Monday, October 4, 2010

நான் இறந்து போயிருந்தேன்


நான் இறந்து போயிருந்தேன்
வெண்நிலவில் ஒட்டியிருக்கும்
கரையைப் போல்
ஆங்காங்கே என்வீட்டின்
முன் சிலர்.

கேட்கும் போதெல்லாம்
கடன் தரும்
ஆருயிர் நண்பன்
ஓரமாய் நின்றிருந்தான்.

அவனுக்கு
ஒரு தடவை கூட
கடனைத் திருப்பித்
தராத-நான் இறந்து போயிருந்தேன்.

தன்
இரண்டாவது குழந்தையுடன்
என் முதல்காதலி
கண்ணீர் நிரப்பி
நின்றிருந்தாள்.

தகுந்த நேரத்தில்
வேலை கிடைக்காததால்
அவளை இழந்த-நான்
இறந்து போயிருந்தேன்.

அழுது அழுது
கலைத்துப் போய்
ஓரமாய் சாய்ந்திருந்தாள்
அம்மா.

கணவன் அடகுவைத்த
நகையை எல்லாம்
மகன் திருப்பித் தருவான்
என்றிருந்தவளின்
கனவை உடைத்த-நான்
இறந்து போயிருந்தேன்.

யாரும் அழாத போதினும்
ஒற்றையாய் அழுதுகொண்டிருந்தாள்
என் மனைவி.

வளமான வாழ்வை
எதிர்நோக்கி வந்தவளின்
எதிர்பார்ப்பை வீணடித்த- நான்
இறந்து போயிருந்தேன்.

இருக்கும் சுவடே
தெரியாமல் என் மனைவியின்
வயிற்றில் வளரும்
மூன்று மாதக்கருவும்
இருந்தது.

அதற்கு
எந்த கனவையும்
வளர்க்காமலும் கலைக்காமலும்
நல்ல வேளை
நான் இறந்து போயிருந்தேன்.

No comments:

Post a Comment