”உன் உயிருக்கு ஆபத்து இந்த தொழிலை
விட்டுவிடு என்று அவனை பலமுறை கெஞ்சினேன். ஆனால் அவன் கேட்கவில்லை”. இது தனது
சகோதரனின் மரண வீட்டில் சந்தியா அழுதுகொண்டே கூறியது. சந்தியாவின் சகோதரன் சந்தீப்
கோதாரி ஒன்றும் மோசமானவர் அல்ல அவர் செய்து வந்த தொழில் கடத்தலோ, கொள்ளையோ,
கூலிப்படையோ அல்ல. சந்தீப் கோதாரி இந்தியாவின் நான்காவது தூணைத் தாங்கி நிற்கும்
லட்சக்கணக்கான பேர்களில் ஒருவர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நேர்மையான
பத்திரிகையாளர்.
சந்தீப் கோதாரி ஐந்து வருடங்களாக
தொடர்ந்து மணல் மாஃபியா பற்றி பல செய்திகளை வெளியிட்டுவந்தார். தான் ஒரு நேர்மையான
பத்திரிகையாளன் என்று சொல்வதில் அவருக்கு எப்போதும் கர்வம் உண்டு. தனது
தொழிலுக்காக எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தார். உயிரையும் கூட. ஜூன் 19
மாலை தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சந்தீப் கோத்தாரி
காரில் வந்த சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இரண்டு நாட்களாக பல இடங்களில்
தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது உடல் ஒரு தண்டவாளத்தின் அருகே எரிந்து போன
நிலையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி கண்டு எடுக்கப்பட்டது.
இந்த வருடத்தின் முதல் பத்திரிகையாளர்
கொலை இதே ஜூன் மாதம்தான் தேதிதான்
நடந்தேறியது. உத்திர பிரதேசத்தில் "ஷாஜஹான்பூர் சமாச்சார்' என்கிற இணைய
இதழில் மூத்த பத்திரிகையாளர் ஜகேந்திர சிங். இவர் ஆளும் சமாஜ்வாதி கட்சியின்
அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா சட்ட விரோதமாக வளைத்துப் போட்டிருக்கும் குவாரிகள்
பற்றியும், அதற்கு எதிராகப் புகார் கொடுத்தவர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்
பற்றியும் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வருகிறார்.
ஜூன் 1 ஆம் தேதி காவல் நிலைய ஆய்வாளர்
ஸ்ரீபிரகாஷ் ராவ், ஜகேந்திர சிங்கை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்
செல்கிறார். அங்கே அவர் அடித்துச் சித்திரவதை செய்யப்படுகிறார். அமைச்சர் ராம்
மூர்த்தி வர்மாவின் முன்னிலையில், காவல் துறையின் உடந்தையுடன்தான் தாக்குதல் நடக்கிறது.
ரத்தக் காயங்களுடன் இன்னோர் இடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர் மீது பெட்ரோலை
ஊற்றி அமைச்சரின் ஆதரவாளர்கள் உயிரோடு கொளுத்துகிறார்கள். அலறல் சப்தம் கேட்டுத்
திரண்டு வந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். மூன்று நாள்கள்
உயிருக்குப் போராடிய ஜகேந்திர சிங் மரணமடைகிறார்.
இது ஒன்றும் யூகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதல்ல இதை
அப்படியே தனது மரண வாக்குமூலத்தில் ஜகேந்திர சிங் தெரிவித்துள்ளார்.ஆனாலும் இதுவரை
ராம் மூர்த்தி வர்மாவின் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர் இன்னும் அமைச்சராகவே
தொடர்கிறார்.இதற்கிடையில் அவர் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார் என்று அறிக்கை
சமர்ப்பித்திருக்கிறது தடயவியல்துறை.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை
வைத்து அமைச்சர் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஏற்கனவே கூறிய அகிலேஷ்
யாதவ் தலைமையிலான அரசும் ஜகேந்திர சிங்கின் மரண வாக்குமூலத்தை தவிர்த்துவிட்டு
தடயவியல்துறை அறிக்கையையே கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பது பச்சைக்
குழந்தைக்கும் தெரிந்த விசயம்.
