Tuesday, August 15, 2017

கீழடி: நசுக்கப்படும் தமிழர் அடையாளம்





தங்களது கடந்த கால வரலாறு, தோற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை அறியாத மக்கள் வேரற்ற மரம் போன்றவர்கள்

-மார்கஸ் கார்வே


வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!




உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா... இந்த வரிகளை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதி ஆண்டுகள் ஐம்பதைக் கடந்துவிட்டன. ஆனால் இன்றும் நாம் விழித்துக் கொள்ளவில்லை.

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி  தமிழ் குடி என்கிற பெருமை மிகு வாக்கியத்தை எப்போதும் மார்தட்டிச் சொல்லும் நாம் அதை ஆதாரத்தோடு நிரூபணம் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும் வேளையில் கண்மூடிக் கிடக்கின்றோம்..

கீழடி….  சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து சுமார் பதினொறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்.   சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிறுகிராமம் தமிழர்களின் பெரும் பெருமையை உலகுக்கு  உரக்கச் சொல்லக் காத்திருக்கிறது. ஆனால் அதை கேட்க நாம் தயாராகயில்லை என்பதுதான் சோகம்.

இந்தியா முழுக்க பழங்கால நாகரிகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மத்திய தொல்லியல் துறை கடந்த 2013-14 ஆம்  ஆண்டுகளில்  வைகை நதிப் படுகையில் உருவான நாகரிகத்தைப் பற்றி ஒரு விரிவான கள ஆய்வை நடத்தியது. வைகை நதி துவங்கும் வெள்ளிமலையிலிருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை நதியின் இருபுறமும் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள அனைத்துக் கிராமங்களையும் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய அந்த பகுதியில் சுமார் 293 கிராமங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்களாக  கண்டறியப்பட்டன. அந்த கிராமங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடயங்களும் தொல்லியல் எச்சங்களும் மிக அதிகமாக அடையாளங்காணப்பட்ட கிராமம்தான் கீழடி.


சுமார் நான்கரை கிலோ மீட்டர் சுற்றளவு, நூற்றி பத்து ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய 5,300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இப்போது கிராமமாக நம் கண்முன் நிற்கும் கீழடி ஒருகாலத்தில் மிகப்பெரும் நகரமாக இருந்து வந்தது அந்த பொருட்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இன்றைய நாள்வரை சிந்து சமவெளி நாகரிகம் போல ஒரு பழமையான நாகரிகம் இந்தியாவில் இல்லை என்பதே பல முன்னணி வரலாற்றாசிரியர்களின் எண்ணம். சங்க இலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இருப்பவை எல்லாம் கற்பனையானவை என்பதும் மிகைப்படுத்தப்பட்டவை என்பதுமே அவர்களது கருத்து. ஆனால் அந்தக் கருத்தை சுக்குநூறாக உடைக்கும் வெடியாக இருக்கிறது கீழடி.

சங்க காலத் தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் முதன்முறையாக ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான முழுமையான அடையாளங்கள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன.  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வளர்ச்சி பெற்ற முழுமையான ஒரு நகரம் இப்போது ஆய்வாளர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. வரிசை வரிசையாக கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள் உருவாக்கப்பட்டு அந்த தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளிச் செல்வதற்குமான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அந்தக் கால்வாய் தடத்தை ஒட்டி சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் உள்ளன. இதுபோன்ற அமைப்பை ஒப்பிடுவதற்கு தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ வேறு தொல்லியல் இடங்களே இல்லை என்று அடித்துக் கூறுகின்றனர் தொல்லியல் வல்லுநர்கள்.

கீழடியில் முத்துக்கள், தந்தத்தால் ஆன பல்வேறு பொருட்கள், சதுரங்கக் காய்கள், எண்ணிலடங்கா மணிகள், வணிகர்களின் எடைக் கற்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. மேலும்  கட்டடங்களின் தரைத்தளங்கள், நீண்டு செல்லும் மதில் சுவர்கள், போன்றவற்றுடன் உலர் கழிப்பிடங்கள் போன்ற அமைப்புகள் இருப்பதாகவும் அவற்றை பெண்கள் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. திறந்த வெளியில் மலம் கழித்தல் என்பது இந்தியாவின் தேசிய பிரச்சனையாக பார்க்கப்படும் நிலையில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கழிப்பறை கட்டி வாழ்ந்திருப்பது அவன் சுகாதார அறிவுக்கு எடுத்துக்காட்டு.

இதுதவிர ஆப்கானிஸ்தானப் பகுதியைச் சேர்ந்த சூது பவளத்தினால் ஆன மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும் ,வட இந்திய பிராகிருத பெயர்கள் தாங்கிய எழுத்துக்களும் கிடைத்துள்ளன. பானை ஓடுகளில் இதுவரை 73 பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை எல்லாம் கீழடி வணிகத்தில் சிறந்த நகரமாக விளங்கியுள்ளது என்பதற்கான சான்றுகள்.

இத்துடன், ஒரு தொழிற்சாலை இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற தொழில்நுட்பக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை எங்கும் குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதால் கையால் கொண்டு செல்ல முடியாத திரவம் ஒன்றை வைத்து அந்த தொழிற்சாலை இயங்கியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. கீழடியில் கிடைக்கப்பெற்ற முக்கியமான கருவிகளுள் ஒன்று பானைகளில் எழுதும் எழுத்தாணி. மென்மையான பானை உடையாமல் அதில் எழுத எதைப் பயன்படுத்தினார்கள் என இத்தனை நாளாக இருந்து வந்த விடை தெரியாத கேள்விக்கு விலங்குகளின் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி என்கிற பதில் கிடைத்திருக்கிறது. மொத்தத்தில்  வணிகமும், தொழில்நுட்பமும், கலாச்சாரமும் செழித்தோங்கிய நகரமாக இருந்திருக்கிறது கீழடி..

