1
நான் எல்.கே.ஜி. படிக்கிறேன்.
" நீ என்னவாக ஆசைப் படுகிறாய்"
"கலெக்டர்"
இரண்டாம் வகுப்பு
"கவிஞன்" , முதல் கவிதை தினமணியின் இலவச இணைப்பான சிறுவர்மணியில் வந்திருந்தது.
ஐந்தாம் வகுப்பு
"சமூக சேவகன், புரட்சியாளனாய் கூட ஆகலாம்"
எட்டாம் வகுப்பு
"கிரிக்கெட் வீரனாவேன்"
பத்தாம் வகுப்பு
"எனக்கு சூவாளஜி(உயிரியல்) ஆசிரியையை பிடித்திருக்கிறது, நான் டாக்டர் ஆவேன்"
பத்தாவது பரிட்சை லீவ்
"நான் பத்திரிக்கைகாரனாகப் போகிறேன்"
பனிரெண்டாவது
நான் ஆசிரியனாக வேண்டும்
இப்போது இஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன்.
2
என் வீட்டு மேல் மாடியில் ஒரு அண்ணன் இருந்தார். இஞ்சினியரிங் பெயிலாகிவிட்டதால் அழுது
அழுது முகம் எல்லாம் வீங்கி இருந்தது. இரண்டு நாட்களாய் சாப்பிடவில்லை.அம்மா அந்த அண்ணனிடம் ஏதோ இரண்டு மணிநேரத்துக்கு பேசிவிட்டு வந்தார். அடுத்து அவர் ஐ.ஏ.எஸ் தேர்வு மூன்று முறை எழுதி நான்காவது முறை பாஸ் செய்து விகடனில் பேட்டி எல்லாம் கொடுத்தார்.
3
கல்லூரி ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே தெரிந்து விட்டது இது பள்ளி போல் அல்ல என்று.. அடிக்கடி இரண்டு பேர் கல்லூரிக்கு வரவே மாட்டார்கள். அதில் ஒருவன் ரொம்ப நாளாய் வராததை பார்த்து அவனது வீட்டு என் தேடி அழைத்தேன். அவன் படிக்க பிடிக்கவில்லை என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டு நான்கு நாட்களாகி விட்டதாய் அவனது அம்மா அழுதாள். இதை மக்கள் மத்தியில் கொண்டு போக ஏதாவது செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஐந்தாவது நாள். வயிற்று வலியால் நம் வகுப்பு பையன் தற்கொலை செய்து கொண்டான் என எங்கள் ஆசிரியர் அறிவித்தார்.
4
எங்கள் இஞ்சினியரிங் கல்லூரியில் தமிழ் வழியில் படித்ததால் தொடர்ந்து படிக்கமுடியாமல் ஒருவன் பாதியிலேயே நிறுத்திவிட்டு இப்போது தன்னை விட இரண்டு வயது இளைய பையன்களுடன் பி.எஸ்.சி கணிதம் படித்துக்கொண்டிருக்கிறான் .
5
கணினியில் பெரிதாய் எதுவும் தெரியாது என்றாலும் நான் எல்லா பாடங்களிலும் பாஸ் பண்ணி 72 சதவீதம் வைத்திருக்கிறேன். என்னை விட கணினியில் அதிகம் தெரிந்த என் நண்பனுக்கு மூன்று அரியர் இருக்கிறது
6
நண்பன் ஒருவனை பார்க்க ஏ.ஆர். ரகுமானின் இசைப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கே மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படித்த ஒருவர் தன் எழுபதாயிர வேலையை விட்டு விட்டு இசைப் பள்ளியில் சேர்ந்திருப்பதாய் நண்பன் சொன்னான். அவர் காதில் ஹெட் செட் மாட்டிக் கொண்டு மிகவும் ரசித்து கரைந்து வாசித்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு திருப்தி.
7
எங்கியாவது விஸ்காம் ஈவனிங் காலேஜாவது போகணும் மாப்ள எனச் சொல்லும் நண்பனுக்கு மூன்று அரியர். அட்டனனஸ் பெர்சண்டேஜ் அறுபது.
8
"அவங்க பையன் இப்போ அமெரிக்காவுல இருக்கானாம். கடன் எல்லாம் கழிச்சிட்டு கம்பம் மெயின்ல ரெண்டு ஏக்கர் வாங்கி போட்டிருக்காங்க." என சித்தி கண்கள் விரிய என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்க பனிரெண்டாவது படிக்கும் அவர் மகன் போகோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
9
போன வாரம் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரைக் கொன்று விட்டதாக முகநூல் முழுக்க பேச்சாய் இருந்தது.
10
கல்லூரி பேச்சுப் போட்டியில் "இனியும் நீங்கள் இந்த கல்வி முறையை மாற்ற வில்லை என்றால் இந்த கொலை தொடரும் " என நான் பேசியதுக்கு மாணவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினார்கள்.
11
இப்போது சொல்லுங்கள் 1க்கும் 2க்கும் தொடர்பிருக்கிறதா?
12
3 லும் 9 லும் வரும் மாணாவன் ஒருவனே தானோ?
13
4க்கும் 6க்குமான உறவு என்ன?
14
2க்கும் 5க்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு?
15
1,3,8 ஆகியவையின் ஒற்றுமை வேற்றுமை வரையறுங்கள்?
16
7,9,10 இவை எல்லாம் ஒன்றே தானா?

No comments:
Post a Comment