Wednesday, January 12, 2011

தாயம்மாக்காவும் புதன்கிழமை பொய்யும்

மணி காலை 8.30 ஆகியிருந்தது.
"அம்மா பள்ளியோடதுக்குப் போவனும் காசு குடுமா..",பாண்டி
" நேத்து தான எட்டனா வாங்குன",அவன் அம்மா
"தங்கச்சிப் பாப்பா நேத்து குச்சிமுட்டாய் சப்பிக்கிட்டு இருந்தாள அது யாரு காசாம்",பாண்டி
"எங்கிட்ட சில்லர இல்லடா... முழு ஒத்த ரூபாதான் இருக்கு"
"பரவால்ல குடுமா மீதிய சாயங்காலம் தாரேன்"
"வாங்காம போமாட்டியே...ஒனக்கு கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சிட்டு மண்டய போட்டுட்டான் ஒங்கப்பன் நீ என்ன செய்வ"
சுருக்குப் பையில் இருந்து எட்டனா எடுத்துக் கொடுத்தாள்.
"இப்ப மட்டும் எப்படி வந்துச்சாம் சில்லர"சொல்லிட்டு பதிலுக்காக காத்திரமல் ஒடினான் பாண்டி.
"டேய் பாண்டி பாத்து சூதானமா போய்ட்டு வாடா"அம்மா கத்தினாள்,அதற்குள் அவன் அவர்கள் தெருவை தாண்டி போயிருந்தான்.
அவன் பள்ளியை நெருங்கும்பொது பிரேயர் எல்லாம் முடிந்து வகுப்பு ஆரம்பித்திருந்தது.தலைமை ஆசிரியர் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார். இவன் வகுப்புக்குள் நுளையும் முன் தலைமை ஆசிரியர் பார்த்துவிட்டார்.
"இன்னாடா நேரம் ஆகுது இதா பள்ளிக் கூடத்துக்கு வர நேரமா?",தலைமை ஆசிரியர்.
கைகள் இரண்டையும் முன்னே கட்டிக்கொண்டு,
"சார்....எங்க அக்காவுக்கு விஷ ஜொரம் சார் அதுக்கு மாத்திர காப்பி தண்ணி எல்லாம் வாங்கித்தர லேட்டாயிடுச்சி சார்...நாளைக்கு இருந்து வெரசா வந்துடுவேன்சார்.." என்றான்
"உங்க அக்காளுக்கு உடம்பு சரியில்லன்றதுலாம் ஒரு காரணமாடா ? உங்க அக்கா பேரு என்ன?"
"தாயம்மா சார்"
"உம் பேரு?"
"பாண்டி சார்"
"எத்தனாவது பபடிக்கிற?"
"மூணாப்பு சார்"
"உங்க அக்காவுக்கு உண்மையிலே உடம்பு சரியில்லயாடா"
"ஆமாம் சார்"
"இன்னைக்கு புதன் கிழமடோய் பொய் சொன்ன உண்மையிலே உங்க அக்காளுக்கு விஷ ஜொரம் வரும் பாத்துக்க.."
"சத்தியமா சார்"ஒருகையின் மேல் இன்னொரு கையை வைத்து சொன்னான்.
"சரி நேரமாச்சி வகுப்புக்கு போ இனிமே லேட்டா வரக்கூடாது"
"சரி சார் நன்றி சார்"வகுப்பாசிரியர் சொல்லித் தந்தது போல் வணக்கம் சொல்வது போல் இருகைகளையும் கூப்பிச் சொன்னான்
கணக்கு டீச்சர் பக்கத்து வகுப்பு டீச்சரிடம் பேசிக்கொண்டிருந்தார்.பாண்டி வகுப்பின் உள்ளே நுழைந்து முருகேசனுக்கு பக்கத்தில் உட்கார்ந்தான்.
"ஏன்டா லேட்டு?" முருகேசன்
"தூங்கிட்டேண்டா" பாண்டி
"ஏன்டா முருகேசா புதங்கிழம பொய் சொன்னா அது நடக்குமா டா?",பாண்டி
"ஏன்டா கேக்குர"
"அக்காவுக்கு விஷ ஜொரம்னு ஹெட்மாஸ்டர்கிட்ட பொய் சொன்னேன்டா"
உனக்கு தான் அக்காவே இல்லயே"
"தாயம்மாக்காவ தான்டா எங்கக்கானு சொன்னேன்"
"ஏன்டா அப்படி சொன்ன?"
"தெரியாம சொல்லிட்ட்டேன்டா ஒன்னுக்கு பீரியட்ல பாத்து மன்னிப்பு கேக்கலாமாடா"
"சரிடா"

