Wednesday, March 6, 2013

இன்சோம்னியா...

திடிரென விழிப்பு பிடித்துக் கொண்டது.. இன்னும் இருள் .... எனது கம்பியூட்டரின் ப்ளே லிஸ்டில் கடைசிப் பாடல் பாடிக்கொண்டிருந்தது.. ரிபீட் ப்ளேயில் வைத்திருக்கிறேன்.. கடைசிப் பாடல் முடிந்தவுடன் மறுபடியும் முதல் பாடலில் இருந்து தொடங்கும்... வெளிச்சம் வருகிறது என்று மானிட்டரை அனைத்து வைத்து இருந்தேன்.. மணி எத்தனை என்று தெரிய வில்லை... மெல்ல தடவி அருகில் இருக்கும் செல் போனை எடுத்து மணி பார்க்கலாம்.. எப்படியும் 2.30க்குள் தான் இருக்கும். இத்தனைக்கும் 12 மணிக்குத் தான் படுத்தேன். சும்மா ஒரு அரை மணி நேரம் புரண்டு கொண்டிருந்திருப்பேன்.கடந்த இருபது நாட்களாக இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் தான் தூங்க முடிகிறது. எழுந்தவுடன் ஒரு விதமான எரிச்சல் மனநிலை வந்து அமர்ந்துகொள்கிறது, இருளில் செல்போனைத் தேடி துலாவினேன். நிறைய புத்தகங்கள் என்னைச் சுற்றிக் கிடப்பது தெரிந்தது.ஏதோ ஒன்று வழுவழுவென்று தட்டுப்பட கையை வெடுக்கென எடுத்தேன்.. பின் பேப்பருக்குள் சலசலப்பு ஏற்பட்டது.. ஹாற்றினாய் இருக்கும். ஹாற்றின் நான் வளர்க்கும் பல்லி. நான் வளர்க்கிறேன் என்று சொன்னால் ஹாற்றின் ஏற்றுக் கொள்வானா என்று தெரியவில்லை.அவனை நான் விரட்டவோ அடிக்கவோ செய்யாததனால் அப்படிச் சொல்லிக் கொள்ள விருப்பப்படுகிறேன்.. ஹாற்றினுக்கு எதாவது உணவு போடவேண்டும் என்று தோன்றும் ஆனால் என்ன உணவு இடுவது.பல்லி மிட்டாய் வாங்கிப் போட்டாலும் சாப்பிடுவது இல்லை.பூச்சிகள் சாப்பிடுவான் என்று தெரியும் ஆனால் அவன் பூச்சி சாப்பிட்டு பார்த்ததே இல்லை. அவன் உண்ணுவதைப் பார்க்கவேண்டும் என்ற் ஆவல் எனக்கு இருக்கிறது. அதுவும் கடந்த ஒரு வாரமாக அதிகமாகிக் கொண்டே வந்தது.



செல் போன் தட்டுப்பட்டது. மணி 2.20 .எனது அறையில் கடிகாரம் இல்லை. எனது அரையில் மட்டும் அல்ல எந்த பேச்சுலர் அரையிலுமே கடிகாரம் காலண்டர் எதுவும் இருக்காது. இனி மேல் தூங்க முடியாது..எழுந்து உட்கார வேண்டியது தான்.ஆனால் எழுந்து என்ன செய்வது? நாளைக்குப் பரிட்ச்சை இருக்கிறது... படிக்கலாம்... ஆனாலும் படிக்கப் பிடிக்கவில்லை.. .ஏன் இப்போது எல்லாம் தூக்கம் வருவது இல்லை?. இதற்கு ஏதாவது மனக்கோளாறு காரணமாக இருக்குமோ என மன அழுத்தம் தரக்கூடிய பிரச்சனைகளை ஆராய ஆரம்பித்தேன். இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ட் வரவிருக்கிறது.இரண்டு பரிட்சை நன்றாக எழுதவில்லை.. கண்டிப்பாக ஒரு அரியர் விழும் .. இது வரை அரியரே வைக்காத ஒருவனுக்கு இது மிகப் பெரிய மன உளைச்சலைத் தரும் தான் ஆனால் இஞ்சினியரிங் வேலைக்கே போகப் போவதே இல்லை என்று முடிவு எடுத்தவன், இதுவரை வாங்கிய மார்க்சீட்கள் எங்கே இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு படிப்பின் மீது அக்கறை கொண்ட ஒருவன் ஏன் அதை நினைத்துப் பயப்பட வேண்டும்.

