Friday, May 2, 2014

கலோனல் ஸேண்டர்ஸ் - கே.எஃப்.சி உருவாக்கியவனின் கதை

கண்களில் நீர் பொங்க சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். அவரிடம் வேறு எந்த சேமிப்பும் இல்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் அவரது அம்மா அவருக்கு கற்றுக் கொடுத்த சமையல்தான்.


அமெரிக்காவில், அறுபத்தி ஐந்து வயது முதியவர், ஒரு காசோலையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அது அவர் சம்பாதித்து சிறுகச்சிறுக சேமித்து வைந்திருந்த காசு. அதை வைத்து அவரது மீதி நாட்களை நிம்மதியாக கழிக்க எண்ணியிருந்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டமும் அவருக்கு இருந்தது. ஒரு மதியவேளை கூரியரில் ஒரு கடிதத்துடன் வந்த காசோலையை பார்த்த போது அவருக்கு நெஞ்சு அடைத்தது. அவர் தொழில் செய்வதற்காக வாங்கிய சிறிய கடனுக்கு வட்டி குட்டி எல்லாம் கழித்ததில் வெறும் நூற்றி ஐந்து டாலர்தான் மிஞ்சுவதாகவும் அதற்கான காசோலை அனுப்பியுள்ளதாகவும் அந்த கடிதம் சொல்லியது. கண்களில் நீர் பொங்க சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். அவரிடம் வேறு எந்த சேமிப்பும் இல்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் அவரது அம்மா அவருக்கு கற்றுக் கொடுத்த சமையல்தான். அன்று சோர்ந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்த அந்த முதியவர் மீண்டும் எழுந்தபோது சமையல் சக்கரவர்த்தியாக எழுந்தார். அவரது சமையல் ரெசிபியை இப்போது உலகமே சுவைத்து சப்புக்கொட்டிக் கொண்டிருக்கிறது. கே.எஃப்.சி என்று அழைக்கப்படும் உணவு சாம்ராஜ்யத்தைப் படைத்த கலோனல் ஹர்னல்ட் ஸேண்டர்ஸ்தான் அவர்.

அறுபத்தி ஐந்து வயதில் எப்படி கலோனல் ஸேண்டர்ஸால் எல்லாவற்றையும் புதிதாய் உருவாக்கி வெற்றி பெறமுடிந்தது?. அவரது ஆரம்ப நாட்களைப் பற்றி தெரிந்த எவரும் இந்தக்கேள்வியைக் கேட்கமாட்டார்கள். 1890, செப்டம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவின் ஹென்றிவில்லி பகுதியில் பிறந்தார், ஸேண்டர்ஸ். அவரது தந்தை வில்புர் டேவிட் ஒரு விவசாயி. தாய் மார்கரெட் ஆன் ஒரு அன்பான இல்லத்தரசி ஸேண்டர்ஸ்க்குப் பிறகு பிறந்தவர்கள் மூன்று பேர். மகிழ்ச்சியான குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அந்த குடும்பம் விரைவிலேயே சரிவைச் சந்தித்தது. ஒரு விபத்தில் சிக்கிய வில்புர் டேவிடைக் காக்க அவர்களது விவசாய நிலமனைத்தையும் விற்க நேர்ந்தது. இருந்தும் அவரது காலைக் காப்பாற்ற முடியவில்லை.விவசாயக் கூலியாக மாறி குடும்பத்தைக் காப்பாற்றினார், டேவிட். ஒரு நாள் காய்ச்சலுடன் வந்து படுக்கையில் விழுந்த அவர் எழவே இல்லை. அப்போது ஸேண்டர்ஸ்க்கு ஐந்து வயது. அந்த குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. மார்கரெட் ஆன் தையல் வேலை, பாத்திரம் கழுவதல் போன்ற கிடைத்த வேலைக்குச் சென்றார். அந்த வருமானம் போதவில்லை என்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு வேலைக்குச் சென்றார். வாரம் ஒருமுறை மட்டுமே குழந்தைகளைக் காணவீட்டுக்கு வருவார். அவர்களது உணவுக்கான பணத்தை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுத்துவிடுவார். அம்மாவின் கஷ்டங்களை உணர்ந்த ஸேண்டர்ஸ் தம்பி தங்கைகளை பாதுகாத்து வளர்த்தார்.

