Wednesday, December 21, 2011

தோழமைக் கதைகள் -2

தோழன் எனும் ராட்சஸன் அவனைப் பார்த்த முதல் நாள் எல்லாம் எனக்கு நினைவில் இல்லை.இதுவரை மொத்தம் 20 வருடம் மட்டுமே வாழ்ந்திருக்கும் இந்தச் சின்ன பையனின் வாழ்க்கையில் 11 வருடங்களைத் தன் நட்பினால் நிரப்பி ஓடவிட்டவன்,அவன். அவனை நினைக்கும் போதெல்லாம் நான் சிரிக்காமல் இருந்ததே இல்லை.ஆனாலும் அவனைப் பார்க்கையில் எல்லாம் எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஓடிக் கொண்டேயிருக்கும். பொதுவாய் பெற்றோர்கள் தங்களது கனவுகளை பிள்ளைகளின் மீது திணித்து அவர்களது வாழ்க்கையை கெடுப்பது வழக்கம். அதே வேலையை நான் அவனுக்குச் செய்திருக்கிறேன். இருவரும் எதையாவது பற்றி பேசும் போதும் சினிமாவை வைத்தே பேசுவோம். சூரியன் மஞ்சளாய் தெரியும் போது இந்த லைட்டிங்க்ல ஹீரோயின் இன்ட்ரோடக்ஷன் இருந்தா சூப்பரா இருக்கும்ல என்பான். எனது சினிமா கனவை என்னால் தொடரமுடியாது என ஏதோ ஒன்று எனக்கு உணர்த்த அதை அவனது மண்டையில் ஊற்றிவிட்டேன். ஐந்தாம் வகுப்பில் இருந்து சினிமா பற்றிய ஆசைகளை நான் வளர்த்து விட்ட காரணத்தால் கல்லூரியில் சேரும்போது விஸ்காம் சேரப் போகிறேன் என அவன் வீட்டில் அடம் பிடித்தான் .(இத்தனைக்கும் +2 வில் கணக்கில் 199 /200) பின் வழக்கம் போல் எல்லா மகன்கள் மாதிரி இஞ்சினியரிங்கே எடுத்து படித்துக் கொண்டிருக்கிறான்.ஆனாலும் அவனது சினிமா ஆசை இதுவரை குறையவில்லை நானும் எனது கதைகளை எல்லாம் அவனுக்கு தந்து படம் எடுக்கச் சொல்வேன். அவன் ஒவ்வொரு படம் எடுக்கும் போதும்என்னதான் நாம் விழுந்து விழுந்து வேலை செய்தாலும் "அவர் சின்சியர் தைங்க்ஸ் டு" என்று அப்போது அவனுக்கு இருக்கும் கேர்ள் ஃப்ரெண்ட் பேரைப் போடுவான் அதை மட்டும் பொறுத்துக் கொள்ளவேண்டும். டைரக்ஷனைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது என்றாலும் அவன் படம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக நான் இருக்கவேண்டும். ராத்திரி பதினொரு மணிக்கு அழைத்து "மாப்ள கிளாசா ஒரு ஸ்டோரி பண்ணனும் டா" என்பான். திடீரென அழைத்து "வெயிட்டா ஒரு கதை வச்சிருக்கேன் கேக்குறியா?" என கதை சொல்வான். காரித் துப்புவது போல் கதை இருக்கும். அதை நான் அதற்கு மேல் கழுவி கழுவி ஊத்துவேன். அவன் கோபித்துக் கொள்வான் என்று எனக்கு எப்போதும் பயம் கிடையாது. இதை வைத்து அவன் கோபப்படாத சாந்தமானவன் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். சரியான தொட்டாச் சிணுங்கி எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்வான் என்பதால் தான் நான் அவனது கோபத்தைப் பெரிது படுத்த மாட்டேன். இது வரை அவனுடன் போன் பேசி கெட்டவார்த்தையில் திட்டு வாங்காமல் இருந்தது இல்லை. அவன் திட்டவில்லை என்றாலும் அவனை கடுப்பேற்றி திட்டுவாங்குவேன். அவனை கடுப்பேற்றுவது ரொம்பவும் சுலபம் நான் ஒரு அழகான பெண்ணிடம் இன்று பேசினேன் என்று சொன்னால் போதும்.ஊடல் என்பது காதலில் மட்டுமல்ல நட்பிலும் இன்பம் பயக்கும்.