Thursday, February 23, 2012

கல்யாணம் = கன்பியூசன்ஸ் =கொஸ்டீன்ஸ்= கான்ட்றோவர்சியல்

"ஏம்மா உங்க கல்யாண போட்டோல நான் இல்ல?"

"அதுக்கு முன்னாடி நீ பிறக்கலபா"

"ஏன் பிறக்கல?"

"அம்மாவுக்கு அப்ப கல்யாணம் ஆகலைல"

என்னால் அந்த பதிலை அப்போது புரிந்து கொள்ளவே முடியவில்லை. எதிர்த்த வீட்டு ஜானகி அக்காவுக்கு கல்யாணம் ஆகியதும் கொஞ்ச நாட்களில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. so கல்யாணம் ஆனா தான் குழந்தை பிறக்கும் என்று மண்டையில் ஏறிவிட்டது.



மாடிவீட்டு நிர்மலா அக்காவிடம் கேட்டேன்.

"ஏங்கா கல்யாணம் பண்றாங்க?"

"குழந்தை பெத்து சந்தோஷமா இருக்க"

ரெண்டு விசயம் மண்டையைக் காய்ச்சியது

1. கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக குழந்தை பெத்துக்கிறாங்களா? இல்லை குழந்தை பெத்துக்கிறதுக்காக கல்யாணம் பண்ணிக்குறாங்களா?



2. குழந்தை பெத்து சந்தோசமா இருக்க கல்யாணம் பண்ணிகிறாங்கன்னா ஏன் எலிசா அவங்க அம்மா அவனை எப்பப்பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க. இவன் இருக்குற வரைக்கும் நிம்மதியா இருக்க முடியாதுனு வேற புலம்புறாங்களே... # லாட் ஆஃப் கன்பியூசன்ஸ்





"என்னதான் இருந்தாலும் நம்ம பேரு சொல்ல ஒரு புள்ள வேணாமா?" எக்கச்சக்க தடவை கேட்ட டயலாக். 'பேர் சொல்லும் பிள்ளை' னு கமல் ஒரு படம் கூட நடிச்சிருக்கார்."நம்ம வம்சம் உன்னோட நின்னு போயிரக்கூடாது. அது அப்படியே வளரனும்." நாம இருந்தோம் அப்படினு ஒரு சாட்சி வைக்கத்தான் குழந்தை பெத்துக்குறமா?



என் நண்பனின் அக்கா குழந்தை இல்லை என்று தூக்கு மாட்டிக் கொண்டார். அவர் இறந்த கொஞ்ச நாளில் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.குழந்தை இல்லாமல் இல்லற வாழ்க்கை இயங்காதோ?

என் மாமா அத்தைக்கு பிள்ளை கிடையாது ஆனாலும் ரெண்டு பேர் ஒன்னாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அப்ப குழந்தைக்கும் கல்யாணத்துக்கும் சம்மந்தம் கிடையாதா? #கான்ட்றோவர்சியல்



"மெட்டி ஒலி விஜி மாதிரியே நம்ம சாருவும் ஏமாந்து கர்பமாயிட்டா.கலைக்கவும் விடமாட்றா.. பாவம் அவ அண்ணன் தான் அந்த பையனைப் போய் பாத்து. அப்படி இப்படி பேசி கல்யாணம் பண்ணி வச்சான்." பக்கத்து வீட்டு மகேஷ் அக்கா அடுத்த தெரு சாருலதா அக்காவைப் பற்றி பொறனி பேசிக் கொண்டிருந்தார். அப்போ கல்யாணம் பண்ணாமயே குழந்தை பிறக்கும்னா ஏன் கல்யாணம் பண்ணனும்? #கொஸ்டீன்






"நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கிறிங்க?" கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க வந்த நண்பரிடம் கேட்டேன்.

"நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம், சொந்த வீடும் இருக்கு, சோ நெக்ஸ்ட் கல்யாணம் தான" கல்யாணம் என்பது படிப்பு, வேலை, சம்பளம் முடித்து வாழ்க்கையில் அடுத்து பண்ணவேண்டிய விசயமா?.

"எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டிங்கிறான், ஒரு வேலைல நிக்க மாட்டிங்கிறான், இவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சாலாவது ஒழுங்காவானானு பாக்குறேன்" ஒரு தூரத்து சொந்தக்கார பெண்மணி பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.அப்போ பொறுப்பு இல்லாதவனுங்க கல்யாணம் பண்ணிக்கனுமா? # அகேன் கான்ட்றோவர்சியல்.