தனது முதல் சமையலை ஒரு பேட்டியில் பின்வருமாறு கூறுகிறார். “அப்போது எனக்கு ஏழு வயது. அம்மாவின் நினைவு அதிகம் வர ஒரு நாள் அம்மாவுக்காக நானே லோஃப்(ஒரு வகையான ரொட்டிப்பண்டம்) தயாரித்தேன். அதற்கு முன்பு நான் சமைத்ததே கிடையாது. அம்மா சமைக்கும் போது நான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன் அவ்வளவுதான். அம்மா செய்வதுபோலவே லோஃப் வந்திருந்தது. நான் தம்பி தங்கைகளுடன் அம்மாவைக் காண நகரத்திற்கு கிளம்பினேன். அம்மா வேலை செய்யும் இடத்திற்குப் போனபோது பல பெண்களுடன் சேர்ந்து உருளைக்கிழங்கு உரித்துக் கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் குழப்பத்துடன் அருகே வந்தாள். நான் செய்த ரொட்டியைக் கொடுத்தேன். அதை சாப்பிட்டுவிட்டு கண்ணில் நீர்மழ்க அவள் கொடுத்த முத்தம் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. சமையலின் மகத்துவதத்தை அன்று உணர்ந்தேன்”






நன்றாக சமைத்ததால் தம்பி தங்கைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மட்டுமல்லாமல் சமையல் பொறுப்பும் ஸேண்டர்ஸின் கைக்கு வந்தது. பள்ளிக்குப் போக ஆசை இருந்தாலும் குடும்பத்திற்காக சமைக்க ஆரம்பித்தார். ஸேண்டர்ஸ்க்கு பத்துவயதான போது சார்லி நாரிஸ் என்கிற உள்ளூர் விவசாயியின் நிலத்திற்கு வேலைக்குச் சென்றார். அங்கே சிறுபையன் என்பதால் மாதத்திற்கு இரண்டு டாலர் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதிக வேலை வாங்குவது மட்டுமில்லாமல் சிலசமயம் அடிக்கவும் செய்வதால் கோபப்பட்டு அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டுக்குவந்தார். அன்று அவரது அம்மா கூறிய அறிவுரையை பின்னாட்களில் சோர்வுரும் போதெல்லாம் நினைவில் வைத்து முன்நகர்ந்ததாக ஸேண்டர்ஸ் கூறுகிறார். அதன் பிறகு ஹென்றி மாங் என்கிற விவசாயிடம் வேலைக்குச் சேர்ந்தார். மாதம் நான்கு டாலர் சம்பளம். மாலை வேலை முடித்து வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு அம்மாவுடன் பால்பண்ணைகளுக்கு பால் கறந்து கொடுப்பதற்காக செல்வார். வீடு திரும்ப பனிரெண்டு மணிக்கு மேலாகிவிடும். மீண்டும் காலை நான்கு மணிக்கு எழுந்து வேலைக்குச் செல்லவேண்டும். என்னதான் உழைத்தாலும் வறுமை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. ஸேண்டர்ஸின் பனிரெண்டாவது வயதில் மார்கரெட் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஸேண்டர்ஸ்க்கு அந்த திருமணம் பிடிக்கவில்லை. எப்போதும் தனது சித்தப்பாவிடம் சண்டையிட்டுக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார்.

புதிய ஊருக்குவந்து விவசாய வேலைகளைச் செய்துகொண்டே பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.ஆனால் அவரால் படிக்கமுடியவில்லை என்று இரண்டே வாரத்தில் பள்ளியைவிட்டு நின்றார். பிறகு பக்கத்து நகரத்திற்குச் சென்று பெயிண்டராக, ஸ்ட்ரீட்கார் கண்டக்டராக என சிறு சிறு வேலைகள் பார்த்தார். அப்போது கியூபாவில் பணியாற்ற அமெரிக்கா ராணுவம் ஆட்கள் எடுப்பதாக நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு தனக்குப் பதினாறுவயது என்று பொய்சொல்லி ராணுவத்தில் சேர்ந்தார். உண்மையில் அப்போது அவருக்கு பதினான்கு வயதுதான் ஆகியிருந்தது. நிறைய வேலை செய்து முருக்கேறிய உடலுடன் இருந்ததால் பதினெட்டுவயது என்று சொல்லியிருந்தால் கூட நம்பியிருப்பார்கள். கியூபாவில் இருந்து திரும்பிய பிறகு கொல்லராக, தீயணைப்பு வீரராக என பலவேலைகளில் ஈடுபட்டார். தீயணைப்பு வீரராக இருக்கும் போது ஜோஸப்பின் என்கிற பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. அவரது கோபத்தால் தீயணைப்புவீரர் வேலையும் போனது. அதன்பிறகு ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தார். ஜோஸப்பினுக்கு சமைக்கத் தெரியாது என்பதால் ஸேண்டர்ஸ்தான் தினமும் சமைப்பார். தனது ஏழு வயதில் இருந்து தொடர்ந்து சமைத்து வருவதால் சமையலில் கெட்டிக்காரராக இருந்தார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட அவரது சமையலை ருசித்துப் பாராட்டினார்கள். ஸேண்டர்ஸ்க்குள் இருந்த சமையற்கலைஞன் சரியான நேரத்திற்காக காத்துக்கிடந்தான். இதற்கிடையில் இன்ஸுரன்ஸ் ஏஜண்ட், சேல்ஸ்மேன், சூப்பர்வைஸர் என்று டஜனுக்கும் மேற்பட்ட வேலைகளுக்கு மாறினார்.

