அன்புள்ள அரசாங்கத்துக்கு
வணக்கம். நான்
ஒரு சாமானியன். படிச்சிட்டு வேலை இல்லாம இருக்கும் கோடிகணக்கான பேர்கள்ல ஒருத்தன்ங்கிறத
விட என்னை அறிமுகப்படுத்திக்க வேற ஒன்னும் இல்லை. படிச்ச படிப்ப வச்சு எதாவது உருப்படியா
செய்யனும்னு இந்தக் கடிதத்தை எழுதிட்டிருக்கேன்.
வேலையில்லாத ஒருத்தன்
அரசாங்கத்துக்கு வேலை வேணும்னு கேக்குறத தவிர வேற என்ன எழுதப் போறான். நானும் அதைத்தான்
எழுதுறேன். எல்லா குழந்தைகளை மாதிரி நானும் எங்கம்மா கிட்ட ’எதுக்குப் படிக்கனும்’னு கேட்டப்போ படிச்சாத்தான் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கலாம்னு எங்கம்மா
சொன்னாங்க. நான் மட்டுமில்ல தமிழ்நாட்டுல இருக்குற தொண்ணூறு சதவித குழந்தைங்க வேலைக்குப்
போய் சம்பாதிக்கத்தான் படிக்கிறோம். பெத்தவங்களும் அதுக்குத்தான் படிக்க வைக்குறாங்க..
ஆனா பதினைஞ்சு பதினெட்டு வருசம் படிச்சு முடிச்சிட்டு ஒரு இளவட்டமா
வெளிய வரும் போது, நாம படிச்ச படிப்பு
நமக்கு வேலை கொடுக்கலன்னா அது எவ்வளவு பெரிய ஏமாற்றத்த கொடுக்கும்னு உங்களுக்குத் தெரியுமா?
ஒருத்தனோட படிப்பு
அவனோட எதிர்காலம் மட்டுமில்ல முதல் தலைமுறையா படிக்க வைக்கிற குடும்பங்களோட மிகப் பெரிய
முதலீடு. மாட்ட வித்தும் வீட்ட அடமானம் வச்சும் படிக்க வைக்கிறவங்க பத்தி, பிள்ளைக
படிக்க வட்டிக்கு வாங்கி அதைக் கட்டமுடியாம சொத்த இழந்தவங்க பத்தி எல்லாம் கேள்விப்பட்டிருப்பிங்க.
அதனால ஒரு குடும்பத்தோட வாழ்க்கை பறிபோகுதுங்கிரத உங்க புத்திக்கு எட்டியிருக்கா?
”ஒழுங்கா படிச்சா
வேலை கெடைக்க போகுது பார்டர்ல பாஸ் பண்ணிட்டு வந்து வியாக்கியானம் பேசுர” னு சொல்றவங்ககிட்ட ஒன்னு கேக்கனும். பி.ஏ. வரலாறுல கோல்டு மெடல் வாங்கினவன்
பாக்க இங்க என்ன வேலை இருக்கு?. எம்.ஏ, எம்.பில், பி.எச்டினு படிக்கிற அளவுக்கு
வசதியும் வருசமும் எங்க குடும்பமோ சமூகமோ எங்களுக்குத் தரல. அப்படியே ஒருவேளை படிச்சாலும் கூட வேலைக் கிடைக்குமாங்கிறது
சந்தேகம்தான். பி.ஏ. படிச்சுட்டு எங்கயும் வேலைக்கு சேர முடியாதுன்னா அந்தப் படிப்பு
எதுக்குன்னு தெரியல.
”இஞ்சினியர் டாக்டர் மாதிரி தொழில் படிப்பு படிக்க வேண்டியதுதான.. ஏன்
பி.ஏ படிக்கிறிங்க”னு கேக்குறாங்க.. பி.ஏ. படிக்கிறதுக்கே எங்ககிட்ட காசில்ல.. எங்க
இஞ்சினியரிங் டாக்டர் படிக்கிறது. இஞ்சினியரிங் படிச்சு கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட்
ஆகி பெரிய கம்பெனில வேலைக்கு சேர்ந்தவங்களையே கம்பெனிய விட்டு வெளியேத்துறாங்களாம்..
