நீங்கள் ஒரே நாளில் இரண்டு சிறந்த படங்களைப் பார்க்க முடியாது.. அப்படிப் பார்த்தால் முதலில் பார்த்தது அவ்வளவு சிறந்த படமாக இருக்க முடியாது. ஒரு சிறந்த படம் பார்த்தின் தாக்கம் குறைந்தது அந்த ஒரு நாளாவது இருக்கும். வேலை, மன்த் எண்ட்/ வீக் எண்ட் டார்கெட், பாஸின் திட்டுகள், கிரெடிட் கார்டு பில், உறவுகளுடனான பிரச்சனை இவற்றுக்கு மத்தியில் வாழ நிர்பந்திக்கப்படுபவனுக்கு சிறந்த படம் பார்ப்பது என்பது மிகப் பெரிய துன்புறுத்தல். இதைப் பற்றிப் பேசினால் நாம் முதலாளித்துவம் பற்றி எல்லாம் பேசவேண்டும். கவலைப்படாதீர்கள் இது முதலாளித்துவம் பற்றிய பதிவல்ல.. நான் பார்த்த ஒரு சிறந்த படத்தைப் பற்றியான எனது கருத்து மட்டுமே.
அதிகாலை மூன்று மணிக்கு விழிப்புத்தட்ட நண்பனிடம் வாங்கி வந்த ப்ளாக் ஸ்வேன் (கறுப்பு அன்னம்) படம் பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்து முடிக்கும் போது அப்படியே உறைந்து போயிருந்தேன். ஏதோ நெஞ்சில் அடைத்தது போன்ற உணர்வு.. உடனே குளியலறைக்குள் சென்று ஷவரைத் திறந்து அதற்குக் கீழ் நின்று கொண்டேன். ஏனோ எனக்கு கணியன் பூங்குன்றனாரின் பாடல் நினைவுக்கு வந்தது.
”தீதும் நன்றும் பிறர் தர வாரா” இந்த வரிகளை எத்தனை முறை கேட்டிருப்போம். எத்தனை முறை சொல்லியிருப்போம். இதன் அடுத்த வரியைப் பலரும் கேட்டதில்லை நினைவில் வைத்திருப்பதும் இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்கும் இப் பாடலுக்கும் படத்திற்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ப்ளாக் ஸ்வேன் பார்த்த பின்பு இந்த பாடலின் வேறு அர்த்தங்கள் புரிபடத் தொடங்கின.. நெடுநாள் தோழியை ஒருநாள் காதலி என்று கண்டுகொண்டதைப் போல் ஒரு மனநிலை. உண்மையில் கணியன் நான் நினைத்ததையே நினைத்து எழுதாமல் இருந்திருக்கலாம் என்ற போதும் மேகத்தில் நமக்கு வேண்டிய உருவத்தைக் கண்டு கொண்டது போல் ஒரு மகிழ்வான உணர்வு..
நான் உணர்ந்ததைச் சொல்வதற்கு முன்பு படத்தைப் பற்றி பார்ப்போம். நினா என்கிற பெண் ஒரு பேலே டான்ஸர். மிகவும் அமைதியான , அன்பான, அம்மா சொல்வதைக் கேட்டு நடக்கும் நல்ல பெண். ஆனால் எப்போதும் ஒரு மென் சோகத்தில் இருப்பாள். அவளுக்கு அரிப்பு நோய் இருக்கும் அவளே அறியாமல் அதை அவள் சுரண்டிவிடுவதால் அவளது உடல் அடிக்கடி புண்ணாகிவிடும். அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் அம்மா அவளை எப்போதும் தன்னுடைய கண்காணிப்பிலேயே வைத்திருப்பாள். நினா அவளை அறியாமலேயே சுரண்டிவிடுவதால் அவளது நகங்களை வெட்டி விடுவாள். நினாவின் அறைக்குத் தாழ்ப்பாள் இருக்காது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அம்மாவால் அவளது அறைக்குள் நுழையமுடியும் அவளுக்கு இருக்கும் ஒரே விருப்பமான விசயம் பேலே டான்ஸ் மட்டுமே.
