Monday, June 22, 2015

பிலவம் - LOVE VERSION

கானல் நீர் மேலோட
என்பிலாதவை உயிர் காய
என்றூழ் திறம் போக
சாலையை மீண்டும்
தாராக்கும் முனைப்புடன்
தகதகத்துக் கொண்டிருந்தது
கோடை.

தனலாய் தகிக்கும் வெயிலோடு,
தன்விலா தாங்கா கனத்தில்
தொங்கும் வேழவயிறும் தூக்கி
பாட்டையைக் கடக்கும் பொருட்டு
வெப்பக்காற்றில் தாவித் திரிகிறது
ஒரு பிலவம்.

கண்ணிலா பெருநகர வாகனங்கள்
எண்ணிலா கணக்கில் ஓடி
செல்லும் வழியெங்கும்
கரியமிலம் உமிழ்ந்து
வளி மறைக்க;
பொருமுகிறது
நகரம்.

காலனின் தேர்க்காலாய்
சக்கரங்கள் சுழன்று வந்து
மையத்தை எட்டிவிட்ட - பிலவத்தின்
மைய்ய அச்சில் ஏறிவிட
குடல் தள்ளிச்
செத்தது அப்பிலவம்.

செத்த பிலவத்தை உண்ண
ஆதுரக் காகம் ஒன்று
ஆவலாய் வரும் வேளையில்
ஆயிரம் சக்கரங்களைக்
கொண்ட ஊர்திகள்
இடைவிடாமல் ஊர்ந்தன
பிலவத்தின் உடலில்.

உண்ணதகா உணவென்றான பின்பும்
வெஃகல் அடங்கா காக்கை
நைந்துவிட்ட பிலவத்தின் பிரேதத்தையே
வட்டமிட்டு பறக்கிறது.

என் காதல் கதை கேட்டோரே
காகம் நானே

ஒரு கவிதை, ஒரு சித்திரம், ஒரு உரையாடல்




1

”எதாவது பேசலாமே?” 

“என்ன பேசுவது?”

“எதாவது…”

“ ஏன் பேசவேண்டும்? ”

“எனக்கு போர் அடிக்கிறது”

“டிவி பார்.. இல்லை என்றால் கம்பியூட்டர் இருக்கிறதே”

“அதுவும் சுத்தப் போர்… உனக்குப் பேசுவதில் என்ன 
குறைந்துவிடப்போகிறது. சும்மாகத்தானே இருக்கிறாய்”

“ எனக்குப் பேச எதுவும் இல்லை”

“பேசாமல் அமைதியாக உட்கார்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்”

”ஒன்றுமில்லை”

“எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாய் என்றாவது சொல்”

“நான் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை..”

“குறைந்த பட்சம் இந்த முட்டாள் ஏன் வாயை மூடவில்லை என்று கூட சிந்திக்கவில்லையா?”

“இல்லை”

“பேசு.. பேசு… பேசு… பேசு..”

“நச்சரிக்காதே.. நான் என்ன அடிமையா நீ சொல்வதை எல்லாம் செய்வதற்கு?”

“ஆமாம் உன்னைப் பார்க்க அப்படித்தான் இருக்கிறது…. அடிமைகள் பேசமாட்டார்களாம். இருண்ட அறையில் ஒருவனின்  மூச்சுக் காற்று இன்னொருவனுடைய புற மண்டையில் அடிக்கும் அளவுக்கு நெருக்கமாக நின்றபடியே கிலோ கணக்கில் இருக்கும் இரும்புச் சங்கிலிகளை சுமந்தவாறு இருப்பார்களாம். அவர்களுக்கு பேசுவது என்பது சக்தியை வீண் செய்தல். அந்த சக்தியை வைத்து வேறு எதாவது செய்யலாம்.. இன்னும் கொஞ்சம் உயிரை நீட்டிக்கலாம் என்று இருப்பார்களாம். மேலும் எதுவுமே செய்ய இயலாத ஒரு அடிமை தன்னைப் போலவே எதுவும் செய்யமுடியாத இன்னொரு அடிமையிடம் பேச என்ன இருக்கிறது?… ஸ்பார்டகஸ் நாவலில் படித்தது..நீ ஓர் அடிமை போல் இருக்கிறாய்”

“ம்.”

