இந்தியாவில் ஒரு மெகா ஊழல்
வழக்கு ஒரு மெகா கொலை வழக்காக உருவெடுத்துள்ளது. இதுவரை வழக்கில் தொடர்புடைய
சுமார் ஐம்பது பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை இன்னும் கூடலாம்.
”இன்னைக்கு யார் செத்திருக்கா?” என்று
செய்தித்தாளைத் திறப்பதோடு தொடங்குகிறது மத்திய பிரதேச மக்களின் தினசரி வாழ்க்கை.
இந்தியா, சுதந்திரம் பெற்றதில் இருந்து விதவிதமான ஊழல்களைப் பார்த்திருக்கிறது. ஒரு ஊழல் இத்தனை
ரத்தபலி வாங்குவது இதுவே முதல் முறை. அதுதான் வியாபம் ஊழல். ஊழல் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது
என்று மார்தட்டிச் சொல்லும் பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்திருக்கும் இந்த வியாபம்
ஊழலும் அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் கிரைம் நாவல்களை மிஞ்சும் அளவுக்கு
இருக்கின்றன.
என்னதான் நடக்கிறது மத்திய பிரதேசத்தில்?
வியாபம் ஊழல் குற்றச்சாட்டில்
காவல்துறைக்கு ஒருவரின் மேல் சந்தேகம் வந்து அவரை விசாரிக்கலாம் என்று போனால்
“அவர் சமீபத்தில்தான இறந்துபோனார்” என்கிற பதிலே கிடைக்கும். இந்த சமீபம் என்பது
இரண்டு நாட்களில் இருந்து ஆறுமாதம் வரை வேறுபடும். அவர்கள் முறையே தற்கொலை செய்தோ
விபத்திலோ போதை மருந்து உபயோகித்தோ இறந்து போயிருப்பார்கள். ஊழலை வெளிக்கொண்டு
வரலாம் என்று ஒரு பத்திரிகையாளர் செய்தி சேகரிக்கப் போனால் செய்தி சேகரிக்க போன
இடத்திலேயே வாயில் நுரை தள்ளி செத்துப்போவார்.ஆனால் உடல் நலக்குறைவு என்று
மருத்துவக் குறிப்பு சொல்லும். ஒரே மருத்துவக் கல்லூரியின் அடுத்தடுத்து வந்த
முதல்வர்கள் மர்மமான முறையில் இறந்து போவார்கள். அவர்கள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த ஊழலில்
தொடர்புடைய மாணவர்கள் என்று சந்தேகிக்கக் கூடியவர்கள் காணாமல் போயிருப்பார்கள்.
இதுவரை இந்த ஊழலில் தொடர்புடைய நாற்பத்தி ஒன்பது பேர் சந்தேகத்திற்கு இடமாக
இறந்திருக்கிறார்கள். எல்லோருமே ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள், முக்கிய
சாட்சிகள். இதில் மத்திய பிரதேச ஆளுனரின் மகன் உட்பட பல முக்கிய புள்ளிகள்
அடக்கம். ஆளுனர் ஒரு முக்கிய குற்றவாளி என்றும் முதல்வரின் மனைவிக்கு கூட ஊழலில்
நேரடி தொடர்பிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதென்ன வியாபம்?
. வியவசாயிக் பரிக்ஷா மண்டல் என்பதன்
சுருக்கமே"வியாபம்'. இது மத்திய பிரதேசத்தின் ஒரு அமைப்பு. மருத்துவக்
கல்லூரி நுழைவுத் தேர்வு, காவல் துறைப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியில்
அமர்த்தப்படும் ஆசிரியர்கள், அரசுப் பணி ஊழியர்கள் ஆகியோருக்கான தேர்வு நடத்தித்
தகுதியுள்ளவர்களை இந்த அமைப்பு தேர்ந்தெடுக்கும்.
இந்த தேர்ந்தெடுப்பில்தான் முறைகேடு
நடந்துள்ளது. முறைகேடுகள் மூன்றுவிதமாக நடந்துள்ளன. முதலில் தேர்வு எழுதுபவருக்குப்
பதிலாக வேறு ஒருவரை தேர்வு எழுத வைப்பது, இரண்டாவது தேர்வு எழுதுகிறவரின் அருகில்
நன்றாக தேர்வு எழுதக்கூடிய ஒருவரை அமர வைப்பது. மூன்றாவது தேர்வுத்தாளில் ஒன்றுமே
எழுதாமல் விட்டுவிடுவது பிறகு அந்த தாளை ஆசிரியர்கள் எடுத்து நிரப்பிக் கொள்வது.
