Sunday, October 11, 2009

அடிமை விலங்கின் நிழல்

'பெண்கள் நம் நாட்டின் கண்கள்', 'பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்'. இந்த முழக்கங்களை நாம் மேடைகளில் கேட்கலாம். ஏன் இந்த முழக்கங்கள்? ஏன் ஆண்களை நாட்டின் கண்கள் என சொல்லவில்லை? ஏன் பெண்ணாய் பிறக்க மாதவம் செய்தல் வேண்டும் என்கிறோம்? இம் முழக்கங்கள் பெண் இழிவானவள், அவள் ஆணுக்கு அடிமை என்றெண்ணும் சமூகத்தில் இருந்து வந்தவை.
ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படும் இடத்தில் இம்முழக்கங்கள் தேவையே இல்லை.
ஒரு வீட்டில் கணவன் வெளியே சென்று பணம் ஈட்டி வருகிறான். மனைவி வீட்டுக்குள் இருந்து வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறாள். இது வேலைப் பகிர்வுதானே அன்றி பெண் அடிமைத்தனம் இல்லை என்று கூறலாம். கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் பெண் எவ்வளவு அடிமைபட்டுக்கிடக்கிறாள் என்று தெரியும்.
கணவனின் வேலை நேரம் அதிகபட்சம் எட்டு மணி நேரம்.பெண்ணின் வேலை நேரம் நாள் முழுவதும் நடுவில் சில நாடகத் தொடர்கள் பார்க்கிறாள். நன்றாக கவனித்தால் பெண்கள் படங்கள் பார்ப்பதை விட தொடர்கள் பார்பதையே விரும்புகின்றனர் என்பது தெரியும். ஏன் அப்படி?
தொடர்களில் நல்லவளும் பெண், கெட்டவளும் பெண்.அதில் ஆண்கள் பொம்மை மாதிரி வந்து போவார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்து போகிறது. தான் செய்ய முடியாததை, தான் செய்ய நினைப்பதை இன்னொரு பெண் செய்கிறாள்.அவளை தன் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்கிறாள்.அவளை தாமாகவே பாவிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர்கள் தொடர்கள் பார்த்து சிரிப்பதும் அழுவதும். அதை ஆண்கள் கேலி செய்கிறார்கள்।இதே ஆண் ஒரு படத்தில் கதாநாயகன் பத்து பேரை அடிக்கையில்,நாயகிக்கு முத்தம் கொடுக்கையில் கைத்தட்டி விசில் அடிக்கிறான். அவன் ஏன் அவ்வாறு செய்கிறான்?தான் செய்ய நினைப்பதை, முடியாததை கதாநாயகன் செய்கையில் அவனை தாமாகவே நினைக்கிறான். அதனால் அவன் கேலி செய்யப்படவில்லை. ஆண் என்பதால் அவனது செய்கை பெரிது படுத்தபடுவதில்லை. இத்தனைக்கும் அவன் பல நூறு பேரின் முன்னால் செய்கிறான். ஆனால் பெண்ணை அப்படி வெளிப்படுத்த இச்சமுகம் விடுவதில்லை. அவள் தனக்கு என விதிக்கப்பட்ட செயல்களையே தன் வீட்டுக்குள் செய்கிறாள். ஆனால் பெண் கேலி செய்யப்படுகிறாள். இதற்கு காரணம் ஆணாதிக்க மனோபாவமே.
தொடங்கியதற்கு வருவோம். வெளியில் சென்று வேலை செய்யும் பெரும்பாலான ஆண்களுக்கு இரவு நேரமும் ஞாயிற்றுக்கிழமைகளும் ஓய்வு எடுக்கும் நேரம். ஆனால் பெண்களுக்கு அப்படி ஒரு நேரமோ நாளோ இருப்பது போல் எனக்குத் தெரிவதில்லை. கந்தர்வன் சொல்லுவார்
"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை.ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை" என்று.
அரசாங்கமே விடுமுறை என்று அறிவித்த பொங்கல் தீபாவளி அன்று தான் அவளுக்கு இரட்டிப்பு வேலை.
வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை இன்னும் மோசம். அவர்களின் உடல் உழைப்பு மிகவும் ஆச்சரியப்படவைக்கிறது. பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பதை இது பொய் ஆக்குகிறது. அவர்கள் தங்களுடைய பலத்தை ஆணுக்கு எதிராக திருப்பத்தெரியாமல் இருக்கிறார்கள். அதற்கான பயிற்சி அளித்தலே இப்போதைய தேவை.
மேடைகளில் வாரப்பத்திரிக்கைகளில் ஆண்கள் வீட்டு வேலை செய்வது ஒரு நகைச்சுவையாக பேசப்படுகிறது.ஆண் மனைவியின் துணியை துவைக்கிறான் என்பது இழிவான செயலாக கருதப்படுகிறது. "உண்மைகள் எப்போதும் நகைச்சுவை ஆவதில்லை." பெண் துணி துவைக்கிறாள் என்றால் சிரிப்பு வருவதில்லை. ஏனெனில் அது உண்மை. இதில் கொடுமை என்னவென்றால் தாங்கள் அடிமைபட்டு வருவதை பெண்களும் உணராமல் அவற்றை ரசிப்பது தான்.
ஒரு ஆணை பெண் என்றால் கோபம் வருகிறது. ஆனால் ஒரு பெண்னை ஆண் என்றால் கோபம் கொள்வதில்லை.ஏனென்றால் ஆண் உயர்வானவன் என்று பெண்ணின் மனதிலே பதிக்கப்பட்டு விட்டது. இது மாற குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும்.
இப்போதெல்லாம் பெண்கள் முன்னேறிவிட்டார்கள்.ஆண்களுக்கு நிகராக எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்ற பேச்சு நிலவுகிறது.எல்லா துறைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளக்கூடிய விசயம் தான். ஆனால் ஆண்களுக்கு நிகராக ஈடுபடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. பைலட்,மெக்கானிக்கல் இன்ஜினியர், டிக்கெட் செக்கர் போன்ற பல வேலைகளிலும் பெண்களை காண்பது அரிது.
இன்னமும் நம் நாட்டில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு அரசியலில் வருவது என்பது எட்டாத கனவாகவே உள்ளது.இத்தனைக்கும் நமது பிரதமரை ஆட்டுவிப்பவர் பெண்தான். ஜனாதிபதி பெண்தான்,சபா நாயகரும் பெண்தான். இப்படி இருக்கையில் ஏன் இடஒதுக்கீடு வரவில்லை?
பெண்களுக்கு அவர்கள் அடிமைப் பட்டிருப்பது உணர்த்த வேண்டும்.நம் நாட்டில் குறிப்பாக தென்னிந்திய பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.இதற்கு காரணம் பெண்சிசுக்கொலை.
பெண்சிசு கொலைக்கு காரணம் பெண் அடிமைத்தனம்.பெண் அடிமைத்தனதுக்கு காரணம் பெண்சிசு கொலை.பல பெண்கள் கொல்லப்படாமல் இருந்திருந்தால் ஆணுக்கு நிகராக அல்லது ஆண்களை
விட அதிகமாக பெண்கள் இருந்திருப்பார்கள்.அப்படி இருந்திருந்தால் காரல் மார்க்ஸ் சொன்ன "அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும்"என்ற விதியின் கீழ் பெண்கள் தங்களின் அடிமை விலங்குகளை எப்போதோ தூக்கி எரிந்திருப்பார்கள்.