"சேசே அது காரணமா இருக்காது " வாய் விட்டே சொன்னேன். ஹாற்றின் சுவறில் இருந்து விழும் சத்தம் கேட்டது. மிதமாக எடித் பியாஃப் "நோ ரியாக ரியா" என்று பாடிக் கொண்டிருந்தார்.



இதுவரை யாரையும் காதலிக்காதது தான் பிரச்சனையோ.. இது வரை யாரிடமும் காதல் சொல்லியதில்லை.. எனக்கு யார்மேலும் காதல் வரமாட்டேன் என்கிறது..இல்லை எல்லோர் மேலும் காதல் வருகிறது.. என்னிடம் காதல் சொன்ன எந்தப் பெண்னிடமும் ஏற்றுக் கொண்டதே இல்லை. எல்லோரும் திருமணத்திற்கான ஒரு வழியாகவே காதலைப் பார்க்கிறார்கள்.."இந்தியாவுல எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறோம்னே பாதி பேருக்கு தெரியமாட்டுது" தலைவர் ராதா வாழ்க.. ராதா என்கிற பெயரில் கூட தோழி அல்லது காதலி எனக்கு உண்டு..



விடியும் வரை எதாவது செய்தாக வேண்டும்.பகல் வந்துவிட்டால் தூங்காமல் விழித்திருப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை ப்கலில் விழித்திருப்பவனைப் பார்த்து ஏன் தூங்கலை என்று யாரும் கேட்பதே இல்லை. இந்த இருள் தான் எரிச்சல் படுத்துகிறது.இந்த இருளை வீட்டிற்குள்ளேயே நுழையவிடக்கூடாது என்று எவ்வளவு பிராயத்தன்ப்பட்டாலும் அது நுழைந்துவிடுகிறது.எல்லா ஜன்னல்களும் கதவுகளூம் அடைத்துக் கொண்டு இருந்தாலும் அது உள்ளே நுழைந்து விடுகிறது... எப்போதும் ஒரு தாயைப் போல இருள் தான் நிலைபெற்று இருக்கிறதோ?.. வெளிச்சம் என்பது வந்து போகும் விருந்தாளி தானோ.. அம்மாவை விட்டுவிட்டு விருந்தாளியைக் கொண்டாடும் இந்த முட்டாள் சமூகத்தின் எச்சம் தான் நானோ.. நானும் ஓர் கனவோ.. இந்த ஞாலமும் பொய் தானோ... போர்கேவின் கனவு பற்றிய கதை ஒன்றை நண்பன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.கனவில் இருக்கும் ஒருவனை நிஜ உலகுக்கு கொண்டுவர முயற்சி செய்யும் ஒருவனைப் பற்றியது..எவ்வளவு முட்டாள்த் தனமான செயல். போர்கே ஒரு முட்டாள்.அவன் கதையில் வருபவனும் முட்டாள்,அந்தக் கதையை என்னிடம் சொன்னவனும் முட்டாள்..



"ஹாற்றின்.." சத்தமாக கூப்பிட்டேன். ஹாற்றினிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நான் இந்த இரவை எதாவது பேன்டசியாக நினைத்து கழிக்கமுடியுமா என்று பார்த்தேன்.எதார்த்தமாக இருப்பது போர் அடிக்கிறது.ஏன் இந்த உலகம் எதார்த்தமானதாக இருக்கிறது?.நல்ல, குழந்தைகள் கதையில் வரும் கதாப்பாத்திரமாய் இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.. இந்த சமூகம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொடுத்துவிடுகிறது. அதனுள்ளேயே அவனை சஞ்சரிக்கச் சொல்லி அது ஆணையிடுகிறது.வட்டத்துக்குள் வாழ்கிறோம் என்பதே அறியாமல் இருக்கிறோம் என்பதே எனது பெருங்கவலை.நாம் வைத்திருக்கும் வட்டத்தைக் கொண்டே நாம் இப்பிரபஞ்ச விசயங்களைப் பார்க்கிறோம்.என்ன ஒரு முட்டாள்த்தனம்.. முட்டாளே.. முட்டாளே...முட்டாள்களே... முட்டாள்களே..



" எந்த ஒரு விசயத்தையும் நாம் நமக்கென ஒரு வட்டம் இல்லாமல் பார்க்கவேண்டும்.. ஒவ்வொரு விசயத்தையும் புதிதாக பார்க்கவேண்டும் அப்போது தான் அதன் உண்மைத் தன்மை புரியும்" ஜே.கே சொன்னதாக போர்கேவைப் பற்றிச் சொன்ன அதே நண்பன் சொன்னான்.

