Friday, June 29, 2012

தேநீர் கடல்



கடற்கரையில் தேநீர்
குடித்துக் கொண்டிருந்தோம்..

உன் தேநீர் கோப்பைக்குள்
கடல் இருக்கிறது.
வானம் கிடக்கிறது.
அப்படியே நான் கொடுத்த முத்தங்களும்....

என் தேநீர் கோப்பையில்
நீ மட்டும் இருக்கிறாய்...

உன் தேநீருக்கான சர்க்கரை
என் இரவில் படிந்திருக்கிறது.

என் தேநீருக்கு
உன் உலராத
உதடுகள் வைத்திருக்கிறாய்


தேநீர் கறையில்
ஒட்டியிருக்கிறது
கடல்.

பின்பு
இருவரும் சேர்ந்து
கடலைக் குடித்துவிட்டு
தேநீரில் நீந்தகிளம்புகிறோம்...





Sunday, June 3, 2012

ஓர் இரவுப் பாடல்


(முன் குறிப்பு: இது கவிதை இல்லை...ஒரு நாள் இரவு ஒற்றை கிட்டாரை எடுத்துக் கொண்டு தோழியிடம் வாய் வந்த மாதிரி பாடியது)

உன்னிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை
நான் நினைத்துக் கொள்கிறேன்.
உன் அலை பேசி பழுது
சிக்னல் இல்லை
அல்லது என் அலைபேசி பழுது....


நீ சரியான நேரத்துக்கு வரவில்லை.
நான் நினைத்துக் கொள்கிறேன்.
உன் வண்டி பழுது
டிராஃபிக் அதிகம்
என் கடிகாரம் கோளாறு..

உன் வீட்டுக்கு அழைப்பதில்லை
நான் நினைத்துக் கொள்கிறேன்
எதற்கு அலைச்சல்
எதற்கு செலவு - என நீ நினைக்கலாம்
உன் வீட்டு நாய் கடிக்குமாய் இருக்கும்..

நான் பாடிக்கொண்டே இருக்கேன்..
நீ பாராட்டாமல் போகிறாய்..
நான் நினைத்துக் கொள்கிறேன்...
எனக்கு செவிடு என்று.........

பாண்டி எனும் ஜெசி கதை


இது கண்ணில் பட்டிருக்க கூடாது. இது கண்டிப்பாக எதேச்சையானது அல்ல. இவ்வளவு நாள் நாமக்கல் பக்கமே ஜெசி வரவில்லை. இன்று தான் வந்தாள். அவளது எழுத்துக்கு இன்று மாலை ஆறு மணிக்கு விருது தருகிறார்கள்.. முதல் அங்கிகாரம் என்பதால்.. மறுக்க முடியவில்லை மேலும் அது அவளைப் போன்றோருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும்.நாமக்கல்லை விட்டுப் போய் ஆறு வருடங்கள் முடிந்து விட்டன. எப்போதாவது ஊர் நினைப்பு வந்தாலும் அங்கே போவதற்கு ஆசை மட்டும் வந்ததே இல்லை. பேருந்து நிலையம் வந்து இறங்கியவுடனே ஒல்லியான பையன் ஒட்டிக்கொண்டிருந்த போஸ்டரை பார்த்தாள்.
அது ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர். எல்லா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போல் அதுவும் எழுத்துப் பிழையுடன் இருந்தது....


கண்ணீர் அஞ்சலி

அமரர்.திரு. பழனியப்பச் செட்டியார் அவர்களின் மனிவியும்
திரு.மல்லிக்கடை ராமராஜன் அவர்களின் தாயாருமான
இன்ரு காலை ஐந்து மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அவருக்கு எங்களது கண்ணீர் அஞ்சலி.


இவண்

பே.தருமராஜ்

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்
மற்றும்
குடும்பத்தினர்

அம்மளின் பூதவுடல் இன்று மாலை 6 மணியளவில்
அடக்கம் செய்யப்படும்

யாரிந்த தருமராஜ் தெரியவில்லை. ஆனால் பழனியப்பச் செட்டியார் ஜெசியின் தாத்தா, மல்லிக்கடை ராமராஜன் அவள் அப்பா, சிட்டம்மாள் அவள் பாட்டி. பாட்டி இறந்தது தெரிந்தபின்பு போகாமல் இருக்க முடியாது. அந்த குடும்பத்திலேயே அவளுக்குப் பிடித்தது பாட்டி தான். அவள் சொல்லும் கதைகள் எல்லாம் ஏராளம். அவள் சொன்ன கதைகள் தான் இப்போது ஜெசியை ஒரு குழந்தைகள் எழுத்தாளராய் உருவாக்கியிருக்கிறது. இறந்த வீட்டுக்குப் போனால் அவளை அங்கிருப்பவர்களுக்கு அடையாளம் தெரியுமா? அடையாளம் தெரியவேண்டும் என்கிற அவசியம் இல்லையே? அடையாளம் தெரிந்தால் தான் பாட்டிக்குச் செய்ய வேண்டிய காரியங்களை அவள் கையால் செய்ய முடியும்.உடனே மோகனூருக்கு வண்டி ஏற வேண்டும் போல் இருந்தது.ஆனால் அவள் இப்படி போக முடியாது. அவள் அங்கே போகவேண்டும் என்றால் முடியை வெட்டி விட்டு பேண்ட் சட்டை போட்டு பாண்டியாகத் தான் போகவேண்டும் ஜெசியாக அல்ல. அங்கிருந்து வரும் போது அவள் பெயர் பாண்டி தான். சென்னைக்கு வந்த பிறகு லின்சியக்காவும் அவள் தோழிகள் சந்திரா, துவாரகாவும் சேர்ந்து தான் பாண்டி என்கிற பெயரை மாற்றினாற்கள்.

"உனக்கு பேரு வைக்கனுமே"
"என்ன மாதிரி உனக்கு பேரு வேணும்?"
"எதாவது வைங்ககா.. ஆனால் சாதரணமா இருக்க வேணாம்.."
"'நாஸ்தென்கா' னு வைக்கலாம் நேத்து ராத்திரி எங்கூட வந்த ஆளு.. எழுத்தாளனாம், அவன் படிச்ச கதை ஒன்னு சொன்னான் அதுல ஈரோயின் பேரு அதுதான்"
"ஐய்ய வாய்லையே நுழைல... இனிமே இந்த எழுத்தாளனுங்க கூட எல்லாம் போகாத... சில சமயம் நல்லா இருப்பானுங்க கதை சொல்லுவானுங்க... சில சம்யம் சைக்கோ மாதிரி பண்ணுவானுங்க... சில பேரு நம்ம வாயப் புடுங்கி கதை எழுதி பேரு வாங்கிருவானுங்க.. அப்படித் தான் ரெண்டு மாசத்துக்கு முன்ன எங்கிட்ட வந்தவன் என் கதைய எழுதி பொஸ்தகத்துல போடுட்டான். புதிய உலகம் ஜானகி அக்கா இல்ல.. அதான் எடுத்து வந்து காமிச்சிசு"

