Friday, August 7, 2015

புதிய ப்ளே ஸ்கூல் விதிமுறைகள் சரியானவையா?



இப்போது தமிழகத்தில் ப்ளே ஸ்கூல்கள் என்கிற பலகையோடு பல கட்டிடங்கள் பார்க்க நேரிடுகிறது. அதுவும்  சென்னை போன்ற பெருநகரங்களில் தெருவுக்கு தெரு விளக்குகள் இருக்கிறதோ இல்லையோ ப்ளே ஸ்கூல்கள் இருக்கின்றன.பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றால்தான் சமாளிக்க முடியும் என்கிற நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு ப்ளே ஸ்கூல்தான் ஒரே வழி. இப்படி திடீரென படை எடுத்து வரும் ப்ளே ஸ்கூல்கள் எல்லாம் தரமானவைதானா?. நமது குழந்தைகளை விட்டுச் செல்ல ஏற்றவைதானா?. யாரும் விடை சொல்லாத இந்த கேள்விகளுக்கு  ப்ளே ஸ்கூல்களுக்கான புதிய விதிமுறைகள் மூலம் விடை சொல்ல முனைந்துள்ளது தமிழக அரசு.

ப்ளே ஸ்கூல் அனுமதி பெற என்னென்ன வசதிகள் வேண்டும் என்பதில் தொடங்கி குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது உட்பட பல விசயங்கள் குறித்து பதினான்கு பக்க விதிமுறை அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதில்  உள்ள சில முக்கிய விதிகள்.


ü  இதற்கு முன், ப்ளே ஸ்கூல் விதிமுறையில் ப்ரி கே.ஜி வகுப்பு மட்டும் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது புதிதாக எல்.கே.ஜி 
யு.கே.ஜி நடத்தவும், அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ü  ப்ளே ஸ்கூல் மூன்று மணிநேரங்களுக்கு மேல் செயல்படக்கூடாது 9.30க்கு பிறகு தொடங்கி 12.30 க்குள் முடிந்துவிட வேண்டும்.
ü  குடியிருக்கும் பகுதியில் ஒரு கி.மீ சுற்றளவிற்குள் இருக்கும் ப்ளே ஸ்கூலில்தான் சேர்க்க வேண்டும்.
ü  ப்ளே ஸ்கூல் வகுப்பறைகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 
ü  ஒரு குழந்தைக்கு சுமார் பத்து சதுர அடி வழங்கப்படவேண்டும்
ü  குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். 
ü  அறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.
ü  மாணவர், 15 பேருக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 
ü  தகுதி வாய்ந்த ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும்.
ü  ஒவ்வொரு வகுப்பிற்கும், இரண்டு வழிகள் இருக்க வேண்டும். 
ü  வகுப்பறைகள் தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.
ü  குழந்தைகளுக்கு ஆபத்து கால பயிற்சிகள் வழங்கவேண்டும்
ü  மெயின்ரோடு அருகேயோ , கனரக வாகனங்கள் செல்லும் சாலையிலோ ப்ளே ஸ்கூல் இருக்கக் கூடாது.

போன்றவை முக்கிய விதிகள். இந்த விதிமுறைகள் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டோம். 

ஆயிஷா நடராசன்.
பால புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர்.

நமது தேசத்தந்தை காந்தி கோரியது கூட ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான கல்வியே. ஆனால் 1986 ஆம் ஆண்டு மூன்று வயது முதல் கல்வி வழங்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு சரிதானா என்று ஆராய ஜனார்த்தனன் ரெட்டி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது இந்தியாவில் பெண்குழந்தைகள் நாலரை வயது வந்த உடன் வீட்டு வேலைக்குப் பழக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகையால் அவர்களுக்கு கல்வியின் மேல் நாட்டம் இல்லாமல் இருக்கிறது. வீட்டு வேலைக்கு முன்பு கல்வி அவர்களைச் சென்றடைந்தால் கல்வியைத் தொடர்வார்கள் என்றுதான் ப்ளே ஸ்கூல் கொண்டுவரப்பட்டது. ஆனால் இங்கே ப்ளே ஸ்கூல்கள் வியாபாரம் ஆகிவிட்டன. அரசும்  பெட்ரோல் பங்கை நடத்துவதற்கு எப்படி  விதிகள் இருக்கிறதோ அதே போல் இயந்திரகதியான விதிகளை அறிவித்திருக்கிறார்கள். குழந்தைகள் எப்படி பராமரிக்கப்படவேண்டும் என்பது பற்றி தெளிவாக இல்லை.