"நாம சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு... நாம எல்லாம் கல்யாணம் மாதிரியான விசயங்களில் கமிட் ஆகக் கூடாது" இது வரை முகமே காட்டாத தோழி அடிக்கடி சொல்வதுண்டு. அப்போ கல்யாணம் என்பது நம்மை பின்னுக்கு இழுப்பதா?

"எங்க அக்கா பொண்ணு தான் தம்பி... ஊருல சும்மா தான் இருந்துச்சு...தனியா எல்லா வேலையும் பண்ண முடியல.அதான் ப்ளேட் கழுவ, மசாலா போட ஆகுமேனு கட்டிக்கிட்டு வந்துட்டேன்". பானி பூரி விக்கும் முருகேசண்ணன் சொன்னார். கல்யாணம் பண்ணுவது நமக்கு உதவத்தானா? #அகேன் கான்ட்றோவர்சியல்





ஊரையே கூட்டி சாப்பாடு போட்டு இது என் துணை வேற யாரும் ட்ரை பண்ணாதிங்கனு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிறாங்க ரைட்டு. யாருமே இல்லாம மலைக் கோயில்ல ஹீரோ ஹிரொயின் மட்டுமே இருந்துகிட்டு மஞ்சலை வச்சு தாலி கட்டிக்கிறாங்களே அது எதுக்கு?#கொஸ்டீன்





சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு மூன்று நாட்கள் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து போகவேண்டி இருந்தது.மூன்று நாட்களும் ப்ரீ டைமில் ஒரு பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தேன். சைகை கூட கிடையாது. ஜஸ்ட் பார்ப்பேன் அவ்வளவு தான். கடைசி நாள் அவளே வந்து பேசினாள்.

"என்ன என்னியவே பாத்துக்கிட்டிருக்க?"

"சும்மா தான்"

"உள்காடா?"

"ஆமா எப்படித் தெரியும்"



(7நிமிடம் பேச்சு சுவாரசியம் இல்லாத பகுதி என்பதால் நீக்கப்பட்டு விட்டது..)



"லவ் பண்றியா?"

"என்ன?"

"லவ் பண்றியா?'

"அப்படி எல்லாம் இல்ல.. யு ஆர் மிஸ்டே.."

"நான் உன்ன லவ் பண்றேன். நீ என்ன லவ் பண்றியா?"

"ம்"

"ம்னா பண்றியா? இல்லியா?"

"பண்றேன்"

"சீரியசாவா? இல்ல டைம் பாஸுக்கா?"

"சீரியசாதான்"

"அப்ப என்ன கல்யாணம் பண்ணிப்பியா?"

"மாட்டேன்"

"மாட்டியா? சீரியசான லவ்வுன்ன"

"ஆமாம் லவ் பண்ணா கல்யாணம் பண்ணிக்கனுமா என்ன?"

ஒரு பயங்கரமான ஆங்கிலக் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு பதில் சொல்லாமல் போய்விட்டாள். அப்ப லவ் பண்றது கல்யாணம் பண்ணிக்கிறதுக்குத் தானா.. தெய்வீகக் காதல், தேனமுதுக் காதல் எல்லாம் உடான்ஸா? #^&^$%@^*



இதற்கான பதில்கள் யாராவது சொல்லுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்



(குறிப்பு: இந்த கன்பியூசன்ஸ்,கான்ட்றோவர்சியல்ஸ், கொஸ்டீன்ஸ் ஆகியவற்றை சால்வ் பண்ணும் இளம் பெண்கள் யாராவது என்னை கல்யாணம் பண்ண அப்ளை பண்ணினால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்)

