Friday, August 7, 2015

விண்ணை நிரைக்கும் மனிதக் குப்பை?




மண்ணைக் குப்பையாக்கி முடித்த பிறகு விண்ணையும் குப்பையாக்க கிளம்பிவிட்டது மனித இனம்

1961 ஜுன். அப்போது செல்போன் எதுவும் இல்லை. டிவி எல்லாம் பணக்கார நாடுகளின் பணக்கார வீடுகளுக்கே சொந்தமானவை.  விண்வெளியில் மொத்தமே ஐம்பது செயற்கைகோள்களும் அதைக் கொண்டு வந்த ஐம்பது ராக்கெட்டுகளும் மட்டுமே மிதந்து கொண்டிருந்தன. அமெரிக்கா, கடல் வழித்தடத்தை சரிபார்க்க ஒரு செயற்கைகோளை ஏபிள்ஸ்டார் என்கிற ராக்கெட்டில் ஏவியது. ஏபிள்ஸ்டார் தனக்கு இடப்பட்ட பணியை செவ்வனே செய்தது, ஆனால் ஒரு மணிநேரம் கழித்து யாரும் எதிர்பாரா வண்ணம் திடீரென வெடித்துச் சிதறியது. முன்னூறு பாகங்களாக அது உடைந்து விண்வெளியில் சுழல ஆரம்பித்தன. இன்றும் அவை சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதுதான் மனித விண்வெளிக் குப்பையின் தொடக்கம்.
விண்வெளிக் குப்பைகளில் இயற்கை விண்வெளிக் குப்பைகள்  செயற்கை விண்வெளிக் குப்பைகள் என்று இரண்டு வகைகள் உள்ளன. விண்கற்கள், எரிநட்சத்திரத் தூசுகள் ஆகியவை இயற்கை விண்வெளிக் குப்பைகள். இன்னொன்று மனிதர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த, வாழ்நாள் முடிந்த செயற்கைக் கோள், செயற்கைக் கோளின் உரிந்த பெயிண்ட் துகள்கள்,  விண்வெளிக்குச் சென்ற வீரர்கள் விட்ட பொருட்கள், செயற்கைக் கோளை கொண்டு செல்லும் ராக்கெட்டுகள், அவற்றின் பாகங்கள்  இவை எல்லாம் செயற்கை விண்வெளிக் குப்பைகள். தற்போதைய சூழ்நிலையில் செயற்கைக் கோள்களின் தேவை அதிகமானதால் செயற்கை விண்வெளிக் குப்பைகள், இயற்கை விண்வெளிக் குப்பைகளைவிட  அதிகரித்தபடி உள்ளது.

ரஷ்யாவால் 1957 அக்டோபர் 4-ல் ஸ்புட்னிக்-1 என்னும் செயற்கைக் கோள் விண்ணுக்கு செலுத்தப்பட்டதன் மூலம் ஆரம்பமானதுதான் விண்வெளி யுகம். அன்று முதல், சுமார் 8,000 செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு கணக்குப்படி இவற்றில் தற்போது சுமார் 2,000 செயற்கைக் கோள்கள்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மீதமுள்ள செயல்படாத செயற்கைக் கோள்கள் விண்வெளிக் குப்பைகளாக விண்ணில் மிதந்துகொண்டிருக்கின்றன. வருடத்திற்கு ஒரு செயற்கைகோளாவது செயலிழந்து குப்பையாக சுற்றுகிறது.  இப்போது பூமிக்கு வெளியே இருந்து பார்த்தால் சினிமாவில் பார்ப்பது போல் பூமி கரும்பலகையில்  வரையப்பட்ட நீலப்பந்து போல் எல்லாம் தெரியாது. பூமி எனும் நீல லட்டை சுற்றி ஆயிரம் ஈக்கள் மொய்ப்பது போல் விண்வெளிக் குப்பைகள் மொய்த்திருப்பதைக் காணலாம்.

நாசாவின் கணக்குப்படி பூமிக்கு மேலே 650 முதல் 750 கி.மீ., தூரத்தில் இருபத்தி இரண்டாயிரம் வகை குப்பைகள் உள்ளன. இந்தக் குப்பைகளில்  கோலி குண்டு சைசில் ஐந்து லட்சம் பொருட்களும், கிரிக்கெட் பந்து அளவில் இருபதாயிரம் பொருட்களும் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு செண்டி மீட்டரில் இருந்து இருபத்தி ஐந்து செண்டி மீட்டர் வரையான சிறிய குப்பைகளே  சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல் உலவிக் கொண்டிருக்கின்றன. அதைவிடச் சிறிய குப்பைகளாலும் நமக்குப் பாதகம் ஏற்படும் என்றாலும் அதைக்  கண்டுபிடிக்கும் அளவுக்கு நமது தொழில்நுட்பம் வளரவில்லை. 