"இவளுக்கு பேரு வைங்கடினா.. வெட்டிக்கதை பேசிக்கிட்டிருக்கிங்க"

"என்ன மாதிரி பேரு வேணும்னு சொன்னாத் தான யோசிக்க முடியும்"
"எதாச்சும் பேருக்கா.."
"உனக்கு பூ பேரு வேணுமா.. சாமி பேரு வேணுமா.. இல்ல ஸ்டைல் பேரு வேணுமா... கஸ்டமருங்களுக்கு புடிச்ச மாதிரி பேரு வேணுமா.."
"நான் அப்படி எல்லாம் போக மாட்டேன்.. "
"பிறகு பிச்ச எடுப்பியா.."
"பிச்ச கூட எடுக்கிறேன்.. அப்படி எல்லாம் போகமாட்டேன்"
"என்னடி இவ இப்படி பேசுறா"
"சரி அதை எல்லாம் அப்புறம் பாக்கலாம்.... முதல்ல இவளுக்கு பேரு வைங்கடி"
"சாமி பேரே வைங்ககா...ஆனா ஸ்டைலா இருக்கனும்"
"சிவன் பேரையே வைக்கலாம்..."
"ருத்ரா?"
"ஸ்டைலா இருக்கனும்னா ஸ்ரீ ருத்ரா..!!"
"நல்லா இருக்குகா.."
"நீ எங்க தொழிலுக்கு வரமாட்டங்கறனால தான் இந்த பேரு.. இந்த பேரு வச்சிருந்தா சுத்தமா இருக்கனும்.... தினமும் காலைல எந்திருச்சு குளிக்கனும்... அப்புறம் யார் கூடவும் படுக்கக் கூடாது.. சரியா.."
ஸ்ரீ ருத்ராவுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. மற்றவர்கள் எல்லாம் சாய்ந்திரம் வேலைக்கு கிளம்ப அப்போது தான் ட்ரெயினில் பிச்சை எடுத்துவிட்டு வீட்டுக்கு வருவாள். சமைத்து வைத்திருந்தால் அதை சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்வாள்.இல்லை என்றால் தனக்கு மட்டும் சமைத்து சாப்பிட்டுக் கொள்வாள். மற்றவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாது. கதவைத் திறந்து வைத்துக் கொண்டுதான் தூங்குவாள். அடுத்த நாள் காலையில் விழிக்கும் போது லின்சியும், சந்திராவும் சில சமயம் இருப்பார்கள், சில சமயம் இருக்க மாட்டார்கள்.ஆனால் துவாரகா மட்டும் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்து விடுவாள். கொடுக்கும் வாடகைக்கு கொஞ்சமாவது வீட்டில் தங்க வேண்டும் என்பது அவளது வாதம். வீட்டு வாடகை அக்கம் பக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகம். ஓனர் அருகில் இல்லாதது வசதி.ஆனால் வீடு ஊரை விட்டு மிகவும் ஒதுங்கி இருக்கும் , அவர்களைப் போலவே.. ஜெசி அவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லுவாள் எல்லாமே அவன் குழந்தை பாண்டியாய் பாட்டியிடம் கேட்டது. மாதம் ஒருமுறையேனும் புதிய உலகம் ஜானகி அக்கா வீட்டில் அவளைப் போன்றோர் கூடுவது வழக்கம்.ஒவ்வொருவரும் எதாவது செய்ய வேண்டும் பாட்டு பாடுவது, ஆடுவது ,விடுகதை போடுவது இது மாதிரி.. அப்போதெல்லாம ஜெசி பாட்டிக் கதைகளைத் தான் சொல்லுவாள்.

ஒரு இரவு நாளில் மழை பெய்து கொண்டிருந்தது. சீக்கிரமே துவாரகா வந்துவிட்டாள். முழுவதும் நனைந்து வந்திருந்தாள். ஸ்ரீ ருத்ராவின் கண்களில் அப்போது தான் தூக்கம் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது.அவளுக்கு துவாரகா சேலையை உறுவும் சத்தம் கேட்டது அதைத் தொடர்ந்து மாற்று சேலை கூட கட்டாமல் அவள் குடிப்பதாக டம்லர்களின் சிணுங்கள்களும் மது ஊற்றும் சத்தமும் சொல்லின. குடித்துக் கொண்டிருந்தவள் மெல்ல ஸ்ரீ ருத்ராவின் அருகே வந்து தலையைத் தடவினாள். ருத்ரா அமைதியாக தூங்குவது போலவே இருந்தாள்.துவாரகாவின் கைகள் மெல்ல ருத்ராவின் உடல் முழுக்க பரவியது.ருத்ராவுக்கு என்னமோ போல் இருந்தது. ஆனால் அதை தடுக்கவோ விலகவோ அவள் விரும்பவில்லை.ருத்ராவின் ஆடைகளை விலக்கி அவளுடன் படுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் லின்சியக்கா வந்து பார்த்து கத்தினாள். ஸ்ரீ ருத்ராவை விட துவாரகாவுக்குத்தான் திட்டு அதிகமாக விழுந்தது. சந்திராவுக்கு துவாரகா செய்தது பெரிய தப்பாய் படவில்லை.. யாரும் கிடைக்காத மழை நாளில் உள்ளே ரெண்டு ரவுண்டு விட்டிருப்பவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.ஆனால் ஸ்ரீ ருத்ரா என்று பேர் வைத்துக்கொண்டு இவள் பண்ணியது தான் தப்பு என்று கூறினாள். உடனடியாக பேர் மாற்றியே ஆகவேண்டும் என்று குதித்தாள் லின்சியக்கா. அவளுக்கு சிவனின் காம விளையாட்டுக் கதைகள் எல்லாம் தெரியாது, அவன் பெயரில் நடக்கும் ஆராய்சிகளும் தெரியாது என்பதால் சிவன் மிகப் புனிதமானவன் என்று நம்பினாள். தெரிந்து கொண்டாலும் அதை மற்ற காமக் கதைகளில் ஒன்றாய்த் தான் பார்ப்பாளே அன்றி அதைப் பொருத்திப் பார்க்கும் பக்குவம் எல்லாம் அவளுக்கு இல்லை.

"ஏதாவது கிறிஸ்டியன் பேரு வைக்கலாம்" என்றாள் துவாரகா
அவளை முறைத்துவிட்டு லின்சியக்கா "கிறிஸ்டீன் பேரு ஓகேவா" எனக் கேட்டாள்
"ம்" என்றாள்.
ஆளாளுக்கு ஒரு பெயர் சொன்னார்கள் எதுவும் செட் ஆகவில்லை. அவள் பெயர் முடிவாகும் வரை அவளைப் போலவே அவளது பெயர்களும் எழுதக் கிடைக்காத ஒரு வார்த்தையாய் மிகச் சங்கடமான உணர்வை உணர்ந்தன.