Friday, February 17, 2012

காதலர் தினமும் கலர் கோடிங்கும்





காதலர் தினத்துக்கு முந்தைய இரவு ஒரு மெசேஜ் அதில் நிரைய கலர்களும் அதற்கான அர்த்தங்களும் இருந்தன.நாம் நமது நிலைப்பாடிற்கு(பெரிய இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு) ஏற்ப கலர் சட்டை போட்டு வரவேண்டும் என்றிருந்தது.அதன் விவரத்தை முன்னமே கொடுத்துவிட்டால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பிங்க்- இன்னிக்குத் தான் காதலைச் சொல்ல போறேன்
ஆரஞ்ச்- ரொம்ப நாளா ஒரே பொண்ண காதலிச்சுனுகிறேன்
நீலம்- ரொம்ப காஞ்சு கெடக்கேன். எவன்/எவள் வேணும்னாலும் லவ்வ சொல்லுங்கபா ப்ளீஸ்
கருப்பு- இப்ப காதலிக்கிற மூடுல இல்ல
மஞ்சள்- லவ்வு புட்டுகிச்சு
ப்ரௌன்- நான் இதயம் முரளி கேசு (ஒரு தலைக் காதல்)
பச்சை- முன்னாடி நாளு யாரவது அவங்களுக்கு காதல் சொல்லியிருந்தா.. அதுக்கு சம்மதம் சொல்றது
ரெட்- லவ் எல்லாம் இல்ல ஆனா எனக்கு மாமன் பையன்/பொண்ணு இருக்கு. வீட்டுக்கு எல்லாம் தெரியும் கிட்ட தட்ட நிச்சயம் ஆகிடுச்சுனு சொல்றது.
வெள்ளை- இருதலைக் காதல்

இதைப் பார்த்ததும் திக்கென்றது. "அடப் பாவிங்களா நீலச் சட்டையத் தவிர எல்லாமே அழுக்கா கெடக்கே" அவசர அவசரமாக கருப்புச் சட்டையை மட்டும் துவைத்து போட்டேன். காதலர் தினம் ஆரம்பித்த நொடி மண்டை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றது. அப்போது தான் தோழி ஒருத்தி அலைபேசியில் ஒரு மணி நேரத்துக்கு காதலின் தீமைகள் என்ன? அது எவ்வளவு கொடூரமானது? இம்மையில் மட்டும் அல்லாமல் மறுமையிலும் அது நரகத்துக்கு எப்படி மனிதனை இட்டுச் செல்கிறது என்று மிகத் தெளிவாக சுகி.சிவம் ரேஞ்சுக்கு பேசிமுடித்திருந்தாள் அதுவே கிர்ர்ர்ர்ர்ர்க்கு காரணம்.

கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு கல்லூரிக்குப் போனால் அங்கே பத்து பதினைந்து பேர் கல்லூரிக்குள் அனுமதிக்கப் படாமல் வெளியே நின்று கொண்டிருந்தனர். எல்லாமே கருப்புச் சட்டை போட்டவர்கள். கருப்புச் சட்டை போடக்கூடாது என்பது எங்களது கல்லூரி விதி. ஏன்? எதுக்குனு இப்ப வரைக்கும் தெரியல. எந்தச் சாமி புண்ணியமோ என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் நைசாக உள்ளே நுழைந்து விட்டேன். உள்ளே நுழைந்தது தான் தாமதம். எங்கெங்கு நோக்கினும் வெள்ளைச் சட்டைகள். "அடப்பாவிங்களா இத்தன பேராடா இருக்கிங்க" என்கிற மைன்ட் வாய்சோடு மாடி ஏறினேன். அங்கங்கே நீலச் சட்டை தென்பட்டன. இந்த முறை பையங்களைவிட பொண்ணுகளே அதிக ப்ரௌன் சட்டை. பிங்க் மிகவும் கம்மி.செல் போன் வந்த பிறகு நேரில் சொல்றது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகிவிட்டது.





ரொம்ப நாளா கல்லூரி வானில் சிறகடித்துக் கொண்டிருந்த காதல் பறவைகளில் ஒரு பெண் பறவை ரெட் போட்டு சுத்திக் கொண்டிருந்தது. "வீட்ல பேசி சம்மதம் வாங்கிடுச்சோ " என வருத்ததுடன் நகர.ஆண் பறவை மஞ்சள் போட்டு சுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் "அப்ப அந்த ரெட்டு இவனுக்கு இல்லியா" குஷி கிளம்பியது. "அண்ணே அது அவளோட பிரண்டு தானே. அவன் வெள்ளை போட்டு சுத்துரான் அவ மஞ்சல் போட்டு சுத்துறா" தம்பி ஒருத்தன் மனமகிழ்ச்சியோடு வந்து சொல்லிவிட்டு போனான். "அவே அவே பிரச்சன அவ அவனுக்கு".