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற
பெருமையைக் கொண்டிருக்கும் இந்தியாவின் உண்மை ஜனநாயக நிலை பெருமைப்படுமளவுக்கு
இல்லை என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் தங்களது பணியின் காரணமாக கொல்லப்பட்ட
பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை பார்த்தாலே தெரிந்துவிடும். 2013 ஆம் ஆண்டு
உலகிலேயே அதிக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா
மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. கருத்து சுதந்திரமே இருக்காது என்று நாம்
நினைக்கும் நாடுகளான பாகிஸ்தான்,இலங்கை, சீனா ஆகிய நாடுகள் கூட பத்திரிகையாளர்கள்
கொலையில் நமது அருகே இல்லை. 2014 ஆம் ஆண்டு
இடத்திற்கு வந்த இந்தியா.2015ல் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இன்னும்
காலண்டரில் பாதி வருடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரியில் வெளியான உலகளாவிய பத்திரிக்கை
சுதந்திரம் தொடர்பான சர்வேயில் இந்தியா 136-வது இடத்தில் இருக்கிறது.
ஒரு பத்திரிகையாளர் கொலை
செய்யப்படுவது என்பது கடைசி கட்டமே அதற்கு முன் கொலை மிரட்டலில் தொடங்கி பொய் வழக்கு
வரை பலவகையில் துன்புறுத்தப்படுகிறார். கடந்தவாரம்
உத்திரபிரதேசத்தில் ஹைதர்கான் என்கிற நிருபரை ஒரு கும்பல் மோட்டர் சைக்கிளில்
கட்டி மயங்கி விழும் வரை இழுத்துச் சென்று எச்சரித்துள்ளனர். இது தவிர்த்து
நேர்மையான பத்திரிகையாளர்கள் மேல் பொய் வழக்குகளும் போடப்படுகின்றன. நாம்
ஆரம்பத்தில் பார்த்த சந்தீப் கோதாரி மீது இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட பொய்
வழக்குகள் இருக்கின்றன. அதில் பாலியல் வன்புணர்வு வழக்கும் அடக்கம்.
பொய்வழக்குகளால் பதினேழு மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். சட்டத்தால்
எதிர்கொண்டு வெளியே வந்த அவர், இறப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் கூட தன் மீது பொய் வழக்குப் போட்ட இருபத்தி ஏழு பேருக்கு நோட்டிஸ்
அனுப்பியுள்ளார்.
பத்திரிகைகளுக்கு நம்மை பதட்டத்துல
வச்சிருக்கிறதே வேலையாப் போச்சு என்று டீக்கடையில் சாதாரண மனிதர்கள் முதல் “நீங்க சும்மா காட்டுறவங்கதானே உங்களுக்கு என்ன பொறுப்பு
இருக்கு” என்று உன்னைப் போல் ஒருவன் கமலில்
தொடர்ந்து ”உங்களுக்கு கிசுகிசு எழுதவே நேரம் சரியா இருக்கு” என்று கத்தி
படத்தில் பத்திரிகையாளர்களை நோக்கி விஜய் கத்துவது வரை, ஒரு மோசமான பிம்பம் பத்திரிகைகளின் மீது பரப்பப்பட்டிருக்கிறது.
இங்கே கருத்து சுதந்திரம் என்பது சினிமாவுக்கும் சில பிரபலங்களுக்கும் மட்டுமே
உரித்தானதாக இருக்கிறது. மதுரையில் மூன்று பத்திரிகையாளர்களைக் கொன்றுவிட்டோ
தனியார் தொலைக்காட்சி முகப்பில் வெடிகுண்டு வீசிவிட்டோ சுதந்திரமாக
சுற்றமுடிகிறது. சினிமாக்களின் கருத்துரிமைக்கு குரல் கொடுக்கும் இயக்கங்களும்
இந்தப் பத்திரிகையாளர்களை கண்டுகொள்வதில்லை. ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல்
உண்மையை வெளிக் கொண்டுவர ஓடிக்கொண்டிருக்கிறார்கள் உண்மையான பத்திரிகையாளர்கள்.
எழுதி வந்த பிரிவு வாரியாக கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சதவிதம்.
அரசியல் 43%
ஊழல் 31%
வர்த்தகம் 23%
வர்த்தகம் 23%
கலாச்சாரம் 23%
மனித உரிமைகள் 17%
குற்ற 17%
போர் 3%
போர் 3%
*1992 முதல் 2015 வரை
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 150
இடித்துரைப்பாளர்கள் (பத்திரிகையாளர்களாக இல்லாத ஊழலை முறைகேடுகளை வெளியில் கொண்டு
வருகிறவர்கள்.) துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். 2010 முதல் 2014 வரை முப்பது
இடித்துரைப்பாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மக்களவையில்
தெரிவிக்கப்பட்ட விபரம். தகவல் பெறும்
உரிமைச் சட்டத்தின் கீழ், முறைகேடுகள் பற்றி கேள்வி எழுப்பிய 40 பேர் கடந்த ஐந்து
ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நன்றி புதிய தலைமுறை 26 ஜூன்
No comments:
Post a Comment