"ஜெசி வி.டி.வி ல த்ரிஷா பேரு"
"எனக்கு ஓக்கே"
"ம்" என்றாள் ஜெசி.
"அதான் பேரு மாத்தியாச்சுல... இனிமே எங்க கூட வா",துவாரகா
"ஏங்கா கிறிஸ்ட்டின் பேரு வச்சா தப்பு பண்ணலாமா..."
"ஏசு மன்னிக்கிற கடவுள் டீ ... அதனால் ஒன்ன்னும் பிரச்சனை இல்லை"
ஆனாலும் ஜெசிக்கு அந்த தொழில் போவது பிடிக்கவில்லை.அவளது காமத்துக்கு வடிகாலாக துவாராகா இருப்பாள் என நினைத்தாள்.ஆனால் துவாராகா பிடி கொடுக்கவில்லை.
ஒரு நாள் இரவு ஜெசியை சந்திரா பீச்சுக்கு கூட்டிப்போனாள். அங்கே ஆண்களும் அவர்களைப் போன்றோரும் தனித் தனியாக் இருந்தனர்.

"இங்க பாரு.. ஜெசி நீ தான் நம்ம வூட்லயே கம்மியா சம்பாதிக்கிற. தினமும் இங்கின ஒரு ஏழு மணிக்கு வந்திரு. நல்லா இருட்டுப் படிஞ்ச எடமா உட்கார்ந்துக்க.. ஆளுங்க வருவானுங்க..
பெருசா ஒன்னும் பண்ண வேணாம்.கொஞ்சம் கை வேல பண்ணிவிடு. நொட்டாங்கையிலியே பண்ணிவிடு போதும்.அதிக பட்சம் 15 நிமிஷம். அப்புறம் டெட்டால் போட்டு கைய கழுவிக்கலாம்.. என்னா சொல்ற"
ஜெசி ஒன்றும் சொல்லவில்லை. தினமும் ஏழு மணிக்கு பீச் போனாள்.நொட்டாங்கையில் வேலை பார்த்தாள். 15 நிமிஷத்துக்கு 100 ரூபாய். சில சமயம் பேரத்துக்கு 50 ரூபாய். வெயிலில் அலைய வேண்டியது இல்லை. வேறேவனும் இவள் அனுமதி இல்லாமல் கண்ட இடத்தில் கை வைப்பதில்லை.ஆனால் வாரத்துக்கு ஒரு டெட்டால் பாட்டில் தேவைப் பட்டது.
"ஒருத்தன் செம போதை... வந்தான்.. சோந்தாங்கையில தான் பண்ணனுங்கிரான்.. நான் முடியாதுனுட்டேன்.. 200 தாரேன்னான்.. நான் மசியலையே.. 500 எடுத்து கையில திணிச்சிட்டான்.. சரி எத்தனயோ பேரு சோத்துக்காக பீ கிடங்குல ஏறங்கி சுத்தம் பண்ங்க. அது மாதிரி தானே நாமும் ............ சுத்தன் பண்றோம்னு நினைச்சு பண்ணிவிட்டுட்டேன், இப்ப என்னடானா சாப்பிட ஒப்பல"
"அதெல்லாம் பழகிரும் ஜெசி"
"ஏன் சந்திரா... இந்த ஆம்பிளைங்களுக்குத் தான் கையிருக்குல.. அப்புறம் எதுக்கு இப்படி பீச்சுக்கு வாராங்கே.."
"நீ இவனுங்களுக்கு பண்றமாதிரி இவனுங்க எல்லாம் வேற யாருக்காவது பண்ணிருப்பானுங்க...அவன் முதலாளிகிட்ட,கடன் கொடுத்தவன் கிட்ட, பொண்டாட்டி கிட்ட.. இப்படி யாருக்கிட்டையாவது.."
"பொண்டாடிக்கிட்டயா..." நக்கலாக சிரித்தாள் ஜெசி..
"ஆமா எல்லாரும் நீ பண்ற மாதிரி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கானுங்க.. என்ன நீ உடம்புல பண்ற.. அதுக்கு காசு வாங்குற... இவனுங்க வார்த்தைல பண்ணுவானுங்க.... மரியாதைல பண்ணுவானுங்க.. அதுக்கு ஏத்த மாதிரி வேலை, பதவினு ஏதாச்சும் வாங்கிப்பானுங்க.... என்னா இருந்தாலும் ஆம்பிளைங்க இல்லையா அதான் யாரையாவது அடக்கனும்ல.. நெரையா காசு வச்சிருக்கிறவன் நல்ல எடத்துக்குப் போறான். கம்மியா காசு வச்சிருக்கிறவன் எங்ககிட்ட வாரான்.. அதுக்கும் கம்மியானா உங்கிட்ட வாரான்"
"அப்படியா"
"ஆமாம் நீ நொட்டாங்கலை பண்ணா என்ன? சோத்தாங்கைல பண்ணா என்ன? 100 ஜோலிக்கு எதுக்கு 500 ரூபா தரனும்?"
"ம்"
"ஏன்டி நாளைக்கு மீட்டிங்க் இருக்குல? என்ன கதை டீ சொல்ல போற.."
"எனக்குத் தெரிஞ்ச கதை எல்லாம் சொல்லிட்டேன்.இனிமே கதை எல்லாம் இல்ல"
அடுத்த நாள் ஜானகி அக்கா வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள்.வழக்கம் போல் கதை சொல்ல ஜெசியை அழைத்தார் ஜானகி அக்கா. தனக்கு கதை எதுவும் தெரியாது என்று சொல்லி எவ்வளவோ மறுத்தும். ஜானகி அக்கா நீயா ஒரு கதை சொல்லு என எழுப்பிவிட்டார். எழுந்து நின்று தன் வாய்ப் போக்கில் ஒரு கதையை அடித்துவிட்டாள். எல்லோரும் நன்றாய் இருப்பதாய் பாராட்டினார்கள். அடுத்த வாரம் ஜானகி அக்கா கூப்பிட்டிருந்ததால் ஜெசி கிளம்பிப் போனாள். ஜெசி சொன்ன கதை அந்த வார தீக்கதிரின் இலவச இணைப்பான வண்ணக்கதிரில் குழந்தைகள் கதை என்கிற பெயரில் வெளிவந்திருந்தது. கீழே அவள் பெயர். ஜெசிக்குத் தாளமுடியாத சந்தோசம். அன்றிலிருந்து எழுத ஆரம்பித்த ஜெசி 5 வருடங்களில் குறிப்பிடத்தகுந்த குழந்தை எழுத்தாளர் ஆகிவிட்டாள். அவள் திருநங்கை என்பதற்காகவே சிலர் மதித்தனர். அவள் படைப்புக்கு முன்னுரிமை கொடுத்தனர்..இப்போது விருது வாங்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள்..