விண்வெளியில் பூமியே தூசிதான் அதில் இருந்து வந்த குப்பைகளால் என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப்போகிறது என்கிற கேள்வி எழலாம் இந்தக் குப்பைகள் அனைத்தும்  மணிக்கு  சுமார் 28 ஆயிரம் கி.மீ., வேகத்தில் வலம் வருகின்றன.(ஒரு தோட்டாவை  விட இருபது மடங்கு வேகம்) இந்த வேகத்தில் வெறும் காற்று வந்தாலே  பொருட்களால் எதிர்கொள்ளமுடியாது திடப் பொருட்கள் வந்தால்?. அது மற்ற செயற்கைக் கோள்களிலோ அல்லது ஆராய்ச்சிக்காக விண்வெளி செல்லும் மனிதர்கள் மேலோ பட்டால்? மேலும் இந்த செயற்கைகோள்கள் எல்லாம் பூமியின் ஈர்ப்பு விசை கொண்டே செயல்படுகின்றன. அவை செயல் இழந்தால் அப்படியே  புதன் கிரகம் செவ்வாய் கிரகம் என்றெல்லாம் போகாது. பூமியின் வட்டப் பாதையிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். ஆகவே நாம் பேசிக் கொண்டிருப்பது  அண்டங்களில் இருக்கும் குப்பைகளைப் பற்றி இல்லை. பூமியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் குப்பைகள் பற்றிதான்.


விண்வெளில குப்பை இருந்தால் பூமியில் இருக்கும் என்னை என்ன செய்யப்போகிறது. இது அவ்வளவு பெரிய பிரச்சனையா? ஆம் மேலே சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் அனைத்தும் விண்வெளியை ஆராய்ச்சி செய்ய அனுப்பபடவில்லை. பூமிக்கு உதவ அதாவது நாம் டிவி பார்க்க, நாம் வானிலை அறிக்கை அறிந்து கொள்ள, நாம் பேரிடர்களை அறிந்துகொள்ள, நாம் இணையத்தை பயன்படுத்த, நாம் செல்ஃபோனில் பேச, புதிய வளங்கள் எங்கே இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள, என்று எல்லாம் நமக்காகவே நடக்கின்றன. மேற்சொன்ன விசயங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு நாளை கற்பனை செய்து பாருங்கள் இந்தப் பிரச்சனையின் வீரியம் புரியும்.

இதுதவிர்த்து விண்வெளிக்  குப்பைகள் சில சமயம் புவியீர்ப்பு விசை காரணமாகத் தாமாகவே காற்று மண்டலத்தில் நுழைந்துவிடும். கடந்த ஆண்டு பிப்ரவரி 16 அன்று ரஷ்யாவின் காஸ்மோஸ்-1220 எனும் செயலிழந்த செயற்கைக் கோள், பூமியை நோக்கி வந்தது. ஆனால் காற்று மண்டலத்தின் அழுத்தத்தால் வழியிலேயே எரிந்து சாம்பலானது.  காற்று மண்டலத்தில் எரிந்து சாம்பலாகாத குப்பைகளும் உள்ளன. 2003 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட கொலும்பியா விண்களத்தின் பாகம் 2011 ல் டெக்ஸாஸ் பகுதியில் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் இருக்கும் பகுதியில் விழுந்தால் என்னவாகும் என்கிற கேள்வியை எழுப்பி பயமுறுத்துகிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

காற்று மண்டலத்திற்குள் விழும் குப்பைகள் பெரும்பாலும் அழிவதற்குத்தான் வாய்ப்புள்ளது. ஆகவே அதை விஞ்ஞானிகள் வரவேற்கவே செய்கிறார்கள். 250 கி.மீ. உயரத்தில் உள்ள விண்வெளிக் குப்பை இரண்டு மாதத்திலும், 600 கி.மீ. உயரத்தில் உள்ள விண்வெளிக் குப்பை 15 ஆண்டுகளிலும், 850 கி.மீ. உயரத்தில் உள்ள விண்வெளிக் குப்பை 100 ஆண்டுகளிலும் புவியின் காற்று மண்டலத்தில் நுழையலாம். ஆனால், அதிக உயரத்தில் உள்ள விண்வெளிக் குப்பைகள் பூமிக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை. அவை குறையவும் வாய்ப்பே இல்லை.