தாயம்மா அந்த பள்ளி வாயிலில் திண்பண்டம் விற்பவள்.மா, கொய்யா, நவா பழங்களை அந்தந்த சீசனில் விற்பாள்.எப்பவுமே சீனிமுட்டாயும் ஜவ்வுமுட்டாயும் வைத்திருப்பாள். மற்ற சிறுவர்கள் எல்லோரும் பாயாச கடையையும் ஐஸ் வண்டியையும் மொய்க்க பாண்டியும் முருகேசும் தாயம்மாவிடம் தான் வாங்கித்திண்பார்கள்.
தாயம்மாவுக்கு வயது 35 என்றாலும் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையைப் போல் தான் பேசுவாள்.அவளுக்கு பாண்டியின் மேல் ஒரு தனிபாசம் உண்டு.

ஒன்னுக்கு பீரியட் மணி அடித்ததும் . இருவரின் கால்களும் தாயம்மா உட்காந்திருக்கும் இடத்திற்கு ஓடின.
"அக்கா", பாண்டி
"வாடா பாண்டி.... இந்தா.." என்று கிளிமூக்கு மாங்காயை கீறி மிளகாய்துள் தடவிய மாங்காயை நீட்டினாள்.
"உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்னுகா"மாங்காயை வாங்காமல் சொன்னான்.
"முதலில் மாங்காயை பிடி அப்புறம் சொல்லு"என்று மாங்காயைத் திணித்தாள்.
பாண்டி அதை முருகேசனிடம் கொடுத்து விட்டு தாயம்மாவை உற்று பார்த்து கேட்டான்
"புதன் கிழம பொய் சொன்னா பழிக்குமாக்கா?"
தெரியலியே... ஏன்.. கேக்குர?"தாயம்மாக்கா
"இவே கெட்மாஸ்டர்கிட்ட பொய் சொல்லிட்டாங்கா"முந்தி கொண்டு சொன்னான் முருகேசன்
"என்னடா சொன்னா" ஒரு குழந்தையைப் போல் அவலுடன் கேட்டாள்.
"எங்கக்காவுக்கு விஷ ஜொரம்னு சொன்னேன்"என்றான் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு
"உங்க அக்கா மேல கொள்ல பிரியமாடா"
"அவெ உன்ன தான் அக்கானு சொல்லிருக்காங்கா" என்றான் முருகேசன்.
"இன்னும் என்னடா வாங்கி திங்கிரிங்க கிளாசுக்கு ஓடுங்கடா" என்று கம்பெடுத்துக் கொண்டு வந்தார் கதிரவன் வாத்தியார்.இருவரும் கிளாசுக்கு ஓடினர். தாயம்மா அவர்களையே பார்த்து நின்றிருந்தாள்.