இந்த விருது கண்டிப்பாய் தன்னைப் போன்றொருக்கு உந்துசக்தியாய் அமையும்.அதிலும் அவள் விழா மேடையில் பேசுவதற்கு தயாரித்து வைத்திருந்த பேச்சு மிக முக்கியமானதாய் அவளைப் போன்றோருக்கு என்ன தேவை அவ்ர்கள்து மனம் என்ன என்பதை தெளிவாக விளக்கும் வண்ணமாக இருந்தது என்று நம்பினாள்.யாராவது பெரிய எழுத்தாளர் பாண்டியின் ஜெசி கதை என்று சிறுகதை கூட எழுதலாம். ஆனால் பாட்டி, அவள் தான் இந்த விருதுக்குச் சொந்தக்காரி.அவளை புறந்தள்ளி விட்டு அவளது விருதை எப்படி வாங்குவது. அவள் மட்டும் இல்லை என்றால் பாண்டி என்கிற விபச்சாரி என்று யாராவது கதை எழுதி இருப்பார்கள்.அவள் ஆயிரங்களில் ஒருத்தியாய் கரைந்து போய் இருப்பாள்.
பாட்டியின் மரணத்துக்கு போகலாமா வேண்டாமா என்கிற குழப்பம் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது . பின்பு எதாவது சலூன் கடை தெரிகிறதா என ஜெசி தேடலானாள்.

Saturday, June 2, 2012

மண்ணு கவிதைகள்


1

அழகிய
வண்ணமிகுந்த பறக்கும்-அந்த
பட்டாம்பூச்சியை பிடிக்க
ஆசைப்பட்டேன்.

பிடித்தேன்.

என் கையில் இருப்பது
அழகிய வண்ணமிகுந்த
பட்டாம்பூச்சி மட்டுமே...


2
இறந்த காலம் என்பதை
மனிதனைப் பார்க்கும் வரை
அந்த மலை
அறியவில்லை.
இப்போது எதிர்காலத்தை


3
"இன்னாருக்குச் சொந்தமான
நிலத்தில் யாரும்
அத்து மீறி நுழையக்கூடாது"
என்கிறது அந்த அறிவிப்பு.
யாரும் அத்துமீறி நுழையக்கூடாது
என்பதாலேயே அது
இன்னாருக்குச் சொந்தமாகிவிட்டது

4
நொடிக்கு ஒருமுறையாவது
இதயம் நோக்கி விரைகிறது
காற்று.
வெற்றிடத்தை காற்று நிரப்பும்.

5
நான் சுகமாக
படுத்திருக்கும் என்
படுக்கை நாளை
இன்னொருவனுக்குச் சொந்தம்
என்கிறான் அவன்.

எல்லோருக்கும்
சொந்தமான படுக்கையில்
நீ படுத்திருக்கிறாய்
என்கிறான் தாடிக்காரன்.

பாண்டியும் சினிமாவும்


பாண்டி திரையரங்குக்குள் நுழைந்த போது ஆங்காங்கே மனிதர்கள் உட்கார்ந்து இருந்தார்கள் மொத்தமாய் ஒரு இருபது பேர் இருப்பார்கள்.அதில் இரண்டு ஜோடியும் அடக்கம் கல்லூரியில் படிப்பவர்களாய் இருக்கலாம். முதலில் ஆண் அடுத்து பெண் அடுத்து பெண் அடுத்து ஆண் என வரிசையாய் உட்கார்ந்திருந்தது அவர்கள் அனைவரும் நண்பர்கள் இல்லை எனவும் அவர்களது ஜோடியின் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையையும் காட்டியது.''இங்கே புகைப்பிடிக்கக் கூடாது'' என எழுதிய வாசகங்களை படித்ததாலோ படிக்காததாலோ சிலர் புகைவிட்டுக் கொண்டிருந்தார்கள்.இதை எல்லாம் பாண்டி கண்டு கொள்ளாமல் தனக்குச் சரியான இடம் எது எனச் சுற்றி பார்த்து விட்டு இரண்டாவது வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டான்.அங்கே உட்கார்ந்தால் அண்ணாந்து தான் பார்க்கவேண்டும் என்றாலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அண்ணாந்து பார்த்தே வளர்ந்தவனுக்கு அது ஒன்றும் சிரமமாய் இருக்காது.திரையரங்கின் பினாயில் வாசனை அவன் மூக்கின் வழியாக மூளைக்குச் சென்று ஒரு வித போதையைத் தந்தது.




பாண்டிக்கு வயது நாப்பது இருக்கலாம் கண்,முடி,நெற்றி என தனித்தனியாகச் சொல்ல அவன் சினிமா கதாநாயகன் அல்ல . சாதாரண ஒரு தனியார் அலுவலகத்தில் பியூனாக வேலைபார்க்கும் ஒருவன்.ஏழை எனத் தான் அழைக்கப்படுவதை கவுரவ குறைச்சலாக கருதும் பாண்டி தன்னை ஒரு லோயர் மிடில் கிளாஸ் என அழைத்துக்கொள்வான்.அவன் பார்ப்பதற்கு உங்கள் உறவினர் மாதிரியோ,தெருவாசி மாதிரியோ,நண்பர் மாதிரியோ ஏன் உங்களை மாதிரியோ கூட இருப்பான்.

