1.அம்மாவுக்கு எழுதிய
கவிதையை தோழிக்கும்
தோழிக்கு எழுதிய
கவிதையை அம்மாவுக்கும்
மாற்றி கொடுத்துவிட்டேன்
"அப்படியே புரிஞ்சு வச்சிருக்க"
என்றார்கள் இருவரும் .
2.நான் துயரப்படும் போதெல்லாம்
அம்மாவாகிவிடுகிறாள் தோழி
தோழியாகிவிடுகிறாள் அம்மா.
3.பல நாள் கழித்து
ஊர் திரும்புகையில்
கறி சமைத்து வைத்திருக்கிறாள் அம்மா
கவிதை சமைத்து வைத்திருக்கிறாள் தோழி.
4.தோழிக்கும் அம்மாவுக்குமான
இடைவெளி வெறும் வயதினால்
மட்டுமே நிரம்பியிருக்கிறது .
5.எனது வீட்டுப்பாடத்தை
எழுதித் தரச் சொல்லும் போது
"நான் என்ன உன் சோட்டுக்காரப் பிள்ளையா?"
என அம்மாவும்,
"நான் என்ன உங்க அம்மாவா?"
என சோட்டுக்காரப் பிள்ளையும்
கேட்டுவிட்டு எழுதித் தந்துவிடுகிறார்கள்.
6.அம்மாவின் தோழனும்
தோழியின் மகனும்
பாதி அதிஷ்டசாலிகள்.
7.என்னை அழைக்க
அம்மாவுக்கும் தோழிக்கும் மட்டும்
என் பெயர் தேவையே படுவதில்லை.
3 comments:
பகைவனுக்கும் அருள நினைக்கும் நல் நெஞ்சு ...................................................................வாழ்த்து சொல்ல வார்த்தையில்லை
neenda naatkalukku piragu oru nalla thozhamai kavithai paditha niraivu....nanri parithi.
நனி நன்று :)
Post a Comment