Monday, May 4, 2015

வருகிறதா கடல் கையகப்படுத்தும் சட்டம்?





நிலத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்க முடிவு செய்த பின் அரசாங்கத்தின் அடுத்த குறி கடல்

இன்றைய தங்கவிலை நிலவரம் படிப்பது போல் விவசாயிகள் தற்கொலை நிலவரம் படிக்குமளவுக்கு நமது மனநிலை வந்துவிட்டது. நமது கவனத்தைப் பெற விவசாயி தலைநகரில் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாட்களில் விவசாயிகளின் தற்கொலை நிலவரத்திற்கு அருகில் மீனவர்களின் தற்கொலை நிலவரமும் வரலாம்!!!. 

ஆம்.. நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்கிற பெயரில் விவசாய நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவாக்கும் அரசாங்கம் அடுத்ததாக நீலப்புரட்சி என்கிற பெயரில் கடலையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கத் தயாராகி வருகிறது. நரேந்திர மோடி பதவியேற்ற பின் ஜூலை 2014 ல் மீன்வளம் மூலம்  பொருளாதாரத்தைப் பெருக்கும் நீலப்புரட்சியை நிகழ்த்துவதற்காக டாக்டர் மீனாகுமாரி தலைமையில் ஒரு மீனவப் பிரதிநிதி கூட இல்லாத ஏழு  வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. அக்குழு ஒரே மாதத்தில் ஆய்வு செய்து தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மீனவர்களுக்கு பாதகமான அந்த அறிக்கையை வரி பிசகாமல் அமுல்படுத்த முயற்சி எடுத்து வருகிறது மத்திய அரசு.

இந்தியாவில் யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து 13 கடலோர மாநிலங்கள் உள்ளன. அவற்றின் கரையிலிருந்து 12 நாட்டிக்கல் தொலைவு வரை மாநில அரசுக்கு சொந்தமான பிராந்திய எல்லை.  12 முதல் 200 நாட்டிக்கல் வரை மத்திய அரசுக்கு சொந்தமான பிரத்தியேகப் பொருளாதார மண்டலம். அதற்கு அப்பால் இருப்பவை சர்வதேச கடற்பரப்பு. இதில் 12 நாட்டிக்கல்லுக்கு மேல் இருக்கும் கடல் பரப்பை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்க முனைகிறது மத்திய அரசு.

ஏற்கனவே தத்தளிக்கும் மீனவர்கள்
பல நூற்றாண்டுகளாக கடலில் பாரம்பரிய மீனவர்களே மீன் பிடித்து வந்தனர் .1980களில், பெரு நிறுவனங்கள் தலையெடுக்கத் தொடங்கியபோது, சில இந்திய முதலாளிகள் வெளிநாட்டினரை பங்குதாரர்களாகக் கொண்டு  ஆழ்கடலில் (12 மைலுக்கு அப்பால்) மீன்பிடிக்கத் தொடங்கினார்கள். பிறகு இந்த முதலாளிகளோடு கூட்டு இல்லாமலேயே பல வெளிநாடுகள், நவீன மீன்பிடித் தொழில்நுட்பத்தைக் கொண்டு, மொத்த மீன்வளத்தையும் சுரண்டிச் சென்றன. இந்தக் கப்பல்களுக்கு எவ்வித கண்காணிப்பும் இல்லை. இதை எதிர்த்து மீனவர்கள் போராடவே நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் முராரி கமிஷன் அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் கருத்து கேட்டு அறிக்கையை தயாரித்தது அந்த கமிஷன். வெளிநாட்டுக் கப்பல்களிடம் இருந்து மீனவர்களையும் மீன்வளத்தையும் காப்பாற்ற அது வழிகாட்டியது. நாடாளுமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு இனி புதிதாக எந்த கப்பலுக்கும் லைசென்ஸ் வழங்கப்படாது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட லைசென்ஸ் புதுப்பிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பை மதிக்காமல் லைசென்ஸ் இல்லாமலும், லைசென்ஸை புதுப்பிக்காமலும் சர்வ சுதந்திரமாக மீன்பிடித்துத் திரிந்தன வெளிநாட்டு கப்பல்கள்.
             இதைக் கட்டுப்படுத்த சொல்லி மீண்டும் மீனவர்கள் போராடினார்கள் லைசன்ஸ் இல்லாததால்தான் வெளிநாட்டுக் கம்பெனிகள் அத்துமீறி நுழைகின்றன. அவற்றுக்கு லைசன்ஸ் வழங்கிவிட்டால் அவை அத்து மீறி வரமுடியாது என்கிற சீரிய சிந்தனையோடு 2002 ஆம் ஆண்டு லெட்டர் ஆஃப் பர்மீட் (LOP) கொண்டுவரப்பட்டது. LOP பெற இரண்டு முக்கிய நிபந்தனைகள் உண்டு.  இந்தியப் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் கம்பெனிகள் இந்தியாவின் ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கவேண்டும். LOP நாடாளுமன்ற உறுப்பினரின் மேற்பார்வையிலேயே வழங்கப்பட வேண்டும். இவ்வளவு கடினமான(!!) நிபந்தனைகளை சற்றும் எதிர்பார்க்காத இருநூறுக்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள்  இந்தியாவில் போலிகம்பெனிகள் வைத்துக் கொண்டு எம்.பிகளை வளைத்துப் போட்டுக் கொண்டு கடல்வளத்தை சூரையாடி வருகின்றன. 