பாண்டி உலகசினிமா,ஈரான் சினிமா,பிரெஞ்சுசினிமா பார்க்கும் ஆள் கிடையாது.உள்ளூர் சினிமாவில் கதாநாயகன் அழும் போது அழுது,சிரிக்கும் போது சிரித்து,சண்டை போடும்போது விசில் அடித்து ஆர்ப்பாட்டமாய் படம் பார்க்கும் ஆள்.ஆனால் அது எல்லாம் பதினைந்து வருடங்களுக்கு முன்பு.குடும்பம் குட்டி ஆன பின் படத்திற்குப் போவதே குறைந்து போனது கடந்த ஆறு வருடங்களாய் அவன் திரையரங்குக்கே போனதில்லை.இன்று வந்தது கூட தற்செயலானது தான்.மாட சாமி அண்ணனிடம் பத்தாயிரம் கடன் கேட்டிருந்தான்.இரண்டு மணிக்குத் தேனி பஸ் ஸ்டாண்டுக்கு வரச் சொன்னவர்,இவன் வந்தபின்பு ஆறு மணிக்குத் தான் வரமுடியும் என்று சொல்லிவிட்டார்.மீண்டும் ஊருக்குப் போய் வரமுடியாது என்பதால் அதுவரை திரைப்படம் பார்ப்பது என முடிவு செய்தான்.சினிமா பார்க்கும் மனநிலையில் பாண்டி இப்போது இல்லை என்றாலும் அவனுக்கு அதைத்தவிர வேறு வழி இல்லை.கடிகாரத்தைப் பார்த்தான் மணி 2.25ஐத் தாண்டி இரண்டு நிமிடமோ, ஒரு நிமிடமோ ஆகியிருந்தது.விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன.திரை மெதுவாக மேலேறியதும் விளம்பரம் போட்டார்கள்.பின் சீட்டில் திரும்பிப்பார்த்தான் இருட்டில் எதுவும் தெரியவில்லை.மீண்டும் திரையைப்பார்த்தான் படம் தொடங்கியது.இவனுக்கு மனது எல்லாம் மாடசாமி மேலேயே இருந்தது.பணம் வருவதற்கான அவனது ஒரே நம்பிக்கை மாடசாமிதான். கடன் அன்பை முறிக்கும் என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இந்தியாவில் ஒரு பரம ஏழை கடன் வாங்காமல் இருந்து விடலாம், பெரும் பணக்காரனும் கடன் வாங்காமல் இருந்துவிடலாம்.ஆனால் இந்த மிடில் கிளாஸ் மக்களால் கடன் வாங்காமல் வாழ முடியாது.முதலில் சொந்த வீடு கட்ட கடன் வாங்கினான்.பின்பு தன் மகளை மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்க்க கடன் வாங்கினான்.அப்படியே அவன் கடன் வளர்ந்தது

"பெரிய ஆளாகி என்னவாகப் போற"என்று இவன் கேட்கும் கேள்விக்கு "கலெக்டர்" என அந்த சிறு குழந்தை பதில் சொல்லும் போது "உனக்காக எம்புட்டு கஷ்டத்தையும் தாங்குவேன்" என்று தூக்கிக் கொஞ்சுவான்.அவள் அப்போதே கலெக்டர் ஆகிவிட்ட நினைப்பு அவனுக்கு.சிறுவயதில் கலெக்டர் ஆவேன் எனச் சொன்னவர்கள் எல்லாம் கலெக்டர் ஆகிவிட்டால் நம் நாட்டில் தெருவுக்கு ஆறு கலெக்டராவது இருப்பார்கள்.

"இந்த அநியாயத்த தட்டிக் கேட்க ஒரு ஆம்பிளை வராமையா போயிருவான்" திரையில் முடியை விரித்துப் போட்டுக் கத்திக் கொண்டிருந்தாள் ஒருத்தி. ஏன் தட்டிக் கேட்க எல்லோரையும் ஆண்களையே எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தப் பெண் கத்தி முடித்ததும். ஷூ போட்ட கால் ஒன்று ஓடி வந்து கொண்டிருந்தது.கண், காது, வாய் என தனித்தனியாய் காட்டி மொத்தமாய் முகத்தைக் காட்டினால் அது கதாநாயகன்.போன படத்திலும் இப்படித்தான் அநியாயத்தைத் தட்டிக் கேட்க பறந்து வந்தார் இதில் ஓடி வருகிறார் ஒரு வேளை எதார்த்த சினிமாவாய் இருக்கலாம்.பாண்டி கூட தனது 19, 20 வயதுகளில் கம்யூனிஸ்ட்டுகாரர்களோடு சேர்ந்து ரேசன் கடைகளில்,தாசில்தார் அலுவலகத்தில் என்று பல இடங்களில் அநியாயத்தைத் தட்டிக் கேட்டிருக்கிறான். எங்குமே இப்படி அடித்துக் கேட்டதில்லை.அப்பா இறந்தபின் அப்படி தட்டிக் கேட்க எல்லாம் போவதில்லை.தன் வீடு தன் குடும்பம் என்றாகிவிட்டான்.

அப்போது கதவைத் திறந்து நாலைந்து பேர் திரையரங்கின் உள்ளே நுழைந்தனர்."டேய் படம் போட்டாங்கே டா"என பேசிக்கொண்டு பாண்டியின் அருகில் உட்கார்ந்தார்கள்.
"அண்ணே, படம் போட்டு ரொம்ப நேரம் ஆச்சா"என்றான் ஒருவவன்
"இல்ல இப்பத்தான்" என்றான் பாண்டி.
உள்ளே வரும் போது கதவைச் சரியாக சாத்தாததால் வெளியே இருந்து வந்த ஒளி கண்ணைக் கூசச் செய்தது.நம் நாட்டில் திரையரங்குக்கு சரியான நேரத்தில் எல்லோருமே சென்றதாய் சரித்திரமே இல்லை.எங்கிருந்து பார்த்தாலும் தமிழ்படம் புரியும் என்கிற நினைப்பு கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.ஆனால் பெரும்பாலோனோரின் வாழ்க்கை தமிழ் சினிமா போல் இல்லை.பாண்டியின் வாழ்க்கையும் அதில் அடங்கும் தனது 25வது வயதில் வாட்ச்மேனாய் சேர்ந்து இப்போது அதே கம்பேனியில் பியூனாக இருக்கிறான் இது ஒன்றும் அபரிவிதமான வளர்ச்சி அல்ல.


"உழைப்பும் நேர்மையும் விடாமுயற்சியும் இருக்கிற வரைக்கும் எந்த கொம்பனாலும் என் வளர்ச்சிய தடுக்க முடியாதுடா" கதாநாயகன் பேசியதும் ஒரு பாட்டு, அதில் அவர் ஆட்டோ ஓட்டினார், பின்பு டாக்சி ஓட்டினார், பின்பு ஐந்து பஸ்க்கு முதலாளி ஆனார், பாட்டு முடியும்போது ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் எல்லாம் கட்டிவிட்டார்.பாட்டில் ஹீரோ களைத்திருக்கும் போது தண்ணீர் தருவது, தூங்கும் போது விசிறிவிடுவது போன்ற வேலைகளை கதாநாயகி செய்து கொண்டிருந்தாள்.அதைப் பார்த்ததும் பாண்டிக்கு காய்த்ரி நினைவு வந்தது.காயத்ரி பாண்டியின் அருமை மனைவி.பாண்டி வாழ்க்கையை ஓட்ட தண்ணீர் கொடுத்து விசிறி மட்டும் விடும் கதாநாயகி அல்ல மகளிர் சுய உதவிக் குழுவில் சேர்ந்து வேலைப் பார்த்து,சீட்டுப் போட்டு, இக்கட்டு சமயத்தில் எல்லாம் அவனைத் திட்டிக் கொண்டே நகையைக் கழட்டி அடகுக்கு கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருக்கும் தமிழ் நல்லுலகத்துப் பெண்.இப்போது கூட அடகு வைத்துவிட்ட அவளது நகையை மூழ்காமல் மீட்டெடுக்கும் பொருட்டுத் தான் கடன் வாங்க வந்திருக்கிறான்.கடனும் பொய்யைப் போலவே ஒன்றை மறைக்க இன்னொன்று அதற்கு மற்றொன்று என வளர்ந்துவிடுகிறது.


