Friday, May 9, 2014

ஒரு பாடலும் துயரத்தின் தேடலும்




நம் வாழ்வில் எல்லோரும் எதாவது ஒரு பாடலால் தாக்குண்டு அதன் சுழலில் சிக்கி மூழ்கி அதைவிட்டு வெளிவராமல் அதிலேயே தங்கிவிடுவோம். அவை பெரும்பாலும் சோகப்பாடல்களாகவும் வாழ்க்கையையும் நமது இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் பாடல்களாக இருக்கும். நான் யோசிப்பதுண்டு ஏன் துயரங்களையும் குழப்பங்களையும் இம்மனித இனம் தேடிப் போய்கொண்டே இருக்கிறது. அதற்கு என்ன கிடைக்கிறது. நான் மட்டும்தான் அப்படி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கூர்ந்து கவனித்தால் எல்லோரும் துயரத்தை நோக்கி நகரவே விரும்புவதாகத் தெரிகிறது. துயரத்தில் இருக்கும் சுவையை உணர்ந்தவன் அதை விட்டு வெளியேறத் துணியவே மாட்டான். எவ்வளவு கிடைத்தாலும் அவன் வேறெதையோ தேடித்தேடி அலைந்து அதை நினைத்துத் துயரப்பட்டுக் கொண்டே இருப்பான். அதைப் பேராசை என்று ஒற்றை வரியில் நமக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்துவிடுகிறார்கள். அது ஆசை அல்ல துயரத்திற்கான தேடல்.

ஆசை துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்ன பிறகும் நாம் ஏன் ஆசையைத் துரத்திக் கொண்டிருக்கிறோம். நாம் மறைமுகமாக தேடிச்செல்வது இன்பத்தையல்ல துன்பத்தை அதனால்தான். துன்பமே நமது விருப்பமாக இருக்கிறது. அதை உணராமலேயே நாம் இருக்கிறோம். துன்பமே உங்களைத் திருப்தியளிக்கிறது. அதுதான் ஒரு செயலில் இருந்து வெளியேற உதவுகிறது. விடுதலை அளிக்கிறது.  உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றில் நீங்கள் தோற்றுப் போனால் மட்டுமே அதை விட்டு விலகமுடியும். வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வரை அது நம்மை விடாது நாமும் அதை விட மாட்டோம். தோல்வி தரும் துயரமே விடுதலைக்கான வழி . துயரமே நமது மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கான தேடல் மட்டுமல்ல வாழ்க்கைக்கான தேடல் கூட துயரம்தானோ என்று தோன்றுகிறது.அதுவே ரோமியோ- ஜூலியட்டில் இருந்து ராக்ஸ்டார் படத்தில் வரும் காதல் ஜோடிக் கதைகள் வரை அனைத்துக் காதல் கதைகளையும் நமது விருப்பத்துக்குறியவையாக ஆக்கியிருக்கின்றன.

நான் எப்போதும் எதையாவது நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன். ஏன் நீ இப்படி இருக்கிறாய். உன்னில் இருந்து நிறைய அவநம்பிக்கைகளே வருகின்றன என நண்பர்கள் சொல்வார்கள். சோகப்பாடல்கள் கேட்டுக்கொண்டு இரவில் தனியே அழுதுகொண்டிருக்கும் நிலையை அவர்களுக்கு எப்படியும் விவரிக்கமுடியாது என்பதால் நானும் பதில்சொல்லாமல் விட்டுவிடுவேன். காதலி ஒருத்தி வந்துவிட்டால் காதல்தோல்விப் பாடல்களை ரசிக்க முடியாமல் போய்விடுமோ என்பதற்காகவே காதலிக்காமல் இருந்த காலங்கள் உண்டு. நம்மால் உச்சபட்ச மகிழ்ச்சியை எப்படி வெளிபடுத்த முடியும் அதிகபட்சம் ஆடிக் குதிக்க முடியும் அவ்வளவுதான். ஆனால் உங்களது உச்சபட்ச துயரம், உங்களது வாழ்வை முடித்துக்கொள்ளும் முடிவைக் கூட எளிதாக எடுத்துவிடும். அதுதான் துயரத்தின் வலிமை.