        இப்படி ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவனின் கப்பலைப் பிடுங்கிக் கொண்டு கடலில் தள்ளியாயிற்று, இப்போது நீச்சலடிக்க முயன்று கொண்டிருக்கிற கைகளையும் உடைக்கிற வேலையை மீனாகுமாரி கமிட்டி செய்யப்போகிறது.

மீனாகுமாரி கமிட்டி
மீனாகுமாரி கமிட்டியால் மீனவர்களுக்கு அப்படி என்ன பாதிப்பு? மீனவர் மக்கள் முன்னணி தலைவர் கோசு மணி விவரிக்கிறார் 



”காங்கிரஸ் செய்ய நினைத்ததையே மோடி அரசும் செய்யப்பார்க்கிறது. கடந்த ஆட்சியில் 2009 ஆம் ஆண்டு மீன்பிடி ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மீனவர்கள், 12 நாட்டிக்கல் மேல் மீன் பிடிக்க கூடாது மீறினால் ஒன்பது லட்சம் அபராதம். மீனவர் பத்தாயிரம் ரூபாயிக்கு மேல் மீன் பிடிக்க கூடாது மீறினால் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் அபராதம். ஒவ்வொரு மீனவனும் மீன் பிடிப்பதற்கான பெர்மீட் வைத்திருக்க வேண்டும். அதை அடிக்கடி கடலோர காவல்துறையினர் சோதனையிடுவார்கள். படகுகளை ரோட்டில் நிறுத்துவது போல் கடலில் உடனே நிறுத்த முடியாது சற்று தள்ளிப் போய் நிறுத்தினால் கூட இருபத்தி ஐந்தாயிரம் ஸ்பாட் ஃபைன் போடப்படும். இதை எதிர்த்து இந்தியா முழுவதும் மீனவர்கள் ஒரே நாளில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினோம். அதன் விளைவாக அந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது இன்னும் ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில் அந்த மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளது மீனாகுமாரி கமிட்டி. அதை அமுல்படுத்தப் போகிறது இந்த மோடி அரசு. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு  முன்னர்கூட  மீனவர்களுக்கு மீன் பிடிக்க முழு சுதந்திரம் இருந்தது. சுதந்திரம் பெற்றபின் எங்கள் சுதந்திரம் பரிக்கப்பட்டு வருகிறது. நரசிம்மராவ் ,மன்மோகன் சிங் போன்றவர்கள் எங்களுக்கு இடைஞ்சலாக வெளிநாட்டுக் கம்பெனிகளை அனுமதித்தார்கள். மோடி அரசு அதற்கு ஒருபடி மேலே போய் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு நாங்கள் இடைஞ்சலாக இருக்கிறோம் என்று முற்றிலும் அழிக்கப் பார்க்கிறது” என்றார்.  