ஒரு முதலாளி எப்படி தொழிலாளியை சுரண்டாமல் வாழமுடியாதோ அதே போல் ஒரு ஆண் ஒரு பெண்னைஸ் சுரண்டாமல் வாழவேமுடியாது.
இருந்தாலும் நாம் பெண்களின் அடிமை விலங்குகளை தளர்த்த இயன்ற அளவு முயற்சிப்போம்.



விலைமாது


காசுகொடுத்து வாங்குவதால்
விலைமாதுதான்,
சரஸ்வதியும் கூட...

விழி உதடு

அவளுக்கு ஆறு உதடுகள்
விழியிமைகளையும் ,
சேர்த்து...

சோகம்

மழை பொழியும் கருப்பு
வெள்ளை மேகங்கள்
விதவையின் கண்கள்

எதிர்ப்பு

இறந்தவன் உயர்சாதிக்காரன்
என தெரிந்ததால் ஓங்கியடித்தான்
மயானத் தலைவன்

ஆசை

ஊனமுற்றவனாக பிறக்க ஆசை
அந்த இல்லாத உறுப்பு
வயிறாக இருந்தால்.

இறந்தவன் பேசுகிறான்

இறந்தபின் வாயில்
போட்ட அரிசி
இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டேன்

என்ன செய்வது

நான் மனனம் செய்யும்
அறிவாளியாக பிறந்திருக்க வேண்டும்-இல்லையேல்
ஏதும் தெரியாத
முட்டாளாக பிறந்திருக்க வேண்டும்-ஆனால்
யோசிக்கத் தெரிந்த
மனிதனாக பிறந்துவிட்டேன்
இப்படி பிறந்தது
கடவுளின் செயலே என்று
கடவுளைத் திட்டலாம் என்று பார்த்தால்
அதிகமாக யோசித்தால்
கடவுள் இல்லை என்ற
முடிவுக்கு வந்துவிட்டேன் என்ன செய்வது?

Tuesday, October 6, 2009

அகதி

என்னுடலை விட்டுவிட்டு
உன்னுடலில் வாழ்வதனால்
நான் அகதி...