 எல்.கே.ஜி. யூ.கே.ஜி போன்றவற்றில்  ஏற்கனவே மதிப்பெண்களைப்  புகுத்தி பல ஆண்டுகாலம் ஆகிவிட்டன. அந்த வகுப்புகளை ப்ளே ஸ்கூலில் இணைப்பதன் மூலம் குழந்தைகளை ஆரம்பத்தில் இருந்தே மதிப்பெண் என்கிற ஏற்றத்தாழ்விற்குள் தள்ளுவதற்கான வழிவகுக்கப்பார்க்கிறது.

0-3 வயது குழந்தைகளுக்கும்   3 - 6 வயது குழந்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது அதைப் புரிந்துகொண்டு மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டுமே ப்ளே ஸ்கூலில் சேர்க்க வேண்டும். எப்படி அரசு பால்வாடி வைத்திருக்கிறதோ அப்படியே ப்ளே ஸ்கூல் இருக்கவேண்டும். ஆடல் பாடலில் தொடங்கி குழந்தையின் தடுப்பூசி வரை ப்ளே ஸ்கூல்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். அதைப் பற்றி எல்லாம் பேசாமல் ப்ளே ஸ்கூல் விதிமுறைகள் முழுமையடையாது.


சுசீலா ஆனந்த்
குழந்தைகள் கல்வி செயற்பாட்டாளர்

ப்ளே ஸ்கூல்கள் செய்யவேண்டியவை என்று பட்டியலிடுவதன் மூலம் தனது பொறுப்புகளில் இருந்து நழுவப் பார்க்கிறது அரசு.  அரசு அதிகாரிகள் சோதனை இடுவர் என்று மட்டும் சொல்லியிருக்கிறது. அதுவும் வருடத்திற்கு எத்தனை முறை என்று கூறவில்லை. இந்த விதிமுறைகள் எதுவும் அறிவியல் பார்வையோடு அணுகப்படாமல் மேம்போக்காக இடப்பட்டிருக்கின்றன. ஒன்றரை வயது முதல் மூன்றரை வயதுடைய குழந்தைகளைப் பற்றி பேசும்போது ”developmental achievement by the child"  என்று சொல்கிறார்கள். ஒரு குழந்தை எப்படி அதை அடைந்தது என்பதை முடிவு செய்வார்கள். ஒன்றரை வயது குழந்தைகளுக்கு பரிட்சை வைப்பார்களா?  இந்த ப்ளே ஸ்கூல்கள் குழந்தைகளுக்குள் இருக்கும் தனித்திறமையைக் கண்டுபிடித்து அதை வளர்த்தெடுப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் ஆனால் அதைப் பற்றி சொல்லாமல் வெறுமனே டெவெலப்மெண்ட் அச்சீவ்மெண்ட் என்று  வெற்று வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.

 டாய்லட் இருக்கவேண்டும் என்று சொல்கிற அரசு எத்தனை குழந்தைகளுக்கு எத்தனை டாய்லட் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சொன்னால் அரசு பள்ளிகளில் இருக்கிறதா என்று அரசை நோக்கி கேள்விகள் நீளும் என்பதால் மழுப்பிவிட்டது. மெயின்ரோடு, குப்பைத்தொட்டிகள் ஆகியவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று சொல்லும் அரசு எவ்வளவு தூரம் என்பதை சொல்லவில்லை.  இதே போல் நிறைய விசயங்கள் தெளிவில்லாமல் பெயருக்கு என இருக்கின்றன.

அதே போல் சர்வதேச குழந்தைகள் அடிப்படை உரிமைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது இந்த விதிமுறை. ஒரு குழந்தைக்கு குறைந்தபட்சம் முப்பது சதுர அடி வேண்டும் என்கிற கோரிக்கை உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்க பத்து சதுர அடி போதும் என்கிறது அரசு. பனிரெண்டு குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதே அதிகம் என்று பேசிக் கொண்டிருக்கையில் பதினைந்து குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பது அபத்தம்.  டையபர் மாற்றுவதைப் பற்றி கூறியிருக்கும் அரசாங்கம் “Gender child privacy" பற்றி ஒன்றுமே வாய் திறக்கவில்லை.
ப்ளே ஸ்கூலில் “informal education"  கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். மூன்றரை வயதுக்கு மேல் “formal education" கொடுக்க வேண்டும் என்று சட்டம் இருக்கையில் எப்படி எல்கேஜி யூகேஜியை ப்ளே ஸ்கூலோடு இணைக்க முடியும். 