“கேட்கிற கேள்விக்குப் பதிலாவது சொல்கிறாயா?”

“மாட்டேன்”

” உனது முதல் முத்தம் நினைவிருக்கிறாதா?.. உன் வாழ்வில் வந்தவர்களில் உனக்கு எத்தனை பேரைப் பிடிக்கும்?.. ஒரு பெரிய புத்தகத்தை ஒரே நாளில் படித்த அனுபவம் இருக்கிறதா?.. நீ வரலாற்றில் எதாவது மாற்ற வேண்டும் என்றால் என்ன மாற்றுவாய்?  உனது பெரிய ஆசைகள் என்ன?.. உனது பாலியல் கனவில்  அதிக முறை வந்தவர் யார்?.. நீ எப்படிச் சாக விரும்புகிறாய்?”

 “ இப்படித்தான் ” என்றபடி தனது கழுத்தை அறுத்து அவன் செத்துப் போனான்… அவள் பேசுவதற்கு வேறொருவனைத் தேடிப் போனாள்.

                            2


சென்ற வாரம் வியாழக்கிழமை யன்று இந்தச் சித்திரத்தை அடைக்கலம் என்கிற தலைப்பின் கீழ் ஒரு இணையதளத்தில் பார்க்க நேரிட்டது. பார்த்தமாத்திரத்திலேயே இந்தச் சித்திரம் நமது கருத்தையும் கவனத்தையும் கவர்ந்ததாலே இதை நமது நேயர்களிடம் பகிர்கிறோம். இதன் சித்திரக்காரர் எலிசபத் சாப்மென் என்கிற அம்மையார்  அமெரிக்க நாட்டில் வசித்து வருகிறார். இவர்  சித்திரங்களை மிகவும் புதியனவாகவும், விழுமிய வரையறைகளைத் தாண்டியும், ஆழ்ந்த ஈடுபாடோடும் வரைபவர் என்று கேள்விப்படுகிறோம். இவர் நிறைய பரிசில்களைப் பெற்றிருக்கிறார் என்றும் தெரியவருகிறது. இவரது பெயரை இணையத்தில் தட்டினாலே பலத்தகவல்கள் வந்து நம் காலடியில் கொட்டுவதில் இருந்து இவர் ஒரு பிரபலமான சித்திரக்காராக இருக்கவேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. தனது இணையதளத்திலே ‘ கணவருக்கு நல்ல மனைவியாகவும், பெண்டு பிள்ளைகளுக்கு நல்ல தாயாராகவும், பெயரன் பெயர்த்திகளுக்கு நல்ல பாட்டியாகவும் இருப்பதே தனக்கு பரமசந்தோசம்’ என்று இவர் குறிப்பிடுவதில் இருந்து இவரும் நம்மூர் பெண்களைப் போலத்தான் என்று தெளிவாகத் தெரிகிறது.  

 இந்த விநோதச் சித்திரம் எதைக் குறிப்பிடுகிறதென்ற செய்தி பல நேயர்களுக்கு எளிதில் புரிபடாமல் போகலாம். ஆகையால் நமது ஜனங்களுக்கு இந்தச் சித்திரத்தின் நயத்தை விளக்கிச் சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தச் சித்திரம் உறைந்த பனி விழும் ஆகாஷத்தையும் அதில் நனைந்து ஆடும் வெற்று மரங்களையும் குறிக்கின்றன. இந்தச் சித்திரத்தின்  மேற்பகுதியில் இருக்கும் வெள்ளை நிறமானது பனியைக் குறிக்கிறது. இடையிடையே தெரியும் நீல நிறமோ ஆகாஷத்தைக் குறிக்கிறது. இதற்கு அடைக்கலம் என்று பெயரிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் ரெஃப்யூஜ் என்று சொல்வார்கள். அதாவது இத்தனை ரம்மியமான சூழலில் அடைக்கலமாகிவிட வேண்டும் என்று அவர் கருதியிருக்கலாம். போர் முடிந்த பிறகு தோற்ற மக்களின் மகாதரித்திர அடைக்கல நிலையைப் பார்த்திருக்கும் பக்‌ஷத்தில் இது போன்ற ஒரு சித்திரத்தை…… ஒரு கணம் பொருத்தருளுங்கள்.. அச்சச்சோ….  இந்தச் சித்திரம் குறித்து மேலதிகமாக சொல்ல வேண்டும் என்கிற அவா எனக்குள்ளும் ஊறி வழிகிறது. ஆனால் அதற்குள் குப்பை லாரி வந்துவிட்டது.  நான்கு தெரு போய் குப்பை அள்ளி போட்டால்தான் போஜனத்திற்கும் போதைக்கும் வழி பிறக்கும். அதனால் இச் ஷணமே உத்தரவு பெற்றுக் கொள்கிறேன். பொழுது சாய சாராயக் கடையில் சந்திக்கிறேன்.    
                                              
