Sunday, August 23, 2015

வடகிழக்குப் பகுதியில் மூளும் போர்





இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் எப்போதும் துப்பாக்கி சத்தம் ஓய்ந்ததில்லை. நான்கைந்து வருடங்களாக மெல்லமாக கேட்டுக் கொண்டிருந்த சத்தம் இப்போது மீண்டும் உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம். தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்த நான்கு பெரிய தீவிரவாத குழுக்கள் இப்போது ஒன்றாக கைகோர்த்து உள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய ராணுவத்திற்கு எதிராக நடந்த மிகப் பெரிய தாக்குதல் என்று சொல்லத்தக்க தாக்குதலையும் நடத்திக் காட்டியுள்ளன.

விடுதலை பெற்றதில் இருந்தே வடகிழக்குப் பகுதிகளை இந்திய அரசாங்கத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பகுதிகளும் இந்தியாவோடு இயங்கிப் போக மெனக்கெடுவதில்லை. அதற்கு பூகோளக் காரணங்கள், பழங்குடி மக்களின் பண்பாடு, சீனாவின் ஆதிக்கம், அடர்ந்த காடுகள் என்று பல சுவர்கள் தடையாக இருந்தாலும் மிகப்பெரிய சுவராக இருப்பது அப்பகுதியில் இயங்கி வரும் தீவிரவாதக் குழுக்கள். இந்தியாவின் எந்தப் பகுதியைக்காட்டிலும் அதிக தீவிரவாதக் குழுக்கள் இயங்குவது இந்தப் பகுதிகளில்தான். தனிநாடாக ஆவதுதான் பெரும்பாலான குழுக்களின் கோரிக்கை என்றாலும் இந்தக் குழுக்களிடையே சகோதரச் சண்டைகள் வருவது உண்டு. அதனால் எப்போதும் இங்கே துப்பாக்கிகள் தோட்டாக்களை உமிழ்ந்து கொண்டே இருக்கும். இதைத் தடுக்கவே இந்தக் குழுக்கள் சிலவற்றிடம் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தம் செய்திருந்தது. 

எங்கு தொடங்கியது?
அமைதி ஒப்பந்தததிற்குப் பிறகு ராணுவத்திற்கும் தீவிரவாதிகளும் எந்தப் பெரிய மோதலும் ஏற்படவில்லை. இந்நிலையில் முக்கியத் தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் கப்லாங் (என்.எஸ்.சி.என்.கே) உடன்  2001 ஆம் ஆண்டு போடப்பட்ட அமைதி ஒப்பந்தம் 2012 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தது. மீண்டும் அமைதி ஒப்பந்தம் போடுவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 2015 மார்ச் 27 ஆம் தேதி என்.எஸ்.சி.என்.கே வின் சார்பில் இரண்டு பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அமைதிக்கான சூழலும் உருவானது. ஆனால் திடீரென இந்திய அரசாங்கத்தோடு நல்லுறவில் இருந்த இரண்டுபிரதிநிதிகளும் என்.எஸ்.சி.என்.கே.வை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் தலைவர் கப்லாங். இனி இந்திய அரசாங்கத்தோடு சமரசம் கிடையாது என்று அறிவித்தார். இருவர் வெளியேற்றத்திற்குப் பின் 1988 போல் மீண்டும் நாகலாந்து தீவிரவாதிகளுக்கு இடையே சகோதர யுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு.
 ஏப்ரல் 17 ஆம் தேதி நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்), உல்ஃபா(ஐ) ,கம்தாபூர் விடுதலை முன்னணி, போடோலாந்து விடுதலை முன்னணி( சோன்ஜ்பிஜித்) இந்த நான்கு குழுக்களையும் இணைத்து 'மேற்கு-தென்கிழக்கு ஆசியா ஐக்கிய விடுதலை முன்னணி" உருவாக்கி அதற்கு தலைவரானார் கப்லாங்.

முதல் தாக்குதல்
ஜூன்  4  ஆம் தேதி,  காலை வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலுள்ள சான்டெல் மாவட்டத்தில் ரோந்துப்பணியில் ராணுவத்தினர்  ஈடுபட்டிருந்தனர். திடீரென ரோந்து வண்டியின் மேல் குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் நிலைகுலைந்து போக, அமெரிக்கவில் செய்யப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் உட்பட பல நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பதினெட்டு வீரர்கள் மரணமடைந்தனர் பதினொரு பேர் படுகாயம் அடைந்தனர். கப்லாங் தலைமையிலான நால்வர் குழு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இது தொடரும் என்றும் அறிவித்தது.
இரண்டாம் தாக்குதல்
மணிப்பூர் தாக்குதல் முடிந்த மூன்றாவது நாளில் இரண்டாவது தாக்குதலை அருணாசலப் பிரதேசதம் திராப்  மாவட்டத்தில்  அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரின் மீது நடத்தியது. தாக்குதலை எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ராணுவம் திருப்பித் தாக்கியது. இதனால் தீவிரவாதிகள் பின்வாங்கினர்.இம்மோதலில் இரண்டு பக்கமும் எந்த சேதமும் இல்லை.


இந்தியாவின் பதிலடி
மணிப்பூர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்த இந்திய உளவுத்துறைக்கு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மியான்மர் நாட்டு எல்லைக்குள் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 9 ஆம் தேதி இந்திய ராணுவம் அதிரடியாக மியான்மருக்குள் நுழைந்து இருவேறு இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் முகாமை அழித்திருக்கிறது. ஒரு இந்திய வீரர் கூட காயமடையாத இந்தத் தாக்குதலில் ஐம்பதில் இருந்து நூறு தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. வேறொரு நாட்டிற்குள் போய் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியது இந்திய வரலாற்று சாதனை என்று ஊடகங்கள் கொண்டாடின. எப்படி ஆப்ரேசன் நிகழ்த்தப்பட்டது என்பதை நேர வாரியாக சில பத்திரிகைகள் எழுதின. ஆனால்!!