1930 ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டது. பல படித்த இளைஞர்கள் வேலை இழந்தனர். பல கம்பேனிகள் மூடப்பட்டன. ஸேண்டர்ஸும் வேலை இழந்தார். எங்குமே வேலை கிடைக்கவில்லை. உணவகங்கள் எல்லாம் ஃபாஸ்ட்புட் கடைகளாக இருந்தன. ஃபாஸ்ட்புட் கடைகளை வெறுத்த ஸேண்டர்ஸ்க்குள் இருந்த சமையற்கலைஞன் இதுவே தருணம் என்று விழித்துக்கொண்டான். கெண்டகி மாகாணத்தில் ’ஸேண்டர்ஸ் கோர்ட் அண்ட் கஃபே’ என்கிற பெயரில் சின்ன ரெஸ்டாரண்டைத் திறந்தார். அதில் அவர் தான் செர்வர், சமையலர், எல்லாம். இரண்டே ஆண்டுகளில் மாகாணம் முழுக்க பிரபலாமானது. மாகாண கவர்னர் வந்து உணவு உண்டு ”இதுவே மாகாணத்தின் உணவு” என்று புகழ்ந்தார். கெண்டகிக்கு வரும் அனைத்து சுற்றுலாப்பயணிகளும் ஸேண்டர்ஸின் கடையைப் கேள்விப்பட்டு தேடிவந்தனர். அடுத்த ஆண்டில் நூற்றி நாற்பத்திரண்டு பேர் அமர்ந்து உண்ணும் அளவுக்கு பெரியகடையாக்கினார். இருந்து எல்லாம் நன்றாகப் போய்கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரும் தீவிபத்து ஏற்பட்டும் மொத்தகடையும் சாம்பலானது. ஏற்கனவே நல்ல பெயர் இருந்ததால் வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்தன. மீண்டும் புதிதாய் 1940ல் தொடங்கிய போதுதான் தனது உலகப்புகழ் பெற்ற சிக்கன்ரெசிபியை உருவாக்கினார்.

மீண்டும் சோதனை இரண்டாம் உலகப்போர் வடிவில் வந்தது. போரால் சுற்றுலாப்பயணிகளின் வரவு குறைந்தது. கடன் கட்டமுடியாமல் வேறொரு உணவகத்திற்கு சூப்பர்வைசராகச் சேர்ந்தார். ஜோஸப்பினுடனான மண உறவு முறிந்தது. கிலோவ்டியா என்கிற பெண்ணை மணந்தார். தான் கண்டுபிடித்த ரெசிபியைத் தூக்கிக்கொண்டு பெரிய ஹோட்டல்கள் எல்லாம் ஏறி இறங்கினார். நண்பர்கள் என்று மட்டுமில்லாமல் தெரிந்தவர்களிடம் எல்லாம் தனது ரெசிபியைப் பற்றிச் சொல்லி உதவிகேட்டார். எல்லா இடங்களிலும் மறுப்பே மிஞ்சியது. இறுதியில் 1952 ல் பெட்டி ஹார்மென் எனும் தொழிலதிபர் உதவியால் முதல் ”கெண்டகி ஃப்ரைட் சிக்கன்” கடை தொடங்கப்பட்டது. விரைவிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெற்றிபெற்றுவிட்டோம் இனி கடைசிகாலத்தை நிம்மதியாக கழிக்கலாம் என நினைக்கும் போதுதான் முதல் பத்தியில் நடந்த சம்பவம் நடந்தது. தன்னைவிடாமல் துரத்திக்கொண்டு வரும் துரதிஷ்டத்தை தீர்க்கமாகப் பார்த்து ஒரு முடிவெடுத்தவராய். தனது சிக்கன் ரெசிபியை மெருகேற்றினார்.சிக்கன்களை பக்கெட்களில் விற்கும் ஐடியாவைக் கண்டுபிடித்தார். வியாபாரம் சூடு பிடித்தது. அமெரிக்கா கனடா முழுவதும் பங்குதாரர்களின் உதவியால் கடைதிறக்கப்பட்டது. முதுமை கூடியதால் தனது பங்குகளை ஜான்.ஒய்.பிரவுன் என்பவருக்கு இரண்டு மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு கெண்டகி ஃப்ரைட் சிக்கனின் பிரதிநிதியாக மட்டும் இருந்தார். கெண்டகி ஃப்ரைட் சிக்கன் கடைகள் உலகம் முழுக்கத் தொடங்கப்பட்டன.


