Sunday, October 7, 2012

முயலும் ஆமையும்


(முன்குறிப்பு: இது குழந்தை எழுதிய கதை தானே அன்றி குழந்தைகள் கதை அல்ல)



தாவர பட்சினிகள் மட்டும் வாழும் முல்லை வனத்தில் சுட்டி முயல் ஒன்று இருந்தது. அதற்கு தானே சிறந்தவன் என்கிற தலைக்கனம் இருந்தது . அதனால் அது யாரையும் மதிக்காது.எல்லோரும் அதற்கு மரியாதை செய்ய வேண்டும் என நினைக்கும் . அப்படி மதிக்காதவர்களின் பொருட்களை எடுத்து ஒளித்து வைத்து அவர்களை அலைய விடும் .அந்த காட்டிற்கு புதிதாய் ஒரு ஆமை வந்தது. அந்த ஆமையை வணங்கச் சொன்னது முயல்.
"அன்பாக கேட்டிருந்தால் வணங்குவதற்கு எந்த தடையும் இல்லை ஆனால் ஆணவத்துடன் கேட்டால் நான் வணங்க மாட்டேன் "என்றது ஆமை
"ஒழுங்காக வணங்க போகிறாயா இல்லையா ?"மிரட்டியது முயல்.
"என்னை வணங்க வைக்க வேண்டும் என்றால் நீ முதலில் வணங்க வேண்டும் அதற்கு பதிலாய் நான் உன்னை வணங்குவேன் "என்றது ஆமை .
"உன்னுடன் போட்டி போட்டு உன்னை தோற்க வைத்து வணங்க வைக்கிறேன் "என முயல் கத்தியது.

அதன் படி முயலுக்கும் ஆமைக்கும் ஓட்ட பந்தயம் வைக்கப் பட்டது. ஆமை மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. முயல் வேகமாக துள்ளி ஓடியது . நீண்ட தூரம் ஓடிய பின் முயல் திரும்பி பார்த்தது . கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆமை தென்படவில்லை. அதனால் முயல் கொஞ்ச நேரம் படுத்து விட்டுப் போகலாம் என்று மரத்தடியில் படுத்தது. அப்படியே தூங்கி விட்டது. ஆமை மெதுவாக வந்தது. முயல் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தது. ஆமை முயலை எழுப்பியது.
"எந்திரி முயல் போட்டி இன்னும் முடியவில்லை " என்றது.பதறி எழுந்த முயல்,
"நீ நினைத்தால் என்னை கடந்து சென்று ஜெயித்திருக்கலாமே . ஏன் என்னை எழுப்பினாய் "எனக் கேட்டது .
"நீ தூங்கிக் கொண்டிருக்கும் போது நான் ஓடி ஜெயித்தால் அது உண்மையான வெற்றியாகாது. அது வெட்கக் கேடானது"என்றது ஆமை.
முயல் தன் தவறை உணர்ந்து "மன்னித்து விடு நண்பா " என மன்னிப்பு கேட்டது.
அன்றிலிருந்து அது தலைக்கனம் இன்றி எல்லோரையும் மதித்து வாழ்ந்தது. அதனால் எல்லோரும் முயலை மதித்து வாழ்ந்தனர்.

(நன்றி வண்ணக்கதிர் )



No comments:

Post a Comment