இதில் பெருமைக்குரிய விஷயம் மதப்பிரிவினைகளை ஏற்படுத்தி தமிழர்களை அழிக்க  நினைப்பவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கிறது கீழடி கண்டுபிடிப்பு என்பதுதான்.  கீழடியில் இதுவரை கிடைத்துள்ள 5,300 பொருட்களில் ஒன்றுகூட மத அடையாளம் சார்ந்த பொருட்கள் இல்லை. இதன்மூலம் பெரு மதங்களின் ஆதிக்கம் அல்லாத அடையாளமே உண்மையான தமிழரின் அடையாளம் என மார்தட்டுகிறது கீழடி. அதே போல் கண்டெடுக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆபரணங்களில் தாலி இல்லை. இதனால் திருமண பந்தம் என்பது இருமனங்களின் நம்பிக்கை சார்ந்ததாகவே அக்காலத்தில் இருந்திருக்க முடியும் என்றும் அந்த நம்பிக்கைகள் உடைந்த பின்பே தாலி போன்ற அடையாள பொருள் ஒன்று இருமன பந்தத்திற்குள் உருவாகியிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கீழடியில் கிடைத்திருக்கும் கட்டடங்களைக் கொண்டு அப்போது வாழ்ந்த மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் ஆராய்ந்து கொண்டிருந்த தொல்லியலாளர்களுக்கு  அங்கு வாழ்ந்த விலங்கு பற்றிய தகவல் ஒன்று கிடைத்தது சுவாரஸ்யமான கதை. கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் ஒன்றில் ஒரு விலங்கின் கால்தடம் பதிந்திருந்தது. அது செங்கல் காய்வதற்கு முன்பாகவே அந்த விலங்கு தெரியாமல் செங்கலை மிதித்திருக்கலாம் என்றும் அதனால் அதன் காலடித்தடம் பதிந்திருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டது. இருப்பினும் அது என்ன விலங்கு என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. ஏனெனில் அதன் கால்தடம் தற்போது உள்ள எந்த விலங்கின் கால்தடத்தோடும் ஒத்துப்போவதுபோல் இல்லை. தொல்லியலாளர்கள் பிரத்யேக ஆய்வுக்கு அதை அனுப்ப முடிவு செய்த நிலையில் அந்த செங்கலைப் பார்த்த அதிகம் படிக்காத ஆனால் வன அறிவு பெற்ற ஒருவர் அது நாயின் காலடி என்று தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் நாய்களைவிட பெரிய நாயாக அது இருக்கவேண்டும் எனக் கூறிய அவர், அது போன்ற நாய்கள் ஐந்து சேர்ந்தால் ஒரு புலியை வீழ்த்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆச்சரியம் நீங்குவதற்கு முன்பாகவே கீழடியின் நாகரிகம் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு ஒரு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் மதுரை நகரம் சங்க இலக்கியங்களில் வரும் மதுரை அல்ல என்று மறைந்த தமிழறிஞர் ராஜமாணிக்கனார் போன்ற தமிழ் ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். ஏனெனில் மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை போன்ற சங்க இலக்கியங்களில் வரும் மதுரை திருப்புவனத்திற்கு மேற்காகவும் திருப்பரங்குன்றத்திற்கு நேற்கிழக்காகவும் அமைந்திருக்கிறது ஆனால் தற்போது உள்ள மதுரை நகரம் திருப்பரங்குன்றத்திற்கு தென்கிழக்கில் அமைந்திருக்கிறது. இதனை சுட்டிக் காட்டி தமிழ் அறிஞர்கள் தங்களது சந்தேகத்தை எழுப்பி வந்த நிலையில், புவியியல் அமைப்புகளைக் கொண்டு பார்க்கும் போது கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்தான் மதுரையாக இருக்க முடியும் என்கிற அனுமானத்திற்கு வரமுடிகிறது.   பழமையான தொல்பொருட்கள் கிடைத்திருக்கும் கீழடியே பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆண்டதும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததுமான மதுரையாக இருக்கலாம் என்கிற கருத்து தற்போது முளைத்துள்ளது. மேலும் சிலப்பதிகாரத்தில் மதுரையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நாலங்காடி, அல்லங்காடி உட்பட பல வணிக முகாம்கள் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்களோடு ஒத்துப் போகின்றன.

இதில் கவனிக்க வேண்டியது இத்தனை அறிய தகவல்களும் வெறும் இரண்டாண்டு ஆராய்ச்சியில் கிடைத்தவை என்பதே. அகழ்வாய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 110 ஏக்கர் பகுதியில் வெறும் ஐம்பது செண்ட்களுக்கு உள்ளாக 102 குழிகள் மட்டுமே தொல்லியல் துறையால் தோண்டப்பட்டுள்ளது. மீதமிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளை ஆராய்ந்தால் இன்னும் பல அதிசயக்கத்தக்க தகவல்கள் நமக்கு கிடைக்கலாம்.ஆனால்  அதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

கீழடியில் 2015 மற்றும் 2016 ஆகிய  இரண்டு ஆண்டுகள் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான அனுமதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதற்கான எந்த காரணத்தையும் அரசு தெரிவிக்கவில்லை. மேலும் மூன்றாவது கட்ட ஆய்வுக்காக நிதி கோரிக்கை அனுப்பி காத்திருந்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அதற்கான காரணம் கேட்ட போது துறைரீதியான நடவடிக்கை என்கிற பதிலே வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு தீர்ப்பாயத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் முறையிட்டார். ஆனால் அவரது முறையீடு குறித்து தீர்ப்பாயம் பரிந்துரை செய்தும் தொல்லியல்துறை அதை இரண்டாவது முறையாகவும் நிராகரித்துள்ளது. முன்னதாக இந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் அமர்நாத்தை கீழடி ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தக் கோரி வழக்கறிஞர் கனிமொழிமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு கீழடி அகழாய்வு சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதிலும் அதை சிறந்த அதிகாரி மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் நீதிமன்றத்திற்கு அக்கறை இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணனே ஏன் பணியில் தொடரக்கூடாது என கேள்வியும் எழுப்பியிருந்தனர்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதியில் ஒரு சதவீத நிலப்பரப்பு கூட ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாத நிலையில் தொடக்கத்தில் இருந்து ஆய்வில் ஈடுபட்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை மத்திய அரசு இடமாற்றம் செய்ததும் அவருக்கு பதிலாக ஜோத்பூரில் புராதனச் சின்ன பராமரிப்பு துணை காப்பாளரான, அமர்நாத்தைவிட அனுபவம் குறைவான ஸ்ரீராமனை கண்காணிப்பாளராக நியமித்திருப்பதும் உள்நோக்கங்கள் அற்ற தற்செயல் நிகழ்வாகவே தமிழர்கள் பார்க்கவிரும்பினாலும், மத்திய அரசின் தொடர் செயல்பாடுகள் அந்த பார்வையை மாற்றும் வகையில் அமைந்து வருவதாக தமிழின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காரணம், குஜராத்தில் உள்ள தொழவீராவில் 13 ஆண்டுகள் அகழாய்வு செய்ய அனுமதித்த மத்திய அரசு. ஆந்திராவில் உள்ள நாகார்ஜூன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்ய அனுமதித்த மத்திய அரசு, அகிசித்ராவில் 6 ஆண்டுகளும், குஜராத்தில் உள்ள லோத்தலில் 5 ஆண்டுகளும் அகழாய்வு செய்ய ஊக்குவித்த மத்திய அரசு, கீழடி ஆராய்ச்சியை மட்டும் இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வருவதின் பின்னணி என்ன என்கிற கேள்வி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கத்தான் செய்கிறது.