மீனவர்களுக்கு திறன் இல்லையா?
பன்னாட்டு கம்பெனிகளை அனுமதிப்பதற்கு காரணமாக ”நமது மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்கும் அளவுக்கு திறமை இல்லை” என்கிறது மீனாகுமாரி குழு. இதுகுறித்து மீனவ சமுதாயத்தில் பிறந்து மீனவர்களின் வாழ்வை நாவல்களில் பதிவு செய்துவரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி க்ரூஸிடம் கேட்டோம். கோபத்தொணியில் பேச ஆரம்பித்தார் “இந்திய மீனவர்களின் வாழ்க்கை, தொழில் முறை, பாரம்பரியம் போன்றவற்றைப் பற்றி இக்குழுவுக்கு எந்தவொரு அறிவும் கிடையாது. இவர்களது வெளிநாட்டு கம்பெனிகள் 1900 டன் மீன் பிடித்த அதே ஆழ்கடல் பகுதியில் நமது தூத்தூர் மீனவர்கள் மட்டுமே 45000 டன் மீன்கள் பிடித்துள்ளார்கள். இவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் மற்ற மீனவர்களையும் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு கொண்டு வரமுடியும். நமது பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் மட்டும் 1,80,000 டன் Temporary exhaustible resource இருக்கின்றது. இதை பாரம்பரிய மீனவர்கள் போய் பிடிக்கக்கூடாது என்பதற்கான தடையைத்தான் இந்த குழு பரிந்துரை. ஒரு பக்கம் மீனவர்கள் பாவம் என்று போலியாக பேசிவிட்டு மறுபுறம் அவனது வாழ்வை பறிக்கும் வேலையை செய்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.    
ஒரு அரசு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் பழைய அரசின் கொள்கைகள் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம். பைபிளில் ஒரு வாசகம் உண்டு. பழைய ரசம் புதிய குப்பிக்கு வந்தால் அந்தப் பழைய ரசம் புதிய குப்பியை பாழ்படுத்தி ரசமும் இல்லாமல் போய்விடும் என்று!!. எங்களுக்கு நல்ல மாற்றம் தரவில்லையா? ஓட்ட மாற்றிப் போட்டுவிடுவோம்.” என்றார் காட்டமாக..

மீனவரைக் காக்க..

     மீனாகுமாரி பரிந்துரை நிராகரிக்கப்பட்டால் மட்டும் மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படுமா?. 


மீனவர் பாதுகாப்பு பேரவைத் தலைவர் பீட்டர் ராயனிடம் பேசினோம் “பரிந்துரை நிராகரிக்கப்படுவதால் மட்டும் மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படாது. தைவான் சீனா போன்ற நாடுகள்  நம்மைவிட பலமடங்கு வளர்ந்த தொழில்நுட்பத்தில் மீன் பிடிக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தை நமது மீனவர்களுக்கு இந்திய அரசாங்கம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை முராரி கமிசனும் சுட்டிக் காட்டியது. நாங்களும் அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்னும் நமது மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி போன்ற சாதாரண தொழில்நுட்பம் கூட கிடைக்கவில்லை. ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க போதுமான படகுகள் இல்லை. அனைத்து வசதியுடைய படகின் விலை ஒரு கோடி ரூபாயில் இருந்து ஒன்னரை கோடி ரூபாய் வரை இருக்கிறது. தமிழக அரசு முப்பது லட்சம் ரூபாய் மானியமும் முப்பது லட்சம் ரூபாய் வங்கிக் கடனும் கொடுப்பதாக கூறியது. அறுபது லட்சம் ரூபாய்க்கு படகு வாங்கமுடியாது என்ற போதும் இதுவரை ஒருவருக்கும் வங்கிக் கடன் கொடுக்கவில்லை. மீனவர்களைப் பாதுகாக்க நினைத்தால் அவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுப்பதே தீர்வாகும்” என்றார்.

இப்போது நமது அரசின் முன் இரண்டு வழிகள் உள்ளன. விவசாயத்துறையுடன் இணைந்து இருக்கும் மீன்வளத்துறையை தனித்துறையாக பிரித்து கூடுதலான கவனமும் நிதியும் ஒதுக்கலாம். விவசாயிகளுக்கு தனியாக வங்கி இருப்பது போல் மீனவர்களுக்கு தனி வங்கியை உருவாக்கி மீனவர்களுக்கு உதவலாம். மீனவர்கள் கேட்பது போல் ஆண்டுக்கு ஒரு முறை நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கி தற்போது மீனவர்களால் நமது நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலவாணியான ஆண்டுக்கு முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை ஐம்பதாயிரம் கோடியாகவும் ஒரு லட்சம் கோடியாகவும் மாற்றி இந்திய பொருளாதாரத்தை பலமடங்கு உயர்த்தலாம். அல்லது வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கடலைத்தாரை வார்த்து  நீலப்புரட்சி செய்து உள்ளூர் மீனவர்களை அழித்துவிட்டு மீனுக்காக நாம் வெளிநாடுகளிடம் கையேந்தலாம்.  

நன்றி:புதிய தலைமுறை   

No comments:

Post a Comment