”தற்போது இருக்கும் ’கெண்டகி ஃபிரைட் சிக்கன்’ சமையலை வியாபாரமாக மட்டுமே பார்க்கிறது. மக்கள் ஃபாஸ்ட் புட் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே கெண்டகி ஃபிரைட் சிக்கனை ஆரம்பித்தேன். ஆனால் தற்போது மக்களின் உடல்நலத்தைப் பற்றி கவலைப்படுவதேயில்லை” என்று வழக்குத் தொடுத்தார் ஸேண்டர்ஸ். கே.எஃப்.சி ஸேண்டர்ஸிடம் ஒரு மில்லியன் டாலர் வழங்கி இது போல் மீண்டும் நிகழாது என்று சமாதானம் பேசியது. ஸேண்டர்ஸும் தனது வழக்கைத் திரும்பப் பெற்றார். அத்தொகையைக் கொண்டு தொண்டு நிறுவனம் தொடங்கி மருத்துவ உதவிகள் செய்ய ஆரம்பித்தார். இன்றும் அவரது தொண்டு நிறுவனம் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்துகொண்டிருக்கிறது.




1980, டிசம்பர் 16 ஆம் தேதி ஸேண்டர்ஸ் எனும் சமையல் சக்கரவர்த்தி மறைந்தார். அதன் பிறகு அனைத்துப் பெரிய கம்பேனிகளும் அதை வாங்க முயன்றன. இறுதியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நிறுவனம் என்று அறியப்படுகிற பெப்சிகோ கம்பெனி வாங்கியது. அதுவரை கெண்டகி ஃப்ரைட் சிக்கன் என்று இருந்த பெயர் கே.எஃப்.சி என்று பெயர் மாற்றப்பட்டு மொத்தம் நூற்றி இருபது நாடுகளில் பதினெட்டாயிரம் கடைகளாக உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது. தற்போது ஸேண்டர்ஸ் கனவு கண்ட சுகாதாரம், சேவை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு சமையல் ரெசிபியை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் சீனாவில் மூன்று கடைகள் சுகாதாரக் குறைவு என்று சொல்லி மூடப்பட்டன. இங்கே திருச்சியில் உள்ள கே.எஃப்.சியில் கூட புழு இருக்கும் சிக்கனை விற்கிறார்கள் என்று பரபரப்புச் செய்தியானது. கோழி வளர்க்கும் முறையே பயங்கர சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. கோழியின் இறகுகள் , அலகுகள் எல்லாம் உதிர்வதற்காக முட்டைகளாக இருக்கும் போதே ஊசிப்போடப்படுகிறது என்று படங்கள் வெளியாகி பரபரப்பு கிளம்பியது. இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு கே.எஃப்.சியின் முகப்பில சிரித்தபடி இருக்கிறார் கலோனல் ஹர்னல் ஸேண்டர்ஸ்.

தற்போது கே.எஃப்.சி போன்ற உணவகங்களின் தரம் எப்படி இருக்கிறது என்று அறிய Food INC என்கிற டாக்குமெண்ட்ரியைப் பார்க்கவும்.

(இதன் சுருக்கப்பட்ட கட்டுரை புதிய தலைமுறை இதழில் வெளியானது)

No comments:

Post a Comment