Friday, February 17, 2012
காதலர் தினமும் கலர் கோடிங்கும்
காதலர் தினத்துக்கு முந்தைய இரவு ஒரு மெசேஜ் அதில் நிரைய கலர்களும் அதற்கான அர்த்தங்களும் இருந்தன.நாம் நமது நிலைப்பாடிற்கு(பெரிய இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு) ஏற்ப கலர் சட்டை போட்டு வரவேண்டும் என்றிருந்தது.அதன் விவரத்தை முன்னமே கொடுத்துவிட்டால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பிங்க்- இன்னிக்குத் தான் காதலைச் சொல்ல போறேன்
ஆரஞ்ச்- ரொம்ப நாளா ஒரே பொண்ண காதலிச்சுனுகிறேன்
நீலம்- ரொம்ப காஞ்சு கெடக்கேன். எவன்/எவள் வேணும்னாலும் லவ்வ சொல்லுங்கபா ப்ளீஸ்
கருப்பு- இப்ப காதலிக்கிற மூடுல இல்ல
மஞ்சள்- லவ்வு புட்டுகிச்சு
ப்ரௌன்- நான் இதயம் முரளி கேசு (ஒரு தலைக் காதல்)
பச்சை- முன்னாடி நாளு யாரவது அவங்களுக்கு காதல் சொல்லியிருந்தா.. அதுக்கு சம்மதம் சொல்றது
ரெட்- லவ் எல்லாம் இல்ல ஆனா எனக்கு மாமன் பையன்/பொண்ணு இருக்கு. வீட்டுக்கு எல்லாம் தெரியும் கிட்ட தட்ட நிச்சயம் ஆகிடுச்சுனு சொல்றது.
வெள்ளை- இருதலைக் காதல்
இதைப் பார்த்ததும் திக்கென்றது. "அடப் பாவிங்களா நீலச் சட்டையத் தவிர எல்லாமே அழுக்கா கெடக்கே" அவசர அவசரமாக கருப்புச் சட்டையை மட்டும் துவைத்து போட்டேன். காதலர் தினம் ஆரம்பித்த நொடி மண்டை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றது. அப்போது தான் தோழி ஒருத்தி அலைபேசியில் ஒரு மணி நேரத்துக்கு காதலின் தீமைகள் என்ன? அது எவ்வளவு கொடூரமானது? இம்மையில் மட்டும் அல்லாமல் மறுமையிலும் அது நரகத்துக்கு எப்படி மனிதனை இட்டுச் செல்கிறது என்று மிகத் தெளிவாக சுகி.சிவம் ரேஞ்சுக்கு பேசிமுடித்திருந்தாள் அதுவே கிர்ர்ர்ர்ர்ர்க்கு காரணம்.
கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு கல்லூரிக்குப் போனால் அங்கே பத்து பதினைந்து பேர் கல்லூரிக்குள் அனுமதிக்கப் படாமல் வெளியே நின்று கொண்டிருந்தனர். எல்லாமே கருப்புச் சட்டை போட்டவர்கள். கருப்புச் சட்டை போடக்கூடாது என்பது எங்களது கல்லூரி விதி. ஏன்? எதுக்குனு இப்ப வரைக்கும் தெரியல. எந்தச் சாமி புண்ணியமோ என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் நைசாக உள்ளே நுழைந்து விட்டேன். உள்ளே நுழைந்தது தான் தாமதம். எங்கெங்கு நோக்கினும் வெள்ளைச் சட்டைகள். "அடப்பாவிங்களா இத்தன பேராடா இருக்கிங்க" என்கிற மைன்ட் வாய்சோடு மாடி ஏறினேன். அங்கங்கே நீலச் சட்டை தென்பட்டன. இந்த முறை பையங்களைவிட பொண்ணுகளே அதிக ப்ரௌன் சட்டை. பிங்க் மிகவும் கம்மி.செல் போன் வந்த பிறகு நேரில் சொல்றது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகிவிட்டது.