கதாநாயகனை வில்லன் ஏமாற்றி எல்லா பணத்தையும் சுருட்டிக் கொள்கிறான். கதாநாயகன் நடு ரோட்டில் இறங்கி நடக்கையில் இன்டர்வெல் போட்டார்கள்.எல்லோரும் எழுந்து வெளியேறினார்கள்.பாண்டி எதுவும் வாங்கிச் சாப்பிடும் மனநிலையில் இல்லை. "செம படம்ல" என பாண்டிக்கு அருகே இருந்த இளைஞர்கள் சொல்லிக் கொண்டே வெளியேறினார்கள்.வாழ்க்கையிலும் இது போன்று இன்டர்வல்கள் வந்தால் நன்றாய் இருக்கும்.நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிடம் இருந்து ஒரு பத்து நிமிடம் இன்டர்வல் கிடைக்காதா எனப் பலரை ஏங்க வைக்கிறது வாழ்க்கை.அதுவே நமது அரசுக்கு டாஸ்மாக்கை அதிக வருமானம் வரும் துறையாய் மாற்றி இருக்கிறது அந்த காதல் ஜோடி ஐஸ்கிரீம்களோடு நுழைந்தார்கள். படம் துவங்கியது.

பாண்டி மெதுவாக கண்ணசந்து விட்டான்.மீண்டும் விழிக்கையில் படம் முடிந்திருந்தது.எல்லோரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.மணியைப் பார்த்தான் 5.30 ஆகியிருந்தது.பஸ் ஸ்டாண்டுக்குள் சென்றான்.மாடசாமிக்கு போன் பண்ணியபோது அது நாட் ரீச்சபளில் இருந்தது.மீண்டும் மீண்டும் முயற்சி பண்ணினான்.தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தான் மாடசாமி.வேறு யாராவது கடன் தருபவர்கள் இருக்கிறார்களா என்று யோசித்தான். "உழைப்பும், நேர்மையும்,விடாமுயற்சியும் இருக்கிற வரைக்கும் எந்தக் கொம்பனாலும் என் வளர்ச்சிய தடுக்கமுடியாதுடா".தேவையில்லாமல் அந்த டயலாக் மண்டையில் ஓடியது.படத்துக்கான கிளைமேக்ஸ் என்ன என்று தெரியாமல் போனது அவனுக்கு எரிச்சலைத் தந்தாலும் படம் எப்படியும் முடிந்துவிடும் என ஆறுதல் கொண்டான்.

சாவியைத் தேடுகிறேன்


சாவியைத் தேடும்
ஒவ்வொரு முறையும்
நினைத்துக் கொள்வேன்
"சாவிக்கென்று தனியிடம்
ஒதுக்கி வைக்க வேண்டும்"
என்று...

தனியாய் ஒதுங்கிகிடக்க
விரும்பாத என் சாவி
எங்காவது கலந்து
ஒளிந்து கொள்கிறது.

திறப்பதற்காக பயன்படும்
சாவிகள் எதற்கு
பூட்டுவதற்காகவும் பயன்படுகின்றன
என்கிற கேள்வி
பெயர் தெரியாத
ஓர் அந்நிய மிருகமாய்
வந்து என்னைக்
கடிக்கிறது.

சாவிக்கான தேடலின் போது
எல்லாம் வேறொரு சாவி
கையில் கிடைக்கிறது...

அதை வைத்து திறப்பதற்கோ
பூட்டுவதற்கோ எதுமில்லை
என்னிடம்.

இப்போது அந்த சாவி
சேரும் துவாரம்
எதுவென்று கண்டறியச்
சொல்கிறது உலகம்.

நான் எனது சாவியை
மீண்டும் தேடுகிறேன்.
எனது சாவியை
மட்டும் தேடுகிறேன்

விழித்திருந்த ஓர் இரவு


கடிகார முள் சத்தத்தில்
இடிந்து கொண்டிருக்கிறது
என் பின்னிரவு

தினமும் ஏதேனு
ஒரு மரணம் -என்
இரவுஅறையில் நிகழ்ந்துவிடுகிறது
காலில் கடித்த கொசுவோ-இல்லை
கண்ட இடத்தில் கடித்த எறும்போ..

மின்விளக்கின் வயிற்றெரிச்சல்
பார்த்து சிரிக்கின்றன
மெழுகுவர்த்திகள்

இரவில்
நிலவோ மழையோ
ஏதேனும் ஒன்றை
இழக்கவேண்டி இருக்கிறது

இவ்வேளையில் ஏதேனும்
இரண்டு தவளைகள்
புணர்ந்து கொண்டிருக்கலாம்.
மலர் ஒன்று
மலர்ந்து கொண்டிருக்கலாம்
நான் மட்டும்..

ஒரு நிமிடம்
"த்தா டே நாளைக்கு எனக்கு பரிட்ச்சை டா"

(தேர்வுக்கு முந்தய இரவு எழுதியது... இப்படித்தான் இது முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை)

ஒரு பாலியல் தொழிலாளியின் பேட்டி

நல்லதோர் வீணை இதழுக்காக எடுத்த சாமானியன் பேட்டி. மிகச் சாதரணமாக அந்த பெண் பேசினாலும் அந்த வார்த்தைகளை கடந்து வர எனக்கு ஒரு யுகம் தேவைப்பட்டது .

சாமானியன் பேட்டி

-புதியபரிதி


சாமானியன் பேட்டிக்காக பாலியல் தொழிலாளி ஒருவரை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சந்தித்தோம்.ஆரம்பத்தில் தயங்கி தயங்கி பேசியவர்.பேட்டி முடிகையில் பல நாள் பழகியவரைப் போல் பேசினார். கிளம்பும் போது"வெளி ஆளுங்க கிட்ட எல்லாம் இந்த மாதிரி பேசி ரொம்ப நாளாச்சு தம்பி" என்றார். அவர்களது மன நிலையை முழுமையாக இல்லை என்றாலும் 1 சதவீதமாவது இப்பேட்டி பிரதிபலித்திருக்கிறது என நம்புகிறோம். அவரது நன்மை கருதி அவரது பெயரும்,புகைப்படமும் வெளியிடப்படவில்லை.



1.எப்போது எவ்வளவு மணி நேரம் தூங்குகிறீர்கள்?

இத என்கிட்டே கேட்டா நானா முடிவு செய்யுறேன்.என்கிட்டே ஆளுக வரும்போது நல்லா பளிச்சுன்னு இருக்கறதுக்கு மதியம் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிப்பேன். ராத்திரியிலனா எப்பத் தூங்க விடுறானுங்களோ அப்போ தான் தூங்க முடியும்.