ஐ.டி.ஐ ப்ளம்பிங், டிவி ரிப்பேரிங்னு படிக்கப் போனா, படிக்காம கொத்தனார் வேலை பாக்குற
எங்கப்பாவுக்கும் படிச்ச எனக்கும் என்ன வித்தியாசம். உடல் உழைப்பு வேலைய நான் குறைச்சோ
மோசமாவோ பேசல அதவச்சுத்தான் என்ன எங்கப்பா அம்மா வளத்திருக்காங்க.. அவங்க என்னை படிக்க
வச்சதே அந்த வேலைக்கு நான் போகக் கூடாதுன்னுதான். பிறகு அதே வேலைக்கு எப்படி படிக்க
முடியும்?
”எல்லாத்துக்கும்
அரசாங்கம் வேலை கொடுக்க முடியுமா?”னு கேக்குறவங்க கிட்ட கேக்குறேன்..அரசாங்கம் எதுக்குங்க
உருவாச்சு?. மக்கள் எல்லாருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு கொடுக்கத்தான?
நாங்க என்ன அரசாங்கமே எங்களுக்கு சோறு போடனும் துணிமணி எடுத்துத்தரனும் வீடு கட்டி
கொடுக்கனும்னா சொல்றோம். அப்படி பண்ணிக் கொடுத்தா இப்ப இருக்கிற பொருளாதார நிலைமைல
அது எவ்வளோ கடனையும் கஷ்டத்தையும் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும்னு எங்களுக்கும் தெரியும்.
இது மூனையும் நாங்களே வாங்கிக்கிறதுக்கு அடிப்படையான வேலை கொடுங்க போதும்னு கேக்குறோம்.
வளந்து வரும் நாடான
இந்தியாவுல பல புதிய துறைகளுக்கு தேவை இருக்கு.. நாங்க அதை உருவாக்கி வேலை கொடுங்கன்னு
கூட சொல்லல. மாசத்துக்கு ஒரு துறை வாரியா வங்கித்துறை, கல்வித்துறைனு எதாவது ஒரு துறையை
சேர்ந்தவங்க காலி பணியிடங்களை நிரப்புங்கனு போராட்டம் பண்றாங்களே… போக்குவரத்து துறையில
ஷிஃப்டு மாத்த ஆளு இல்லாம தொடர்ந்து நாப்பது மணி நேரம் வண்டியோட்டி மாரடைப்பு வந்து
இறக்குறாங்களே, போதுமான காவல்துறையினர் இல்லாததுனால பாதுகாப்பு வழங்கமுடியவில்லைன்னு
முன்னாள் முதல்வரே அறிக்கை விட்டாங்களே.. அந்த இடங்கள நிரப்புங்கன்னுதான் சொல்றோம்.
’அதான் சுயதொழில்
செய்ய கடன் கொடுக்கிறோம். சொந்தமா தொழில் எதாவது தொடங்கவேண்டியதுதான?’ நியாயமான கேள்வி.
காகிதத்துல இருக்கிறது எதுவும் நடைமுறைல இல்லைங்கிறது உங்களுக்குத் தெரியாது போல. படிச்சு
முடிக்கிற வரைக்கும் கல்விக்கடனுக்கு வட்டி கிடையாது.. ஆனா நடைமுறைல முதல் வருசத்துக்கான
வட்டி கட்டினாத்தான் அடுத்த வருசத்துக்கான கடன் தொகை கெடைக்கும்னு உங்களுக்குத் தெரியுமா? தொழில் தொடங்க சொத்து ஷூரிட்டி கேக்க கூடாதுன்னு
முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் சொன்னாரு. ஆனா சொத்து ஷூரிட்டியோ சொத்துள்ளவங்க
ஷூரிட்டி கையெழுத்தோ இல்லாம கடன் கிடைக்காது. ரெண்டும் இருந்தா நாங்க ஏங்க கடன் கேட்டு
வரப்போறோம்?.
“கடன் வாங்கிட்டு
திருப்பித் தராம ஓடிட்டா எங்களுக்கு ரிஸ்க் இல்லையா? ”ரிஸ்க் இருக்குத்தான்… இல்லைங்கள..
பலநூறு கோடி வாங்கிட்டு கம்பி நீட்டுற பணக்காரங்களுக்கு இன்னும் பல ஆயிரம் கோடிகளை
எங்க வரிப்பணத்துல இருந்து கொடுக்கும் போது அது ரிஸ்க்கா தெரியலையா? அந்த ஒருத்தர்
வளர்ச்சிக்காக எடுக்கிற ரிஸ்க்க ஏன் அரசாங்கம் கோடிக்கணக்கான பேர்களின் வளர்ச்சிக்காக
எடுக்கமாட்டேங்குது..