ரொம்ப நாளா கல்லூரி வானில் சிறகடித்துக் கொண்டிருந்த காதல் பறவைகளில் ஒரு பெண் பறவை ரெட் போட்டு சுத்திக் கொண்டிருந்தது. "வீட்ல பேசி சம்மதம் வாங்கிடுச்சோ " என வருத்ததுடன் நகர.ஆண் பறவை மஞ்சள் போட்டு சுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் "அப்ப அந்த ரெட்டு இவனுக்கு இல்லியா" குஷி கிளம்பியது. "அண்ணே அது அவளோட பிரண்டு தானே. அவன் வெள்ளை போட்டு சுத்துரான் அவ மஞ்சல் போட்டு சுத்துறா" தம்பி ஒருத்தன் மனமகிழ்ச்சியோடு வந்து சொல்லிவிட்டு போனான். "அவே அவே பிரச்சன அவ அவனுக்கு".
மத்த எந்த சட்டையைவிடவும் கருப்பு சட்டை போடுவதில் ஒரு தனி கெத்து இருக்கத் தான் செய்கிறது. விசயம் தெரிந்த ஆசிரியர்கள் மரியாதையுடன் பார்க்க , கருப்பு சட்டை போட்ட பெண்கள்/ஆண்கள் " நாம எல்லாம் ஒரே இனம்" என எதிர் பாலினத்தவரைப் பார்த்து புன்னைகைத்து விட்டு போவார்கள். அப்படி புன்னகைக்க வில்லை என்றால் அவள்/ அவனுக்கு வேறு கல்லூரியில் ஆள் இருக்கலாம் சும்மா சீனுக்காக இங்கே கருப்புச் சட்டை போட்டு சுத்துபவர்களாக இருக்கலாம். இந்த தடவை கருப்புச் சட்டை போட்டு சுத்தும் இருவர் அவர்களுக்குள் லவ்வாகி அடுத்த வருடம் வெள்ளைச் சட்டை போட்டு சுத்துவதற்கான வாய்ப்புகள் அநேகம்.
முன்பு மாதிரி எல்லாம் இப்போது பையன்கள் இல்லை. மஞ்சள் சட்டை போட்டு காலத்தை வீணடிக்காமல் உடனே நீலச் சட்டைக்கு மாறி விடுகிறார்கள். ஏதாவது ஒன்னு ரெண்டு தேவதாஸ்கள் தான் ஃபீலிங்கைப் போட்டு எச்சக் குடி நண்பனுக்கு சரக்கு வாங்கி கொடுத்து சொன்ன கதையையே திருப்பி திருப்பிச் சொல்லி சாகடித்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த கலர் கோடிங்கை கண்டுபிடித்தது எவன் என்றே தெரியவில்லை. மிகவும் தொலைநோக்கு பார்வையுடனும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் சிந்தித்தும் இதை சாதித்து இருக்கிறான். இதில் அதிசயம் என்ன என்றால் இந்த கலர் கோடிங்க் வருடம் வருடம் மாறும். புதிதாய் யாராவது கலர் போட்டு வந்தால் அடுத்த வருசம் கலர் லிஸ்டில் இடம் பெரும். போன தடவை ப்ரௌன் இல்லை.இந்த தடவை அதுக்கொரு கோடிங்க் கொடுத்துவிட்டார்கள்.அதுவும் தமிழ் நாடு முழுக்க இருக்கும் எல்லா கல்லூரிகளுக்கும் தவறாமல் கரெக்டாக சென்று சேர்ந்துவிடும். இது எப்படி சாத்தியமாகிறது என்பதை அண்ணா யுனிவர்சிட்டி ஒரு நிபுணர் குழு அமைத்து கண்டுபிடித்து அதன் வழி நடந்தால் நமது தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக அமையும் (யப்பா அங்கிட்டு இங்கிட்டு சுத்தி கடைசியா ஒரு மெசேஜ் சொல்லியாச்சு)
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment