Thursday, January 10, 2013

நான் அமீபாவாய் இருக்கிறேன்.

நான்
அமீபாவாய் இருக்கிறேன்.



எதிர்படுபவையை எல்லாம்
உண்டும்
செரித்தும்
கழித்தும்
வாழ்கிறேன் .

சகா கிடைத்த
மழை நாளில்
புணர்ந்தும்,
கிடைக்கா
நாள் ஒன்றில்
பிரிந்தும் - என்னைப்
பெருக்கிக்கொள்கிறேன் .


உணர்கொம்பில்லாத
என்னை எள்ளிநகையாடும்
உங்கள் கேலிகளை
உங்களுக்கு இருப்பதாய்
நம்பும் உங்கள்
அறியாமையால் புறந்தள்ளுகிறேன்.

உங்களைக் காண
வல்லமை பொருந்திய
நுண்ணோக்கி ஒன்றை
தயார் செய்து கொள்கிறேன்.
.

நீங்கள் எல்லாம்
மனிதராய் வாழும்
இப் பொன் உலகில்
நல்லவேளை -நான்
அமீபாவாய் இருக்கிறேன்.

Sunday, January 6, 2013

ஆதலால்


இங்கே எனக்கான மது இருக்கிறது
அதன் நுரைகள்
கடலலையில் இருந்து எடுக்கப்பட்டவை...


இங்கே எனக்கான காதலி இருக்கிறாள்
அவள் கற்பு
உடைக்கமுடியாதது என்று நம்புகிறேன்..


இங்கே எனக்கு தோழி இருக்கிறாள்
அவளது கையில்
ஒரு தேநீர் கோப்பை இருக்கிறது....


இங்கே எனக்கு அழகான விரிப்பும்
போர்த்திக் கொள்ள
இறந்த மிருகத்தின் தோலும் உள்ளது...


இங்கே எனக்கு ஒரு சிகரட் இருக்கிறது
ஒன்றாய் பற்றவைக்க
என்னுயிர் தோழன் இருக்கிறான்....

ஆதலால் மக்களே
மழை ரம்மியமானது
அதைப் பற்றி கவிதை எழுதாதவன் பாவி...

இது எல்லாம் உங்களுக்கு இருந்தும்
இதைப் படிக்காத நீங்கள்
மகா பாவி....

வெயில் கவிதைகள்


1

வேறுக்கும் கிளைக்கும்
எந்தவொரு வித்யாசமும்
இல்லாத வரண்ட
நிலத்தின் மரத்தில்
வெயில் துளிர்த்து
கிளை பிரிக்கும்

2

வெயிலில் அலையும்
மின்மினிக்கு
என்ன பேர் வைக்கலாம்?

3
நிழலின் பிம்பம்
வெயில்

4
உச்சி வெயிலில்
தரையில் படியும்
பெயர் தெரியாத
பறவையின் நிழல்,
வானில் விழும்
காக்கையாய்

இதற்கான தலைப்பை தோழி இடட்டும்


நீ
என் தோழியாய்
இருக்கிறாய்

நீ என் தோழியாய் இருப்பதால்
உனக்கு முத்தம் தரவேண்டியதில்லை

நீ என் தோழியாய் இருப்பதால்
உன்னை அணைக்க வேண்டியதில்லை

நீ என் தோழியாய் இருப்பதால்
நாப்கின் வாங்கித் தரத் தேவையில்லை

நீ என் தோழியாய் இருப்பதால்
அம்மாவிடம் அறிமுகப்படுத்தவில்லை

நீ என் தோழியாய் இருப்பதால்
உன் வீடு வரை வரவில்லை

நீ என் தோழியாய் இருப்பதால்
பாடம் தவிர்த்து பேச தேவையில்லை

நீ என் தோழியாய் இருப்பதால்
இந்த கவிதையை உனக்கு எழுத வேண்டியதில்லை..

என்ன சொல்ல வரேன்னா
எப்படியோ - நீ
எனக்குத் தோழியாய் இருக்கிறாய் ....