பாரதி செல்வா
பெற்றோர்

திருத்தப்பட்ட விதிமுறைகளும் குறைகளோடே வந்திருக்கின்றன. அருகாமைப் பள்ளி என்பதை தவறாக புரிந்துகொண்டு குடியிருக்கும் பகுதிக்கு ஒரு கி.மீக்குள் ப்ளே ஸ்கூல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பெற்றோர் இருவரும் வீட்டை விட்டு தொலைவாக வேறொரு பகுதியில் வேலையில் இருக்கும் போது எப்படி வீட்டிற்கு அருகில் இருக்கும் குழந்தையை வந்து பார்க்கவோ கூட்டி செல்லவோ முடியும். யாராவது ஒருவரின் அலுவலகத்தின் அருகே இருந்தாதான்  குழந்தையை பராமரித்துக் கொள்ளமுடியும். 

 மூன்று மணிநேரம் மட்டுமே ப்ளே ஸ்கூல் என்பது பல பெற்றோர்களுக்கு சிரமமானதுதான். வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களால் பார்த்துக் கொள்ள முடியாமல்தான் குழந்தைகளை ப்ளே ஸ்கூலில் கொண்டு போய் விடுகிறார்கள். அவர்களால் எப்படி 12.30க்கு  வந்து குழந்தையை கூட்டிச்செல்ல முடியும். ப்ளே ஸ்கூல்கள் ஏழு மணி வரை பார்த்துக் கொள்ளத் தயாராகவே இருக்கின்றார்கள். ஆனால் பள்ளி நேரம் முடிந்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தனிக் கட்டணம். அரசு நேரத்தை நீட்டிக்கவும் ப்ளே ஸ்கூலுக்கு அதிக பட்ச கட்டணம் எவ்வளவு என்பதை சொல்லவும் வேண்டும்.

குழந்தைகள் பராமரிக்கப்படும் அனைத்து இடங்களுமே ப்ளே ஸ்கூல்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் அரசு கொடுத்திருக்கிற சில விதிமுறைகளுக்கு அபார்ட்மெண்ட்களில், வேலை செய்யும் அலுவலகங்களில் இருக்கும் ப்ளே ஸ்கூல்களுக்கு  பொருந்தாது.  அவை எல்லாம் நீக்கப்படுமா?. மிகுந்த போராட்டத்திற்குப் பின் அலுவலகத்திலும் அபார்ட்மெண்டிலும் வாங்கிய வசதியை  இந்த விதிமுறைகளால் இழக்க நேரிடுமோ என்று பயமாக இருக்கிறது.


அருணா ரத்னம்
கல்வியாளர், UNICEF

ஒன்றரை வயது என்பது பள்ளி செல்லும் வயதே இல்லை. மூன்றரை வயது வரை குழந்தைகள் கண்டிப்பாக  குடும்பத்தோடே இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தக் குழந்தை முழுத்திறனோடு வளரமுடியும். மூன்று வயது குழந்தைகளால் பள்ளி என்கிற கான்செப்டையே புரிந்து கொள்ள முடியாது. மூன்று மணி நேரத்திற்கு தாய் தந்தையை விட்டு தெரியாத ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பது அதை மனரீதியாக பாதிக்கும். குழந்தைகள் நன்றாக வளர  உறவுகள் மிக முக்கியம். இந்த காலகட்டத்தில்தான் குழந்தைகள் மூளை வளர ஆரம்பிக்கும் மொழிக்கான கட்டமைப்பு, பார்வை முதலிய புலன்களுக்கான கட்டமைப்பு போன்றவை உருவாகும். அத்தகைய தருணத்தில் கண்டிப்பாக பெற்றோரின் அரவணைப்பு தேவை. ஒரு குழந்தையையே சரியான கவனிப்பு கொடுத்து வளர்க்க முடியாத சூழ்நிலையில் பதினைந்து குழந்தைகளை எப்படி ஒருவர் பார்த்துக் கொள்ளமுடியும். இதை எல்லாம் எதிர்க்க வேண்டிய நீதிமன்றமும் அரசுமே ப்ளே ஸ்கூல் தேவை என்றும் அதற்கு விதிமுறைகள் வேண்டும் என்றும் முடிவெடுப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

அரசு கருத்து கேட்டு இந்த விதிமுறை வரையறுக்கப்பட்டது என்று சொல்கிறது பெரும்பாலான கல்வி செயல்பாட்டாளர்களை விட்டுவிட்டு யாரிடம் கருத்து கேட்டது என்று தெரியவில்லை. இந்த ப்ளே ஸ்கூல்களை மேற்பார்வையிட அரசு நியமித்திருப்பவர்கள் கூட எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கான பயிற்சி பெற்றவர்களே. குடும்ப சூழலே குழந்தைகளுக்கு சிறந்த ப்ளே ஸ்கூல். அதை நான் சொல்லவில்லை பல ஆய்வுகள் சொல்கின்றன. அந்த ஆய்வுகள் பற்றியும் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை பற்றியும் http://developingchild.harvard.edu/ என்ற இணைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக இந்த இணைப்பை பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment