர். சீனிவாசனிடம் பேசினோம். ”விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை  எப்போதும் அரசு காட்டும் புள்ளி விபரங்களை விட மூன்று மடங்குக்கு மேல்தான் இருக்கும். லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளூரில் தற்கொலை செய்து கொள்வதில்லை. பலர் காசிக்குப் போய் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நிறைய ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் இது ஊடகங்களாலோ அரசாலோ எங்கேயும் பதிவு செய்யப்படவேயில்லை. இதெல்லாம் அரசு விவசாயிகள் தற்கொலைகளாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆகையால் 12,336 என்பதே சரியான எண்ணிக்கை அல்ல. தனது கொள்கைகளால் விவசாயத்தை அழித்துவிட்டு அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட அரசு முயல்வது மக்களை முட்டாளாக்கும் செயல்” என்றார்.

இந்த எண்ணிக்கை அதிகரிப்புகள் முழுக்க முழுக்க விவசாயம் நொடிந்து போனதால்தான் என்று கூறுவது சரியாகுமா? அவரிடமே கேட்டோம்.
“கடன் தொல்லை, மகளுக்குத் திருமணம் செய்விக்க முடியாமல் போவது, வேறு குடும்ப பிரச்சனைகள், தாங்க முடியாத நோய் போன்ற தற்கொலைக்கு பிற காரணங்களாக கூறப்படும் அனைத்தும் ஒருவரின் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்படுகின்றன. விவசாயிக்கு விவசாயம் தானே பொருள் ஆதாரம். ஆகையால் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு ஒரு காரணமாக நொடிந்து போகும் விவசாயம் இருப்பதை மறுக்க முடியாது” என்றார்.



கணக்கிடும் முறையில் சிக்கல்


வருத்தத்துக்குரிய இன்னொரு விசயம் கணக்கிடும் முறையிலும் சிக்கல் இருக்கிறது என்பதுதான். என்.சி.ஆர்.பி குற்றங்களை கணக்கிடுவது இல்லை. மாநிலங்கள் என்ன எண்ணிக்கை கொடுக்கிறதோ அதை மறுபேச்சு பேசாமல் வாங்கி சேர்த்துக் கொள்ளும் வேலையைச் செய்கிறது. அந்த எண்ணிக்கைகளின் மேல் நியாயமான கேள்விகள் கூட அது எழுப்புவதில்லை. இதனால் இந்தியாவின்  பெரிய விவசாய மாநிலங்களான பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உட்பட பனிரெண்டு மாநிலங்களிலும் ஆறு யூனியன் பிரதேசங்களிலும் விவசாயிகளின் தற்கொலை பூஜியத்தில் இருக்கிறது. அதாவது இந்த மாநிலங்களில் குடும்ப பிரச்சனை, சொத்து தகராறு போன்ற காரணங்களுக்காக கூட ஒரு விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறது என்.சி.ஆர்.பி. சில மாநிலங்களில் கடந்த ஆண்டு வரை ஆயிரங்களில் இருந்த விவசாய தற்கொலை தற்போது ஒற்றை இலக்க எண்களில் இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு இயற்கை வழி விவசாய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வமிடம் பேசினோம்

“மாநிலங்கள் காவல்நிலையத்தில் இருந்துதான் இந்த தகவல்களை வாங்குகிறார்கள். அனைத்து தற்கொலைகளும் குறிப்பாக கிராமத்தில் நடக்கும் தற்கொலைகளில் எத்தனை சதவிதம் காவல் நிலையத்தில் பதியப்படுகின்றன என்பது கேள்விக் குறியே. இப்போது நிலம் யார் பெயரில் இருக்கிறதோ அவர்களை மட்டுமே விவசாயிகள் என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவரின் பெயரில் நிலம் இருக்குமாயின் அவரோடு சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட அவரது மனைவி, மகன்கள், மகள்கள் விவசாய தற்கொலையின் கீழ் வரமாட்டார்கள். அதே போல் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறவர் தற்கொலையும் விவசாய தற்கொலைக்குள் வருவதில்லை.” என்றார்.

