முன்னாடி முன்னாடி காலத்துல தேவதை ஒன்னு பூமில எல்லா விதமான மரங்களையும் நட்டுட்டுப் போச்சு. போகும் போது "நீங்க நல்லா வளருங்க அம்பது வருசம் கழிச்சு வாரேன். உங்க உடம்புல எதாவது மாத்தனும்னா சொல்லுங்க? மாத்திட்டு போறேன்"னு சொல்லுச்சாம். எல்லா மரங்களும் வளந்ததுங்க. அதுல ஒரு ஆலமரமும் இருந்துச்சி. அது நல்லா குண்டா பெருசா இருக்கும் அதுல நிறைய விழுதுகள்லாம் தொங்கிட்டு இருக்கும்.ஆனா அந்த ஆலமரத்துக்கு அப்படி இருக்கிறது புடிக்கல. " தென்ன மரத் தம்பி மாதிரி நானும் ஒல்லியாகனும்"னு சொல்லிக்கிட்டே இருக்கும். வாழை மரத்து மேலையும் அதுக்கு பொறாம. எல்லோரும் வாழை மரத்த புகழ்றாங்க, அதோட பழத்த மட்டும் ருசிச்சு சாப்பிடுறாங்க, ஆனா நம்மல யாரும் புகழவும் இல்ல, நம்ம பழத்த சாப்புடவும் இல்லனு தன்னையே நொந்துக்குமாம்.
"குறை கேக்க தேவதை வரும் போது நம்மல தென்ன மரம் மாதிரி ஒல்லியாவும் வாழமரத்த போல எல்லோரும் புகழ்ற மாதிரியும் மாத்திபுடச் சொல்லனும்"நு தனக்குத் தானே சொல்லிக்கிச்சு ஆலமரம். தேவதை வர இன்னும் ரொம்ப நாள் இருந்துச்சு.ஆலமரம் ரொம்பவே கவலையா இருந்துச்சு. அந்த நேரம் பாத்து ஒரு மனுசன் கோடாளியோட போனான்.
"அண்ணே எங்க போறிங்க?" ஆலமரம் கேட்டுச்சு. அவன் வெறகு வெட்ட போறேன்னு சொன்னான். "என்னோட கிளைய வெட்டிக்கங்கணே" ஆலமரம் சொல்லுச்சு. "காஞ்ச மரத்த தான் வெட்டனும் பச்ச மரத்த வெட்றது தப்பு"னு மனுசன் சொன்னான். "எனக்கு ஒல்லியாகனும்னு ஆசை அதுனால நீங்க எங்கிளைய வெட்டிக்கிட்டா நான் ஒல்லியாகிறுவேன் .. வெட்டுங்கணே... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.." கெஞ்சுச்சாம். மனுசனும் சரினு ஒரு கிளைய மட்டும் வெட்டிட்டு போய்ட்டான். ஆலமரத்துக்கு வலிச்சாலும் ஒரு வாரம் இப்படியே வெட்டுனா ஒல்லியாயிருவோம்னு சந்தோசப் பட்டு பாட்டு பாடிட்டு இருந்துச்சாம். அப்போ யாரோ அழுகுற சத்தம் கேட்டச்சு.
யாருடானு பார்த்தா குருவி.
"என்னா குருவி, எதுக்கு அழுகுற?" ஆலமரம் விசாரிச்சிச்சு.
"ஆலமரம் அக்கா... எங்கூட்ட காணாம்"நு ஓஓஓஓஓஓனு ஒரே அழுகை புடிச்சிருச்சு.
"அழுகாம சொல்லு குருவி" ஆலமரம் அன்பா சொல்லுச்சு.
"அக்கா இங்க தான் ஒரு கிளை இருந்துச்சு.. அதுல தான் எங்கூடு இருந்துச்சு .. இப்போ கிளையையும் காணோம் கூட்டையும் காணோம்" மறுபடியும் அழுதுச்சு..
அச்சச்சோ நாம அழகாகனும்னு இப்படி நம்மல நம்பி இருக்கிறவங்களுக்கு துன்பத்த கொடுத்துட்டோமேனு வருத்தப்பட்ட ஆலமரம். அடுத்த நாள் வெறகு வெட்ட வந்த மனுசன் கிட்ட வெட்டவேணாம்னு சொல்லிருச்சு.
நாளாக நாளாக ஆலமரம் இன்னும் குண்டாயிடுச்சு நிறைய விழுதுகளூம் வந்து போச்சு. பறவைங்களுக்கு பயன்படுறோம்னு நினைச்சு சந்தோசப்பட்டாலும் மக்கள் யாரும் நம்மல புகழமாட்றாங்களேனு அதுக்கு வருத்தம் ஓரமா இருந்துச்சு. ஒரு நாள் பெரிய புயல் வந்துச்சு. மத்த மரங்கள் விழுந்து நிறைய வீடுகள் உடைஞ்சு போச்சு.. மக்கள் வீட்ட விட்டு வந்து ஆலமரத்துக்கிட்ட வந்து அத கெட்டியா புடிச்சுக்கிட்டாங்க.. ஆலமரத்தோட விழுது நல்லா மண்ணுல பொதைஞ்சு இருந்ததுனால ஆலமரம் மட்டும் விழுகல. அடுத்த நாள் புயல் ஓஞ்சதும் மக்கள் எல்லாம் ஆலமரத்தால தான் தபிச்சோம்னு அதப் புகழ்ந்தாங்க. ஆலமரமும் சந்தோசமாயிடுச்சி..
அடுத்த நாள் தான் தேவதை வரவேண்டிய நாளு. தேவதை வந்து முதல்ல ஆலமரத்துக் கிட்ட எதாவது குறை இருக்கானு கேட்டுச்சு. ஆலமரம் ஒன்னுமில்ல ஆனா புயல்ல மத்த மரங்கள் எல்லாம் விழுந்துடுச்சு. அதுங்க எல்லாம் மறுபடியும் உயிரோட வரனும்னு கேட்டுச்சு. தேவதையும் எல்லா மரங்களுக்கும் உயிர் கொடுத்துச்சு. இப்ப மக்களோட மட்டும் இல்லாம மரங்களும் ஆலமரத்த புகழ்ந்தாங்களாம்.. எல்லோரும் சந்தோசமா இருந்தாங்களாம்.


No comments:
Post a Comment