மத்த எந்த சட்டையைவிடவும் கருப்பு சட்டை போடுவதில் ஒரு தனி கெத்து இருக்கத் தான் செய்கிறது. விசயம் தெரிந்த ஆசிரியர்கள் மரியாதையுடன் பார்க்க , கருப்பு சட்டை போட்ட பெண்கள்/ஆண்கள் " நாம எல்லாம் ஒரே இனம்" என எதிர் பாலினத்தவரைப் பார்த்து புன்னைகைத்து விட்டு போவார்கள். அப்படி புன்னகைக்க வில்லை என்றால் அவள்/ அவனுக்கு வேறு கல்லூரியில் ஆள் இருக்கலாம் சும்மா சீனுக்காக இங்கே கருப்புச் சட்டை போட்டு சுத்துபவர்களாக இருக்கலாம். இந்த தடவை கருப்புச் சட்டை போட்டு சுத்தும் இருவர் அவர்களுக்குள் லவ்வாகி அடுத்த வருடம் வெள்ளைச் சட்டை போட்டு சுத்துவதற்கான வாய்ப்புகள் அநேகம்.

முன்பு மாதிரி எல்லாம் இப்போது பையன்கள் இல்லை. மஞ்சள் சட்டை போட்டு காலத்தை வீணடிக்காமல் உடனே நீலச் சட்டைக்கு மாறி விடுகிறார்கள். ஏதாவது ஒன்னு ரெண்டு தேவதாஸ்கள் தான் ஃபீலிங்கைப் போட்டு எச்சக் குடி நண்பனுக்கு சரக்கு வாங்கி கொடுத்து சொன்ன கதையையே திருப்பி திருப்பிச் சொல்லி சாகடித்துக் கொண்டிருப்பார்கள்.



இந்த கலர் கோடிங்கை கண்டுபிடித்தது எவன் என்றே தெரியவில்லை. மிகவும் தொலைநோக்கு பார்வையுடனும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் சிந்தித்தும் இதை சாதித்து இருக்கிறான். இதில் அதிசயம் என்ன என்றால் இந்த கலர் கோடிங்க் வருடம் வருடம் மாறும். புதிதாய் யாராவது கலர் போட்டு வந்தால் அடுத்த வருசம் கலர் லிஸ்டில் இடம் பெரும். போன தடவை ப்ரௌன் இல்லை.இந்த தடவை அதுக்கொரு கோடிங்க் கொடுத்துவிட்டார்கள்.அதுவும் தமிழ் நாடு முழுக்க இருக்கும் எல்லா கல்லூரிகளுக்கும் தவறாமல் கரெக்டாக சென்று சேர்ந்துவிடும். இது எப்படி சாத்தியமாகிறது என்பதை அண்ணா யுனிவர்சிட்டி ஒரு நிபுணர் குழு அமைத்து கண்டுபிடித்து அதன் வழி நடந்தால் நமது தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக அமையும் (யப்பா அங்கிட்டு இங்கிட்டு சுத்தி கடைசியா ஒரு மெசேஜ் சொல்லியாச்சு)

Tuesday, February 14, 2012

இந்த கேள்விகளுக்கு பதில் வேண்டாம்

1

நான் எல்.கே.ஜி. படிக்கிறேன்.

" நீ என்னவாக ஆசைப் படுகிறாய்"

"கலெக்டர்"

இரண்டாம் வகுப்பு

"கவிஞன்" , முதல் கவிதை தினமணியின் இலவச இணைப்பான சிறுவர்மணியில் வந்திருந்தது.

ஐந்தாம் வகுப்பு

"சமூக சேவகன், புரட்சியாளனாய் கூட ஆகலாம்"

எட்டாம் வகுப்பு

"கிரிக்கெட் வீரனாவேன்"

பத்தாம் வகுப்பு

"எனக்கு சூவாளஜி(உயிரியல்) ஆசிரியையை பிடித்திருக்கிறது, நான் டாக்டர் ஆவேன்"

பத்தாவது பரிட்சை லீவ்

"நான் பத்திரிக்கைகாரனாகப் போகிறேன்"

பனிரெண்டாவது

நான் ஆசிரியனாக வேண்டும்



இப்போது இஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன்.