அவள் பயிற்சி பெறும் கம்பெனி லேக் ஸ்வேன் என்கிற ஒரு புதிய பேலே நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்கிறது. (லேக் ஸ்வேன் என்பது படத்துக்காக தயாரிக்கப்பட்டது அல்ல உண்மையிலேயே இருக்கும் ஒரு இசை நாடகம். ஆனால் அந்த நாடகத்தின் கதையை கொஞ்சம் மாற்றி இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.)படத்தில் வரும் நாடகத்தின் கதை இதுதான். ஒரு அழகிய பெண் சாபத்தால் வெள்ளை அன்னமாகிவிடுகிறாள். அவளது சாபம் நீங்க வேண்டுமென்றால் அவளை ஒருவன் உண்மையாகக் காதலிக்கவேண்டும். ஒரு இளவரசன் அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் அவனை தீய குணமுடைய கறுப்பு அன்னமொன்று மயக்கித் தன் வலையில் விழச்செய்கிறது. இதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து அந்த வெள்ளை அன்னம் தற்கொலை செய்து கொள்கிறது.
இந்த நாடகத்தின் முக்கியக் கதாப்பாத்திரமான வெள்ளை அன்னம் மற்றும் கறுப்பு அன்னம் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களையும் செய்யும் வாய்ப்பு நினாவிற்குக் கிடைக்கிறது. முதலில் வெள்ளை அன்னமாக ஆடிவிட்டு அடுத்து கறுப்பு அன்னமாக மாறிவிட்டு மீண்டும் வெள்ளை அன்னமாக மாறி நடிக்கவேண்டும். நினாவின் சுபாவத்திற்கேற்ற வெள்ளை அன்னத்தின் பாத்திரத்தை மிகவும் அற்புதமாகச் செய்வாள். ஆனால் அவளது பண்புக்கு மாறான கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை அவளால் கொண்டுவர முடியாது. எப்படி அந்த கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை அவள் நடித்தாள் என்பதே கதை.
இங்கே தான் தீது நன்றும் பிறர் தர வாரா என்கிற வாக்கியம் எனக்குள் தொக்கி நிற்கிறது. இவ்வளவு நாள் இதை ராஜா சின்ன ரோஜா பாட்டில் வருவது போல் “நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது.. தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது” எனச் சொல்கிறது என்கிற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருந்தேன். ஆனால் ப்ளாக் ஸ்வேன் பார்த்த பிறகு தீதும் நன்றும் நம்முள்ளேயே இருப்பவை.. அவை எக்ஸ்டர்னல் விசயம் அல்ல… ஒரு சேறைப் போல் திடீரென்று வந்து நமது மேல் விழுவதன்று நம்முடலின் அங்கம் போல் நம்முடனே வள்ர்ந்து வருவது.. இன்னது தீது இன்னது நன்று எனப் பிரித்தறிய முடியாவண்ணம் நம்மை ஆட்டுவிப்பது என்று சொல்வதாக புரிந்துகொண்டேன்.. எல்லாவற்றையும் விட முக்கியமானது அந்த பாடலில் மத்தியில் வரும் சில வரிகள்..
”நீர் வழிப் படூஉம் புணை போல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்”
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்”
நீரில் ஓடும் புணை மரம் போல உன் வாழ்க்கையை அதன் போக்கில் வாழு என்பது இதற்கு அர்த்தம் என்று இதுவரை விளக்கம் எழுதியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த வரிகளை விதியின் மேல் நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடு என்று சொல்வதாகவே அர்த்தப்படுத்தி வைத்திருந்தேன். இங்கே ஆருயிர் என்பதை வாழ்க்கை என்று அர்த்தப்படுத்தாமல். இதற்கு முந்தைய வரிகளில் வரும் நம்முள் நிலைப் பெற்றிருக்கும் நன்மை தீமை என்று அர்த்தப்படுத்திக்கொண்டால் இந்த பாடல் புதிய வகையில் பரிணமிக்கிறது.
