உனக்காக நான் காத்திருக்கிறேன்
நீ வரும்வரை பிழைத்திருப்பேன்
என உறுதியாய் தெரியாத போதும்
காத்திருக்கிறேன்.
இப்போது தான் நினைவுக்கு வருகிறது
இதுவரை நான் உன்னை பார்த்தது இல்லை என்பது.
நீ வருகையில் உன்னை அடையாளம் காண்பதற்கு கூட
என்னிடம் எதுவும் இல்லை.
ஒரு விடியலைப் போல் நீ வருவாய்
என அறிந்து உருகிவிழும்
என் மெழுகுவர்த்திகளை சேகரித்து
இரவு முழுவதையும் எரியவிடுகிறேன்.
எரிந்து போன இரவின் எச்சத்தில்
உன் வருகைக்கான வாய்ப்பை வரைந்து பார்க்கிறேன்.
அவற்றுக்கு வண்ணமாக இரவையே ஊற்றிவைக்கிறேன்.
ஒன்றை மட்டும் நன்கறிந்து வைத்திருக்கிறேன்.
இரவின் முடிவில் நீ வருவாய்
அல்லது நீ வருகையில் இரவு முடியும்.
மேற்கண்ட சொற்களுக்கு
காதல் தலைப்பிட்டு
ரோஜாவாக்கி விடுங்கள்.
விடுதலை தலைப்பிட்டு
வலியாக்கி விடுங்கள்.
இல்லையேல் தலைப்பே இடாமல்
கவிதையாக்கி விடுங்கள்.
No comments:
Post a Comment