அவரது கனவுகள் அவரை அதிகாரத்தின் அஸ்திவாரங்களில் கை வைக்கத் தூண்டியது, மற்றவர்களின் சுதந்திரத்திற்காக வன்முறை போராட்டம் என்கிற கண்ணிவெடி நிலத்திற்குள் நுழையத் தூண்டியது.
(சே வின் இந்தியப் பயணத்தைப் பற்றி எழுத்தாளர் ஓம் தன்வி 2010 ஆம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியிட்டார். அந்தக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது.)
சேகுவேரா இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் சே எனும் புரட்சி அடையாளத்தின் மீதுள்ள ஈர்ப்பு இப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. லா ஹபானாவில் உள்ள வேடாடோவின் பெரிய கட்டிடங்களுக்கு நடுவே எளிமையான ஒரு சின்ன நீல நிற வீடு இருக்கிறது. உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில் ஆர்வமுடையவரும் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவிற்கு அடுத்து சக்திவாய்ந்தவராக திகழ்ந்தவருமான கமாண்டர் எர்னஸ்டோ சே குவேரா அந்த சிறிய வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் நம்புவது கடினம். தற்போது அந்த வீடு சேகுவேரா படிப்பக மையமாக அவரது மகன் கமிலோ குவேரா மார்ச்சால் மாற்றப்பட்டுள்ளது.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு, 1959 ஆம் ஆண்டு, குவேரா மேற்கொண்ட, அதிகம் வெளியே தெரியாத அவரது இந்தியப் பயணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நான் குவேரா படிப்பக மையத்திற்கு சென்றேன். சேவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக சேவின் சொந்த நாடான அர்ஜென்டினாவிற்கு கமிலோ கிளம்பிக் கொண்டிருந்தார். எனது உதவிக்கு ரிசர்ச் ஆபிசர் லாசாரோ பக்கலோவை விட்டுச் சென்றார். சேவுடன் இந்தியாவிற்கு வந்தவர்கள் பற்றியும் அந்த பயணத்திற்கு பின் கியூபாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைள் பற்றியும் பக்கலோ நிறைய தகவல்கள் கொடுத்தார். இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சென்று வந்ததை பற்றி சே கியூப அரசாங்கத்திற்கு சமர்பித்த அறிக்கையையும் மூன்றாம் உலக நாட்டுத் தலைவர்களுடன் சே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கொண்ட காலண்டரும் அங்கே காணக்கிடைத்தது. அதில் ஒரு புகைப்படத்தில் சேவும் நேருவும் இருந்தார்கள். அவர்களது உறவின் நெருக்கம் சேவின் அறிக்கையிலும் சேவுக்கு நேரு அளித்த ’குக்குறி’ என்கிற வாளிலும் தெரிந்தது. அந்த வாளை மிகுந்த பயபகத்தியோடு எனக்கு பக்கலோ காண்பித்தார்.
அந்த கத்தியின் பிடி தந்தத்தாலும் கத்தியின் உறை வால்நட் மரத்தாலும் செய்யப்பட்டிருந்தது. அந்த உறையில் ஒரு பெண்ணின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பெண் யார் என்று தெரிந்துகொள்வதற்கு கமிலோ ஆர்வமாக இருந்ததாக பக்கலோ கூறினார்.’அது பெண் அல்ல பெண் தெய்வம் துர்கா, சக்தியின் அவதாரம்’ என்றேன். ’சே போன்ற சக்திவாய்ந்த தலைவருக்கு அதைவிட சிறந்த பரிசு தந்திருக்கமுடியாது’ என்றதும் பக்கலோ புன்னைகத்தார்.
கியூப சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவுக்கு எதிராக போரிட்ட காலங்களில் சேகுவேராவின் செயல்பாடுகளால் பிடல் காஸ்ட்ரோ கவரப்பட்டார். இரண்டு ஆண்டு கால கொரில்லா யுத்தத்திற்குப் பிறகு 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஸ்ட்ரோவின் புரட்சிப்படை ஆட்சியமைத்தது, “சே கியூபாவின் சொந்தமகன்” என்று காஸ்ட்ரோ அறிவித்தார். கியூபாவின் அறிவிக்கபடாத வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான சே குவேராவை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவைத்தார். புதிதாக அமைந்த கியூபா அரசாங்கத்தின் மேல் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதும் கியூபாவில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு குறிப்பாக சர்க்கரைக்கு சந்தையை ஏற்படுத்துவதும் அப்பயணத்தின் நோக்கமாக இருந்தது.