இப்படி ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இப்படி முறைகேடு
செய்யப்பட்ட பணம் எவ்வளவு என்று இன்னும் தெளிவாக தெரியாத நிலையில் இரண்டாயிரம்
கோடிக்கு மேல் இருக்கும் என்று பத்திரிகைகள் கணிக்கின்றன. அதை விட பத்துமடங்கு
இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் இந்த ஊழலை வெளிக் கொண்டுவர முயற்சிப்பவர்கள்.
எப்போது தொடங்கியது?
2007-ஆம் ஆண்டிலேயே வியாபம் முறைகேடு
குறித்து பேச்சுகள் வந்தாலும் 2009 ஆம் ஆண்டு மருத்துவர் ஆனந்த் ராய் தொடுத்த
பொதுநல வழக்கில்தான் சில ஆதாரங்களோடு முறைகேடு பற்றிய தகவல்கள் வெளியாகின. உடனே
முதல்வர் சிவராஜ்சிங் ஒரு விசாரணை குழு அமைத்தார். குழு 2011 ஆம் ஆண்டு ஒரு
அறிக்கை சமர்பித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு
முன்பாகவே ஆறு முக்கிய சாட்சிகள் கொல்லப்பட்டனர். முதல் கொலை நவம்பர் 2009 ஆம்
ஆண்டு தொடங்கியது. 2013 ஆம் ஆண்டு மீண்டும் ராய் சில மருத்துவகல்லூரி சேர்க்கையில்
நடந்த முறைகேடுகளை வெளியில் கொண்டுவந்தார். அதன் பிறகுதான் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் சிறப்பு
படை அமைத்தது. அதில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன. மாநில
ஆளுநர் அலுவலகத்திலிருந்து பல்வேறு அரசுத் துறைகளும் அமைப்புகளும் இந்த
முறைகேட்டில் துணை போயிருப்பது தெரியவந்தது. இதுவரை மாநில காவல் துறை சுமார் 2,000 பேரைக் கைது
செய்திருக்கிறது. மேலும், 700 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள்
கல்வி அமைச்சர் லக்ஷ்மிகாந்த் ஷர்மா உட்பட அரசியல்வாதிகள், காவலர்கள், உயர்
அதிகாரிகள், இடைத்தரகர்கள், லஞ்சம் கொடுத்த பெற்றோர்கள், மாணவர்கள் என்று
பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
தொடர்ந்த… தொடரும்.. கொலைகள்
ஒருகட்டத்திற்கு மேல் திடீரென கைதுகள்
நின்றுபோயின. அடுத்தடுத்து மரணங்கள் நிகழ ஆரம்பித்தன. மூன்று பேர் அதிகமாக
குடித்து இறந்து போனார்கள், ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள், பதினொரு பேர்
வாகன விபத்தில் உயிரிழந்தார்கள். மீதி பேர் ஹோட்டல் அறைகளில், தண்டவாளங்களில் ,
ஏரிகளில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். சிலரின் மிரட்டலால் இறந்தவர்களின்
குடும்பத்தினரே அதை இயற்கை மரணம் என்று சொல்கிறார்கள். “என் மகனுக்கு
குடிப்பழக்கம் இருந்தது. அதனால் குடித்துவிட்டு ஓட்டி இறந்திருப்பான்” என்றார்
அன்சூல் சாச்சன் என்கிற மருத்துவகல்லூரி மாணவரின் அப்பா. ”அன்று மழை பெய்து சாலை
ஈரமாயிருந்தது அதனால் விபத்து நிகழ்ந்திருக்கலாம்” என்கிறார் தினேஷ் ஜாதவ் என்கிற இடைதரகரின் மாமியார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட ஒரு
பெண்ணுக்கு காவல்துறையின் அழுத்தத்தால் பிரேதப் பரிசோதனை சான்றிதழில் தற்கொலை
என்று அளித்ததாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு பிறகு சில சமூக
ஆர்வலர்கள் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள்
விசாரணைக்கு வந்தன. ஆனால் அரசு தரப்பில் இருந்து ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் ஆதர்ஷ் முன்னி திரிவேதி ஆஜராகவில்லை.