"எந்த ஒரு விசயத்தையும் புதிதாய் பார்ப்பேன்" என்று நான் நினைத்துக் கொள்வது கூட ஒரு வட்டம் தான் இல்லியா.. வட்டம் இல்லாமல் எப்படி வாழமுடியும்? ஃபக் யூ ஜே.கே..... ஃபக் யூ நண்பா.. நம்மைச் சுற்றி வட்டம் தேவை.. வட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை... வட்டத்தின் அளவு எவ்வளவு பெரியது என்பது தான் கேள்வி. வட்டத்தை எதைக் கொண்டு அளப்பது? ஏன் அளக்க வேண்டும்? வட்டத்திற்கு ஆளம் இருக்கிறதா? எதற்காக இத்தனை கேள்விகள்? தத்துவஞானி ஆகிவிட்டேனா? ஹா ஹா ஹா ஹா ஹா ஃபக் யூ சாக்ரடீஸ்.... ஃபக் யூ ஹார்டர் அன்ட் ஹார்டர் அன்ட் ஹார்டர்...



இந்த பிரபஞ்சத்தை ஏன் கடவுள் படைக்கவில்லை? படைத்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். அவர் நம் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வார்.அவர் இவ்வுலக்த்தை உய்யச் செய்திருப்பார். காரல் மார்க்சுக்கு வேலை இல்லாமல் போயிருந்திருக்கும்.ஏன் ஐன்ஸ்டீன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை.?. எதற்காக கண்டுபிடித்தீர்கள் ஈதர் இல்லை என்று?.. யார் வந்து அழுதார் நீங்கள் சார்பியல் கோட்ப்பாட்டைச் சொல்லுங்கள் என்று? அட்லீஸ்ட் நானாவது கடவுள் இருப்பார் என்று நம்பிக் கொண்டிருந்திருப்பேன்.... கடவுள் இல்லை என்று ஒருமுறைகூட சொல்லாத உங்களால் கடவுள் இல்லை என்று அறிந்து கொண்ட என்னை வெறுக்கிறேன்.. உங்களையும் சேர்த்தே...



இருளுக்கு கண்கள் பழக ஆரம்பித்தன."ஜஸ்ட் பீட் இட் ஜஸ்ட் பீட் இட்" ஜேக்சன் பாடிக்கொண்டிருந்தார். இருட்டுக்கு கண்கள் பழகுவது பிடிக்கவில்லை. நான் எழுந்து விளக்கைப்போட்டேன். வெளிச்சம் படிந்து என் அறையின் உருவம் தெரிந்தது.. ஹாற்றின் எங்கே என கண்கள் தேடியபோது ஹாற்றின் ஒரு பட்டாம் பூச்சியைத் தின்ன முயற்சி செய்துகொண்டிருந்தான்.கொஞ்சம் கொஞ்சமாக கவ்விக் கொண்டிருந்தான்.எனக்குள் ஹாற்றின் மீது ஏதோ ஒரு வெறுப்பு பல்லியைப் போல் ஊறியது. பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு மேல் ஆன விளக்குமாறை எடுத்து ஹாற்றினை அடித்தேன். வாயில் இருந்து பட்டாம் பூச்சி விழுந்து விட்டது. திரும்ப திரும்ப அடித்தேன்.வாலை மட்டும் விட்டு விட்டு ஓட முயன்றான் நான் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப அடித்தேன்.ஹாற்றின் இறந்துவிட்டான்.இறந்த பிறகும் இரண்டு அடிகள் அடித்தேன்.அந்த பட்டாம்பூச்சி தரையில் திணறிக் கொண்டிருந்தது. இப்போது வெறுப்பு பட்டாம் பூச்சியின் காலகளில் ஒட்டும் மகரந்தங்களாய் ஒட்டிக் கொண்டது. பட்டாம்பூச்சியையும் அடித்தேன். இரண்டாவது அடிக்கே அது இறந்துவிட்டது.. ஹாற்றினுக்காக இறந்த பிறகும் நான்கு அடி அடித்தேன். செல் போனில் மணி பார்த்தேன். 4.06 என்று காண்பித்தது. ஃப்ராங்க் சினாட்றா "ஐ டிட் இட் இன் மை வே" என்று பாடிக்கொண்டிருந்தார். ஹாற்றினையும் அந்த பட்டாம்பூச்சியையும் அடக்கம் செய்ய எடுத்துக்கொண்டு போனேன். இன்னும் இரண்டு மணி நேரத்தில் விடிந்துவிடும்.

No comments:

Post a Comment