Wednesday, April 28, 2010

ஒப்புதல் வாக்குமூலம்


எந்தத் தாக்கத்தையும்
விளைவுகளையும் ஏற்படுத்தாத
கவிதைகளையும்
எழுதிவைக்கிறேன்
இனிமேலாவது உருப்படியா
எழுத வெண்டும் என்று
உணர்த்துவதற்கு

என் காதலும் உன் புன்னகையும்



கடன் தொல்லையால்
சாகப் போகிறவனின்
நிலை; என் காதலுக்கு;
இடைத்தேர்தலாய்
வந்தது உன்
நேசமான புன்னகை

என் மனதிற்கு நெருக்கமானவர்கள்


காதல் வந்தவுடன்
மனதுக்கு நெருக்கமான
தோழர்களை மறந்ததுவிட்டேன்
என்றார்கள்,
இப்போதும் நீங்கள்
மனதுக்கு நெருக்கமாய்
தான் இருக்கிறீர்கள்
ஆனால் மனதுதான்
என்னிடம் இல்லை

Saturday, April 17, 2010

தூக்கம் எனும் அதிசயம்


நாம் ஒவ்வொரு முறை
தூங்கும் போதும்-நம்
உயிர் வெளியே உலாவிவிட்டு
வரும் என தாத்தா
சொல்லுவார்..

பாட்டியின் கதையில்
இளவரசனை தூங்கும்போது
தேவதைகள் வானுக்குத்
தூக்கிச்சென்று சொர்க்கத்தில்
விளையாடுவார்கள்;

தான் தூங்கிக் கொண்டிருந்தபோது
என்னை கடவுள்
தன் வயிற்றில்
வைத்துச் சென்றதாக
ஐந்து வயதில்
அம்மா சொன்னாள்

பிரியாவின் தாத்தா
தூங்கிக் கொண்டிருந்த போதே
இறந்து விட்டார் என
அன்று ஒரு நாள்
சொன்னாள்

விழித்துக் கொண்டு
கனவு காண்பவனை விட
தூங்குபவனே கனவுளகத்துக்கு
அரசனாகிறான்

இப்படி அதிசயம்
நடக்கும் போது
எல்லாம் தூங்கி விடுகிறோம்
அல்லது- நாம்
தூங்கும்போது அதிசியங்கள்
நிகழ்ந்துவிடுகின்றன

Saturday, April 10, 2010

கட்டங்கள் அற்ற சதுரங்கம்


நானும்
என் மனைவியும்
சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தோம்

அவளுக்கு கருப்புகாய்கள்
எனக்கு வெள்ளைகாய்கள்

அவள் ஆசை மகளும்
என் ஆசை மகனும்
அருகில் வந்தமர்ந்தனர்

எங்களது ஆட்டத்தில்
வெட்டுப்பட்ட காய்கள்
எல்லாம் அவர்கள்
ஆட்டத்தில் இடம்பெற்றன

என் மனைவியின்
யானையைக் கொன்றேன்
மகளுக்கு யாணை கிடைத்தது
குதிரையை கொன்றேன்
குதிரை கிடைத்தது
சிப்பாய்களைக் கொன்றேன்
சிப்பாய்கள் கிடைத்தார்கள்

என்னுடைய வெட்டுப்பட்ட-சில
காய்கள் எல்லாம்
மகன்வசம் இருந்தன

ராணியைத் தவிர
எல்லாக் காய்களையும்
இழந்துவிட்ட என் மனைவி

ராணியை பேருக்கு
வைத்துக் கொண்டு
ஒப்பேற்றினால்

ஆட்டம் வெகுநேரம்
நீடித்தது

பொறுமை இழந்த
மகள் ஒரு
கல்லை ராஜாவாக்கிவிட்டு
தானே ராணியாகிவிட்டாள்

இப்பொழுது மகனின்
கோபம் எல்லாம்
என்மீது இருந்தன....

நீங்கள் தான் நல்லவர்கள்


இரயில் நிலையத்தில்
சந்திக்கும் பிச்சைக்காரனுக்கு
ஒரு ரூபாயை பையில் தேடி
ஐந்து ரூபாய் சிக்கியதால்
வருத்தத்துடன் நகர்கிறீர்களா?

ரோட்டில் அடிபட்டு
உயிருக்கு போராடும்
இளைஞருக்கு எவராவது
உதவவேண்டும் என
மனம் பதைக்கிறதா?

தமிழர்களை கொன்ற
இரக்கமற்ற இலங்கையிடம் இந்தியா
கிரிக்கெட்டில் தோற்றுவிட்டால்
கோபம் வருகிறதா?

விவசாயியின் தற்கொலை
செய்தியை படித்துவிட்டு
கண்ணில் வருத்தத்துடன்
சினிமா செய்தியை
நீங்கள் கவனிக்கிறீர்கள்?

வாங்கிய காசுக்காக
நேர்மையாய் அச்சின்னத்துக்கே
ஓட்டுபோட்டு உங்கள்
ஜனநாயக கடமையை
நிரைவேற்றுகிறீர்களா?

இப்போதெல்லாம்
நீங்கள்தான் நல்லவர்கள்