வானம்

அவள் ஆடை
மாற்றுவதை பார்த்துவிட்டேன்
அதனால் தான் சிவக்கிறாள்
மாலை நேர வானம்...

நிலா

கருப்பழகிக்கு வெள்ளை
திருஷ்டிபொட்டு
இரவில் நிலா...

தாய்

மலடியானாலும் முப்பது
பேருக்குத் தாய்
பள்ளி ஆசிரியை...

வாழ்வு

இறந்தே பிறந்த
குழந்தை புதைந்த
பின்னும் வளர்ந்தது
செடியாக...

பங்காளி

இந்தியாவும் பாக்கிஸ்தானும்
சகோதர நாடுகள்
அதனால் தான் சண்டையிடுகிறது
இடத்திற்காக...

மணல் திட்டு

நாற்பது இடங்களில் பாலம்
கட்டினாரா இராமர்?
நாற்பது இடங்களில் மணல்திட்டுகள்.

ஆச்சரியம்

விடுதலை பெற்றபின்
வீறிட்டழுதது
புதிதாய் பிறந்த குழந்தை...

கற்றுக் கொள்

நாள் முழுவதும் உழைக்கிறது
ஆனாலும் இளைக்கவில்லை
சூரியன்...

அம்மா

கேக் வெட்டும்போது
ஞாபகம் வருகிறது
நான் பிறக்க என் அம்மாவின்
வயிற்றை வெட்டியது.

பிறந்த நாள்

நான் முதல்முதலாய்
அழுதநாளை கொண்டாட விரும்பவில்லை
இன்று என் பிறந்த நாள்.

மறதி வேண்டும்

நான் மறக்க நினைக்கிறேன்
ஆனாலும் நினைவில் வருகிறது
என் தாயை எட்டி உதைத்து பிறந்த
என் பிறந்தநாள்..

கசந்தது

வெற்றியும் கசந்தது
நூறு பேரின் தோல்வியில் ஏறி
நிற்கிறேன் என நினைத்த போது...

அறியார்

மலையேறும் பக்தர்கள் அறிவதில்லை
சிலையாய் இருக்கும் கல்லைவிட
படியாய் இருக்கும் கல்தான்
சக்தி வாய்ந்ததென்று...

அணு ஆயுதம்

விழிப்புடன் இரு
அமெரிக்கா போர் தொடுக்கலாம்
உன் கண்ணில் அணுஆயுதம்
இருக்கிறதென்று...

காதல்

காலம் காதலிக்கவில்லை
அதனால் தான் தெரிவதில்லை
காத்திருத்தலின் அருமை!!!

சிறைச்சாலை

குற்றவாளிகள் உருவாகாமலிருப்பதற்க்கு
ஒரு சிறைச்சாலை
பள்ளிக்கூடம்...

ரேசன் அரிசி

பிரார்த்தனையில்லை ஆனாலும்
மக்கள் உண்ணுகிறார்கள்
மண்சோறு...

அப்பா

முட்டையை அடைகாத்தது
ஒரு சேவல்
அப்பா...

குடும்பம்

ஆணும் பெண்ணும்
சேர்ந்து வாழ்வது
ஓர் குடும்பம் என்றால்
நானும் குடும்பம் தான்
இப்படிக்கு திருநங்கை..

மனிதனின் பேச்சு

சிரிப்பு வருகிறது
அழித்தல் தொழில்
சிவனுடையதாம்.

கஞ்சன்

கடவுளும் கஞ்சன் தான்
ஊனமுற்றவன்
பார்வையில்...

பரிணாமம்

பரிணாம வளர்ச்சி
அன்று குரங்கிலிருந்து மனிதன்
இன்று நடிகனிலிருந்து அரசியல்வாதி

கிரிக்கெட்

அடித்துவிட்டு ஓடினான்
கை தட்டினார்கள்
கிரிக்கெட்

பள்ளிக்கூடம்

மருத்துவமனையில் நோயாளிக்கிடமில்லை
ஆரோக்கியவானுக்கே இடம்
ஸ்கூல் அட்மிசன்..

பணம்

சிங்கங்களே ஜாக்கிரதை
நீங்கள் இருப்பதோ
பணக்காரன் பணத்தில்...

நாடாளுமன்றத்தில்

தீபாவளி
சிறப்புத் தள்ளுபடி
கேள்வி கேட்க காசு...

டூப்

உண்மையாய் குதிப்பவனை
டைரக்டர் கேட்டார்
டூப்பு எங்கப்பா?

வியாபாரம்

காசும் கொடுத்து பெண்ணையும் கொடுக்கும்
வித்தியாசமான வியாபாரம்
திருமணம்...

தேர்தல்

சிறந்த அறிவாளியும்
ஏமாறுகிறான்
ஓட்டு போடும் போது

அரசியல்வாதி

விசுவாமித்ரரும்
காலில் விழுவார்

அரசியல்வாதியாய் இருந்தால்