-----------------------

ஒரு தொல்லியல் பொருள் எத்தனை ஆண்டு பழமையானது என்பதைக் கண்டுபிடிக்க அதன் கரிமூலப்பொருட்களின் மாதிரியை வேதிப்பொருள் ஆய்வகங்களுக்கு அனுப்பி “கார்பன் – 14 பகுப்பாய்வு எனும் முறையில் ஆய்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் இது போன்ற பொருட்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலைசிஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன. அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14 பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறை முடிவு செய்கிறது.

ராஜஸ்தானில் உள்ள காளிபங்கனில் நடத்தப்பட்ட அகழாய்வில் 28 பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தொழவீராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கிரிசராவில் இருந்து 15 பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் இரண்டே இரண்டை மட்டும்தான் கார்பன் – 14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் 10 பொருட்களின் மாதிரியையாவது ஆய்வுக்கு அனுப்பினால்தான் பொருட்களின் உண்மைதன்மையை அறியமுடியும் என்பது தொல்லியலாளர்களின் கருத்து.

கீழடியில் அகழாய்வு தொடங்கப்பட்ட போது குஜராத்தில் உள்ள பிரதமர் மோடியின் சொந்த ஊரான வாட் நகரிலும் இராஜஸ்தானில் உள்ள பிஞ்ஜோர் எனும் இடத்திலும் அகழாய்வுகள் தொடங்கப்பட்டன.. இம்மூன்று இடங்களிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகழாய்வு நடந்து முடிந்த நிலையில் வாட் நகரில் 2017 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மூன்றாம் கட்ட ஆய்வுக்கான தொடக்க நிகழ்ச்சி 2016 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதியே கொண்டாடப்பட்டுவிட்டது. பிஞ்ஜோரில் ஜனவரி 1 ஆம் தேதி துவக்க விழா நடந்தது. ஆனால் கீழடியில் மட்டும் ஆய்வு செய்ய அப்போது அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் கீழடிக்காக குரல் கொடுத்து போராட்டங்களை முன்னெடுத்தன. மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகமானதை அடுத்து , 2 ஆண்டுகள் நடை பெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்த பின்பே ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் எனவும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து வாட் நகரிலும், பிஞ்ஜோரிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து அறிக்கை அளிக்கப்பட்ட பின் தான் தொடங்கப்பட்டனவா என்கிற தமிழரிஞர்களின் கேள்விக்கு மத்திய பாஜக அரசு மெளனம் சாதித்தது. இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் ஆய்வறிக்கை தயாரான பின்னும் மத்திய அரசுக்கு அகழாய்வை தொடங்கும் திட்டமிருப்பது போல் தெரியவில்லை. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு குரல் எழவே, மார்ச் மாதம் அனுபவம் குறைவான அதிகாரியை கொண்டு மூன்றாம் கட்ட ஆய்வு பணிகளை அது தொடங்கியுள்ளது.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறிய கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற மத்திய அரசு, விஞ்ஞானப் பூர்வமான ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட கீழடியில் ஆய்வைத் தொடர ஒத்துழைக்க மறுக்கிறது. அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க முதல்கட்டமாக 225 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள இந்த அரசு தான் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ரூ. 1 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.

தமிழக அகழ்ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணிப்பது முதல் முறை அல்ல. கடந்த 2005 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் மற்றும் அறிக்கைகள் தற்போது வரை வெளிவரவில்லை. சிந்து சமவெளி நாகரிகத்துடன் நேரடி தொடர்புடைய பல பொருட்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள நிலையில் அதன் ஆய்வறிக்கையைப் பெற்று வெளியிட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்படி அகழாய்வு முடிந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் அறிக்கையை வெளியிட முயற்சி செய்யாத தொல்லியல் துறை, அகழாய்வு நடந்து கொண்டிருக்கும் இடத்தில் அறிக்கையைக் கேட்டு அகழாய்வை நிறுத்தியதற்கு ஒரே நோக்கம்தான் இருக்கமுடியும் என்பதை இந்தி திணிப்புக்கு எதிராக கொதித்தெழுந்த  தமிழர்களுக்கும், தங்களது அடையாளங்களுள் ஒன்றான ஜல்லிக்கட்டுக்காக ஆர்ப்பரித்தெழுந்த தமிழ் நெஞ்சங்களுக்கும் சொல்லி விளங்கவைக்க வேண்டியது இல்லை.

தங்களது அடையாளங்களை அழிக்க நடத்தப்பட்ட படையெடுப்புகளைக் கடந்து தமிழர்கள் தங்களை தக்கவைத்துக் கொண்டு வாழ்ந்ததற்கு அடையாளங்கள் தமிழகமெங்கும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அதில் கீழடியைப் போல் முக்கியமான மற்றொரு சாட்சியம் கொடுமணல். தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கொடுமணலில் பல்வேறு ஆயுதங்கள், ஆபரணங்கள், ரோமானியர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இவற்றுடன் ஐநூறுக்கும் மேற்பட்ட சுடு மண் பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு கிடைத்த சுடுமண் பானைகளில் கிறுக்கல்களாக பல எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றை வேதியல் ஆய்வுக்கு உட்படுத்திய போது அவையெல்லாம் கி.மு. ஆறு அல்லது ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதுவரை இந்தியாவில் நடைபெற்ற எந்த அகழ்வாராய்ச்சியிலும் எழுத்துகள் பொறித்த பானைகள் இந்தளவு கிடைத்தது இல்லை. இந்தியாவிலேயே தொன்மையான கல்வெட்டாக கருதப்படுவது பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட அசோகரின் பாறை சாசனங்கள்தான். அவற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அசோக பிராமி என்று குறிப்பிடப்படுகிறது. அசோகரின் கல்வெட்டுகள் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதனால் பிராமி எழுத்துதான் இந்தியாவில் முதலில் தோன்றிய எழுத்தாக இருக்கலாம் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கணிப்பை காணாமல் போகச் செய்யும் அளவுக்கு இருந்தன கொடுமணல் கண்டுபிடிப்புகள். அவற்றில் இருந்தவை அசோகர் பிராமி அல்ல என்பதும் முழுக்க முழுக்க தமிழர்களைச் சார்ந்த தமிழ் பிராமி என்கிற தமிழி எழுத்துக்கள் என்பதும் வரலாற்றை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க நிர்பந்தித்துள்ளது.

தமிழி என்கிற நம் தமிழர்களின் எழுத்து பழமையானதுதான் என்பதைக் குறிக்க பல நூல்களிலும் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பன்னவயன சுத்தா மற்றும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமவயங்க சுத்தா, ஆகிய சமண நூல்கள் 18 வகை எழுத்துகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் தமிழியும் ஒன்று. புத்தரின் கதையைக் கூறும், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக முக்கிய பெளத்த நூலான "லலிதவிஸ்தாரா"வில் திராவிட லிபி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திராவிட லிபி என்பது தமிழிதான் என செக் நாட்டில் பிறந்து தமிழறிஞராய் வாழ்ந்து மறைந்த கமில் சுவெலபில் குறிப்பிட்டுள்ளார்.