2.உங்களுக்கு கனவு வருமா?வந்தால் எந்த மாதிரி கனவுகள் வரும்?

மனசுல என்ன இருக்கோ அது தான் கனவா வருமாமே. தொழிலுக்கு வந்தப்ப தூங்க நேரம் இருக்காது.
மீறி கொஞ்ச நேரம் தூங்குனா நிறைய கனவு வரும்.அதுல முக்கால்வாசி அசிங்க அசிங்கமான கனவுகள் தான் வரும். கொஞ்ச நாள் கழிச்சு அசிங்கங்க நின்றுச்சு.அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஊரையும் வீட்டையும் பாத்து ஓடிப்போற மாதிரி கனவு வரும். இப்போ கனவெல்லாம் வாரதில்ல.



3.ஓய்வு நேரத்தை விரும்புகிறீர்களா?

எனக்குத் தோணும் போதுதான் தொழிலுக்கு போவேன்.அதனால எனக்கு ரெஸ்ட் எடுக்கனும்னு எல்லாம் தோணாது.இளமையா இருக்குறப்பவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாரிச்சிக்கோனு ப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க.ஆனா என்னாத்துக்குனு நான் அப்படி போறதில்ல... ஜாலியா கண்ண மூடி பாட்டு கேட்டுகிட்டு இருப்பேன்.



4.உங்களுக்கு குழந்தை இருக்கா? இல்லை என்றால் பெற்றுக் கொள்வீர்களா?

குழந்தை இல்ல. பெத்துக்கிறதுக்கான வாய்ப்பும் கம்மி தான். அப்படி பெத்துக்கிட்டா பொம்பளப் பிள்ளை பெத்துக்குவேன். நான் பட்ட கஷ்டம் எல்லாம் படாம வளப்பேன். என்ன ஒன்னு அது வளந்த பிறகு நம்மளப் புரிஞ்சிக்கிறனும் அவ்வளவு தான்.




5.மனித வாழ்க்கையில் மிகப் புனிதமாக எதை நினைக்கிறீர்கள்?

என் வாழ்க்கையில புனிதமானதுன்னு எதுவும் இல்ல.



6.மனித வாழ்க்கையில் அதிகத் துயரமானது எது?

சோறு இல்லாம இருக்கிறது. ஆரம்பத்துல இந்த தொழில் வாரதுக்கு முன்னாடி கொஞ்ச நாள் பிச்ச எடுத்தேன்.அப்போ எல்லாம் சாப்பிடுறதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு தோணுச்சு. இந்த தொழிலுக்கு வந்ததே நல்லா சாப்பிடலாம்னு தான்.



7.நீங்கள் இந்த சமூகத்தில் எப்படி அழைக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நிரைய பேர் பாலியல் தொழிலாளினு தான் சொல்றாங்க. அழகிகள் கைதுனு பேப்பர்ல போடுவாங்க.ஆனா எங்கள ஐட்டம்,தேவடியானு கூப்பிடுறவன் எங்ககிட்ட வாரவனுங்களையும் அப்படித் தான் கூப்பிடனும் முடியாதுனா எங்களையும் கவுரவமா தான் கூப்பிடனும்.



8.காதல் என்றால் என்ன?

(சிரிக்கிறார்) இப்படி கேட்டா என்னா சொல்றது. சினிமால ஹீரோ ஹீரோயின் பண்றது. இன்னும் சொல்லனுமா? ம் ..ஓவரா குடிச்சா கஸ்டமருங்க சில பேர் காதல் பண்றதாவும் கல்யாணம் பண்ணிகிறதாவும் சொல்லுவாங்க.. ஆனா போதை தெளிஞ்சதும்.. அந்த பேச்சே இருக்காது. வேணும்னா குடித்தால் வருவதுனு போட்டுக்கங்க.. ரைமிங்கா இருக்கும்.



9.ஆண்களும் கற்போடு இருப்பதற்கு என்ன செய்யலாம்?

இப்ப ஏற்கனவே கற்போட தான இருக்கானுக. கற்ப இழந்தாலும் கற்பு இழந்தவன்னு எவனையாச்சும் சொல்ற தைரியம் இருக்கா உங்களுக்கு?



10.உங்களிடம் வரும் ஒழுக்கங்கெட்ட ஆண்கள் சாதி வேறுபாடு, மத வேறுபாடுகளை காட்டுகிறார்களா?

(கொஞ்சம் கோபமாக ) அதென்ன எங்ககிட்ட வந்தா ஒழுக்கம் கெட்டவங்களா. பஸுல உரசுரவன், காதலிச்சு ஏமாத்தி வேலையக் காட்டிட்டு எஸ் ஆகுறவன் இவனுங்கள விட எங்க கிட்ட வர்ரவனுங்க ஒழுக்கமானவங்க தான். என்ன கேட்டிங்க? (கேள்வியை மறுபடியும் சொன்னோம்). எங்கிட்ட வந்த எவனும் சாதி சர்டிபிகேட் கொண்டுவந்ததும் இல்ல, கேட்டதும் இல்ல.ஆனா எம் ப்ரெண்டு கிட்ட வந்த ஒருத்தன் சாதி, குலம், கோத்திரம் எல்லாம் விசாரிச்சிட்டு தங்கச்சி மொறனு சொல்லி,காசு மட்டும் கொடுத்திட்டு எதுவுமே பண்ணாம சும்மா போய்ட்டானாம்.( சிரிக்கிறார் )



11.உங்கள் வாழ்கையில் எந்த ஒரு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் நீங்கள் இத் தொழிலுக்கு வந்திருக்க மாட்டீற்கள்?

கல்யாணம் நடக்காமல் இருந்திருந்தா வந்திருக்கமாட்டேன்.இத்தனைக்கும் அம்மா பாத்து வச்ச மாப்பிள்ளை தான். சென்னைக்கு வந்த கொஞ்ச நாள்லயே ஓடிட்டான்.ஆதரவு இல்லாம நின்ன நானு பிச்சை எடுத்தேன். காசுக்காகவும் கெளரவத்துக்காகவும் எது வேணும்னாலும் செய்யலாம்ன்ற ஊர்ல சோறு வேணும்னு இந்த தொழிலுக்கு வந்துட்டேன்.



12.இந்த வாழ்க்கையில் இருந்து எந்த ஒரு சம்பவம் தங்களை விடுவிக்கும் என நினைக்கிறீர்கள்?

இருக்கிறவரைக்கும் இந்த வாழ்க்கையில் தான் இருக்க முடியும்.இனிமே எல்லாம் யாரும் என்னை கல்யாணம் பண்ணிகிற மாட்டாங்க. இல்லைனா யாருக்காவது சின்னவீடா இருக்கனும். அப்படி இருந்தா இன்னொரு பொம்பளையோட வாழ்க்கைய புடுங்கிக்கிற மாதிரி இருக்கும். எதுக்கு நமக்கு அந்த பாவம்?