2
என் வீட்டு மேல் மாடியில் ஒரு அண்ணன் இருந்தார். இஞ்சினியரிங் பெயிலாகிவிட்டதால் அழுது
அழுது முகம் எல்லாம் வீங்கி இருந்தது. இரண்டு நாட்களாய் சாப்பிடவில்லை.அம்மா அந்த அண்ணனிடம் ஏதோ இரண்டு மணிநேரத்துக்கு பேசிவிட்டு வந்தார். அடுத்து அவர் ஐ.ஏ.எஸ் தேர்வு மூன்று முறை எழுதி நான்காவது முறை பாஸ் செய்து விகடனில் பேட்டி எல்லாம் கொடுத்தார்.
3
கல்லூரி ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே தெரிந்து விட்டது இது பள்ளி போல் அல்ல என்று.. அடிக்கடி இரண்டு பேர் கல்லூரிக்கு வரவே மாட்டார்கள். அதில் ஒருவன் ரொம்ப நாளாய் வராததை பார்த்து அவனது வீட்டு என் தேடி அழைத்தேன். அவன் படிக்க பிடிக்கவில்லை என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டு நான்கு நாட்களாகி விட்டதாய் அவனது அம்மா அழுதாள். இதை மக்கள் மத்தியில் கொண்டு போக ஏதாவது செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஐந்தாவது நாள். வயிற்று வலியால் நம் வகுப்பு பையன் தற்கொலை செய்து கொண்டான் என எங்கள் ஆசிரியர் அறிவித்தார்.


4

எங்கள் இஞ்சினியரிங் கல்லூரியில் தமிழ் வழியில் படித்ததால் தொடர்ந்து படிக்கமுடியாமல் ஒருவன் பாதியிலேயே நிறுத்திவிட்டு இப்போது தன்னை விட இரண்டு வயது இளைய பையன்களுடன் பி.எஸ்.சி கணிதம் படித்துக்கொண்டிருக்கிறான் .
5
கணினியில் பெரிதாய் எதுவும் தெரியாது என்றாலும் நான் எல்லா பாடங்களிலும் பாஸ் பண்ணி 72 சதவீதம் வைத்திருக்கிறேன். என்னை விட கணினியில் அதிகம் தெரிந்த என் நண்பனுக்கு மூன்று அரியர் இருக்கிறது
6
நண்பன் ஒருவனை பார்க்க ஏ.ஆர். ரகுமானின் இசைப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கே மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படித்த ஒருவர் தன் எழுபதாயிர வேலையை விட்டு விட்டு இசைப் பள்ளியில் சேர்ந்திருப்பதாய் நண்பன் சொன்னான். அவர் காதில் ஹெட் செட் மாட்டிக் கொண்டு மிகவும் ரசித்து கரைந்து வாசித்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு திருப்தி.
7
எங்கியாவது விஸ்காம் ஈவனிங் காலேஜாவது போகணும் மாப்ள எனச் சொல்லும் நண்பனுக்கு மூன்று அரியர். அட்டனனஸ் பெர்சண்டேஜ் அறுபது.
8
"அவங்க பையன் இப்போ அமெரிக்காவுல இருக்கானாம். கடன் எல்லாம் கழிச்சிட்டு கம்பம் மெயின்ல ரெண்டு ஏக்கர் வாங்கி போட்டிருக்காங்க." என சித்தி கண்கள் விரிய என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்க பனிரெண்டாவது படிக்கும் அவர் மகன் போகோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
9

போன வாரம் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரைக் கொன்று விட்டதாக முகநூல் முழுக்க பேச்சாய் இருந்தது.

10
கல்லூரி பேச்சுப் போட்டியில் "இனியும் நீங்கள் இந்த கல்வி முறையை மாற்ற வில்லை என்றால் இந்த கொலை தொடரும் " என நான் பேசியதுக்கு மாணவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினார்கள்.

11
இப்போது சொல்லுங்கள் 1க்கும் 2க்கும் தொடர்பிருக்கிறதா?

12
3 லும் 9 லும் வரும் மாணாவன் ஒருவனே தானோ?

13
4க்கும் 6க்குமான உறவு என்ன?

14
2க்கும் 5க்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு?

15
1,3,8 ஆகியவையின் ஒற்றுமை வேற்றுமை வரையறுங்கள்?

16


7,9,10 இவை எல்லாம் ஒன்றே தானா?