உனக்குள் இருக்கும் தீமையையும் நன்மையையும் அதன் போக்கில் விட்டுத் தொடரு.. தீயது தீயவற்றை மட்டுமல்ல நல்லவற்றையும் கொண்டு சேர்க்கும்.. நன்மையும் சில சமயம் தீமையைக் கொண்டுவரும்.. இதில் எது வரினும் ஏற்றுக்கொள் என்று பொருள்படுகிறது.. இதையே தான் ப்ளாக் ஸ்வேனும் சொல்கிறது..
நினா மிகவும் நல்லவளாக இருக்கும் வரை அவளது கறுப்புப் பக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.. கறுப்பு அன்னமாக மாறுவதற்காக அவள் தன்னுள் பொதிந்திருக்கும் கறுப்புப் பக்கத்தை வெளிக் கொண்டுவருகிறாள். இதை அவளாகச் செய்வதில்லை. இந்தப் படத்தில் லில்லி என்றொரு கதாப்பாத்திரம் வரும். எப்போதும் நாடகங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கான பயிற்சியை அதில் நடிப்பவர் தவிர்த்து இன்னொருவருக்கும் கொடுப்பார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் நடிப்பவர் வரவில்லை என்றால் இன்னொருவரை வைத்துச் சமாளித்துவிடலாம் என்பதே அதன் நோக்கம். இந்தப் படத்தில் அப்படி நினாவோடு லில்லியையும் தயார் செய்வார்கள். லில்லிக்கு கறுப்பு அன்னத்தின் நடனம் மிக இயல்பாக வரும்.
ஒரு காட்சியில் பயிற்சியாளருக்கும் நினாவிற்கும் நடக்கும் உரையாடல்
“கறுப்பு அன்னத்தோட ஆட்டம் உனக்கு வராதததுக்கு காரணம் நீ எல்லா அசைவுகளையும் அந்த ஒழுங்கோட செய்ற.”
”நான் ரொம்பச் சரியாச் செய்யனும்னு நினைக்கிறேன்”
”ஒழுங்கோட செஞ்சா அது சரியா செஞ்சதா அர்த்தமில்ல… நீ அப்படியே உன் உணர்ச்சிகளோட லூசா விடு அப்பதான் ரொம்பச் சரியா செய்யமுடியும்”
இதுதான் கணியன் சொன்ன ”நீர் வழிப் படூஉம் புணை”. லில்லி அதை அறிந்து செய்வாள் அதனால்தான் அவளால் கறுப்பு அன்னத்தை நன்றாக ஆட முடிந்தது. ஒரு இரவு லில்லி நினாவை வெளியே அழைத்துச் செல்வாள். அங்கு நினா போதை மாத்திரை எடுத்துக்கொண்டு.. இதுவரை அவள் அம்மாவிற்காக கட்டுபடுத்தி வைத்திருந்தாலோ அவற்றில் இருந்தெல்லாம் விடுபடுவாள்.. லில்லியோடு வீட்டுக்கு வரும் நினா முதல் முறையாக அன்று அம்மாவை எதிர்த்துப் பேசுவாள். நினா தனது அறையின் கதவை அடைக்க முயலும்போது அதைத் தடுக்க அவள் அம்மா கையைக் குறுக்கே வைப்பார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் கையை எடுக்கும் வரை மீண்டும் மீண்டும் அறைந்து சாத்தி அம்மாவின் கையை ஒடித்துவிடுவாள். அடுத்த நாள் தாமதமாக பயிற்சி வகுப்புக்கு வர அங்கே லில்லி ஆடிக்கொண்டிருப்பாள். பயிற்சியாளர் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பார். தனது இடத்தைப் பிடிக்க லில்லி முயல்கிறாள் என்று நினைத்துக் கொள்வாள், நினா.. அந்த லேக் ஸ்வானில் வரும் கதை அவளது வாழ்வில் நடப்பதாக கற்பனை செய்துகொள்வாள்.