13.கடவுள், போலிஸ்,கோர்ட் இவற்றுக்கிடையே இருக்கும் ஒற்றுமை என்ன?

இந்த தொழில்ல வந்ததில் இருந்து போலிசும் கோர்ட்டும் பழக்கம் ,கடவுள் எனக்கு பழக்கம் இல்ல. எல்லோரும் எங்ககிட்ட காசு கொடுத்துட்டு இருப்பாங்க. நாங்க கோர்ட்டுக்கு காசு கொடுத்துட்டு சில போலிஸ்ங்க கூட இருக்கனும். ஆனா போலிஸ்ல நல்லவங்களும் இருக்காங்க.அவங்களுக்கு கேசு தேவை
இல்லைனா விட்டிருவாங்க.



14.திருநங்கைகளை கிண்டல் செய்துள்ளீர்களா?
கிண்டல் பண்ணது எல்லாம் இல்ல.முன்ன அவங்களப் பாத்தா அருவருப்பா இருக்கும், இப்போ எல்லாம் அவங்களும் நம்மள மாதிரி மனுசங்க தானேனு நினைப்பு வரும்.



15. இப்படி விவரங்களைக் கேட்டு விட்டுப் போகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எங்களுக்கு நல்லது பண்றதுங்கறது ஒரே நாள்ல நடக்கிறது இல்ல. இப்படி கேள்வி கேட்டுட்டுப் போய் நாலு பேர்கிட்டச் சொல்றதுனால அத அவங்க தெரிஞ்சுக்கிறதுனால எங்களுக்கு எந்த நல்லதும் நடக்கப் போறதும் இல்ல . இதுனால எழுதுறவங்களுக்கு வேணும்னா நல்ல விளம்பரம் கிடைக்கலாம். ஒன்னு சொன்னா கோச்சுக்கமாட்டிங்களே. நீங்க எல்லாம் எங்க கிட்ட காசு கொடுக்காமலே எங்களால சந்தோசம் அடையிறவங்க. (சிரிக்கிறார்)

ஏதாவது செய்யுங்கள்



உனக்காக நான் காத்திருக்கிறேன்
நீ வரும்வரை பிழைத்திருப்பேன்
என உறுதியாய் தெரியாத போதும்
காத்திருக்கிறேன்.

இப்போது தான் நினைவுக்கு வருகிறது
இதுவரை நான் உன்னை பார்த்தது இல்லை என்பது.
நீ வருகையில் உன்னை அடையாளம் காண்பதற்கு கூட
என்னிடம் எதுவும் இல்லை.

ஒரு விடியலைப் போல் நீ வருவாய்
என அறிந்து உருகிவிழும்
என் மெழுகுவர்த்திகளை சேகரித்து
இரவு முழுவதையும் எரியவிடுகிறேன்.
எரிந்து போன இரவின் எச்சத்தில்
உன் வருகைக்கான வாய்ப்பை வரைந்து பார்க்கிறேன்.
அவற்றுக்கு வண்ணமாக இரவையே ஊற்றிவைக்கிறேன்.
ஒன்றை மட்டும் நன்கறிந்து வைத்திருக்கிறேன்.
இரவின் முடிவில் நீ வருவாய்
அல்லது நீ வருகையில் இரவு முடியும்.

மேற்கண்ட சொற்களுக்கு
காதல் தலைப்பிட்டு
ரோஜாவாக்கி விடுங்கள்.
விடுதலை தலைப்பிட்டு
வலியாக்கி விடுங்கள்.
இல்லையேல் தலைப்பே இடாமல்
கவிதையாக்கி விடுங்கள்.

அறைக் கவிதைகள்


1.

எனது அறையின்
சாவி துவாரத்திற்கு
வெளியே விரிகிறது
உலகம்.
சுருங்குகிறது எனவும்
வாசிக்கலாம்

2.

கலைந்து கிடக்கிறது என
எனது அறையை-நீங்கள்
சுத்தம் செய்யாதீர்கள்
சுத்தம் என்பது
அவரவர் பாற்பட்டது


3.

எனது அறையின்
எல்லா மூலைகளிலும்
சிலந்தியின் வலை இருக்கிறது.

புத்தகம்
எடுக்கும் போதெல்லாம்
தவறாமல் பார்க்கிறேன்
அந்த பல்லியை.

விளக்குப் போடும்போதெல்லாம்
ஒளிந்து கொள்கிறது
கரப்பான்பூச்சி.

இரகசியமாய் வந்துபோகும்
பூனை ஒன்றையும்
எனக்குத் தெரியும்

நான் பெருமைப்படுகிறேன்
இந்த கவிதையின்
முதல் வரியை
இப்படி ஆரம்பித்ததற்கு.


4.

உலகம் உருண்டை
என்பதை உடைக்கிறது
என் சதுர அறை.

5.

எனதறையின் தரையைக்
காணமுடியாத படி
புத்தகங்ளும் துணிகளும்
இறைந்து கிடக்கிறது -என
கடிந்து கொள்கிறாய்.
உன் தரையெங்கும்
வெறுமை இறைந்து கிடக்கிறது.


6.

எனது அறை
என்பது
நானே.




கடைசிக் கடவுளும் முதல் கம்யூனிஸமும்


பூமிக்கு வந்தார் கடவுள்.
நீர் குமிழிக்கு உள்ளிருக்கும்
காற்றின் அடர்த்தியாய்
அழுந்தி பிரக்ஞையற்று
கிடந்தது ஏழைச்சமூகம்.


கொடுமைகளைக் காண
கண்கள் தந்தருளினார்.
முதலாளியின் காடு
காவல் காக்கப்பட்டது.

கேள்விக்காக கொடுத்த நாக்கும்
பேசாமலேயே இருந்ததால்
மரமாகிப் போனது
மரவட்டைகளாக முதலாளிகள்.


கயவர்களை அடையாளம் காட்ட
அவர்கள் நிறம் பரிக்கப்பட்டது.
அடிமைகளை சுலபமாக கண்டடைய முடிந்தது.


தப்பியோட கால்கள் வழங்கப்பட்டன.
தீமிதிப்பதற்கு என்று அறிவுருத்தப்பட்டது.
அடிப்பதற்கு கைளைப் பரிசளித்தார்
முதலாளிகளின் மலம் அள்ளப்பட்டது.



புதிதாய் வருபவன்
கொந்தளிப்பான் என
பிறப்புருப்பு செய்து வைத்தார்.
மேலும் கொஞ்சம்
அடிமைகள் கிடைத்தனர்.



இப்படித்தான் தோழர்களே !
அவர் கடைசிக்கடவுளாகவும்
முதல் கம்யூனிஸ்டாகவும்
ஆகிப் போனார்.