1959, ஜூன் 12 ஆம் தேதி ஹவானாவில் இருந்து கிளம்பிய சே தனது 31வது பிறந்தநாளை மேட்ரிட்டில் [ஸ்பெயின் தலைநகர் ] கொண்டாடிவிட்டு கெய்ரோ வழியாக தில்லி வந்தார். அவரது விமானம் ’பாலம்’ விமானநிலையத்தை ஜூன் 30 இரவில் வந்தடைந்தது. அதிகாரப்பூர்வமாக எந்த பதவியிலும் இல்லாததால் ‘கியூபாவின் தேசியத் தலைவர்’-ஐ வரவேற்க துணை பாதுகாப்பு அதிகாரி டி.எஸ். கோஸ்லா மட்டுமே வந்தார். பின்பு சாணக்கியபுரியில் புதிதாக கட்டப்பட்டிருந்த அசோக் ஹோட்டலில் சே தங்கவைக்கப்பட்டார். சேவுடன் கணிதவியலாளர், பொருளியல் வல்லுனர்,கட்சி உறுப்பினர், புரட்சியில் தலைமை வகித்த கேப்டன், ஒரு மெய்க்காப்பாளர் என சிறிய குழுவுடன்தான் சே வந்திருந்தார். பார்டோ லாடா என்கிற வலதுசாரியும் இந்த குழுவுடன் தில்லியில் இணைந்துகொண்டார். லாடா, சேவிற்கு உதவ அனுப்பபட்டாலும் ஹவானா ரேடியோவின் தினசரி நிகழ்ச்சிகளில் இருந்து லாடாவை ஒதுக்கிவைப்பதற்காக காஸ்ட்ரோ கையாண்ட யுக்தி இது என்றும் கூறப்படுகிறது. சேவும் வந்திறங்கிய மறுநாள் காலை பிரதமரின் இல்லமான தீன் மூர்த்தி பவனில் நேருவை சே சந்தித்தார். நேருவுக்கு சோஷலிச நாடுகளின் மீது ஒரு கரிசனம் இருந்தது. “நேரு ஒரு தந்தைவழி தாத்தாவைப் போல் வரவேற்றார்” என்று சே தனது அறிக்கையில் குறிப்பிடும் அளவுக்கு நேருவால் கவரப்பட்டார். மேலும் அந்த அறிக்கையில் “நேரு உன்னத ஆர்வத்தோடு கியூப மக்களின் அற்பணிப்பையும் போராட்டத்தையும் பற்றி கேட்டறிந்தார். மேலும் நமது அளவில்லா தைரியத்தை பாராட்டிய அவர், நமது கொள்கைகளுக்கு ஆதரவுதெரிவித்தார்” என்று சே எழுதியுள்ளார்.
காலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா கியூபாவுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தவது பற்றியும் வர்த்தக உறவை வளர்ப்பது பற்றியும் சே பேசினார்.கல்கத்தாவில் கியூபாவின் தூதரகம் இருந்த போதிலும் கியூபாவில் இந்திய தூதரகம் தனியாக இல்லை. வாஷிங்கடனில் இருந்த இந்தியத் தூதரகமே கியூபாவின் உடனான உறவை கவனித்துக்கொண்டிருந்தது. கியூபாவில் தூதரகம் தொடங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இரு நாடுகளும் நல்லுறவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை துரிதமாக தொடங்குவது என்று முடிவெடுத்தன. உணவுக்குப் பிறகு இந்திய வர்த்தக அதிகாரிகளை சந்திப்பதாக் முடிவெடுக்கப்பட்டது.
உணவு மேஜையில் நடந்தவற்றை லாடா தனது குறிப்பில் பின்வருமாறு விளக்குகிறார். “உணவின் போது நேருவுடன் அவரது மகள் இந்திராவும் பேரன்கள் ராஜீவ் மற்றும் சஞ்சயும் இருந்தார்கள். இரண்டு மணி நேரமாக நேரு ஒவ்வொரு உணவைப் பற்றியும் சேவுக்கு கூறிக்கொண்டிருந்தார். அதைக் கேட்பதில் ஆர்வமில்லாத சே மரியாதை நிமித்தமாக புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சேவே பேச்சை மாற்ற எண்ணி கம்யூனிச சீனா பற்றியும் மாசே துங் பற்றியும் நேருவின் கருத்தைக் கேட்டார். ஆனால் நேரு அதை கவனிக்காமல் ஆப்பிள்கள் பற்றியும் அவற்றின் சுவையைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்”.நேருவைப் பற்றி அறிந்தவர்கள் லாடா சொல்வது நம்பும்படி இல்லை என்றே சொல்வார்கள்.