வெள்ளை அன்னத்திற்கு சொந்தமான இளவரசனைக் கறுப்பு அன்னம் பரித்துக் கொள்வது போல தனக்குச் சொந்தமான கதாப்பாத்திரத்தை லில்லி பரித்துக் கொள்ள முயல்வதாக நினைப்பாள். அது அவளை கோபப்படுத்தும். அவ:ள் முழுவதும் வெள்ளை அன்னத்தின் குணத்தில் இருந்து கறுப்பு அன்னத்தின் குணத்திற்கு மாறுவாள். அது அவளுக்கு மன ரீதியாக நிறையச் சிக்கல்களைக் கொண்டுவரும்.. அவள் பல விநோதங்களைப் பார்ப்பாள். அவளது கண்ணாடி பிம்பத்தில் லில்லி தெரிவாள். அவளது கால்கள் அன்னம் போல் மாறும். அவளது புண்ணை அவளது கண்ணாடி பிம்பம் சொறிந்து பெரிதாக்கும். அவ:ளுக்கு கறுப்பு சிறகுகள் முளைப்பது போல் இருக்கும்.
நிகழ்ச்சி நடக்கும் சிறிது நேரத்திற்கு முன்புதான் எழுந்து நிகழ்ச்சிக்குச் செல்வாள். அங்கே லில்லி நிகழ்ச்சிக்குத் தயாராய் இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்து வேகவேகமாக ஒப்பனை இட்டு வெள்ளை அன்னமாய் ஆடப் போவாள். ஆடும் போது ஒரு இடத்தில் ஆட்டம் பிசகி கீழே விழுந்துவிடுவாள். அழுகையோடு ஒப்பனை அறைக்கு வந்தால் அங்கே லில்லி கறுப்பு அன்னத்தின் ஒப்பனையோடு இருப்பாள். நினா விழுந்துவிட்டதால் தானே கறுப்பு அன்னத்தின் நடனத்தை ஆடப்போவதாகச் சொல்வாள். இதனால் ஆத்திரமடையும் நினா லில்லியை தாக்கி கொன்றுவிடுவாள். அவளது உடலை மறைத்து வைத்துவிட்டு அதே வெறியோடு வந்து கறுப்பு அன்னத்தின் நடனத்தை ஆடுவாள்.கூட்டம் ஆரவாரம் செய்து எழுந்து நின்று கைதட்டும். இப்போது மீண்டும் அவள் வெள்ளை அன்னமாக மாறவேண்டும். அதை எப்படி எதிர் கொண்டாள் என்பதை படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்..
ஒரு கலைஞன் தனது கலைக்காக எந்தளவிற்கு மெனக்கெட வேண்டி உள்ளது என்பதையும் இந்த படம் காட்டும். இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான பாத்திரம் படத்தில் ஐந்து நிமிடம் மட்டுமே வரும் பாத்திரம். நினாவிற்கு முன்பு அந்த கம்பெனிக்கு கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த பேத் என்கிற பாத்திரம். தன்னுடைய வாய்ப்பு பரிக்கப்பட்டதால் வேண்டுமென்றே வாகனத்தில் அடிபட்டுக் கிடக்கும் பேத்தை பார்க்க நினா செல்வதும்.. பேத்தின் மன உணர்வுக்குப் பின்னாளில் நினா வருவதும்.. அட்டகாசம்… பேத் போன்ற கதாப்பாத்திரம் பிரியங்கா சோப்ரா நடித்த ஃபேசன் படத்திலும் வரும். நம்ம ஊரில் தாம் தூம் என்கிற மொக்கைப் படத்தில் மொக்கைப் பாத்திரம் செய்தவரும் தற்போது குயின் என்கிற படத்தில் அட்டகாசமாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றவருமான கங்கனா ரனெளத் அதில் நடித்திருப்பார்..அந்த பாத்திரத்தைப் பற்றியும் ப்ளாக் ஸ்வானில் நடித்தற்காக அகாடமி விருது வாங்கிய நடாலி போர்ட் பற்றியும் படத்தின் இயக்குனர் டேரன் அர்னோவ்ஸ்கி பற்றியும் இந்தப் பதிவில் சொல்லமுடியாது..ஏற்கனவே ரொம்ப நீண்ட பதிவாகிவிட்டது. முடிந்தால் இன்னொரு சமயத்தில் எழுதுகிறேன்..
இப்படத்தின் ட்ரெய்லர் கீழே….