அசோகர் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு என்று வரையறைசெய்யப்பட்டுள்ள நிலையில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழ் மக்கள் தங்களுக்கென தனியான ஒரு மொழியைக் கொண்டு எழுதியுள்ளார்கள் என்பது நிரூபணமானால் இந்தியாவிலேயே முதன்முதலில் எழுத்தறிவு பெற்றவர்கள் தமிழர்கள்தான் என்பது சிலரது அரசியலுக்கு எதிரானதாய் நிற்கும் என்பதால் அதை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். அதே சிலர்தான் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை விட பழமையானவை அல்ல என ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.கடல்கொண்ட பூம்புகாரின் கீழ் பொதிந்து கிடந்த தமிழரின் உண்மை அடையாளமே வெளிப்பட்டுள்ள நிலையில் வெள்ளிடைமலையான கீழடியை அவ்வளவு எளிதில் மறைத்துவிட முடியாது. இருப்பினும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பத்திரப்படுத்தப்படுமா என்கிற அச்சம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களைக் காக்க இந்தியாவெங்கும் 44 கள அருங்காட்சியகங்கள் மத்திய தொல்லியல் துறையின் கீழ் இருக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் இருப்பதோ ஒரே ஓர் அருங்காட்சியகம் மட்டுமே; அதுவும் சென்னை கோட்டைக்குள் இருக்கிறது. கர்நாடகத்தில் ஆறு மத்திய கள அருங்காட்சியகங்களும், ஆந்திராவில் நான்கு அருங்காட்சியகங்களும் உள்ளன. கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்கள், அந்தத் துறையின் மைசூர் கிட்டங்கிக்குக் கொண்டு செல்லப்படும் அதன்பின் அது நமக்கு எட்டாக்கனியே. ஏற்கனவே தமிழகத்திலிருந்து படியெடுக்கப்பட்ட பல்லாயிரம் கல்வெட்டுக்கள் மைசூரில்தான் இருக்கின்றன. அவற்றை நமது பல்கலைக்கழகங்களாலேயே அணுகவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ இயலாத நிலைதான் இன்று வரை நீடிக்கிறது.

இந்த நிலையில்தான் கீழடி அகழாய்வில் கிடைத்தப் பொருட்களை இங்கே கள அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசிடம் பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உரியது. ஆனால், தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் மாநில அரசு வழக்கம் போல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கள அருங்காட்சியம் அமைப்பதைப் போலவே அரசு செய்து முடிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விசயம். இந்த அகழ்வாராய்வுகளை துரிதப்படுத்துவது. இந்த ஆராய்ச்சிகள் தாமதப்படுத்த நமது அடையாளங்களை நமது அறியாமையால் நாமே அழித்து வருகிறோம். விவசாய வீழ்ச்சியாலும், ரியல் எஸ்டேட் தொழில் பெருக்கத்தாலும் பல அரிய பொக்கிஷங்கள் அடங்கிய நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாகவும் கட்டடங்களாகவும் மாறி வருகின்றன. கீழடி நிலம் கூட அது தென்னை மர  தோப்பு என்பதால் மட்டுமே ஆய்வுக்கு பயன்படுத்த முடிந்தது. இதனால் வேகமாக கட்டடமாக மாறிவரும் பகுதிகளை உடனே ஆய்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

கீழடியில் கிடைத்துள்ளவை உண்மையிலேயே பழமையானதா இல்லையா எனற விவாதங்களை தொல்லியல் அறிஞர்கள் செய்துகொள்வதே சரி. ஆனால், அகழாய்வை அனுமதிக்க மாட்டோம் என்ற அரசியல் ரீதியான முடிவை அரசியல் கொண்டு எதிர்கொள்ள தமிழர்கள் தயாராக வேண்டும். தமிழர்களின் அடையாளங்களை நாகரீகங்களையும் பாடத்திட்டங்களில் சேர்த்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கமும் எழுந்து வருகிறது. சிறு குழந்தைகளுக்கு நாகரிகத்தை கற்றுக் கொடுக்கும் போது அது எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பதையும் போதிக்கவேண்டும். நாம்  நண்பர்களோடு சேர்ந்து வடநாட்டு உணவகத்திற்கு சென்று ராஜஸ்தான் தாலி வாங்கி வயிறு நிறைய சாப்பிடும் அதே வேளையில் முதுமக்கள் தாழி குறித்த உரையாடலை தொடங்கவேண்டும். இடிக்கவேண்டிய தீண்டாமை சுவர்களை எல்லாம் இன்னும் இடிக்காமல் வைத்திருக்கும் நம் சமூகம் காக்க வேண்டிய தமிழர் அடையாளத்தை பிறர் தகர்க்க விடுவது சரியா?

(( நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்காக அந்த ஊடகத்தின் நிர்வாக விதிகளுக்கு உட்பட்டு எழுதப்பட்டது))

Friday, August 11, 2017

தவறவிட்ட தலைவன்










((இந்தக் கட்டுரை அப்துல்கலாமின் நினைவு தினத்தன்று நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக எழுதப்பட்டது. காட்சி ஊடக சுதந்திரத்திற்கு உட்பட்டு எழுதப்பட்டது என்பதால் வார்த்தைகள் மென்மையாக பயன்படுத்தப்பட்டிருந்தால் இதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவையே... ))




நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுகளுடன்
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.







இந்தக் கவிதை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் எழுதியது. இதை அவர் முதன்முதலில் கூறிய இடம், 1957 ஆம் ஆண்டு நடந்த சாதி கலவரத்தால் இன்றளவும் அடையாளப்படுத்தப்பட்டு வரும் முதுகளத்தூர். அங்கே இருந்த பள்ளி ஒன்றில் உரையாற்றிய அப்துல்கலாம் இந்த கவிதையை வாசிக்கும் போது அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களையும் தன்னோடு சேர்ந்து இந்த கவிதையைப் பாடச் சொன்னார். அத்தனை மாணவர்களும் அவரது வார்த்தையை பின்பற்றினர். அந்தக் கவிதையில் இருந்தது போலவே அவர் கடைசிவரை தன் கனவுகளுடன் பறந்து கொண்டே இருந்தார்.


1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி சாதாரண ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த அவுல் பக்கிர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், 2015 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அடைந்த உயரம் யாரும் கனவிலும் எண்ணிப்பாராதது. ஆனால் விஞ்ஞானத்தை தனது சிந்தையிலும் அன்பை தனது நெஞ்சிலும் சுமந்து பறந்து கொண்டேயிருந்த கனவு காதலனுக்கு அது மிகச் சாதாரணமாக சாத்தியமானது.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாக தேச சேவையாற்றிய அப்துல்கலாம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தனக்கு விருப்பமான ஆசிரியர் பணியை மேற்கொண்டிருந்தார்.