மதிய உணவுப் பேச்சு சுவாரஸ்யமற்று இருந்தாலும் உணவுக்குப்பின் பல முக்கியச் சந்திப்புகள் நடந்தன. கியூப குழு, ஓக்லா தொழிற்சாலையின் மரம் இளைக்கும் இயந்திரங்களை பார்வையிட்டது. பின்னர் வர்த்தக அமைச்சர் நித்யானந்த் கனூகோவை சந்தித்தித்து. இந்தோ-கியூப வார்த்தக உறவு வளர இது அடிக்கல்லாக இருந்தது. மாலையில் அரை மணி நேரம் காட்டேஜ் இண்டஸ்ட்ரி எம்போரியத்தில் செலவிட்டார் சே.
அடுத்த நாள் ஜூலை 2 ஆம் தேதி கியூப குழு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனனை சந்தித்தது. மறுநாள் ”கனிந்த மனநிலையில் துணிந்த வீரன்” என்று சேவும் மேனனும் புன்னகையுடன் பேசும் படங்களை செய்திதாள்கள் வெளியிட்டன. பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் , தேசிய பௌதிக ஆய்வக அதிகாரிகள் ஆகியோரையும் சந்தித்தார்கள். முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான ஒரு மெட்டல் டிடெக்டரை சோதித்துப் பார்த்தார் சே.
மறுநாள் தில்லியைச் சேர்ந்த விவசாயிகளையும் பள்ளிகளையும் பார்வையிட்டார். அன்று மாலை சமூக மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.கே.தேயை சந்தித்தார். நான்காவது நாள் விவசாயத்துறை அமைச்சர் ஏ.பி.ஜெயினை சந்தித்த சே இந்தியாவில் இருந்து நிலக்கரி, பருத்தி,சணல் பொருட்கள், சமையல் எண்ணெய்கள், டீ, ஃபிலிம், பயிற்சி விமானங்கள் ஆகியவற்றி இறக்குமதி செய்வதைப் பற்றியும் சர்க்கரை,செம்பு, டயர் தயாரிப்புக்கு உதவும் பொருட்கள், கோக்கோ ஆகியவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதைப் பற்றியும் பேசினார். இந்த சந்திப்புகளைப் பற்றி சே எழுதிய குறிப்புகளை வாசித்தால் அவர் குறைந்த நாட்களில் சர்வதேச வர்த்தகத்தை எவ்வளவு தெரிந்துவைத்துள்ளார் என்று தெரியும். “வர்த்தகச் செயலாளருடனான சந்திப்பு எதிர்கால பேச்சுவார்த்தைக்கு உதவியாய் இருந்தது. இது மிகவும் முக்கியமானதாக மாறலாம். முன்னூற்றி எண்பது மில்லியன் இந்தியர்களின் வாழ்நிலை உயர்ந்தால் அவர்களது சர்க்கரை தேவை அதிகரிக்கும்.இந்தியா நமக்கு சர்க்கரைக்கான பெரிய சந்தையாக மாறும்” என்று எழுதியிருந்தார். காஸ்ட்ரோ கூட ”இந்த துப்பாக்கியைக் காதலிக்கும் டாக்டருக்கு எந்த வேலை கொடுத்தாலும் சிறிது நாட்களில் அதில் நிபுணன் ஆகிவிடுகிறார்” என்று சொல்லியிருக்கிறார்.
சே பிலானாவிற்கு வருகை தந்ததைப் பற்றி நிறைய அலுவல் ரீதியான புகைப்படங்கள் இருந்த போதிலும் அதைத் தாண்டி நிறைய பெர்சனல் புகைப்படங்கள் இருந்தன.அதில் சில விவசாயிகள் காந்தி குல்லாயுடன் சேவுக்கு மாலை போடுவது போன்ற அரிய புகைப்படமும் இருந்தது. இந்தியாவின் கல்வி நிலையைப்பற்றி “கூட்டுறவின் பெருமைகளான பள்ளிகள் எல்லாம் இரண்டு ஆசிரியர்களின் கடின முயற்சியாலேயே நடைபெறுகிறது. அங்கிருக்கும் குழந்தைகள் முகத்தில் பிணி தொற்றியிருந்தது. அவர்கள் தரையில் முழங்காலிட்டு ஆசிரியர்களின் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்”. இது இன்றும் பொருந்திப்போவதுதான் வருத்தத்துக்குரியது. அதே போல் ஒருபுறம் பெரும் தொழிற்சாலைகளும் இன்னொருபுறம் வரியநிலை விவசாயிகளையும் பார்த்த சே மிகுந்த வருத்தத்துக்கு உள்ளானார். “சிலருக்கு அளவுக்கு அதிகமாக இருக்கிறது.சிலருக்கு எதுவுமே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கால்நடைகளை பராமரிக்கும் இந்திய பண்புதான் கிராமத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது என்று சே அறிந்தார். அது பின்னாட்களில் அவருக்கு உதவியது.