வழக்கில்
ஆஜராவதற்கு முன் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஆதர்ஷ், சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தது
. அந்த உணவு யார் கொண்டு வந்தது என யாருக்கும் தெரியவில்லை. அவர் ஆபத்தான நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2013ல் இருந்து சிபிஐ விசாரணைக்கு
மறுத்து வந்த மத்திய பிரதேச முதல்வர் செளகன் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு
தற்போது ” நேற்றிரவு முழுக்க நான் சிந்தித்தேன். அப்பாவி பத்திரிகையாளர் உட்பட
பலர், மர்மமான முறையில் இறந்துள்ளனர். எனவே, வியாபம் விவகாரத்தின் விசாரணையை
கண்காணித்து வரும், உயர் நீதிமன்றத்திடம், விசாரணையை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க
வேண்டும் என, மாநில அரசின் சார்பில் பரிந்துரைக்க உள்ளேன்” என்றார். சிபிஐக்கு
வழக்கை மாற்ற பரிந்துரைத்தனாலேயே தான் குற்றமற்றவர் என்றும் செளகான் கூற
ஆரம்பித்திருக்கிறார்.
தலைவர்கள் என்ன கூறுகிறார்கள்?
இத்தனை மரணங்களுக்குப் பின்னும் பிரதமர்
நரேந்திர மோதியிடம் எந்த சலசலப்பும் இல்லை. அதைப் பற்றி இதுவரை ஒரு வார்த்தைகூட
தெரிவிக்காத பிரதமர் வெளிநாட்டு பயணங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார். பிரதமரின்
இந்த நிலையைக் காங்கிரஸ் மிகவும் சாடிவருகிறது. “ ஒரு வாக்குறுதி கொடுத்தால்
அதன்படி நிற்கவேண்டும் நான் ஊழல் செய்ய மாட்டேன் ஊழல் செய்யவும் விடமாட்டேன் என்று
சொன்னீர்களே ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?” என்று ராகுல்காந்தி பிரதமரை நோக்கி
கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கும் அமைதியே பிரதமரின் பதில்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த
கவுடாவோ ”இதெல்லாம், சாதாரண விஷயம்;
இதுக்கெல்லாம், பிரதமர் மோடி
பதிலளிக்க வேண்டுமா... தேவையே
இல்லாம,
சின்னபிரச்னையை எல்லாரும் சேர்ந்து, ஊதி
பெரிசாக்கிட்டீங்க.” என்றார் கூலாக..
ஆனால்
ஊழலில் சம்மந்தப்பட்டவராகக் கருதப்படும் பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் உமா பாரதியோ “மத்திய பிரதேசத்தில் நடக்கும்
மரணங்கள் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன” என வெளிப்படையாக கூறியுள்ளார்.
இடிந்துரைக்காரகளுக்கும் ஆபத்து
ஊழல் செய்தவர்கள் மட்டுமல்ல ஊழலை வெளிக் கொண்டு வந்தவர்களும்
”நாங்கள் எப்போதும் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தோடே வாழ்கிறோம்” என்கிறார்கள்
விசில் ப்ளோவர் என்று அழைக்கப்படும் இடிந்துரைக்காரர்கள்.
இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததில் மூன்று பேருக்கு முக்கிய பங்குண்டு
முதன் முதலில் ஊழலைப் பற்றிக் கூறிய மருத்துவர் ஆனந்த் ராய், சிறப்பு விசாரணை குழு
செய்யும் தகிடுதத்தங்களை வெளிக் கொணர்ந்த தடயவியல் நிபுணர் பிரசாந்த் பாண்டே,
முதல்வருக்கும் அவரது உறவினருக்கும் வியாபமில் தொடர்புண்டு என்று சில ஆதாரங்களை
சமர்பித்த சமூக ஆர்வலர் ஆஷிஷ் சதுர்வேதி. இம்மூவருக்கும் தலா ஒரே ஒரு
கான்ஸ்டபிளைக் கொண்டு சிறப்பு பாதுகாப்பு செய்துள்ளது அரசு. வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் நியாயம்
கிடைக்கும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர்கள்
நம்புகிறார்கள். நாமும் நம்புவோம். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் அது
ஒன்றுதானே செய்ய முடியும்!!.
No comments:
Post a Comment