Saturday, June 2, 2012

சாவியைத் தேடுகிறேன்


சாவியைத் தேடும்
ஒவ்வொரு முறையும்
நினைத்துக் கொள்வேன்
"சாவிக்கென்று தனியிடம்
ஒதுக்கி வைக்க வேண்டும்"
என்று...

தனியாய் ஒதுங்கிகிடக்க
விரும்பாத என் சாவி
எங்காவது கலந்து
ஒளிந்து கொள்கிறது.

திறப்பதற்காக பயன்படும்
சாவிகள் எதற்கு
பூட்டுவதற்காகவும் பயன்படுகின்றன
என்கிற கேள்வி
பெயர் தெரியாத
ஓர் அந்நிய மிருகமாய்
வந்து என்னைக்
கடிக்கிறது.

சாவிக்கான தேடலின் போது
எல்லாம் வேறொரு சாவி
கையில் கிடைக்கிறது...

அதை வைத்து திறப்பதற்கோ
பூட்டுவதற்கோ எதுமில்லை
என்னிடம்.

இப்போது அந்த சாவி
சேரும் துவாரம்
எதுவென்று கண்டறியச்
சொல்கிறது உலகம்.

நான் எனது சாவியை
மீண்டும் தேடுகிறேன்.
எனது சாவியை
மட்டும் தேடுகிறேன்

No comments:

Post a Comment