அண்ணா பல்கலைக்கழக வளாக இயற்கை சூழலும் மாணவர்களுடனான உரையாடலும் அவரை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருந்தன. அப்துல் கலாம் எடுக்கும் வகுப்பின் மாணவர்கள் எண்ணிக்கை 60தான் என்ற போதும் அவர் பாடம் நடத்தும் போதெல்லாம் 350க்கும் குறையாமல் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதற்கு காரணம் பாடத்துடன் தான் ஒரு விஞ்ஞானியாக இந்திய அரசுக்காக பணியாற்றிய போது நடந்த நிகழ்வுகளை அப்துல் கலாம் சுவாரஸ்யமான கதைகளாக கூறுவதுதான். எஸ்.எல்.வி. 3 யை ஏவும் போது என்ன பிரச்னை வந்தது?, 1998 ஆம் அணு குண்டு சோதனையை நிகழ்த்திய போது அங்கிருந்தவர்களின் மனநிலை என்ன?. 2020 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசாக என்ன செய்ய வேண்டும்? என கலாம் பாடத்திற்கு வெளியே பேசும் விசயங்களால் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு மட்டுமல்ல பேராசிரியர்களுக்கும் அவர் விருப்பத்திற்குரிய நபராக இருந்தார்.


2002 ஜூன் 10 ஆம் தேதி அன்று VISION TO MISSION என்கிற தலைப்பில் பாடம் எடுத்த அப்துல் கலாமிடம் மாணவர்கள் சரமாரியாக சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அனைவருக்கும் பொறுமையாக விளக்கிவிட்டு அப்துல் கலாம் வகுப்பை விட்டு வெளியேறினார். அப்போதுதான் தனது ஒரு மணி நேர வகுப்பு இரண்டு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருந்ததை உணர்ந்தார். பிறகு சில ஆராய்ச்சி மாணவர்களுடன் சென்று மதிய உணவு உண்டார். உடனே தனது அறைக்கு செல்லாமல் பல்கலைகழக வளாகத்தின் ஒரு இடத்தில் அமர்ந்து அடுத்த வகுப்பிற்கான தயாரிப்பில் இறங்கினார். தயாரிப்பை முடித்துவிட்டு அப்துல்கலாம் தனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி எதிரில் வந்தார். பரபரப்பான முகத்துடன் கலாமின் அறையில் இருக்கும் தொலைபேசிக்கும் அவரது அலைபேசிக்கும் எக்கசக்க அழைப்புகள் வந்ததாகவும் கலாமை அனைவரும் வெகுநேரமாக தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அப்போதுதான் கலாம் தனது செல்போனை அறையிலேயே வைத்துவிட்டதை உணர்ந்தார். தொலைப்பேசிக்கான காரணம் கலாநிதிக்கு தெரியாததை அடுத்து தனது அறைக்கு விரைந்தார் அப்துல்கலாம். அப்போது ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியை அவசரமாக எடுத்தார்.




”பிரதமர் உங்களுடன் பேச விரும்புகிறார். அலைபேசி அருகிலேயே இருங்கள்” என்றது ஒரு குரல். பிரதமரின் அழைப்புக்காக காத்திருந்த நேரம் அப்துல்கலாமின் அலைபேசிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்ற அப்துல்கலாமிடம் “பிரதமர் தங்களை சிறிது நேரத்தில் அழைப்பார். அவர் என்ன கேட்டாலும் சரி என்று சொல்லுங்கள்.. தயவு செய்து மறுத்துவிடாதீர்கள்” என்றார் சந்திரபாபு நாயுடு. அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து அழைப்பு வந்தது.


வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்ததும் ஒரு முக்கியமான செய்தி சொல்லவே அழைத்தேன் என்று கூறிய பிரதமர் வாஜ்பாய் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் அப்துல்கலாம் குடியரசு தலைவராக வேண்டும் என்று ஒருமனதாக விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து அப்துல்கலாமின் பதிலுக்கு காத்திராமல் குடியரசு தலைவருக்கான வேட்பாளரை அன்று இரவே அறிவிக்க வேண்டும் என்பதால் முடியாது என்று சொல்லவேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனைக் கேட்டு சின்ன அதிர்ச்சியில் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்த அப்துல்கலாமிடம் தங்கள் கூட்டணியில் 12 கட்சிகள் உள்ள நிலையில் ஒருமனதாக ஒருவரை தேர்ந்தெடுப்பது என்பது கடினமான ஒன்று என்றும் வாஜ்பாய் விளக்கினார். முடிவெடுக்க முடியாமல் திணறிய அப்துல்கலாம் ”வாஜ்பாய் எனக்கு இரண்டு மணி நேரம் அவகாசம் தாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார். ஆம் பிரதமரை பெயர் சொல்லி அழைக்கும் அளவில் அவருக்கு நெருக்கமானவராக இருந்தார் அப்துல்கலாம்.


அடுத்த இரண்டு மணி நேரம் தனது வாழ்விலேயே தான் அதிகம் குழம்பிய நேரம் என தெரிவித்துள்ளார் அப்துல் கலாம். அப்துல் கலாம் முன்பாக இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று தான் விரும்பிய அமைதியான ஆசிரியர் பணியை மேற்கொண்டு, மாணவர்களை அறிவில் சிறந்த இளைஞர்களாக உருவாக்குவது, அல்லது தினம் தினம் சிக்கல்களை எதிர்கொள்ள நேரும் குடியரசுதலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இளைஞர்களை லட்சியவாதிகளாக்கி 2020க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவது. இரண்டு மணிநேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டார். தனக்கு தெரிந்த அனைவரிடமும் கருத்து கேட்டார். இரண்டு மணி நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. “திரு.வாஜ்பாய், எதிர்கட்சிகளும் என்னை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க விரும்பினால் நான் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தயார்” என்றார் அப்துல்கலாம். ஐந்து நிமிடத்தில் குடியரசு தலைவருக்கான வேட்பாளரை பாஜக அறிவித்தது. பதினைந்து நிமிடத்தில் தேசம் எங்கும் அப்துல்கலாமின் பெயர் உச்சரிக்கப்பட்டது. அன்று இரவே சோனியா காந்தியை சந்தித்த வாஜ்பாய் அப்துல்கலாமை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தங்களது கட்சியினருடனும் கூட்டணி கட்சியினருடனும் ஆலோசித்த சோனியா காந்தி அப்துல் கலாமை ஆதரிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் அப்துல்கலாமை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் தளபதியாக இருந்த கேப்டன் லக்‌ஷ்மி சாகலை தங்களது கட்சி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தியது.