அதிகரிக்கும் மற்றவர்கள் பிரிவு

 விவசாயிகளின் தற்கொலை பாதியாக குறைத்திருக்கும் அதே நேரத்தில் எந்த தொழில் செய்கிறவர்கள் என்று குறிப்பிடப்படாத மற்றவர்கள்  பிரிவில் தற்கொலைகள் அதிகரித்து காட்டியுள்ளது என்.சி.ஆர்.பி. உதாரணத்திற்கு இந்தியாவின் விவசாயிகள் தற்கொலையில் இரண்டாவது இருக்கும் கர்நாடகத்தில் 321 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுகிறது. 2013 ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 1403. விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை குறைந்திருக்கும் அதே வேளையில் அம்மாநிலத்தின் மற்றவர்கள் பிரிவில் தற்கொலை 245 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தவிர இன்னும் ஐந்து மாநிலங்களில் மற்றவர்கள் பிரிவில் 128 சதவிதம் அதிகரித்துள்ளது. 2013ல் 24,809 ஆக இருந்த மற்றவர்கள் பிரிவு 2014 ஆம் ஆண்டில் 41,216 ஆக இருக்கிறது.

”முதல் தகவல் அறிக்கையை காவல்துறை தாசில்தாருக்கு அனுப்புவார்கள். தற்கொலை செய்துகொண்டவர் என்ன வேலை செய்கிறார் என்பதை தாசில்தார் போன்ற அதிகாரிகளே ஆராய்ந்து வகைப்படுத்த வேண்டும். ஆனால் ஆராயாமல் பெரும்பாலும் மற்றவர்கள் பிரிவுகளில் சேர்த்துவிடுகிறார்கள்” என்று எண்ணிக்கை அதிகரிப்புக்கான காரணத்தை விளக்கினர் ஆ.செல்வம்.

என்ன செய்யவேண்டும்?

 விவசாயி தற்கொலைகளைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்? ஆ.செல்வம் , ஆர்.ஆர். சீனிவாசன் இருவரிடமுமே கேட்டோம்.


”பங்கு சந்தையில் சரிவு என்றதும் அருண் ஜெட்லியில் தொடங்கி பிரணாப் முகர்ஜி வரை அதைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் கூட பேசுவதில்லை. விவசாயத்தில் நஷ்டமா வெளியில் இருந்து முதலீடு கொண்டுவந்தால் தீர்ந்துவிடும் என்று சொல்லாமல் அரசு விவசாயிகளோடு நெருங்கி அவர்களது  பிரச்சனையை தெரிந்து கொள்ள வேண்டும். விவசாய அறிவுள்ள நபர்களைத் தேர்ந்தெடுத்து குழு அமைத்து உண்மையான பிரச்சனையை தீர்க்க வேண்டும்”  என்றார் ஆ. செல்வம்


“எண்களில் மாற்றம் கொண்டு வருவதை விட்டுவிட்டு அரசு தனது எண்ணங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும். பசுமை புரட்சியினால் நமது சுய சார்பு விவசாய முறையை இழந்துவிட்டோம். நமது விதைகள் பல அழிந்துவிட்டன. உரங்களால் நிலத்தின் வளத்தையும் இழந்துவிட்டோம் அவற்றை மீட்டெடுக்க வேண்டும்” என்றார் ஆர்.ஆர்.சீனிவாசன்.


 நன்றி:புதிய தலைமுறை

என்ன நடக்கிறது குஜராத்தில்?








1981ல் காங்கிரஸ் இடஒதுகீடை  ஆதரித்ததும் அதை நீக்கச்

சொல்லித்தான் முதன்முதலில் கொந்தளித்து எழுந்தனர், படேல்கள் .

உடனே காங்கிரஸ் ஆதரவை விலக்கி  பா.ஜ.கவின் பக்கம் சாயந்தனர்.

அப்போதுதான் பா.ஜ.க வலுவடைய ஆரம்பித்தது.  முப்பது

ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குஜராத்தின் தலித், ஆதிவாசிகள்,

மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக தெருவில்

இறங்கியிருக்கிறார்கள். இம்முறை இட ஒதுக்கீடை நீக்குங்கள் என்கிற

கோஷத்தை  குறைத்து எங்களையும் இடஒதுக்கீடுக்குள்

சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிற கோஷம் வலுப்பெற்று இருக்கிறது.