Thursday, February 9, 2012

மலட்டு மேகங்கள்


என் ஜன்னலின்
வழியே தினமும்
ஒரு வடிவத்தில் வருகின்றன
மழையே தராத
மலட்டு மேகங்கள்.

முதல் நாள் கொஞ்சம்
இசைக் குறிப்பைக் கொடுத்துவிட்டுச்
செல்லுமது அடுத்த நாளுக்கு
ஒரு நவீன ஓவியத்தை
ஒளித்து வைத்திருக்கிறது.

பின்பொரு நாள்
பெண்ணின் மனதாய்
அடர்ந்து வந்து
கழுத்தை நெரித்தாலும்
அடுத்த நாளிரவு
நிலவுக்கு பின்னணியாய்
வந்து வருடுகிறது

இப்போது
நான் மீண்டும் மீண்டும்
யோசித்து மாய்கிறேன்.
ஏன் இவை முதல் பத்தியில்
மலட்டு மேகங்கள்
என குறிக்கப்பட்டது என்று....

Wednesday, February 1, 2012

என்ன வேணும்? -குழந்தைகள் கதை





ஒரு வானத்துல ஒரு தேவதை இருந்துச்சாம். அந்த தேவதை எப்பயுமே நல்லது செய்யனும்னு நினைக்குமாம்.யாரு யாரு எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்களோ அவங்களுக்கு எல்லாம் அது நேராவே போய் உதவி செய்யுமாம். ஒரு தடவ அது பூமியப் பாக்கும் போது மூணு குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தது தெரிஞ்சது. உடனே தேவதை மனுசன் ரூபத்துல மாறி அந்த மூணு குடும்பத்தோட வீட்டுக்கும் போச்சு.

மொதக் குடும்பம் இருக்கிற வீட்டுக்குள்ள போனதும் அங்க இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பசியால வாடிக் கிடந்தாங்க.அது ராத்திரி நேரம். மனுசன் ரூபத்துல இருந்த தேவதைய பாத்து திருடன்னு நினைச்சிக்கிட்டு எங்ககிட்ட தான் ஒன்னுமே இல்லயே நீ எதத் திருடப் போறனு கேட்டாங்களாம். உதவி பண்ண வந்த நம்மல போய் திருடன்னு நினைச்சிட்டாங்களேனு வருத்தப்பட்ட தேவதை நான் திருட வரல.உங்களுக்கு உதவ வந்திருக்கேன்னு சொன்ன உடனே எல்லோரும் சந்தோஷப்பட்டாங்க. "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, நிரைய அன்பு இருக்கிறது எது வேண்டும்?" அப்படினு கேட்டுச்சாம் தேவதை .வீட்டில இருக்கிற குடும்பத் தலைவன் "எங்க அம்மாவுக்கு மருந்து வாங்கனும், பிள்ளைக்கு பால் வாங்கனும், பொண்டாட்டிக்கு நல்லத் துணி வாங்கனும், அதனால பணம் தான் வேணும்."நு சொன்னானாம். தேவதை அவனுக்குப் பணத்தக் குடுத்திட்டு போயிடுச்சு.

அடுத்த வீட்டுக்கு தேவதை போனப்போ அவங்களும் அப்படி தான் இருந்தாங்களாம். அவங்க கிட்டயும் தேவதை ""என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, நிரைய அன்பு இருக்கிறது எது வேண்டும்?"னு கேட்டதும் அங்க இருந்த அம்மா "எங்க நிலம் அடமானத்துல இருக்கு, அதனால எம் புருசன் தற்கொலை பண்ணிக்கிட்டாரு,எம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், அதனால எனக்கு பணமே தாங்க" அப்படினு சொல்லி அழுதாங்களாம்.தேவதையும் சரினு சொல்லிட்டு பணம் குடுத்துட்டு கிளம்பிருச்சாம்.