அவன் எனக்கு வாங்கித் தராமல் அவனது கேர்ள் பிரண்டுக்கு எதாவது வாங்கித் தந்தால் நான் கோபித்துக் கொள்வேன்.சமாதானம் பண்ணத் தெரியாமல் அவன் அல்லாடுவது பயங்கரமான குஷி கிளப்பும். ரொம்ப வெகுளி.நான் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பும் ஒரே ஜீவன் (பொய் என்று தெரிந்தாலும்).பள்ளி நாட்களில் ஒரு பெண்ணும் நானும் காதலிப்பதாகவும் பார்க்கு பீச்சு என்று சுத்துவதாகவும் சொல்லி கடுப்பேற்றுவேன் (தேனியில் பீச்சே இல்லை என்பதலாம் வேறு விசயம்) அதை நம்பி அவனும் ஒரு பெண்ணை காதலித்து அவன் அப்பாவிடம் மாட்டி பெல்ட் அடி வாங்கி கை கால் எல்லாம் வீங்கி வந்தபோது அவனுக்கு மிகுந்த ஆறுதலாய் நான் இருந்தாலும் உள்ளுக்குள் எழுந்த பயங்கரச் சிரிப்பை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.அவனது இரண்டாவது காதல் தோல்வியைப் பற்றி தோழி(அவளும் ஒருவனுடன் காதலில் இருக்கிறாள்) ஒருத்தியிடம் அவன் சோகமாகச் சொல்லிக் கொண்டிருந்த போது எனக்கு எழுந்த சிரிப்பைப் பார்த்து அவனுக்குத் தெரியாம் அவள் என்னை கண்ணால் அடக்கினாள்.அவன் மேல் எனக்கு எப்போதும் ஒரு பொறாமை உண்டு. நான் சொன்ன பொய் கதையை கேட்டு காதலித்த அவனுக்கு இரண்டு லவ் பெயிலியர் ஆகிவிட்டது (இரண்டுமே டபுள் சைட்) ஆனால் நான் இன்னும் கதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறேன். எதாவது மகிழ்ச்சியான விசயம் என்றால் அவனுக்குத் தான் கடைசியாகச் சொல்லுவேன்.துக்கமான விசயம் என்றால் அவனுக்குத் தான் முதலில் சொல்லுவேன். நான் நிரைய அழுவேன் ஆனால் யாருக்குமே அது தெரியாது. நான் அழுததைக் கேட்ட ஒரே நண்பன் அவன் மட்டும் தான்.சிற்றிதழ் ஆரம்பித்த சமயம் இதழ் மிகவும் மோசமாக வந்திருந்தது. அதனால் இதழையே நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது.அன்று உதிர்த்த கண்ணீரை வார்த்தைகளால் துடைத்தவன்.இன்றும் அந்த சிற்றிதழுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான். " நீ தான் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதுற பிறகு ஏன் அவன் டைரக்ட் பண்ண சொல்ற நீயே பண்ணா தான் நீ கெத்த்துனு காமிக்க முடியும்" என தோழி ஒருத்தி கேட்டதற்கு நான் கூறியவற்றை இங்கே எழுதப் போவதில்லை.எழுதினாலும் அதை எல்லாம் அவன் நம்பப் போவதும் இல்லை. அவனுக்கு நான் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும்.எனக்கு அவன் எவ்வளவு முக்கியம் என்று அவனுக்குத் தெரியும். இந்த பதிவுடன் அவனும் நானும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் போடலாம் எனத் தேடும் போது தான் தெரிகிறது இதுவரை நானும் அவனும் சேர்ந்து நின்று ஒரு படமும் எடுத்ததில்லை என்று. நினைவுக்காகத் தான் நாம் படம் எடுத்துக் கொள்கிறோம்.அவன் எப்போதும் நினைவில் இருக்கிற காரணத்தால் தான் படமே எடுக்கவில்லை போலும்...

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
இவ்வளவு வெள்ளந்தியாக இருப்பார்களா?
வாழ்த்துகள்.

Post a Comment