சாதாரண போராட்டமாக தொடங்கியது ஐந்தாயிரம் துணை  ராணுவ

வீரர்கள் குவிக்கப்படும் அளவுக்கு கலவரமாக உருவெடுத்திருக்கிறது.

இந்தப் போராட்டத்தின் தலைவர் ஹர்திக் படேல். 22 வயதான

இளைஞன். போராட்டத்தின் போது ஹர்திக் படேல் கைது செய்யப்பட

போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. ஹர்திக்கை விடுவித்த

பின்னும் வன்முறை தணியவில்லை. இருநூறுக்கும் மேற்பட்ட

வாகனங்கள் கொளுத்தப்பட்டன. காவல் சோதனைச்

சாவடிகள், நகராட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.  ஊரடங்கு

உத்தரவு  அமல்படுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியே

“வன்முறை வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு

கலவரம் பெரியதாக வளர்ந்தது.


யார் இந்த படேல்கள்?






குஜராத்தில் சுமார் பதினைந்து சதவிதத்தினர் படேல் சமுகத்தினர்தான்.

படேல் சமூகத்தில் லேவா படேல் , கட்வா படேல் என இரண்டு பெரிய

உப பிரிவுகள் இருக்கின்றன. ராமனின் வாரிசுகளான லவ குஷா வழி

வந்தவர்கள் என்று அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். இதுதவிர அஞ்சனா

போன்ற சிறிய உபபிரிவுகளும் உள்ளன. படேல்கள் பெரும்பாலும்

வேலைக்கு செல்வதில்லை. இளவயதிலேயே குடும்பத்தின்

தொழிலிலோ விவசாயத்திலோ ஈடுபட்டு பெரிய தொழிலதிபர்களாக

நிலக்கிழார்களாக வலம் வருவார்கள். படேல் சமூகத்தைச் சார்ந்த பலர்

அரசியலிலும் மற்ற துறைகளிலும் உயர்பதவியில் இருக்கிறார்கள்.

இதுவரை குஜராத்தின் முதல்வர் பதவியை பல படேல்கள்

அலங்கரித்துள்ளனர். தற்போதைய  முதல்வர் அனந்தீபனும் படேல்

சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.121  எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட

பா.ஜ.கவில் நாற்பது பேர் படேல்கள். பா.ஜ.க மாநிலத்தலைவர் ஆர்.சி.

பால்டும் படேல் சமூகமே.

பிறகு ஏன் போராடுகிறார்கள்?

பணக்காரப் படேல்கள் பதவி பவிசாக வாழ்ந்தாலும் நடுத்தர வர்க்க

படேல்களின் வாழ்க்கை விவசாயத்தையும்  சிறு குறு

தொழில்களையும் நம்பியே இருக்கின்றன.  விவசாயத்தைப்

பொருத்தவரை மாரியும் பொய்த்து, பூமியும் பொய்த்து, அரசாங்கமும்

பொய்த்துப் போனதால் நிலங்களை விற்கும் நிலைக்குத்

தள்ளப்பட்டுள்ளனர், படேல்கள்.

குஜராத்தில் ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி பதியப்பட்ட  சிறு குறு

தொழிலதிபர்கள் இரண்டே முக்கால் லட்சம். இதில்

பெரும்பான்மையானோர் படேல் சமூகத்தினர். பன்னாட்டு மற்றும்

உள்நாட்டு கம்பெனிகளின் சொர்க்கமாக திகழும் குஜராத்தில் அந்தக்

கம்பெனிகளின் வருகையால் படேல்களின் தொழில் பாதிக்கப்பட்டது.

சில தொழிலதிபர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

படேல் சமூகத்தில் ஆண் பெண் விகிதம் மிகவும் குறைவு. சுயசாதியில்

மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை தரும் நிலைகூட ஆங்காங்கே

வந்துவிட்டது. பெண் வீட்டார் தொழில் செய்யும் பையனை விட அரசு

வேலையில் இருப்பவரையே விரும்புவதால் திருமணமாகாமல் பல

இளைஞர்கள் இருக்கிறார்கள்.