3

கானல் நீர் மேலோட
என்பிலாதவை உயிர் காய
என்றூழ் திறம் போக
சாலையை மீண்டும்
தாராக்கும் முனைப்புடன்
தகதகத்துக் கொண்டிருந்தது
கோடை.

தனலாய் தகிக்கும் வெயிலோடு,
தன்விலா தாங்கா கனத்தில்
தொங்கும் வேழவயிறும் தூக்கி
பாட்டையைக் கடக்கும் பொருட்டு
வெப்பக்காற்றில் தாவித் திரிகிறது
 ஒரு பிலவம்.

கண்ணிலா பெருநகர வாகனங்கள்
எண்ணிலா கணக்கில் ஓடி
செல்லும் வழியெங்கும்
கரியமிலம் உமிழ்ந்து
வளி மறைக்க;
பொருமுகிறது
நகரம்.

காலனின் தேர்க்காலாய்
சக்கரங்கள் சுழன்று வந்து
மையத்தை எட்டிவிட்ட - பிலவத்தின்
மைய்ய அச்சில் ஏறிவிட
குடல் தள்ளிச்
செத்தது அப்பிலவம்.


செத்த பிலவத்தை உண்ண
ஆதுரக் காகம் ஒன்று
ஆவலாய்  வரும் வேளையில்
ஆயிரம் சக்கரங்களைக்
கொண்ட ஊர்திகள்
இடைவிடாமல் ஊர்ந்தன
பிலவத்தின் உடலில்.

உண்ணதகா உணவென்றான பின்பும்
வெஃகல் அடங்கா காக்கை
நைந்துவிட்ட பிலவத்தின் பிரேதத்தையே
வட்டமிட்டு பறக்கிறது.

அட
அறிவிலி மாந்தரே
காகம் நீரே.


நினைவு மயக்கம்

எழுதி வைக்காத
ஒரு கவிதையைப் போல
நீ என் நினைவில் இருந்து
மங்கிப் போய்விட்டாய்..

எவ்வளவு யோசித்தும்
என்ன சொல்
என்ன வரி
என்ன கரு
எதுவும் நினைவில் இல்லை..

எனக்கு இருப்பது எல்லாம்
ஒரு கவிதை என்னுள் இருந்தது
என்கிற நினைவு
மட்டுமே.

பிரியமானவர்களின் அவதூறு

உங்கள் பிரியத்துக்குரியவரிடம் இருந்து
ஒரு அவதூறை எதிர்கொள்வது
என்பது சண்டையிடாமல்
பிரிந்து போன காதலியை
எதிர்கொள்வதற்கு சமானம்.

அதை நோக்கிப்
போலியாக புன்னகைக்காதீர்கள்.

காணாதது போல்
கடந்து செல்ல முயலாதீர்கள்.

அதன் கடந்தகாலம் பற்றிய
ஆராய்ச்சிகளை கைவிடுங்கள்.

அதன் நிகழ்காலத்தை
விளக்கவோ விளங்கிக் கொள்ளவோ
முற்படாதீர்கள்.

ஒரு நல்ல கனவு
முடிந்து போனதற்கு துயரப்படுவது
போல் துயரப்படுங்கள்.
முடிந்தால் அழுதுவிடுங்கள்
ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை.

இத்தனை காலமும்
பழைய காதலியைத்
தற்செயலாக சந்திப்பதற்கு
நீங்கள் காத்திருந்ததைப் போல்
உங்கள் பிரியத்துக்குரியவர்
அவதூறை நம்பக்காத்திருந்தார்
என்பதை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்.