வாசிப்பது, கவிதை எழுதுவது என்று எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவர் என அறியப்பட்ட சே இந்தியாவில் இருந்தவரை மிகுந்த உற்சாகத்துடன் வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். தில்லியில் இருக்கும் சிலி அம்பாசிடரை சந்திக்கும் போது தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து காண்பிக்குமளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தார். தில்லியில் இருந்து அவரது தாயுக்கு எழுதிய கடிதத்தில் இதைப் பற்றி குறிப்பிட்ட அவர், வந்த காரியங்களை சரியாக செய்யமுடியுமாவென்று பயந்ததாகவும் ஆனால் இந்தியத் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும் எழுதியுள்ளார்.
ஜூலை 5 ஆம் தேதி தில்லிவிட்டு இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு கியூப குழு கிளம்பியது. முதலில் அவர்கள் லக்னோவில் உள்ள சர்க்கரை ஆராய்ச்சி மையத்திற்கு சென்றதாக கியூப வானொலி அறிக்கையில் இருக்கிறது ஆனால் இதுகுறித்து வேறு ஆவணங்கள் இல்லை. ஜூலை 10 ஆம் தேதி சே கல்கத்தா வந்தார் என்று ஒரு ஆங்கில நாளேடு தெரிவிக்கிறது. அங்கே அவர் மேற்குவங்க முதல்வர் பி.சி.ராயையும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர்களையும் சந்தித்ததாக அப்போது கல்கத்தாவில் பணிபுரிந்த ஒரு உயரதிகார நண்பர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சே தங்களை சந்தித்ததை கம்யூனிஸ்ட் தலைவர்கள் முற்றிலும் மறுத்தனர்.
சே தனது அறிக்கையில் கல்கத்தாவில் கிருஷ்ணா என்று ஒரு அறிவுஜீவியை சந்தித்தாகவும் அணுசக்தியை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது, அணு ஆயுதங்கள் எவ்வளவு கொடூரமானவை, ஹிரோஷிம்மாவில் அவை ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றைப் பற்றி புது தெளிவு வர அவருடனான உரையாடல் காரணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மாயக் கண்ணன் யார் என்று எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிலர் அது ஜே.கிருஷ்ணமூர்த்தியாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அனால் சே குறிப்பிடும் தேதிகளில் அவர் காஷ்மீரில் இருந்தார் என்பதால் அது அவர் இல்லை என்பது உறுதியாகிறது. பின்பு ஒருமுறை சே ஜப்பான் செல்லும் போது அங்கிருந்த கியூப தூதர் சேவை இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த படைவீரர்களின் கல்லறைக்கு மரியாதை செலுத்த அழைத்த போது “இல்லை நான் ஹிரோஷிம்மாவிற்கு போகிறேன்.. எங்கே அமேரிக்கா லட்ச ஜப்பானியர்களை கொன்றதோ அங்கே போகிறேன்” என்று கிளம்பியதாக அந்த பயணக்குழுவில் இடம்பெற்ற ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு காரணம் கிருஷ்ணாவின் பேச்சு என்றும் கூறியுள்ளார்.