 சர்ச்சை
ஒரு தனியார் தொலைக்காட்சியில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் இந்தியா மியான்மருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது என்று கூற அதை மறுத்து முகநூலில் பதிவிட்டார் மியான்மர் அதிபருடைய அலுவலக இயக்குனர் ஜாவ் ஹ்டே. “தாக்குதல் மியான்மர் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்திய எல்லையில்தான் நடந்திருக்கிறதே தவிர மியான்மரில் அல்ல. எந்த நாடும் மியான்மருக்குள் நுழைந்து தாக்குதல் செய்வதை மியான்மர் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” என்று அவர் எழுதியுள்ளார். மியான்மரின் வெளியுறவுத் துறையும் தாக்குதல் மியான்மருக்குள் நடந்ததை மறுத்துள்ளது. இந்திய ராணுவத்தின் முதன்மைத் தளபதியான தல்பீர் சிங்கும் ஊடகங்களுக்கான செய்தி அறிக்கையில் மியான்மர் ராணுவத்தின் ஒத்துழைப்புடன் இந்தத் தாக்குதல் நடந்தது என்று மட்டுமே எழுதியுள்ளார். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் சரியாக கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு ஊடகமும் ஒரு கணக்கைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு இந்திய ராணுவம் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகிறது.

அடுத்து என்ன நடக்கும்?
இந்தியாவின் தரப்பில் இருந்து  2008-ம்  ஆண்டில் மும்பை யில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்பு  தீவிரவாதிகளுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு ஒரு அடி முன்பாக இருக்கவேண்டும் என்று இந்திய ராணுவம் நினைக்கிறது.
     அதே சமயம் மியான்மரில் காலூன்றி இருக்கும் லஷ்கர் இ தொய்பாவினர் இந்த கூட்டமைப்பினருடன் கை கோர்த்திருக்கலாம் என உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் மியான்மரின் காசின் விடுதலை ராணுவத்தினரே உல்ஃபா அமைப்பினருக்கு ஆயுத பயிற்சி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த தாக்குதல்களை தீவிரவாத கூட்டமைப்பு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மக்களின் நிலை
இதில் வடகிழக்குப் பகுதி பொதுமக்களின் நிலைதான் மோசம். ஏற்கனவே தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் அல்லாடிவந்தனர். அமைதி ஒப்பந்தத்தால் தீவிரவாதிகள் மெளனித்திருக்க, இரோம் ஷர்மிளாவின் இருபதாண்டு கால போராட்டத்தின் விளைவாக ராணுவம் மெல்ல மெல்ல தங்களது இரும்புப் பிடியை மக்களின் மேல் இருந்து தளர்த்த ஆரம்பித்தது.. மக்களும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர். 2014 தேர்தலில் நாகலாந்தில் மட்டும் 87% வாக்கு பதிவாகியது. இந்நிலையில் சூழ்ந்துள்ள இந்த யுத்த மேகம் மீண்டும் அவர்களது வாழ்வை கேள்விக்குறியாக்கப் போகிறது.


2014 ஆம் ஆண்டு விபரப்படி தீவிரவாதிகளின் தாக்குதலில் வடகிழக்குப் பகுதிகளில் தான் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
வடகிழக்கு பகுதிகள்
413
காஷ்மீர்
193
மற்ற நக்சல் பகுதிகள்
372



2013 முதல் 2015 வரை மாநிலம் வாரியாக தீவிரவாதிகளினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை.
அசாம்
432
மணிப்பூர்
155
நாகாலாந்த்
63
அருணாச்சலப் பிரதேசம்
20
மேகாலயா
164
மிசோரம்
5
திரிபுரா
4


தீவிரவாத குழுக்களின் விபரம்
தற்போது செயல்படும் தீவிரவாத குழுக்கள்
31
தடைசெய்யப்பட்ட குழுக்கள்
12
அமைதி ஒப்பந்தத்தில் இருக்கும் குழுக்கள்
23


ஆபத்தான கப்லாங்
ஷங்வங் ஷங்யுங் கப்லாங். என்.எஸ்.சி.என்-கே என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர். இவர் தலைமையில்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்திருக்கிறது. நாகலாந்து தீவிரவாதக் குழுவில் சக்திவாய்ந்த தலைவராக அறி்யப்படும் கப்லாங், 1940 ஆம் மியான்மரின் பங்க்ஸா பாசு என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தார். பத்து பிள்ளைகளில் கடைசி பிள்ளையான இவருக்கு தற்போது 75 வயது. இவருக்கு உலகின் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுடன் நேரடித் தொடர்பு உள்ளது. அதுவே இவரை ஆபத்தானவராக்குகிறது. இவருக்கு மியான்மரின் தாகாவில் ஒரு வீடும், சீனாவின் யுனான் மாகாணத்தில் ஒரு வீடும் உள்ளது. வடகிழக்குத் தீவிரவாதிகளுக்கு பெரிய ஆதர்சமாக விளங்கும் இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடவில்லை. எங்கே இருக்கின்றனர் என்பதும் தெரியவில்லை. கப்லாங் வீழ்ந்துவிட்டாலே வடகிழக்கு தீவிரவாதம் கட்டுக்குள் வந்துவிடும் என்கிறது இந்திய உளவுத் துறை அமைப்பு. 

(எழுதப்பட்டது ஜூன் 12 2015)


No comments:

Post a Comment