Saturday, June 2, 2012

அறைக் கவிதைகள்


1.

எனது அறையின்
சாவி துவாரத்திற்கு
வெளியே விரிகிறது
உலகம்.
சுருங்குகிறது எனவும்
வாசிக்கலாம்

2.

கலைந்து கிடக்கிறது என
எனது அறையை-நீங்கள்
சுத்தம் செய்யாதீர்கள்
சுத்தம் என்பது
அவரவர் பாற்பட்டது


3.

எனது அறையின்
எல்லா மூலைகளிலும்
சிலந்தியின் வலை இருக்கிறது.

புத்தகம்
எடுக்கும் போதெல்லாம்
தவறாமல் பார்க்கிறேன்
அந்த பல்லியை.

விளக்குப் போடும்போதெல்லாம்
ஒளிந்து கொள்கிறது
கரப்பான்பூச்சி.

இரகசியமாய் வந்துபோகும்
பூனை ஒன்றையும்
எனக்குத் தெரியும்

நான் பெருமைப்படுகிறேன்
இந்த கவிதையின்
முதல் வரியை
இப்படி ஆரம்பித்ததற்கு.


4.

உலகம் உருண்டை
என்பதை உடைக்கிறது
என் சதுர அறை.

5.

எனதறையின் தரையைக்
காணமுடியாத படி
புத்தகங்ளும் துணிகளும்
இறைந்து கிடக்கிறது -என
கடிந்து கொள்கிறாய்.
உன் தரையெங்கும்
வெறுமை இறைந்து கிடக்கிறது.


6.

எனது அறை
என்பது
நானே.




No comments:

Post a Comment