1981ல் காங்கிரஸ் இடஒதுகீடை ஆதரித்ததும் அதை நீக்கச்
சொல்லித்தான் முதன்முதலில் கொந்தளித்து எழுந்தனர், படேல்கள் .
உடனே காங்கிரஸ் ஆதரவை விலக்கி பா.ஜ.கவின் பக்கம் சாயந்தனர்.
அப்போதுதான் பா.ஜ.க வலுவடைய ஆரம்பித்தது. முப்பது
ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குஜராத்தின் தலித், ஆதிவாசிகள்,
மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக தெருவில்
இறங்கியிருக்கிறார்கள். இம்முறை இட ஒதுக்கீடை நீக்குங்கள் என்கிற
கோஷத்தை குறைத்து எங்களையும் இடஒதுக்கீடுக்குள்
சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிற கோஷம் வலுப்பெற்று இருக்கிறது.
சாதாரண போராட்டமாக தொடங்கியது ஐந்தாயிரம் துணை ராணுவ
வீரர்கள் குவிக்கப்படும் அளவுக்கு கலவரமாக உருவெடுத்திருக்கிறது.
இந்தப் போராட்டத்தின் தலைவர் ஹர்திக் படேல். 22 வயதான
இளைஞன். போராட்டத்தின் போது ஹர்திக் படேல் கைது செய்யப்பட
போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. ஹர்திக்கை விடுவித்த
பின்னும் வன்முறை தணியவில்லை. இருநூறுக்கும் மேற்பட்ட
வாகனங்கள் கொளுத்தப்பட்டன. காவல் சோதனைச்
சாவடிகள், நகராட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியே
“வன்முறை வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு
கலவரம் பெரியதாக வளர்ந்தது.
யார் இந்த படேல்கள்?
குஜராத்தில் சுமார் பதினைந்து சதவிதத்தினர் படேல் சமுகத்தினர்தான்.
படேல் சமூகத்தில் லேவா படேல் , கட்வா படேல் என இரண்டு பெரிய
உப பிரிவுகள் இருக்கின்றன. ராமனின் வாரிசுகளான லவ குஷா வழி
வந்தவர்கள் என்று அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். இதுதவிர அஞ்சனா
போன்ற சிறிய உபபிரிவுகளும் உள்ளன. படேல்கள் பெரும்பாலும்
வேலைக்கு செல்வதில்லை. இளவயதிலேயே குடும்பத்தின்
தொழிலிலோ விவசாயத்திலோ ஈடுபட்டு பெரிய தொழிலதிபர்களாக
நிலக்கிழார்களாக வலம் வருவார்கள். படேல் சமூகத்தைச் சார்ந்த பலர்
அரசியலிலும் மற்ற துறைகளிலும் உயர்பதவியில் இருக்கிறார்கள்.
இதுவரை குஜராத்தின் முதல்வர் பதவியை பல படேல்கள்
அலங்கரித்துள்ளனர். தற்போதைய முதல்வர் அனந்தீபனும் படேல்
சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.121 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட
பா.ஜ.கவில் நாற்பது பேர் படேல்கள். பா.ஜ.க மாநிலத்தலைவர் ஆர்.சி.
பால்டும் படேல் சமூகமே.
பிறகு ஏன் போராடுகிறார்கள்?
பணக்காரப் படேல்கள் பதவி பவிசாக வாழ்ந்தாலும் நடுத்தர வர்க்க
படேல்களின் வாழ்க்கை விவசாயத்தையும் சிறு குறு
தொழில்களையும் நம்பியே இருக்கின்றன. விவசாயத்தைப்
பொருத்தவரை மாரியும் பொய்த்து, பூமியும் பொய்த்து, அரசாங்கமும்
பொய்த்துப் போனதால் நிலங்களை விற்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர், படேல்கள்.
குஜராத்தில் ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி பதியப்பட்ட சிறு குறு
தொழிலதிபர்கள் இரண்டே முக்கால் லட்சம். இதில்
பெரும்பான்மையானோர் படேல் சமூகத்தினர். பன்னாட்டு மற்றும்
உள்நாட்டு கம்பெனிகளின் சொர்க்கமாக திகழும் குஜராத்தில் அந்தக்
கம்பெனிகளின் வருகையால் படேல்களின் தொழில் பாதிக்கப்பட்டது.
சில தொழிலதிபர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.