அடுத்த இரண்டு நாட்களாய் தாயம்மா வரவில்லை.சனி ஞாயிறு விடுமுறை என்பதால் தாயம்மாவை அவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது திங்கட்கிழமை பாண்டியும் முருகேசுன் பேசிக்கொண்டார்கள்.
"ஏன்டா முருகேசு தாயம்மாக்காவ எங்கடா காணாம்?"
"ஏங்கிட்ட கேட்டா? நீ தான் விஷ ஜொரம்னு புதன்கிழம பொய் சொன்ன உண்மையிலேயே வந்திருச்சஒ என்னமஒ?"
"நாம போய் அக்கா வீட்ல பாத்துட்டு வரலாமா"
"அவுங்க வீடு உனக்கு தெரியுமா"
"தெரியாது"
"பெறவு எப்படி போவ"
"ரெண்டு பேரும் தேடி கண்டுபிடிப்போம்"
"என்னைக்கு?"
"நாளைக்கு"
"சரி,வாடக சைக்கிள் எடுத்திட்டு போலாம்"
"ம்"
அடுத்த நாள் இருவரும் சாயுங்காலம் வாடகை சைக்கி எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.எவ்வளவு தேடியும் தாயம்மா வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை
"எனக்கு பயமா இருக்குடா",பாண்டி
"செய்றது எல்லாம் செஞ்சிட்டு இப்ப பயந்தா? அந்தக்கா மட்டும் ஜொரம் வந்து செத்துப்போச்சுனா அந்த பாவம் உன்னதான் புடிக்கும்"
"அய்யய்யோ" அழுவது போல் இருந்தான் பாண்டி
"கவலை படாதடா கருப்புசாமிக்கு கெடா வெட்டினா பாவம் எல்லாம் போயிரும்னு எங்கப்பா சொல்லிருக்காரு"
கசாப்புக்கடைக்காரனின் மகனான முருகேசன் சொன்னான்
"அக்காவ எப்படியாச்சு பாக்கனும்டா"
"பாயசம் விக்கிர கெழவி கிட்ட கேக்கலாம் அதுதான் அக்காகிட்ட பேசிட்டே இருக்கும்"
மறுநாள் காலையிலேயே கிழவியிடம் வீட்டைப் பற்றி கேட்டுவிட்டு இருவரும் கிளம்பினர்.குடிசைக்கதவு பாதி மூடியிருந்தது. இடுக்கு வழியே பார்த்தார்கள். அக்கா போர்வையால் போர்த்தி தலைமட்டும் தெரிய படுத்திருந்தாள்.
"அக்கா அக்கா" முருகேசன் கூப்பிட்ட சத்தம் கேட்டு எந்திரிக்க முயன்றாள். அதற்குள் பாண்டி உள்ளே நுழந்து.
"படுக்கா படுக்கா"என்றான்.
"என்னாக்கா ஆச்சு?" பாண்டி கேட்டான்
"வாய்ல நுழையாத பேர் ஒன்னு சொல்றாங்கே விழ ஜொரம்னு வச்சுக்க வேண்டியது தான்"
பாண்டிக்கு அழுகையே வந்து விட்டது. அவன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.
"டே.. பாண்டி ... என்னடா.. ஏன்டா... அழுகுர?" தாயம்மா பதறினாள்.
முருகேசனுக்கு பாண்டியை பார்க்க பாவமாக இருந்தது.
"நா... சொன்ன........ பொய்னால....... தான......" முழுசாய் முடிக்கமுடியாமல் திணரினான்.
"சீ... கிருக்கு பயலே அது எல்லாம் ஒன்னுமில்ல.... டேய் முருகேசா அந்த சீனிமுட்டாய எடுடா"என்று வாங்கி ஆளுக்கு ரெண்டு கொடுத்து திங்கச்சொன்னாள்,
"ஏக்கா டாக்டருக்கு, மருந்துக்கு, சாப்பாட்டுக்கு எல்லாம் துட்டு வச்சிருக்கியா",பாண்டி.
"வச்சிருக்கேன்டா தங்கம்" உணர்ச்சிவசப்பட்டு இருந்தாள்.
"பொய் சொல்லாத நீதான் ஒரு வாரமா கடை போடலையே"விவரமாக கேட்டான் முருகேசன்.
"நான் கடை போடலைனா என்னடா எம்புருசன் பட்டாளத்துல இருந்து பணம் அனுப்புவாரு" என்றாள்
ஏதோ கேக்கபோன முருகேசனை பாண்டி"ஏன்டா நொய் நொய்னு கேள்வி கேக்குற அதுவே மேலுக்கு முடியாம கெடக்கு"என்று அடக்கினான்.கொஞ்ச நேரம் மற்ற பேச்சை பேசிவிட்டு கிளம்பினார்கள்.
வேளியே வந்து சிறுது தூரம் வந்ததும் முருகேசன் சொன்னான்.
"அக்கா பொய் சொல்லுதுடா...."
"பெரியவங்க யாராவது பொய் சொல்லுவாங்களா"
அவங்க தான் நம்மவிட நிரைய சொல்லுவாங்க"
"அக்கா பொய் சொல்லுதுனு எப்படி டொல்ற?"
"அக்கா புருசன் பட்டாளத்துல இருந்தா எதுக்கு குடிசைல இருக்கனும்? அது கழுத்துல தாலியே இல்ல.அது மட்டும் இல்லாம ஒரு நாள் பாயாச கெழவிகிட்ட'வாழ்ந்தா பொண்டாட்டியா தான் வாழனும் எவனுக்கும் வப்பாட்டியா இருக்கமாட்டேன்னு' அக்கா சொன்னதை கேட்டேன்டா"
"டேய் முருகேசா எப்படி நீ இது எல்லாம் கவனிக்கிற"
ஆச்சரியமாய் கேட்டான் பாண்டி.
"எங்க பரம்பரைலயே நாந்தான் வெவரம்னு எங்க அப்பத்தா சொல்லும்டா"என்றான் முருகேசன்.
அதை கவனிக்காதவனாய் "அக்கா ஏன்டா பொய் சொல்லனும்?" பாண்டி கேட்டான்.
"இன்னிக்கு புதன் கிழம டா...."

2 comments:

இரவிசங்கர் பாண்டியன் said...

அதி அற்புதம்! ஒரே வேகத்தில் படித்து முடிக்க முடிந்தது!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முடிவு அழகு, குழந்தைகளின் பாணியில் மிகவும் அற்புதம்

Post a Comment