Saturday, September 17, 2011

நான் தோழர்

தோழர் என்கிற வார்த்தை எப்போது எனக்கு அறிமுகமானது என்று தெரியவில்லை.எனது சிறுவயதிலேயே அந்த வார்த்தை பழகிவிட்டது. உண்மையில் எனக்குத் தோழர் என்பதற்கு அர்த்தம் கம்யூனிஸ்ட்டுகள் என்றே வெகு நாட்கள் நினைத்திருந்தேன். எனது மூன்று வயதிலேயே எனது அப்பா எல்லா வெளிநாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெயரையும் எனது மண்டைக்குள் ஏற்றி இருந்தார். நான் பிறந்ததில் இருந்தே எனது வீட்டுச் சுவறில் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் படம் பார்த்து வளர்ந்தவனாய் இருந்ததால் தமிழ் நாட்டில் வசிக்கும் தெலுங்குகாரர்கள் வீட்டில் வளரும் குழந்தைக்கு தெலுங்கு எப்படியோ. அது போல்வே எனக்கு கம்யூனிசம் ஆகிப்போனது.ஒரு முறை நான் தொலைந்து போன போது ஒரு ஆட்டோகாரரிடம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெயர் சொல்லி அவங்க படம் இருக்க வீடு எனச் சொல்ல அவர் கட்சி ஆபிஸ்கு கூட்டிச்செல்ல அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன் .

கம்யூனிசம் என்றால் என்ன என்று தெரியாத போதும் கம்யூனிசம் எனக்குப் பிடித்துப் போனது. அம்மாவை எப்படி அம்மா என்பதற்காகவே பிடிக்குமோ அது போல் கம்யூனிசம் என்பதற்காகவே அதை எனக்குப் பிடித்தது. வீட்டில் நான், அண்ணன் இரண்டு பேர் என்றாலும் அப்பா என்னிடமே கம்யூனிசத்தைப் பற்றி பேசுவார். அப்போது அப்பா எம்.எய்.டி வைத்திருந்தார். அதில் முன்னாடி ஒரு குட்டி சீட் ஒன்று போட்டு என்னை உட்காரவைத்துக் கொண்டு கருத்து முதல்வாதம் பொருள்முதல்வாதம் எல்லாம் பேசுவார்.இன்னும் என்ன எல்லாமோ பேசியிருக்கிறார். பின்னாளில் ஏங்கல்ஸ் எழுதிய "குடும்பம் ,தனிச்சொத்து ,அரசு ஆகியவற்றின் தோற்றம்" நூலை அப்பா பைக் பயணத்திலேயே சொல்லிவிட்டார் என்று படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.
புதியபரிதி என்கிற பெயரைக் கேட்டவுடன் "உங்க வீட்ல தி.மு.க. வா?" எனக் கேட்டவர்களிடம் "நாங்க தோழர்" என்று விவரம் தெரியாத வயதில் சொல்லியிருக்கிறேன். தோழர்கள் நிரைய பேர் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார்கள் .அவர்கள் தான் முதன் முதலில் என்னை தோழர் என்று அழைத்தவர்கள். "அநியாயம் நடக்கும் போதெல்லாம் ஆத்திரத்தில் அதிர்ந்து கோபத்தால் பொங்குவாய் ஆனால் நீயும் நானும் தோழர்கள்" என்கிற குவேராவின் வார்த்தைகளைக் கேட்டு அது தான் கம்யூனிஸ்ட்களுக்கான டெஃபனிஷன் என்றே நினைத்துக் கொண்டேன்.ஏழைகளுக்கு இரங்குபவன் கம்யூனிஸ்ட் என்று அப்பா சொல்லிக் கேட்டிருந்ததால் "பேரன்பும் பெருங்கோபமும் உடையவனே தோழன்" என்று தம்பி பட கேப்சன் மாதிரி மனதில் பதிந்திருந்தது.
இரண்டாவது படிக்கும் போது ஒரு நன்காலையில் எங்கள் தெருவழியாக சென்ற போலி விக்கும் பாட்டியிடம் போலி வாங்கியே ஆகவேண்டும் என்று ரெண்டு ரூபாய் அம்மாவிடம் வாங்கிக் கொண்டு ஓடினேன். அடுத்த தெருவில் பாட்டி ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்கவரிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்தார். பாட்டிக்கு அந்த ஆள் ரெண்டு ரூபாய் கொடுத்ததாக சொல்லிக் கொண்டிருந்தார்.பாட்டி ஒரு ரூபாய் தான் கொடுத்ததாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்தச் சண்டையை சுத்தி ஐந்து தாய்மார்களும் நாலைந்து சிறுவர்களும் பாத்துக் கொண்டிருந்தார்கள். நிலைமையை புரிந்து கொண்ட நான் என்னிடம் இருந்த ரெண்டு ரூபாயில் இருந்து ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்து "சண்டை எல்லாம் போடாதிங்க பாட்டி" எனச் சொல்லிவிட்டு திரும்பி நடந்தேன். "யாரு ராசா நீ?" என கேட்ட பாட்டியிடம் "தோழர்" என்று சொல்லி காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். இந்த விசயம் வீட்டுக்குத் தெரிந்ததும் அப்பாவைப் போல் பிள்ளையும் ஏமாளியாகவே இருக்கிறான் என அம்மா அழுதது இன்னமும் நினைவு இருக்கிறது.