காந்தியின் மீதும் அவரது சத்யாகிரகப் போராட்டத்தின் மீதும் பெருமதிப்பை இந்தியப் பயணம் சேவுக்கு ஏற்படுத்தியது. சே, தில்லியில் இருக்கும் போது அவரை ஆல் இந்தியா ரெடியோவிற்காக கே.பி.பானுமதி பேட்டி எடுத்தார். பானுமதியிடம் நான் பேசியபோது “சே நிறைய இடைவெளி விட்டு ஒரு சோதிடர் போல் பேசினார் “அவரது ராணுவ உடை ,பெரிய பூட்ஸ்கள் , மாண்டி கார்லோ சுருட்டு ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒரு புனித துறவி போல் பேசினார்” எனக் குறிப்பிட்ட அவர், “நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். உங்களால் எப்படி பலமத சமூகத்தை ஏற்றுக் கொள்ளமுடிகிறது?” என்று கேட்டபோது “நான் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டதே இல்லை. நான் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் நம்பும் ஒரு சாதாரண சோசலிஸ்ட். எனது பால்ய காலத்தில் இருந்தே லத்தின் அமெரிக்க நாடுகளின் பசி, பஞ்சம்,பட்டினி,வேலையின்மை ஆகியவற்றைப் பார்த்தே வளர்ந்தேன். மார்க்சியம் லெனினியக் கோட்பாடுகளில் உலகத்திற்கு தேவையான பாடங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சரிவர நடைமுறைப் படுத்துவதே மார்க்சின் கனவுகளை முழுமையடையச் செய்யும். இந்தியாவில் சுதந்திரத்திற்கு வழிவகுத்த காந்தியத்திற்கு என்று தனிப்பட்ட சக்தி இருக்கிறது. உங்களைப் போல் லத்தின் அமெரிக்கர்களான எங்களுக்கு காந்தியும் நீண்ட பாரம்பரியமும் இல்லை அதனால் தான் எங்களது மனநிலை வேறுவிதமாக இருக்கிறது” என்று சே பதிலளித்ததாக கூறினார். இந்தியாவின் அஹிம்ஸை அவரை ஈர்க்கவில்லை என்றாலும் சமூக நீதியின் மீதான அவரது பார்வையில் அது மாற்றத்தை ஏற்படுத்தியது. அது அவரது கடைசிகாலங்களில் பிரதிபலித்தது.
இந்தியாவில் இருந்து சே கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) வழியாக பர்மா,இந்தோனேசியா,ஜப்பான் என்று பயணித்தார். திரும்பும் போது சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் தங்கினார். ஆப்பிரிக்க ஐரோப்பிய நாடுகளில் சே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது காஸ்ட்ரோவிற்கு உடல் நலக்குறைவு என்கிற வதந்தியைக்கேட்டு 1959 செப்டம்பர் 8 ஆம் தேதி ஹவானா திரும்பினார். கியூபாவிற்குத் திரும்பிய சேவிற்கு காஸ்ட்ரோ தொழில்துறை அமைச்சர் பதவி அளித்தார். அலுவலக வேலை சே குவேராவிற்கு சலிப்பைத் தந்தன. அவர் ரஷ்ய சோசலிசம் முதலாளித்துவத்தைப் போலவே மூன்றாம் உலக நாடுகளை வைத்து பயனடைவதாக கருதினார். தனது பதவியைத் துறந்துவிட்டு துப்பாக்கியுடன் காட்டுக்கே திரும்பினார். அவர் இந்தியாவில் இருக்கும் போதும் மற்ற லத்தின் அமெரிக்க நாடுகளில் புரட்சியை ஏற்படுத்துவதைப் பற்றியே சிந்தித்து வந்தார் என்கிறார்கள் அவரது பயணக்குழுவில் இடம்பெற்று இருந்தவர்கள்.
.மீண்டும் அவரது புரட்சி உடையை அணிந்து கொண்ட சே காங்கோ மற்றும் பொலிவியாவில் சோசலிசப் புரட்சியை கொண்டுவர முயற்சித்தார். அவை ஏன் தோற்றன என்பது வேறு கதை. ஆனால் கியூபர்களுக்கும் லத்தின் அமெரிக்க நாட்டு மக்களுக்கும் சே குவேரா ஒரு தேவகுமாரனைப் போல் தோன்றுகிறார். அவரது கனவுகள் அவரை அதிகாரத்தின் அஸ்திவாரங்களில் கை வைக்கத் தூண்டியது, மற்றவர்களின் சுதந்திரத்திற்காக வன்முறை போராட்டம் என்கிற கண்ணிவெடி நிலத்திற்குள் நுழையத் தூண்டியது. 1967 அக்டோபர் 9 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாலும் அவரது சிந்தனை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு ஊக்கமாக இருந்து அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழச் செய்கிறது. அவர் இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் அவர் கனவு புரட்சி நெருப்பை பலரது மனதில் பற்றவைத்தபடி இருக்கிறது.
(நன்றி:புதியதலைமுறை)
No comments:
Post a Comment