சூரியனுக்குத் துணையாய்
கொஞ்சம் வெயில்
பிரசவிக்க வேண்டியிருக்கும் .
ஏதேனும் பறவைக்குஞ்சு
தவறி விழுந்தால்
அதைப் பூனைகள் அண்டுமுன்
கூடு சேர்க்க வேண்டும்.
தண்ணீர் கலந்து
என்பதாலேயே
விலையேறிய பாலை
ஆறவைத்து பூனைக்கு ஊற்றவேண்டும் .
தேனுரிவதில் ஏதேனும்
பிரச்சனை வந்தால்
பட்டாம் பூச்சிக்கும் தேனீக்கும்
பைசல் பண்ணவேண்டிவரும்.
பாரதியுடன் சேர்ந்து கொண்டு
எத்தித் திருடும் காக்கைக்கு
இரங்கிய பின்
சுத்தி வளரும் கொடிக்கு
பாரியுடன் ஒருகையைத்
தரவேண்டியிருக்கும்
யு.பி.எஸ் மாட்ட வசதியில்லாத
பக்கத்து வீட்டுக் கவிதா குட்டிக்கு
கார்ட்டூன் நேரத்தில்
கதை சொல்ல வேண்டியிருக்கும்.
இதற்கிடையில் யாராவது
"என்ன தான் பண்றீங்க?"
எனும் போது
அமைதியாக மண் பார்க்கவேண்டும்
No comments:
Post a Comment