அப்துல்கலாம் சிறந்த விஞ்ஞானி என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அரசியல் குறித்து அவருக்கு என்ன தெரியும் என கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் தன்மீது விழுந்துள்ள மதவெறி அடையாளத்தை துடைத்துக் கொள்ள இஸ்லாமியரான அப்துல் கலாமை பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதில் உண்மையும் இருக்கத்தான் செய்தது.

தற்போதைய பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்து இஸ்லாமியர்களுக்கு இடையே மதகலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 254 இந்துக்களும் சுமார் 800 இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டதாக அரசு தெரிவித்தது . ஆனால் 2000க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அறிவித்தன. இதுதவிர கர்ப்பிணி பெண்கள் உட்பட பல்வேறு இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்களும், கைக் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரங்களும் நிகழ்ந்தேறின. இச்சம்பவங்களால் இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்த நிலையில் பாஜக அரசு மீது மதவெறிச் சாயம் அழுத்தமாக படிந்திருந்தது. இச்சம்பவத்தை தேசிய அவமானமாக கருதிய வாஜ்பாய் இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வேன் என்று நிவாரண முகாம்களில் வெளிப்படையாக கேட்டார். மேலும் இதற்கு பொறுப்பேற்று அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.


ஆனால் அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால் கிருஷ்ண அத்வானி குஜராத் முதல்வராக மோடியே தொடரவேண்டும் என வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மேலும் பல அமைச்சர்கள் இருந்ததை அடுத்து பாஜக மீதான மதவெறி சாயத்தை போக்க அப்போது வரவிருந்த குடியரசு தலைவர் தேர்தலில் இந்து அல்லாத ஒருவரை குடியரசு தலைவராக்க வேண்டும் என விரும்பினார் வாஜ்பாய். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய கிறிஸ்துவரும் மகாராஷ்டிராவின் அப்போதைய ஆளுநருமான பி.சி.அலெக்சாண்டரின் பெயர் குடியரசு தலைவர் தேர்தலுக்காக முன்மொழியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊடகங்கள் பி.சி.அலெக்சாண்டரின் வாழ்க்கை குறிப்புகளை வெளியிடத் தொடங்கின. கிட்டத்தட்ட பி.சி.அலெக்சாண்டர்தான் பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் என உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த முடிவுக்கு முட்டுக் கட்டை போட்டார் மறைந்த பாஜக மூத்த தலைவர் பிரமோத் மகாஜன். கிறிஸ்துவர் ஒருவரை குடியரசுத்தலைவராக ஆக்கினால் அது பின்னாளில் கிறிஸ்துவரான சோனியாகாந்தி பிரதமராக மறைமுகமாக உதவி செய்யும் என்று கூறினார். திருப்பதி உள்ளிட்ட இந்து கோயில்களுக்கு சென்று தான் எல்லா மதத்திற்குமானவர் என சோனியா காந்தி நிறுவ முயன்று வந்த காலத்தில் பிரமோத் மகாஜனின் கூற்றை ஏற்றது பாஜக. இதனையடுத்து பி.சி. அலெக்சாண்டரை வேட்பாளராக அறிவிக்கும் முடிவை கைவிட்டதும் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த கிரிஷன் காந்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.


சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருபவரும் தற்போது ஐ.ஐ.டி என்று அழைக்கப்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருமான அவருக்கு ஆதரவு அதிகரித்தன. ஆனாலும் மாற்று மதத்தினர் ஒருவர் குடியரசு தலைவராக வேண்டும் என்று விரும்பிய பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமியர் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தது. அப்போதைய தலைமை நீதிபதி ஏ.எம்.அஹமதி உட்பட பலரது பெயரும் இடம் பெற்றிருந்த பட்டியலில் வாஜ்பாய் தேர்வு செய்த பெயர் அப்துல் கலாம். ஆனால் இப்பெயரை முன்மொழிந்த அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸுக்கே கலாம் இதற்கு சம்மதம் தெரிவிப்பார் என்கிற நம்பிக்கை இல்லை. ஆனால் அப்துல்கலாமின் பெயருக்கு மட்டுமே அத்வானி உட்பட பலரும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்தனர். அப்துல்கலாமின் பெயரை பாஜக முன்மொழிவதை விட வேறு மதசார்பற்ற தலைவர் ஒருவர் முன்மொழிந்தால் நன்றாக இருக்கும் என யோசனை கூறினார் பிரமோத் மகாஜன். சில நாட்களுக்கு முன்பு சோனியா காந்தியுடன் மனக்கசப்பில் இருந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் அப்துல்கலாமின் பெயரை கூறினார். ஆனால் ஊடகங்கள் உட்பட யாரும் அப்துல்கலாமின் பெயரை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அப்துல்கலாமின் பெயர் அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.




ஜூன் 18 ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த அப்துல்கலாமிடம் பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி அணுகுண்டுகளை வீசினர். எல்லாவற்றுக்கும் சிரித்துக் கொண்டே பதிலளித்த கலாம் குஜராத் கலவரம், ஆயோத்தி ராமர் கோயில் பிரச்னை குறித்த கேள்விகளுக்கு கல்வியும், பொருளாதார வசதிகளும் முறையாக அனைவருக்கும் சென்று சேர்ந்திருந்தால் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்துவிடும் என்று கூறினார்.

2002 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. மூன்று நாட்களுக்கு பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாகின. பாஜக, காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாதி உள்ளிட்ட பலம் பொருந்திய கட்சிகளின் ஆதரவை பெற்ற அப்துல்கலாம் ஒன்பது லட்சத்து 22,884 ஓட்டுகள் பெற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கேப்டன் லக்‌ஷ்மி சாகல் ஒரு லட்சத்து 7,366 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். திரிபுரா , மேற்கு வங்கத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களின் பெருவாரியான ஆதரவோடு சுதந்திர இந்தியாவின் பதினொன்றாவது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



2002 ஜூலை 25 ஆம் தேதி குடியரசு தலைவர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட பாராளுமன்ற செண்ட்ரல் ஹாலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் தவிர நூறு பேர் மட்டுமே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியும். தனது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே 37 பேர் உள்ள நிலையில் எண்ணிக்கையை நூற்றி ஐம்பதாகவாவது உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அப்துல்கலாம். எண்ணிக்கை உயர்த்தப்பட்டதும் தனது நெருங்கிய நண்பர்களில் முக்கியமானவர்களை மட்டும் விழாவுக்கு அழைத்தார். அப்துல் கலாமின் இயற்பியல் ஆசிரியர் உட்பட ஆசிரியருகளும் ராமேஸ்வரத்தில் உள்ள கோயில், சர்ச், பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் கலந்து கொண்டனர். இது தவிர இந்தியா முழுவதும் இருந்து சுமார் நூறு பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டனர். இதனால் அந்த இடமே வெப்ப மண்டலமாக இருந்ததாக பின்னாளில் அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்.


குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் கொன்றழிக்கப்பட்டதை மறைக்கவே அப்துல்கலாம் குடியரசு தலைவர் ஆக்கப்பட்டுள்ளார் என்கிற கருத்து பரவலானதை அடுத்து குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முடிவெடுத்தார் அப்துல்கலாம். இதுகுறித்து அறிந்த அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கொந்தளிப்பான இந்த காலகட்டத்தில் குஜராத் செல்ல முடிவெடுத்திருக்கிறீர்களா என அப்துல்கலாமிடம் கேட்டார். அதற்கு குஜராத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதல் குடிமகனாக ஆறுதல் கூறவேண்டியது தனது முதல் பெரும் கடமையாக கருதுவதாக பதிலளித்தார் அப்துல்கலாம். தற்போதை சூழலில் குஜராத் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய வாஜ்பாய், அப்படி கலாம் மக்களுக்கு ஆறுதல் சொல்லப் போனால் நரேந்திர மோடி குடியரசு தலைவரின் வருகையை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளதாக கூறினார். குடியரசு தலைவராக செல்லும் முதல் பயணமே அம்மாநில அரசின் ஒத்துழையாமையோடு நடக்க வேண்டாம் என வாஜ்பாய் கேட்டுக் கொண்டதை கலாம் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் மதக்காரணங்களுக்காகவும் வாழ்க்கை முறை வேறுபாடுகளுக்காகவும் சட்டத்திற்கு புறம்பாக வன்முறையில் ஈடுபடுவதை என்ன காரணம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று பின்னாளில் குஜராத் சம்பவம் குறித்து கலாம் தெரிவித்துள்ளார்.


குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின் இந்தியாவில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று சிறப்புரை ஆற்றத் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு தரப்பு மாணவர்களை சந்தித்து அவர்களை கனவு காணச் சொல்லி ஊக்கப்படுத்தினார். மாணவர்களின் ஆதர்சமாக மாறத் தொடங்கினார். மாணவர்களும் அவரை ஓவியத்திலும் கவிதைகளிலும் வடித்து கொண்டாடினர். அவரது எளிய வாழ்வு மக்களின் மனதில் அவருக்கு ஒரு தனியிடத்தை தரச் செய்தது. அப்துல்கலாமிற்காக ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டன. நடிகர் அல்லாத ஒருவருக்காக பட்டி தொட்டி எங்கும் ரசிகர் மன்றங்கள் உருவாயின என்றால் அது ABJ அப்துல் கலாம் அவர்களுக்கு மட்டும்தான். சினிமாவிலும் அப்துல்கலாமை பற்றி உயர்வாக பேசும் வசனங்களும் பாடல்களும் இடம்பெற்றன.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தனது பேச்சால் முத்திரை பதித்தார். ஐ.நா.வில் அவர் ஆற்றிய உரை இன்றளவும் வைரலாகி வரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உந்து சக்தியாகவும் விளங்கினார் கலாம். தான் பைலட் ஆக வேண்டும் என்று 1958 ஆம் ஆண்டு முயன்று அதில் தோல்வியுற்ற கலாம் தனது 74 வயதில் குடியரசு தலைவரான பின்னர் போர்விமானமான SU -30 MKI FLANKER விமானத்தை முப்பது நிமிடங்கள் ஓட்டி தனது கனவை நிறைவேற்றிக் கொண்டார்.

இந்தியாவின் குடியரசு தலைவராக அவர் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2005 ஆம் ஆண்டு பீகார் மாநில அரசை கலைக்கவேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்தது. அதில் அப்துல்கலாமிற்கு உடன்பாடு இல்லாததால் அவர் மறுத்துவிட்டு ரஷ்யா சுற்றுப்பயணம் புறப்பட்டார். ஆனால் பீகார் அரசு கலைக்கப்படுவதில் கெடுபிடி காட்டிய மன்மோகன்சிங் அரசு ரஷ்யாவில் இருந்த அப்துல்கலாமிடம் வற்புறுத்தி ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் பெற்றனர். ரஷ்ய குளிரில் இரவு நேரத்தில் தனது மனவிருப்பத்திற்கு எதிராக கையொப்பமிட்டார் கலாம். ஆனால் சில மாதங்களிலேயே ஆட்சி கலைப்பு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பெழுதியது. இதனையடுத்து தான் எடுத்த முடிவுக்கு பொறுப்பேற்று பதவி விலக முடிவு செய்த அப்துல்கலாமை அவரது மூத்த சகோதரர்தான் சமாதானம் செய்தார் என்கிறார் அப்போது கலாமின் பத்திரிகை செயலாளராக இருந்த எஸ்.எம்.கான்.


குடியரசு தலைவராக பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் குறிப்பிட்ட ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்காக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். அப்துல் கலாம். அது ஆதாயம் தரும் பதவி தொடர்பான சட்ட மசோதா. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வாரியத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகிப்பது வழக்கம். இவற்றில் பெரும்பாலானவை சம்பளத்துடன் கூடிய பொறுப்புகள் என்கிற காரணத்தால் ஆதாயம் தரும் பதவிகளாக இவை கருதப்படுகின்றன. ஆதாயம் தரும் பதவிகளில் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் இருக்கக் கூடாது என்பதால் பல எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும் நிலை உருவானது. இதே காரணத்திற்காக அமிதாபட்சனின் மனைவி ஜெயாபச்சனின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சோனியா காந்தி தான் வகித்து வந்த எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க நேர்ந்தது.

சோனியா காந்தியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கும் எம்.பிக்களின் பதவிகளைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. பின்னர் இந்த மசோதா, குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சட்ட மசோதா குறிப்பிட்ட சில எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஆதாயம் அடைவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது எனக் கருதி அப்துல் கலாம் மசோதவை திருப்பி அனுப்பினார். இதனால் அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சட்ட மசோதாவில் எந்த திருத்தம் செய்யமுடியாது என்று கூறி விட்ட மத்திய அரசு அதே மசோதாவை எந்த மாற்றம் இல்லாமல் மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. பின்னர் மீண்டும் மசோதா அப்துல் கலாமின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 2 வது முறையாக தன்னிடம் அனுப்பப்படும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அரசியல் சாசன சட்டத்தில் உள்ளதால், இந்த முறை அப்துல்கலாம் உடனே ஒப்புதல் அளித்து விடுவார் என மத்திய அரசு எதிர்பார்த்தது.