படேல் சமூகத்தில் ஆண் பெண் விகிதம் மிகவும் குறைவு. சுயசாதியில்
மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை தரும் நிலைகூட ஆங்காங்கே
வந்துவிட்டது. பெண் வீட்டார் தொழில் செய்யும் பையனை விட அரசு
வேலையில் இருப்பவரையே விரும்புவதால் திருமணமாகாமல் பல
இளைஞர்கள் இருக்கிறார்கள்.
எல்லா பிரச்சனைகளுக்கும் அரசு வேலையே தீர்வு என்று
கருதுகிறார்கள். ஆனால் முன்னேறிய சமூகப் பட்டியலில் இருப்பது
அவர்களுக்கு தடையாக இருக்கிறது. விவசாயத்தையும் தங்களது
தொழிலையையும் மீட்பதற்காகவும், பெண் சிசுக் கொலைக்கு
எதிராகவும் திரண்டிருக்க வேண்டியவர்கள் இட ஒதுக்கீடுக்கு எதிராக
திரண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஐம்பது சதவீத இட ஒதுக்கீட்டை குஜராத் எட்டிவிட்டது.
அதனால் தனியாக படேல்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய முடியாது.
இதனால் மற்ற வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதில் இருந்து
எடுத்துத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு இரண்டு
விசயங்கள் தடையாக இருக்கின்றன.
படேல்கள் தொழில்களை இழந்ததனால் இடஒதுக்கீடு கேட்கிறார்கள்
என்றால் அவர்களது தொழில்களில் ஊழியர்களாக, விவசாய
கூலிகளாக வேலை பார்த்த தலித், மற்றும் இதர
பிற்படுத்தப்பட்டோரின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன கொடுப்பது?
தங்களது சொந்த நிலம் பத்தில் ஒரு பங்காகிவிட்டதால் இடஒதுக்கீடு
கேட்கும் படேல்கள் எப்போதும் காணி நிலம் கூட இல்லாமல்
இருக்கும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடை
எதிர்ப்பது எப்படி நியாயமாகும்? இந்தக் கேள்விகளுக்கு படேல்
சமூகத்தினரிடம் எந்த பதிலும் இல்லை.
பா.ஜ.கவின் நிலைப்பாடு
பா.ஜ.க ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இடஒதுக்கீடுக்கு ஆதரவான
நிலைப்பாட்டில் இல்லை. மண்டல் கமிசனுக்கு எதிராக கமண்டல்
யாத்ரா நடத்தியது. இப்போது விஷ்வ இந்து பரிஷத் வெளிப்படையாக
படேல்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உபி,பிகாரில்
இருக்கும் உயர் சாதிக்காரர்களையும் போராட்டத்தில் குதிக்க
கூறியிருக்கிறது. ஆனால் படேல்களின் போராட்டத்திற்கு ஆதரவான
முடிவெடுத்தால் ஏற்கனவே சிறுபான்மை மற்றும்
ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான அரசு என்கிற குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க
வலுசேர்த்து விடும். சங்கடமான நிலையை மோடியும் பா.ஜ.கவும்
எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
பாக்ஸ்-1
யார் இந்த ஹர்திக் படேல்?
அகமதாபாத்தில் விரம்கம் என்ற ஊரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த
இருபத்தி இரண்டு வயதான ஹிர்திக் படேல்தான் சுமார் 10 லட்சம்
பேரை ஒரே நாளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட வைத்தவர்.
இதை இரண்டு மாதங்களில் செய்து முடித்தார் என்பதே ஆச்சரியம்.
ஜூலை மாத தொடக்கத்தில் ”படிதார் அனாமத் ஆந்தோலம் சமிதி”
என்ற அமைப்பை உருவாக்கினார். ஜூலை 6-ம் தேதி விஸ்நகர்
பகுதியில் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்திக் காட்டினார். இந்தப்
பேரணிக்குப் பிறகே நிறைய படேல் சமூக இளைஞர்கள் இவருக்கு
ஆதரவாக திரண்டனர்கள்.
மோடியைப் போல் ஹர்திக்கும் சர்தர் வல்லபாய் படேல்தான் ஆதர்சம்.
மோடியைப் போலவே குஜாராத் மக்கள் மத்தியில் இந்தியிலேயே
பேசுகிறார். ஒரு கூட்டத்தில் ”ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,
பிஹாரின் நிதிஷ் குமார், ஆகியோரும் படேல் சமூகத்தைச்
சேர்ந்தவர்களே. நாட்டின் 8 மாநிலங்களில் படேல் சமூகத்தினரின்
எண்ணிக்கை 27 கோடி இருக்கிறோம்” என்றார். ஹர்திக், அடுத்த
மோடியாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
(நன்றி: புதிய தலைமுறை)



No comments:
Post a Comment