இந்தப் பதிவு நான் கேட்ட பாடல் ஒன்றை பகிர்ந்துகொள்வதற்காகவே ஆரம்பித்தேன். எங்கெங்கோ சென்றுவிட்டது. கேட்ட மாத்திரத்தில் நம்மைத் தாக்கிய பாடலை விட நன்கு தீட்டப்பட்ட கத்தி எந்த தடங்களும் இல்லாமல் மெல்ல மெல்ல இதயத்திற்குள் இறங்குவதைப் போல நேரடியாக மெல்ல மெல்ல சில பாடல்கள் இறங்கும். அவற்றைக் கையாள முடியாமல் தோற்றுப் போகும் நிமிடங்களில் இசை எவ்வளவு அழுத்தமானது.. எவ்வளவு அடர்த்தியானது.. எவ்வளவு இருள்தன்மை நிரம்பியது என்று தெரியும்.. ஒரு போதை வஸ்துவைப் போல் உங்களை இழுத்து இழுத்து மழுங்கடித்து நீங்கள் இருக்கும் இடத்தை உணரச்செய்ய விடாது. உங்களது மேலதிகாரியோ அம்மாவோ இல்லை.. காதலியோ வந்து என்ன பேசினாலும் வெறும் நிழலாகவே தெரிவார்கள். அப்படியானதொரு பாடல் ”லக் ஜா கலே”



1964 ஆம் ஆண்டு வெளியான ”வோ ஹவுன் தி” என்கிற ஹிந்தி படத்தில் வெளியான இந்தப் பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். பாடல் வரிகள் ராஜா மெஹ்தி அலிகான். இதன் இசையமைப்பாளர் மதன்மோகன். ஆனால் இந்தப் பாடலை முதன்முதலில் கேட்டது பாம்பே டாக்கீஸ் படத்தில்.

பாம்பே டாக்கீஸ் படத்தில் இந்தப் பாடல் வரும் இடம் மிகவும் முக்கியமானது. ரயில்வே கிராஸிங்க் ப்ரிட்ஜ் ஒன்றில் ஒரு சிறுமி பழைய சினிமாப் பாடல்களைப் பாடி காசு வாங்கிக் பிழைப்பு நடத்துகிறாள். பிரபல நியூஸ் ரீடர் ஒருவன் இருக்கிறான். அவனது மனைவி ஒரு பத்திரிக்கையில் சப் எடிட்டராக இருக்கிறாள். அவர்கள் இருவருக்குள்ளும் எந்த சண்டையும் இல்லை என்றாலும் இருவருக்குள்ளும் அதிக நெருக்கம் இல்லை. அவன், மனைவியின் அலுவலகத்தில் இண்டெர்னாக சேருகிறான் ஒரு ஓரினச்சேர்கையாள இளைஞன். அவன் மனைவியுடன் நெருங்கிப் பழகும் அவன் அந்த நியூஸ் ரீடரும் Gay வாக இருக்கவேண்டும் என்று யூகிக்கிறான். அவனோடு நெருங்கிப் பழக முயல்கிறான். ஆனால் அவன் பிடி கொடுக்காமல் இருக்கிறான். ஒருநாள் அவனை அழைத்துக்கொண்டு அந்த சிறுமியிடம் சென்று ஒரு பாடலைப் பாடச் சொல்கிறான். அவள் ”லக் ஜா கலே” என்று பாட ஆரம்பிக்கிறாள். மொத்தமே ஒரு ஆறுவரிதான் பாடுவாள். அப்போது காமிரா அந்த நியூஸ் ரீடரின் முகத்தில் பதிந்து இருக்கும். அவன் மனது உலையும் தருணம் அது. ரன்தீப் ஹூடா அந்தக் காட்சியில் பிண்ணி எடுத்திருப்பார். இதாண்டா ஆக்டிங்க் என்று சொல்லும் அளவுக்கு செம ரகளையாக இருக்கும்… அந்த வீடியோ இதோ




ரன்தீப் ரியாக்சன்ஸ் பார்ப்பதற்காகவே இந்தக் காட்சியை அடிக்கடி எடுத்துப் பார்ப்பேன்.. பிறகு அந்த பாடல் மெல்ல உள்ளிறங்க ஆரம்பித்தது. ஆனாலும் ஒரிஜினல் பாடலைக் கேட்கத் துணியவில்லை. அதே பாம்பே டாக்கீஸ் படத்தில் “அஜீப்பு தாஸ்தா ஹே ஏ” என்றொரு பாடலை படத்தின் தொடக்கத்தில் பாடுவாள் அந்தச் சிறுமி அதுவும் லதா மங்கேஸ்கர் பாடல்தான். கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டது .உடனே ஒரிஜினல் தேடிக் கேட்டேன். ஆனால் அது அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதனால் இந்தப்பாடலைக் கேட்க வேண்டாம் என்றிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதகாலத்திற்கு அந்த ரன்தீப் ரியாக்சன் மட்டும்தான். இன்று எதோ ஒரு துணிவில் ஒரிஜினல் பாடலை யூடியூபில் பார்த்தேன். பார்த்தவுடன் எனக்கு கண்களில் கண்ணீர் ஊறி நின்றுவிட்டது. அழுதால் பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரிந்துவிடுமே என்று அடக்கிக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக சிறிது நேரத்தில் இன்றைக்கு என்று எனது பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெளியே சென்றுவிட்டார்கள்.. எனது ரோவிலேயே நான் மட்டுமே இருந்தேன். மீண்டும் மீண்டும் கேட்டு அழுது… துயரத்தின் ருசியைக் குடித்து… துயரத்தின் மதுரத்தில் மூழ்கிக் கிடந்தேன்…
அந்த வீடியோவில் இறுகிய முகத்துடன் மனோஜ் இருப்பார். சாதனாவின் இருள் முகத்தில் இருந்து ஆரம்பிக்கும் பாட்டு ஒரு புன்னைகையுடன் தொடர்ந்து.. “எனது கண்களில் மீண்டும் இந்த காதல் மழை பொழியாமலே போகலாம்” என்கிற வரியில் அழும்போது.. அதிராத மனிதனே இருக்க முடியாது. சாதனாவின் கண்கள்.. அவ்வளவு வலியது.. இப்பாடலின் முடிவில் ஒரு முத்தம் இருந்திருந்தால் இன்னும் அதிக வலிமையைச் சேர்த்திருக்கும் என்று தோன்றுகிறது. 64ல் எடுத்த பாடலில் அது எல்லாம் சாத்தியம் இல்லை என்ற போதும் அதைச் செய்திருக்கலாம். ஒருவேளை செய்யாமல் விட்டால் இதற்காக வருங்காலத்தில் ஒருவன் வந்து நொந்துகொள்வான் என்று தெரிந்து கூட செய்யாமல் விட்டிருக்கலாம்.
அந்தப் பாடலை என்னால் முடிந்தளவு மொழிபெயர்த்திருக்கிறேன். அதன் வீடியோ இணைப்பு கீழே