ஆனால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தார் கலாம். மேலும் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி வி.என்.காரேவிடமும் ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகளிடமும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பீகார் ஆட்சிக் கலைக்கப்பட்ட விவகாரத்தால் வருத்தமடைந்திருந்த கலாமுக்கு இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க மனம் ஒப்பவில்லை. இதனால் தனது குடியரசு தலைவர் பதவியையே ராஜிநாமா செய்துவிடலாமா என்று மீண்டும் யோசித்துள்ளார் அப்துல் கலாம். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், அப்துல் கலாமை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். வேறு வழியின்றி அந்த மசோதாவிற்கு கலாம் ஒப்புதல் வழங்க முன் தேதியிட்டு அந்த மசோதா அமல்படுத்தப்பட்டதால் அப்போதைய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட 40 எம்.பிக்களின் பதவி தப்பித்தது. ஆதாய பதவி மசோதா மட்டுமல்ல மேலும் பல மாநிலங்களின் மசோதாவை அப்துல்கலாம் ஜனநாயகத்திற்கு எதிரானது என திருப்பி அனுப்பியுள்ளார். அவற்றில் இரண்டு முக்கியமானவை. முதலாவது குஜராத் தீவிரவாத தடுப்பு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற தடுப்பு மசோதா’ தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டு, அதை ஆதாரமாக பயன்படுத்த வகை செய்துள்ள இந்த சட்ட மசோதாவை பரிசீலனை செய்யுமாறு அப்போதைய முதல்வர் மோடி அரசுக்கு திருப்பி அனுப்பினார் கலாம். அதே போல் கடந்த 2002ம் ஆண்டில் அதிமுக அரசு அனுப்பிய சட்ட மசோதாவையும் கலாம் திருப்பி அனுப்ப நேரிட்டது. இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்குகளில் கைதானவர்களை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இதை 30 நாட்களாக உயர்த்த தமிழக அரசு முயன்றது அப்படி மாற்றினால் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெறும் எனக் கூறி கலாம் தனது ஒப்புதலை வழங்க மறுத்துவிட்டார்.

கலாமின் மேல் வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு அவர் குடியரசு தலைவராக இருந்த போது அவரிடம் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் மீது அவர் முடிவெடுக்கவில்லை என்பதுதான். அவரது பதவிகாலம் முடியும் தருவாயில் அவரிடம் வந்த 28 கருணை மனுக்களில் இரண்டு மனுக்களில் மட்டுமே முடிவெடுத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற தனஞ்சாய் சேட்டர்ஜி என்பவரின் கருணை மனுவை நிராகரித்த அப்துல்கலாம், 2006 ஆம் ஆண்டு தனது மனைவி, மகள்கள், மற்றும் உறவினர் ஒருவரை கொன்ற கேரஜ் ராம் என்பவருக்கு மரண தண்டனையை ரத்து செய்தார்.

தனது பதவி காலத்தில் மூன்று முறை மரணதண்டனைகளுக்கு எதிராக குரல் கொடுத்த அப்துல்கலாம் 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தண்டனையை மறுபரீசலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் மரண தண்டனை விதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் விளிம்புநிலையில் இருப்பவர்களாகவே இருப்பது ஏன் என அப்துல் கலாம் எழுப்பிய கேள்விகள் பத்திரிகைகளில் வெளியாகி அரசையும் நீதித்துறையையும் சலசலக்கவைத்தன.

இதற்கிடையில் நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட அப்சல் குரு , எந்தவொரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்ற போதிலும் இந்திய மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்தி படுத்த மரணதண்டனை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு சில மாதங்களுக்குப் பிறகு அப்சல் குருவின் குடும்பத்தினரை சந்தித்த அப்துல்கலாம் கருணை மனு அனுப்பினால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து அப்சல் குருவின் மனைவி கருணை மனு அனுப்பினார். ஆனால் அந்தக் கருணை மனு அப்துல்கலாம் பதவியை விட்டு விலகும் வரை குடியரசு தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படவேயில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மிகவும் ரகசியமாக அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டது தனி வரலாறு. இதனாலேயே கருணை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டார் அப்துல்கலாம். கருணை மனுக்களில் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தத் தொடங்கினார். பலர் அந்தக் காரணத்திற்காகவே மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


அவர்களில் 1993 தில்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய தேவிந்தர் பல்சிங் புல்லர், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்ட முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இப்படி மனிதநேயனாய், கனவு நாயகனாய் அறியப்படும் அப்துல் கலாம் மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தின் மீனவர்கள் இலங்கை அரசால் சுடப்படும் போதும் படகுகளை உடைக்கப்பட்டு துன்புறுத்தப்படும் போது அதுகுறித்து நடவடிக்கை எடுக்கமுடியாது என்றாலும் குறைந்த பட்சம் குரல் கூட எழுப்பவில்லை என்கிற குற்றச்சாட்டு முக்கியமானது. அடுத்தது எந்த மாணவர்கள் அவரை பெரும் பொக்கிஷமாக நினைத்தார்களோ அந்த மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு பெரும் வியாபார சுழலில் சிக்கி சீரழிவது குறித்து அவர் எப்போதும் வாய்திறக்கவில்லை என்பது. மேலும் இந்தியாவின் அணுசக்தி உரிமைகளை பறிக்கும் அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை ஆதரித்தது, கூடங்குளத்தை ஆய்வு செய்வதற்கு முன்பாகவே அது பாதுகாப்பானது எனவும் அது தேவை எனவும் கூறியது அப்துல்கலாம் முக்கிய பிரச்னைகளில் மக்களின் பக்கம் நில்லாமல் அரசின் பக்கம் நின்றார் என்கிற குற்றச்சாட்டுக்கு வழிவகுத்தது.


இவை எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானதொரு குற்றச்சாட்டை கலாம் விரும்பிகளே முன்வைக்கிறார்கள். ஒரு அரசியல் தலைமையாய் உருவாக அனைத்து சாத்தியங்களும் இருந்தும் அதனை கலாம் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டது. கலாமை மனதளவில் தலைவராக ஏற்றுக் கொண்ட கூட்டம் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டிருந்தால் ஆதரவு தெரிவித்து அதிகாரத்தை அவரிடம் அளித்திருப்பார்கள். ஆனால் அவரது அமைதியான சுபாவம் அந்த கட்டத்திற்கு அவரை நகரவிடவில்லை. அது மட்டுமல்லாமல் மாணவர்களை அரசியல்படுத்த அவர் தவறிவிட்டார். கேப்டன் அமெரிக்கா என்கிற சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கதாப்பாத்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்போம் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மக்களையும் ராணுவ வீரர்களையும் துவண்டு போகாமல் உற்சாகம் கொள்ளச் செய்ய உருவாக்கப்பட்ட ஹீரோவான கேப்டன் அமெரிக்கா, ஒரு கட்டத்தில் உற்சாகப்படுத்துவதை விடுத்து நேரடியாக களத்தில் இறங்கி போரிடத் தொடங்குவார். அந்த கணத்தில் இருந்துதான் அவர் சூப்பர் ஹீரோவாக மாறுவார். அவரைப் போன்ற ஒரு ஹீரோதான் அப்துல்கலாம் ஆனால் களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாகும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். அதனால் ஏற்பட்ட இழப்பு அவரை விட சமூகத்திற்கே அதிகம்.