நான் சொல்லும்
இந்தக் கோடிக்கணக்கான பேர்ங்கிறது வார்த்தைக்கு அல்ல.. அப்பட்டமான உண்மை. இப்ப எல்லாமே
நம்பர் ஆகிப்போச்சு. காரோட ஒவ்வொரு சிறப்பா சொன்னாக் கூட அதோட அருமை தெரியாத நம்ம மக்கள் அம்பது லட்ச ரூவாக் காருன்னதும் அதோட அருமைய புரிஞ்சுக்கிறாங்க.
மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழிங்கிறதுனால நீங்க கொடுத்த புள்ளிவிபரமே சொல்றேன் இந்த
பிரச்சனைய புரிஞ்சுக்க. இது தமிழ்நாட்ல வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தும் வேலை கிடைக்காதவர்களோட எண்ணிக்கை. பட்டதாரி அல்லாதவர்கள்
அதாவது டிப்ளமோ, செகண்ட் கிரேடு ஆசிரியர் படிப்பு படிச்சவங்க மொத்தம் 1,06,12,035 பேர்
வேலைக்காக காத்திருக்காங்க. இளங்கலை படிச்சுட்டு காத்திருக்கவங்க 19,84,031 பேர்.. இதுல 2,00,993 இஞ்சினியர்களும்
8,301 டாக்டர்களும் அடக்கம்..முதுகலை படிச்சிட்டு வேலைக்காக காத்திருக்கவங்க எண்ணிக்கை
9,26,904 பேர்.. மொத்தம் வேலைக்காக காத்திருக்கவங்க
எண்ணிக்கை ஒரு கோடியே முப்பத்தி அஞ்சு லட்சத்தி இருபத்தி ரெண்டாயிரத்தி தொள்ளாயிரத்தி
எழுபது (1,35,22,970) பேர். போன வருசத்தைவிட இந்த வருசம் வேலைவாய்ப்பகத்துல பதிவு செஞ்சவங்க
எண்ணிக்கை கம்மினு வேலைவாய்ப்பக இயக்குனர் தெரிவிச்சிருக்கார். இந்த எண்ணிக்கை குறைவு
வேலைகிடைச்சிட்டதுனால இல்ல.. பதிஞ்சாலும் வேலை கிடைக்காதுன்னு மக்கள் நினைக்கிறதுனாலன்னு
உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்ல.
கொஞ்சம் புள்ளிவிபரக்
கணக்கு சொன்னேன். புள்ளிவிபரம் இல்லாத கணக்கொன்னும் சொல்றேன் கேளுங்க. சம்பாதிக்காம
உக்காந்து சாப்பிட கூச்சப்பட்டுக்கிட்டு எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம்
எத்தன பேர் சாப்பிடுறாங்கனு புள்ளி விபரம் இல்ல. சொந்தக்காரங்க முகத்தைப் பாக்க சங்கடப்பட்டு
விசேச வீடுகளுக்கு போகாம எத்தன பேர் வீட்டுக்குள்ளயே முடங்கி கெடக்காங்கிறதுக்கு புள்ளி
விபரம் கிடையாது… படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம அதுக்கு குறைவான வேலைக்கு போகவும்
மனசு ஒப்பாம எத்தன பேர் அல்லாடுறாங்ககிறதுக்கு புள்ளிவிபரம் இல்ல… ஒடம்பு முடியாதப்பவும்
காலையில எந்திருச்சு வேலைக்குப் போற அப்பாவப் பாத்து எத்தன பசங்க கண்ணீர் வடிக்கிறாங்கங்கிற
புள்ளிவிபரம் யாரும் எடுக்கல. “பொட்டப்புள்ளைய கட்டிக் கொடுன்னா கேக்காம படிக்க வச்ச..
இப்ப என்ன வேலைக்கா போயிருச்சு?”னு ஊர்காரங்க கேக்கும் போது பதில் சொல்லமுடியாம அப்பா
படிக்க சப்போர்ட் பண்ண அம்மாவைப் பாக்கும் போது எத்தன பொண்ணுங்க படிச்சிருக்கக்கூடாதோனு
யோசிக்கிறாங்ககிறதுக்கு புள்ளிவிபரம் இல்ல.
இன்னும் சொல்றதுக்கு
பக்கம் பக்கமா இருக்கு.. எனக்கு வேலையில்ல நான் சொல்லுவேன்.. ஆனா உங்களுக்கு ஆயிரம்
வேலை இருக்கும் நீங்க போய் பாருங்க…
நன்றி
இப்படிக்கு
கோடியில் ஒருவன்
1 comment:
அருமை பரிதியார்ரே..
Post a Comment