எல்லா பிரச்சனைகளுக்கும்  அரசு வேலையே தீர்வு என்று

கருதுகிறார்கள். ஆனால் முன்னேறிய சமூகப் பட்டியலில் இருப்பது

 அவர்களுக்கு தடையாக இருக்கிறது.  விவசாயத்தையும் தங்களது

தொழிலையையும் மீட்பதற்காகவும், பெண் சிசுக் கொலைக்கு

எதிராகவும் திரண்டிருக்க வேண்டியவர்கள் இட ஒதுக்கீடுக்கு எதிராக

திரண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே ஐம்பது சதவீத இட ஒதுக்கீட்டை குஜராத் எட்டிவிட்டது.

அதனால் தனியாக படேல்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய முடியாது.

இதனால் மற்ற வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதில் இருந்து

எடுத்துத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு இரண்டு

விசயங்கள் தடையாக இருக்கின்றன.

படேல்கள் தொழில்களை இழந்ததனால் இடஒதுக்கீடு கேட்கிறார்கள்

என்றால் அவர்களது தொழில்களில் ஊழியர்களாக, விவசாய

கூலிகளாக  வேலை பார்த்த தலித், மற்றும் இதர

பிற்படுத்தப்பட்டோரின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன கொடுப்பது?

தங்களது சொந்த நிலம் பத்தில் ஒரு பங்காகிவிட்டதால் இடஒதுக்கீடு

கேட்கும் படேல்கள் எப்போதும் காணி நிலம் கூட இல்லாமல்

இருக்கும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடை

எதிர்ப்பது எப்படி நியாயமாகும்? இந்தக் கேள்விகளுக்கு படேல்

சமூகத்தினரிடம் எந்த பதிலும் இல்லை.

பா.ஜ.கவின் நிலைப்பாடு

பா.ஜ.க ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இடஒதுக்கீடுக்கு ஆதரவான

நிலைப்பாட்டில் இல்லை. மண்டல் கமிசனுக்கு எதிராக கமண்டல்

யாத்ரா நடத்தியது. இப்போது விஷ்வ இந்து பரிஷத் வெளிப்படையாக

படேல்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உபி,பிகாரில்

இருக்கும் உயர் சாதிக்காரர்களையும் போராட்டத்தில் குதிக்க

கூறியிருக்கிறது. ஆனால் படேல்களின் போராட்டத்திற்கு ஆதரவான

முடிவெடுத்தால் ஏற்கனவே சிறுபான்மை மற்றும்

ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான அரசு என்கிற குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க

வலுசேர்த்து விடும். சங்கடமான நிலையை மோடியும் பா.ஜ.கவும்

எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.



பாக்ஸ்-1

யார் இந்த ஹர்திக் படேல்?





அகமதாபாத்தில் விரம்கம் என்ற ஊரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த

இருபத்தி இரண்டு வயதான ஹிர்திக் படேல்தான் சுமார் 10 லட்சம்

பேரை  ஒரே நாளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட வைத்தவர்.

இதை இரண்டு மாதங்களில் செய்து முடித்தார் என்பதே ஆச்சரியம்.

ஜூலை மாத தொடக்கத்தில் ”படிதார் அனாமத் ஆந்தோலம் சமிதி”

என்ற அமைப்பை உருவாக்கினார். ஜூலை 6-ம் தேதி விஸ்நகர்

பகுதியில் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்திக் காட்டினார். இந்தப்

பேரணிக்குப் பிறகே நிறைய படேல் சமூக இளைஞர்கள் இவருக்கு

ஆதரவாக திரண்டனர்கள்.



மோடியைப் போல் ஹர்திக்கும் சர்தர் வல்லபாய் படேல்தான் ஆதர்சம்.

மோடியைப் போலவே குஜாராத் மக்கள் மத்தியில் இந்தியிலேயே

பேசுகிறார். ஒரு கூட்டத்தில் ”ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,

பிஹாரின் நிதிஷ் குமார், ஆகியோரும் படேல் சமூகத்தைச்

சேர்ந்தவர்களே. நாட்டின் 8 மாநிலங்களில் படேல் சமூகத்தினரின்

எண்ணிக்கை 27 கோடி இருக்கிறோம்” என்றார். ஹர்திக், அடுத்த

மோடியாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

(நன்றி: புதிய தலைமுறை)