சரியாக சில்லரை கொடுக்காத கண்டக்டரிடம் சண்டை இடுவது போன்ற புரட்சிகர நடவடிக்கைகளிலும், நண்பனை யாராவது அடித்தால் கூட அவர்களை பயங்கரமாய் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தேன். எங்கள் உறவினர்கள் மத்தியில் இன்று வரை நான் அடாவடிக்காரனே.ஆறாவது ஏழாவது வந்த பின்பு மார்க்சிய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த பின் பக்குவப்பட ஆரம்பித்தேன். ஏமாற்றுபவன் ஏழையாக இருந்தால் என்னை ஏமாற்றிவிட்டு போகட்டும் என்கிற மனநிலைக்கு வந்திருந்தேன்.மேலும் நூல்கள் வாசிக்க வாசிக்க தனிமனிதன் மேல் கோபம் என்பதே முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. சமூக கோபங்கள் அதிகரிக்க ஆரம்பித்தது. எனது பள்ளியில் நான் மிக அமைதியான பையன் என்றே பெயர் வாங்கி வந்தேன். கல்லூரியிலும் அப்படியே பெயர் வாங்கி வந்தேன். மீசை எனது முகத்துக்கு ஒரு முரட்டுத் தனத்தை கொடுக்கும் என்பதால் மீசையை எப்போதும் ட்ரிம் செய்தே இருப்பேன். இந்த மென்மையானவன் போன்ற தோற்றம் என்னை எப்போதும் தனிப்பட்ட சொந்த எதிரிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனாலும் சமூக அவலத்தை சாடுவது , தேவையான பொது விசயங்களுக்கு கோபப் படுவது போன்ற விசயங்களில் என்னை முடிந்தவரை தொய்வில்லாமலேயே செயல்படவைத்துக் கொண்டிருக்கிறேன்.
மூன்று நாட்களுக்கு முன்னர் என் கல்லூரியில் படிக்கும் ஒருவனுடன் தகராறு அவன் தான் ஆரம்பித்தான் என்றாலும் நானும் சேர்ந்து தான் வளர்த்து விட்டேன். அவனது நண்பர்கள் 10 பேருடன் அவன் என்னை அடிக்க வர எனது நண்பர்கள் இருபது பேர் எனக்குத் துணையாய் நிற்க அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். ஆனாலும் என்னை அடிக்க வந்தவனை அடித்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தோழர் ஒருவரை திடீரென சந்தித்து மார்க்சியம் பற்றி பேசவேண்டிய சூழ்நிலை வந்தது.பேசிமுடிக்கையில் அவன் மேல் இருந்த கோபம் முழுவதும் கரைந்தது விட்டது. எவ்வளவோ விசயத்துக்காக ஒரு தோழராய் நான் சண்டை போட வேண்டிய விசயங்கள் இரு்க்க அவனிடம் சண்டை போடுவது லுச்சா தனமாகத் தெரிந்தது. அவனிடம் நான் மன்னிப்பு கேட்டேன். உலகம் நலம் பெற மட்டும் அல்ல . தனிமனிதன் பண்பட்டவனாய் இருந்து நலம் பெறவும் தோழராய் இருத்தல் அவசியம் என்று பட்டது.

1 comment:

எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) said...

நன்றாக இருக்கிறது. சிவப்புச் சிந்தனை உள்ள ஒவ்வொருவரும் தோழர்கள் தாம், நாம் தோழர்களே!

Post a Comment