1
இப்போது நான் இறக்கிறேன்.
என்னுடன் சேர்ந்து உனது
அழகும்... நித்யமும்...
பவித்ரமும்.. இன்ன பிற
கனவுலக யாத்திரைகளும்...
நான்
அழுவதா? வேண்டாமா?
2
நான்
இறப்பதற்கு
மூன்று நாட்கள் இருக்கின்றன.
முதல் நாள்
எப்படி சூரியன் உதித்ததோ
அப்படியே தான்
உதித்தது மூன்றாம் நாளும்...
3
"எதுவும் கடந்து போகும்" என்கிறாய்
மரணம் என உச்சரிக்கின்றன
என் உதடுகள்.
4
இதை நீங்கள் படிக்கையில்
நான் இறந்திருக்கலாம்
இருக்கலாம் என்பதில்
இருக்கிறது எனதுயிர்.
5
மரணம்
எப்போது? எப்படி?
என்பதே ஆச்சரியம் என்கிறாய்
எனக்கு அதிர்ச்சி
எனக் கேட்கிறது
6
"மரணிப்பாய் என அறிந்து
எதற்கு ஆசை?"
எனும் உன் கேள்வியில்
'கூடாது' என்பதை
முடிவில் சேர்த்துக்
கொள்கிறேன்.
7
கவிதையினூடே இடம்
விடுகிறேன் அவற்றை
மரணம் நிரப்பட்டும்
8
சாகாமல் இருத்தலுக்கு
வாழ்தல் என்று
பொருள் அல்ல..
9
வெள்ளைத் தாளாய்
படர்ந்திருக்கிறது மரணம்
வட்டம் சிறிதானாலும்
பெரிதானாலும்
உள்ளீடு ஒன்றுதான்...

1 comment:
அழகிய கவிதை தொகுப்பு நன்றி
Post a Comment