Friday, August 7, 2015

திரைப்பட சென்சார் ஊழல்




இந்தியாவில் தினந்தோறும் துறையில் ஒரு குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கிறது. தற்போது, திரைப்பட சென்சார் போர்டின் முறை.


நமக்கு தாவணி கனவுகள் படத்தில் பாக்யராஜ் குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகும்
 பிரபல நகைச்சுவைக் காட்சி நினைவு இருக்கலாம். இப்போது தொலைக்காட்சியில் பார்த்தாலும்  விழுந்து விழுந்து சிரிப்போம். எல்லாம் சரி.. பாக்யராஜின் இடத்தில் நாம் இருந்தால்? மிகப் பெரிய சங்கடத்திலும் மன உளைச்சலுக்கும் ஆளாவோம் இல்லையா.  இப்போது நீங்கள் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏதுவான படம் என்று மத்திய திரைப்பட தணிக்கை குழு சான்றளித்த ஒரு படத்திற்கு சிறிய தங்கை,  குழந்தை சகிதமாக போய் அமர படத்தில் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க கூடாத காட்சி ஓடிக் கொண்டிருந்தால்?.

இந்தியாவில் தினந்தோறும் துறையில் ஒரு குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கிறது. தற்போது, சென்சார் போர்டு என்றழைக்கப்படும் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் முறை.


என்ன ஊழல்?

இந்தியாவில் திரைப்படங்கள் மூன்று விதமாக பிரிக்கப்படுகின்றன. அனைவரும் பார்க்கலாம் (யு) , பெற்றோரின் துணையோடு குழந்தைகள் பார்க்கலாம் (யு/ஏ) , பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கலாம் (ஏ). இந்த சான்றிதழ் வழங்குவதில்தான் முறைகேடு நடந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.


2012 முதல் 2015 வரை, 18 வயது மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய  172 ஏ சான்றிதழ் படங்களுக்கு யூஏ  சான்றிதழும், 166 யூஏ சான்றிதழ் படங்களுக்கு யூ  சான்றிதழும் விதிகளை மீறி வழங்கப்பட்டுள்ளன என்பதே முக்கிய குற்றச்சாட்டு. இதுதவிர  நெருக்கமானவர்களுக்கு சலுகை அளித்துள்ளதாகவும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதாகவும் சென்சார் போர்டு மேல் புகார்கள் எழுந்துள்ளன.

2014, ஆகஸ்ட், சென்சார் போர்டு தலைவராக இருந்த ராகேஷ் குமார், திரைப்பட சான்றிதழ் வழங்க, லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு முன் அப்பதவியில் இருந்த பங்கஜா தாகுரும், பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். இதைத் தொடர்ந்து, சென்சார் போர்டு செயல்பாடு குறித்து, விகார் துர்வே என்பவர் மத்திய கணக்கு தணிக்கை துறையிடம்(சி.ஏ.ஜி) தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தகவல்கள் கேட்டார்.  சி.ஏ.ஜி. வழங்கிய பதிலில்தான் இந்த முறைகேடு வெளியே வந்துள்ளது. விகார் துர்வே இந்த முறைகேட்டுக்கு சென்சார்கேட் என்று பெயர் சூட்டியுள்ளார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

அக்டோபர் 1, 2013 முதல், மார்ச் 31 2015 வரையிலான மும்பையில் செயல்படும் தணிக்கைக் குழுவின் கணக்கை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள சிஏஜி, அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்க தேவையான நிதியை பெற்றிருந்தாலும், தணிக்கைக் குழு, கோப்புகளை சரியாக பேணாமல் இருந்துள்ளது என்றும், முக்கியத் தகவல்களை ஆவணப்படுத்தாமல் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. 4.10 லட்சம் பதிவுகளும், 60 லட்சம் பக்கங்கள் மதிப்பிலான தகவல்களும் இன்னும் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை.

சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம் 6 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை, வரிக் கட்டணம் 12 ஆண்டுகளாக திருத்தப்படவில்லை. 2011-லிருந்து 2013 வரை ரூ.14 கோடியை தணிக்கை சான்றிதழ் வழங்கக் கட்டணமாக பெற்ற தணிக்கைக் குழு, ரூ.5.5 கோடியை மட்டுமே வரியாக பெற்றுள்ளது.
 அதே போல் திரைப்படத்தை ஒரு அதிகாரி ஆய்வு செய்ய வேறொரு அதிகாரி ஆய்வு செய்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டில் மூழ்கியிருக்கிறது மும்பை திரைப்பட தணிக்கை குழு.

இது தொடர்பாக தற்போதைய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பஹ்லாஜ் நிகலானியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு,  ''நான் பதவிக்கு வரும் முன், பல தவறுகள் நடந்தன. இனி, இதுபோன்ற முறைகேடுகள் நடக்காது,'' என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார்.

இந்த முறைகேடு குறித்து சென்சார் போர்டு உறுப்பினர் எஸ்.வி.சேகரிடம் பேசினோம் “ மும்பையில் நடந்ததாகச் சொல்லும் முறைகேடுகள் கண்டிக்கப் படவேண்டியது கலையப் படவேண்டியது. அதே சமயம் சென்சார் போர்டு உறுப்பினர்கள் மீது அரசியல் ரீதியாகவும் பெரிய நிறுவனங்கள் மூலமாகவும் தீராத அழுத்தம் பலவழிகளில் இருந்து கொடுக்கப்படுகின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. தயாரிப்பாளர்கள் யூ சர்டிபிகேட்டுக்காக பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். எனக்கு கூட நிறைய ஃபோன்கால்கள் வரும். ஆனால் நேர்மையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அந்த அழுத்தத்தை கடந்துவிடலாம்.
சென்சாருக்கான சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன அதைப் படம் மீறாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். மறைமுகமாக கூட தவறான கருத்து வெளிவந்துவிடக் கூடாது என்பதால் நிறைய எச்சரிகையுடன் செய்யவேண்டிய விசயம். ஏதோ டோல்கேட்டில் நுழைந்து போவது போல சுலபமாக சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிடலாம் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். படத்தப் பாத்துட்டு உடனே சர்டிபிகேட்ட தரவேண்டியதுதான என்கிறார்கள்.
நேர்மையாக யு/ஏ வோ ஏ வோ கொடுத்தாலும் கூட அது முறையாக கையாளப்படுகிறதா என்கிற கேள்வியும் இருக்கிறது. முன்பெல்லாம் எல்லா தியேட்டரின் வாயிலிலும் சர்டிபிகேட் காப்பி வைப்பார்கள் மல்டிபிளக்ஸ் ஆகிவிட்ட பின் சர்டிபிகேட் எங்கே இருக்கின்றது என தெரியவில்லை. போஸ்ட்ரில் கூட யு என்றால் போடுகிறார்கள். யு/ஏ என்றால் சின்னதாக, ஏ என்றால் கண்ணுக்கே தெரியாதபடி போடுகிறார்கள். இதை கவனிக்காமல் மக்களும் படம் பார்க்க வந்துவிடுகிறார்கள். சர்டிபிகேட் கொடுத்தும் பயனில்லாமல் போய்விடுகிறது. உறுமீன் என்றொரு படத்தின் டைட்டிலிலேயே பழிவாங்குவதை போற்றி ஒரு கருத்து வைத்திருந்தார்கள். அதை நீக்கச் சொல்லிவிட்டுதான் சர்டிபிகேட் கொடுத்தோம் ஆனால் விளம்பரத்தில் அந்த டைட்டிலோடு போடுகிறார்கள். இப்போது அப்படக்குழுவின் மேல் நடவடிக்கை எடுக்கப் போகிறோம். மிகவும் சொற்பமான ஆட்களை வைத்துக் கொண்டு வருடத்திற்கு சென்சார் ஆகும் பல நூறு படங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கமுடியுமா?.  இந்த விவகாரங்களை எல்லாம் சரி செய்யாமல் திரைப்பட தணிக்கைத் துறை முறைகேட்டை சரி செய்ய முடியாது. செய்தாலும் பயன் இருக்காது.” என்றார்.
இந்த முறைகேடு முழுவதும் மும்பை திரைப்பட தணிக்கைகுழு மீது மட்டுமே. சமீபத்தில் ஐதராபாத் தணிக்கை குழு அதிகாரி ஜி.சீனிவாஸ் ராவ் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.  ஆகையால் இந்தியா முழுக்க உள்ள திரைப்பட தணிக்கை குழுக்களை ஆய்வு செய்தால் இன்னும் பல முறைகேடுகள் வெளிவரலாம்.

No comments:

Post a Comment