கடைசியா மூணாவது வீட்டுக்கு வந்து பாத்துச்சாம் தேவதை. அங்க திண்ணையில முனங்கிகிட்டே படுத்திருந்த கிழவர்கிட்ட உங்களுக்கு என்னா கஷ்டம்னு கேட்டுச்சாம். "எனக்கு உடம்பு எல்லாம் நோவு, மருந்து வாங்க பணமில்ல. நிலம் அடமானத்துல இருக்கிறதுனால எம் பைய்யன் டவுனுல பெயின்ட்டு வேலைக்கு போனான். மேல இருந்து தவறி விழுந்து செத்துப் போய்ட்டான். அவன் பிள்ளைக பசியால அழுகுது.எம் மருமக மாத்துத் துணியில்லாம வெளிய வரவே முடியாம இருக்கா"நு சொன்னாரு. ரெண்டு வீட்டு கஷ்டத்தையும் இந்த வீடு சேத்து சொல்லுதேனு நினைச்ச தேவதை எப்படியும் பணம் தான் கேப்பாங்க கொடுத்திரலாம்னு பைய்யில கைய்ய விட்டுக்கிட்டே "என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, நிரைய அன்பு இருக்கிறது எது வேண்டும்?" னு கேட்டுச்சு. கிழவர் கொஞ்சம் கூட யோசிக்காம அன்புனு சொன்னாரு. உடனே தேவதை மகிழ்ந்து போய்."கவலப்படாதிங்க தாத்தா நான் இங்கேயே தங்கி உங்கள பாத்துக்குறேன்னு" சொல்லி அங்கயே தங்கிடுச்சு.

தாத்தாவுக்கு மூலிகை மருந்து எல்லாம் எடுத்துட்டு வந்து தினமும் காலையிலயும் சாய்ங்காலமும் ஊட்டி விடும் அப்புறம் அவரு மருமகளுக்கு நிரைய துணி வாங்கி கொடுத்து தைக்கவும் கத்து கொடுத்துச்சு, பிள்ளைகளை நல்ல பள்ளிக் கூடத்துல சேர்த்து விட்டிருச்சு.கொஞ்ச நாள்ல தாத்தாவோட உடம்பு சரியாகிடுச்சு, தைக்கிறதுனால கிடச்ச காச வச்சு நிலத்த மீட்டிட்டாங்க அதுல தாத்தா நல்லா வெவசாயம் பண்ண ஆரம்பிச்சாரு.பிள்ளைங்களும் நல்லா படிக்க ஆரம்பிச்சிருச்சுங்க. வந்த வேலை முடிஞ்சிருச்சுனு சொல்லி தேவதை கிளம்பிருச்சு."எங்கள விட்டு போகாதிங்க"னு அந்த குடும்பமே கெஞ்சுனாங்களாம்.ஆனா தேவதை நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்திருச்சு நான் போறேன்.யாராவது அன்ப கேட்டு வந்தா அவங்களுக்கு உங்க அன்ப கொடுங்கனு சொல்லிட்டுப் போயிடுச்சு.

போற வழியில முன்னாடி பணம் கொடுத்த ரெண்டு வீட்டையும் பாத்துட்டுப் போகலாம்னு உள்ள போன தேவதைக்கு அதிர்ச்சி இன்னும் அந்த ரெண்டு குடும்பமும் கஷ்டப்பட்டுக்கிட்டே இருந்துச்சு.அவங்களுக்கு தேவதைய முதல்ல அடையாளம் கூட தெரியல.அதுக்கப்புறம் அடையாளம் தெரிஞ்சுகிட்டு நீங்க கொடுத்த பணம் எல்லாம் தீந்துபோச்சு அப்படினு சொல்லி அழுதாங்க. "சரி சரி உங்களுக்கு நான் கொடுத்த பணம் தீந்து போச்சுனு அழாதிங்க, ஒரு வீட்டுல அன்பு கொடுத்துருக்கேன் அது அப்படியே இருக்கும். போய் வாங்கிக்கங்க சந்தோஷமா இருப்பீங்கனு " சொல்லி மூணாவதா போன வீட்ட காமிச்சுவிட்டு பறந்து போயிடுச்சு தேவதை. வந்தது மனுசன் இல்ல தேவதைனு அப்பதான் அவங்களுக்கு தெரிஞ்சது. தேவதை காமிச்ச வீட்டுக்குப் போய் கிழவர்கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லுச்சு அந்த ரெண்டு குடும்பமும்.கிழவரும் அவங்கள கூட சேத்துக்கிட்டாரு. விவசாயம் பண்ணியும் துணிய தச்சும் சந்தோசமா வாழ்ந்தாங்க மூணு குடும்பமும்.இத வானத்துல இருந்து பார்த்த தேவதையும் சந்தோசமா அடுத்த குடுமபத்துக்கு உதவ போச்சு .