என்னைத் தழுவிக்கொள்
இவ்வழகிய இரவுக்காக - இது
மீண்டும் வராமலேயே போகலாம்…

என்னைத் தழுவிக்கொள்
இவ்வழகிய இரவுக்காக - இது
மீண்டும் வராமலேயே போகலாம்…
இப்பெரு வாழ்வில் மீண்டும்
நம் சந்திப்பு நிகழாமலே போகலாம்….

என்னைத் தழுவிக்கொள்…

இன்று கிடைத்த இந்த கணம்
நமக்கு எதேட்சையாக கிடைத்திருக்கிறது..
உனது இதயத்தில் இருக்கும் என்னை
கொஞ்சம் நெருங்கிப் பார்….

”இது மீண்டும் நிகழாதிருக்க” என
உன் விதியில் எழுதியிருக்கலாம்.
இப்பெரு வாழ்வில் மீண்டும்
நம் சந்திப்பு நிகழாமல் போகலாம்.
என்னைத் தழுவிக்கொள்
இவ்வழகிய இரவுக்காக - இது
மீண்டும் வராமலேயே போகலாம்…

என் அருகில் வா
நான் மீண்டும் மீண்டும் வர மாட்டேன்..
என் அருகில் வா
நான் மீண்டும் மீண்டும் வர மாட்டேன்..

எனது கைகள் கொண்டு
உனது கழுத்தைச் சுற்றி
எனது மன பாரத்தை
உன் மேல் சாய்ந்து அழுகிறேன்..

எனது கண்களில் இருந்து
மீண்டும் இந்த காதல் மழை
பொழியாமலேயே போகலாம்.
இப்பெரு வாழ்வில் மீண்டும்
நம் சந்திப்பு நிகழாமலே போகலாம்….


என்னைத் தழுவிக்கொள்
இவ்வழகிய இரவுக்காக - இது
மீண்டும் வராமலேயே போகலாம்…
இப்பெரு வாழ்வில் மீண்டும்
நம் சந்திப்பு நிகழாமலே போகலாம்….




இவ்வளவையும் டைப் பண்ணி மீண்டும் படித்துப்பாத்துக் கொண்டிருந்தேன். என்னா ஸ்டோரிடா என்று வந்து பார்த்த எனது சீஃப் கேட்டார். நான் இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லி அவருக்குப் போட்டுக் காண்பித்தேன். “அயோக்கிய ராஸ்கல்” என்றார். இதேப் பாட்டு இதே இடத்துல ஜெய்சங்கரும் ஜெயலலிதாவும் நடிச்சிருப்பாங்க.. என்று உடனே தேடி அந்தப் பாடலின் லிங்க் அனுப்பினார். அந்தப் படம் ”யார் நீ” 1966 வெளியாகியிருக்கிறது. ”வோ ஹவுன் தி” யின் ரீமேக்காக இருக்கவேண்டும். பாடலைப் பாடியது சுசீலா.. எழுதியது கண்ணதாசன்.. இருவரும் ஹிந்திப் பாடலுக்கு குறைவில்லாமல் தங்களது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். ஆனால் ஜெயாவும் ஜெய்யும்தான் கடுப்பேத்திவிட்டிருக்காங்க.. அந்த லிங்கைப் போட்டு அதைப் பார்த்தால் இந்த பாடலின் மூட் போய்விடும் என்பதால் அதைப் போடவில்லை..





No comments:

Post a Comment