என்ன தீர்வு?

பழைய குப்பைகளை நீக்குவதற்கு முன்பு புதிய குப்பைகளை உருவாக்காமல் இருப்பது முக்கியம். பொதுவாக விபத்துகளைத் தடுக்க செயற்கைக் கோளின் சுற்றுப்பாதையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 1999 முதல் 2013 வரை சர்வதேச விண்வெளி நிலையம், மோதல் தவிர்ப்பு சுற்றுப்பாதையை பதினாறு முறை மாற்றியுள்ளது.
இ-டிஆர்பிட்  என்கிற திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றும் முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. குப்பைகளை வலைகள் மூலம் மீன்பிடிப்பது போல் பிடித்து 800 கி.மீ. முதல் 1000 கி.மீ. உயரத்துக்கு கடத்தி துருவ வட்டப்பாதையில் விடும் வகையில் இ.டிஆர்பிட் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கபூர் விண்வெளி ஆராய்ச்சி மையமும் இரண்டு செயற்கைகோள் கொண்டு விண்வெளியை சுத்தப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. வீட்டையும் நாட்டையும் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்ல விண்வெளியையும் சுத்தமாக வைத்திருப்பதும் நம் பொறுப்புதான்.



 எப்படி அதிகரிக்கின்றன விண்வெளிக் குப்பைகள்?

 விண்வெளிக் குப்பை ஒரு  தொற்று நோயைப் போல பரவும். ஒரு சிறிய குப்பை நன்றாக செயல்படும் செயற்கைகோள் மேல் பட்டால்கூட அது செயல்பாட்டை இழந்து அதுவும் விண்வெளிக் குப்பையாகிவிடும். 1968ல் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் செயல்படாமல் குப்பையாக சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்களை அழிக்க முடிவெடுத்தன. அதனால் பூமியில் இருந்து செயற்கைக்கோள்களை அழிக்க எதிர் செயற்கை கோள்கள் அனுப்ப ஆரம்பித்தன. ஆனால் அதற்குப் பிறகுதான் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. ஒரே குப்பையாக சுற்றிக் கொண்டிருந்த செயற்கைகோளை தாக்கி பல குப்பைகளாக ஆக்கியதோடு மட்டுமல்லாமல் எதிர் செயற்கைகோள்களும் சுற்ற ஆரம்பித்துவிட்டன. தாங்கள் செய்தது மிகப்பெரிய முட்டாள்த்தனம் எனத் தெரிந்து கொள்ளவே இரு நாடுகளுக்கு இருபது ஆண்டுகள் பிடித்தன. எதிர் செயற்கைகோள் திட்டம் 1988 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் சீனாவும் ஒரு செயற்கைகோளை தாக்கி அழிக்க நினைத்து குப்பைக் கணக்கை கூட்டியது குறிப்பிடத்தக்கது.


இந்தியா என்ன செய்கிறது?
 பழைய  குப்பைகளை அகற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடாவிட்டாலும் புத்திசாலித்தனமாக புதிய குப்பைகளை உருவாக்காமல் இருக்க வழி செய்துள்ளது இந்தியா. ஒரு செயற்கைக்கோளை ஏவிய பின், அந்த ராக்கெட்டை மீண்டும் ஏவுவதற்குப் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஒரே ராக்கேட்டைக் கொண்டு நிறைய செயற்கைகோள்களை ஏவமுடியும். ராக்கெட் குப்பையையும் செலவையும் இது வெகுவாக குறைக்கும்.இது முதல்கட்ட அளவில் உள்ளது. இன்னும் ஏராளமான பரிசோதனை முயற்சிகள் நிறைவுபெறவேண்டியுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் கட்டமாக மீண்டும் ஏவத்தக்க ராக்கெட் ஏவப்படும்.
இந்த ராக்கெட் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய பின் கடலில் தரையிறக்கப்படும். இதன் உச்சகட்டமாக ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஓடு தளத்தில் தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நன்றி:புதிய தலைமுறை

No comments:

Post a Comment